யோசித்துப் பாருங்கள். பெரியாரையும் அம்பேத்காரையும் காந்தியையும் வாசித்த ஒருவன் முதன்மையாகத் துறப்பது சாதிய அடையாளத்தைத்தான். ஒரேயொரு சூழியல் நூலை வாசித்துவிட்டவன் வனப்பகுதியில் பீர் பாட்டிலை உடைத்து வீசமாட்டான். பேரிலக்கியங்களை வாசித்த ஒருவன் ஒருபோதும் தன்னை குறுகிய தேசியவாதத்தில் இன அரசியலில் அடையாளப்படுத்திக்கொள்ளமாட்டான். சிற்பங்களைப் பற்றிய ஒரேயொரு கட்டுரை வாசித்தவன் கூட குகை ஓவியங்களின் மீது ‘ஜூலி ஐ லவ்யூ’ எனக் கிறுக்க மாட்டான். இந்த உலகைச் செதுக்கிய வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துவிட்ட ஒருவனால் நடிகனின் கட்அவுட்டிற்குப் பால் அபிஷேகம் செய்ய முடியாது.

