காணி மக்களுக்கு பொதிகை மலைதான் உண்மையான வீடு. அதில் அவர்கள் கட்டும் வீட்டை சிறு நிழற்குடையாக மட்டும் கருதுகிறார்கள். எனவே தான் வீடு குறித்த மதிப்பீடுகள் அவர்களிடம் இல்லை. வீட்டை மிக அவசியமான ஒன்றாகக் கருதாததற்கு பொதிகை மலை முழுவதுமே தங்களுக்கு சொந்தமான வீடு என்கிற மனோபாவமே காரணம். கான்கீரிட்டுகளால் சூழப்பட்ட கட்டிடத்தையும் முத்திரைத்தாள்களில் பதிவு செய்யப்பட்ட நிலங்களையும் மட்டுமே தங்களுக்கு சொந்தமானவை என பிறர் மீதான பகைமையை அகத்துக்குள் வளர்த்துக் கொள்ளும் சமவெளி மக்களுக்கு காணி மக்களின் இம்மனோபாவம் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.

