More on this book
Community
Kindle Notes & Highlights
ரசல் அவர்களது, “Marriages and Morals” - ‘‘திருமணங்களும், ஒழுக்கமும்’’ என்ற நூல் எவ்வளவு பெரியதொரு புரட்சியை உண்டாக்கியதோ, அதைவிடப் பெரும் புரட்சிக்குரிய நூலாகும் இந்நூல்!
காமத்தையும், அன்பையும் குறிக்குங் காலங்களில் சமத்துவப் பொருள் கொண்ட நாயகர் - நாயகி, தலைவர் - தலைவி என்ற வார்த்தைகளை உபயோகித்துவிட்டு, கற்பு என்ற நிலைக்கு வரும்போது அதைப் பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப்படுத்தி, பதி ஆகிய எஜமானனையே கடவுளாகக் கொள்ளவேண்டுமென்ற கருத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது.
புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை.
அநேக வருட பழக்கங்களால் தாழ்ந்த சாதியார் எனப்படுவோர் எப்படித் தாங்கள் தாழ்ந்த வகுப்பார் என்பதையும் ஒப்புக்கொண்டு, தாமாகவே கீழ்ப்படியவும், ஒடுங்கவும், விலங்கவும் முந்துகின்றார்களோ, அதுபோலவே, பெண் மக்களும் தாங்கள் ஆண் மக்களின் சொத்துகளென்றும், ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களென்றும், அவர்களது கோபத்திற்கு ஆளாகக் கூடாதவர்கள் என்றும் நினைத்துக் கொண்டு, சுதந்திரத்தில் கவலையற்று இருக்கின்றார்கள். உண்மையாக,
உண்மையாக, பெண்கள் விடுதலை வேண்டுமானால், ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்புமுறை ஒழிந்து, இரு பிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்படவேண்டும். கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழியவேண்டும்.
இக்கொடுமைகள் நீங்கின இடத்தில் மாத்திரமே மக்கள் பிரிவில் உண்மைக் கற்பை, இயற்கைக் கற்பை, சுதந்திரக் கற்பைக் காணலாமே ஒழிய நிர்ப்பந்தங்களாலும், ஒரு பிறப்புக்கொரு நீதியாலும், வலிமை கொண்டவன் வலிமையற்றவனுக்கு எழுதி வைத்த தர்மத்தாலும் ஒருக்காலும் காண முடியாது என்பதுடன், அடிமைக் கற்பையும், நிர்ப்பந்தக் கற்பையும்தான் காணலாம். அன்றியும், இம்மாதிரியான கொடுமையைவிட வெறுக்கத்தக்க காரியம் மனித சமூகத்தில் வேறொன்று இருப்பதாக என்னால் சொல்ல முடியாது.
ஆண் உரிமை என்ன? பெண் உரிமை என்ன? இவ்விரண்டிற்கும் ஏன் வித்தியாசம் இருக்கவேண்டும்?
கர்ப்பமாக பத்து மாதம் சுமந்து பிள்ளை பெறுகின்ற குணம் பெண்களுக்கு இருப்பதாலேயே பெண்கள் நிலை ஆண்களைவிட எந்தவிதத்திலும் அதாவது, வீரம், கோபம், ஆளுந்திறம், வன்மை முதலியவைகளில் மாறுபட்டுவிட வேண்டியதில்லை என்றே சொல்வோம். கர்ப்பம் தரித்து பிள்ளை பெறாத காரணத்தாலேயே ஆண் மக்களுக்கு அன்பும், சாந்தமும், பேணுந்திறமும் பெண்களைவிட மாறுபட்டதாகி விடாதென்றும் சொல்லுவோம்.
உண்மையான சமத்துவத்திற்கு மதிப்புக் கொடுப்போமானால், உண்மையான அன்பு இருக்குமானால், பிள்ளையைச் சுமந்து பெறும் வேலை ஒன்று தவிர, மற்ற காரியங்கள் இருபாலாருக்கும் ஒன்றுபோலவே இருக்கும் என்பது உறுதி.
பெண்ணைக் கொள்ள ஆணுக்கு உரிமையிருந்தால், ஆணைக் கொள்ளப் பெண்ணுக்கு உரிமை வேண்டும். ஆணைத் தொழுதெழ வேண்டும் என்று பெண்ணுக்கு நிபந்தனையிருந்தால், பெண்ணையும் ஆண் தொழுதெழ வேண்டும். இதுதான் ஆண் - பெண் சரி சம உரிமை என்பது.
உலகத்தில் காதலென்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி, அதனுள் ஏதோ பிரமாதமான தன்மையொன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அனாவசியமாய் ஆண் - பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல், திருப்தியில்லாமல், தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகிறதை ஒழிக்கவேண்டுமென்பதற்காக வேயாகும்.
இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி ஒரே ஒரு புருஷனுடனும் மாத்திரமிருக்க வேண்டியதென்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது.
இன்று பெரும்பான்மை மக்கள் ‘காதலின் - காதலியாக’ வாழ்வதன் தன்மையெல்லாம் வேறு ஒருவர் ஜோடி பார்த்துச் சேர்த்ததும், பிள்ளைகளைப் பெறுவதற்கென்றும், வீட்டு வாழ்க்கையின் உதவிக்கென்றும், இயற்கை உணர்ச்சிக்கும், பரிகாரத்திற்கென்றும் சேர்க்கப்படுகின்ற ஜோடிகளாகத்தான் இருந்து வருகிறதே தவிர, தாங்களாகத் தங்கள் காதல் மிகுதியால், காதல் தெய்வத்தால் கூட்டுவித்ததைக் காணுவது அருமையாக இருக்கிறது.
ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலியவைகளைப்பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ மற்றும் மூன்றாமவர்கள் யாராயினும் பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ நிர்ப்பந்திப் பதற்கோ சிறிதுகூட உரிமையே கிடையாது என்றும் சொல்லுகிறோம்.
காதல் என்கின்ற வார்த்தை தமிழா? வடமொழியா? என்பது ஒருபுறமிருந்தாலும், தமிழ்மொழியாகவே வைத்துக்கொண்டாலும் அதற்கு ஆண், பெண் கூட்டுத் துறையில் அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம் என்பவைகளைத் தவிர, வேறு பொருள்கள் எங்கும் எதிலும் காணப்படவில்லை.
அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, தனது போக போக்கியத்திற்குப் பயன் படுவதைக் கொண்டோ அல்லது மற்ற ஏதோவொரு திருப்தியையோ அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ குணத்தையோ கொண்டோதான் யாரும் எந்தப் பெண்ணிடமும், ஆணிடமும் காதல் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும்போது அவன் அறிந்தது உண்மையாகவுமிருக்கலாம் - அல்லது அங்கிருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டிருந்தாலுமிருக்கலாம் - அல்லது வேஷமாத்திரத்தால் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலு மிருக்கலாம்.
பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து, நினைத்து ஆசைப்படுவதும், ஒன்றிடம் பலவற்றினிடம் அன்பு வைப்பதும், நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும். அதுபோலவே, மனிதனுக்கு தானாகவே எதிலும் விரக்தி வருவதும், வெறுப்புக் கொள்வதும், பிரிவதும் இயற்கையாகும். பலவீனமாய் இருக்கும்போது ஏமாந்து விடுவதும், உறுதி ஏற்பட்ட பின்பு தவறுதலைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாதபோது கட்டுப்பட்டுவிடுவதும், அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்துகொள்ள முயல்வதும் இயற்கையல்லவா?
காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு, அறிவீனம், அனுபவமின்மை, ஏமாற்றம் என்பவைகளைவிடச் சிறிதுகூட சிறந்தது அல்ல என்பது விளங்கிவிடும்.
ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட, காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும்; அந்த அன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள்கூட மக்களுக்கு அஃறிணைப் பொருள்கள் இடத்திலும், மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவதுபோல்தானே ஒழிய, வேறில்லையென்றும்; அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கை யிலிருந்து, யோக்கியதையிலிருந்து, மனப்பான்மையிலிருந்து, தேவை யிலிருந்து, ஆசையிலிருந்து உண்டாவதென்றும்; அவ்வறிவும், நடவடிக்கையும், யோக்கியதையும், மனப்பான்மையும், தேவையும், ஆசையும் மாறக்கூடியதென்றும்; அப்படி மாறும்போது அன்பும், நட்பும் மாறவேண்டிய தான் என்றும் - மாறக்கூடியதுதான் என்றும் நாம் கருதுகின்றோம். ஆகவே,
அன்பும், ஆசையும், நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும் திருப்திக்குமேயொழிய, மனத்திற்குத் திருப்தியும் இன்பமும் இல்லாமல் அன்பும், ஆசையும், நட்பும் இருப்பதாகக் காட்டுவதற்காக அல்ல
நமது கல்யாணத் தத்துவம் எல்லாம் சுருக்கமாய்ப் பார்த்தால், பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வது என்பதைத் தவிர, வேறு ஒன்றுமே அதில் இல்லை. அவ்வடிமைத்தனத்தை மறைத்துப் பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு முதலியவைகள் செய்யப்படுவதோடு, அவ்விதக் கல்யாணத்திற்குத் தெய்வீகக் கல்யாணம் என்பதாக ஒரு அர்த்தமற்ற போலிப் பெயரையும் கொடுத்துப் பெண்களை வஞ்சிக்கின்றோம்.
பெண்கள் உலகம் முன்னேற்றமடைய வேண்டுமானால் - அவர்களுக்கும் மனிதத் தன்மையும், மனித உரிமையும், சுயமரியாதையும் ஏற்படவேண்டுமானால் - ஆண்களுக்குத் திருப்தியும், இன்பமும், உண்மையான காதலும் ஒழுக்கமும் ஏற்படவேண்டுமானால், கல்யாண ரத்திற்கு இடம் அளிக்கப்படவேண்டியது முக்கியமான காரியமாகும். அப்படி இல்லாதவரை ஆண் - பெண் இருவருக்கும் உண்மை இன்பத்திற்கும் சுதந்திர வாழ்க்கைக்கும் இடமே இல்லாமல் போய்விடும்.
ஏதோ கல்யாணம் என்பதாக ஒன்றைச் செய்துகொண்டோமே, செய்தாய்விட்டதே, அது எப்படி இருந்தாலும் சகித்துக் கொண்டுதானே இருக்கவேண்டும்’’ என்று கருதி, துன்பத்தையும், அதிருப்தியையும் அனுபவித்துக் கொண்டிருப்பதும், அனுபவித்துக் கொண்டிருக்கச் செய்வதும், மனிதத் தன்மையும், சுயமரியாதையுமற்ற காரியமாகுமேயல்லாமல் ஒரு நாளும் அறிவுடைமை யாகாது என்பதே நமதபிப்பிராயமாகும்.
மக்களுடைய அன்புக்கும், ஆசைக்கும், இன்பத்திற்கும், திருப்திக்கும் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணும், ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணும் சேர்ந்த மணம் (வாழ்க்கை ஒப்பந்தம்) செய்துகொள்வதா? அல்லது மணம் செய்துகொண்டதற்காக அன்பையும், ஆசையையும், இன்பத்தையும், திருப்தியையும் தியாகம் செய்வதா என்பதை மனித ஜீவ சுபாவமுடைய ஒவ்வொருவரையும் யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகின்றோம்.
மக்களின் அன்பும், ஆசையும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, அது இன்னவிதமாக, இன்னாரோடு மாத்திரம்தான் இருக்கவேண்டும் என்பதாக நிர்ப்பந்திக்க எவ்வித நியாயமும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. ஏனெனில், ஆசை என்பது ஜீவ சுபாவமானது. அதை ஏதோ ஒரு நிர்ப்பந்தத்திற்காகத் தடுத்து வைப்பது என்பது ஒரு வகையான அடிமைத்தனமேயாகும்.
உலக வாழ்விலும், சமுதாயத்திலும், சட்டத்திலும், மதத்திலும் ஆண்களுக்குள்ள சவுகரியங்களும், உரிமைகளும் பெண்களுக்கும் இருக்கவேண்டுமென்றும் அப்பொழுதுதான் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் ஏற்பட்டதாகும் என்பதோடு உண்மையான திருப்திகரமான இன்பத்தையும், ஆசையையும் அடைய முடியுமென்றும் கருதுகின்றோம்.
‘‘விபச்சாரம்’’ என்பது பெண்கள் அடிமைகள் என்பதைக் காட்டும் ஒரு குறிப்பு வார்த்தை என்றுதான் சொல்ல வேண்டுமேயொழிய வேறல்ல.
பொய் சொல்லக்கூடாது என்று வாயால் சொல்லி விடுகின்றோம். பொய்ச் சொல்லுவதையும், ஒழுக்கக் குறைவென்று சொல்லிவிடுகின்றோம். ஆனால், தொழிற்முறைக்காகப் பொய்யை அவசியமாக வைத்து, அதனால் பிறருக்குக் கஷ்டத்தையும், நஷ்டத்தையும் கொடுத்து வரும் வக்கீல்களையும், வியாபாரிகளையும் மனித சமூகத்தில் எவ்வித இழிவுமின்றி ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். அத்தொழிலில் சம்பாதித்த செல்வத்தைக் கொண்டும், பெருமையைக் கொண்டும் அம்மக்களைக் கவுரவமாகவே மதிக்கின்றோம். ஆனால், அதுபோலவே, நடக்கும் மற்றொரு தொழிற்காரரை உதாரணமாக, தேவதாசிகள் போன்றவர்களை இழிவாகக் கருதுகின்றோம்.
பெண் மக்கள் என்று நினைக்கும்போதே அவர்கள் அடிமைகள், ஆண்மக்கட்டு அடங்கினவர்கள், கட்டுப்படுத்தி வைக்கப்பட வேண்டியவர்கள் என்கின்ற உணர்ச்சி ஏற்படுகிறதல்லாமல், பெண்களை அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதில் அவர்கள் ஒரு பெருமையையும் அடைகிறார்கள். இதனாலேயே பெண்களை அநேகர் விலங்குகளைப்போல் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்குச் சுதந்திரம் கொடுப்பது என்கின்ற விஷயத்தை நினைக்கும்போதே, ‘‘செய்யக்கூடாத ஒரு பெரிய குற்றமான செய்கையை’’ செய்ய நினைக்கிறதுபோலவே கருதுகிறார்கள். அதனால் மனித சமூகத்தில் சரி பகுதியான எண்ணிக்கையினருக்குப் பிறவியிலேயே சுதந்திரம் இல்லை என்பதுதானே இதன் பொருள்? ஆடவருக்குப் பெண்டிரைவிடச் சிறிது வலிமையை
...more
உலகில், மனித வர்க்கத்தினருக்குள்ளிருக்கும் அடிமைத்தன்மை ஒழியவேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் அழியவேண்டும். அது அழிந்த நிலையே சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும் இடமாம்.
தேசிய சர்வாதிகாரியும், வர்ணாசிரமப் பித்தும், பழைமைப்பற்றும் மிக்குடைய தோழர் காந்தியும் இந்து விதவைகளைப்பற்றி அநேக இடங்களில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். அவற்றுள்
விதவைகளின் கொடுமையை நீக்க ஒரு நூறு வருடங்களாக இராஜாராம் மோகன்ராய், ஈஸ்வரசந்திர வித்தியாசாகரர், கோலாப்பூர் மகாராஜா, சுரேந்திரநாத் பானர்ஜி, விரேசலிங்கம் பந்துலு, மகாதேவ கோவிந்த ரானடே, வேமண்ணா, சர் கங்காராம் முதலிய அறிஞர்கள் பாடுபட்டுழைத்தனர்.
பெண்களுக்குப் படிப்பு, தொழில் ஆகிய இரண்டும் பெற்றோர்களால் கற்பிக்கப்பட்டுவிட்டால் சொத்துச் சம்பாதிக்கும் சக்தி வந்துவிடும். பின்னர் தங்கள் கணவன்மார்களைத் தாங்களே தெரிந்தெடுக்கவும் அல்லது பெற்றோர்களால் தெரிந்தெடுக்கப்பட்டாலும் கணவனோடு சுதந்திரமாய் வாழ்க்கை நடத்தவும்கூடிய தன்மை உண்டாகிவிடும்.
பெண்கள் சுயேச்சைக்குக் கர்ப்பம் என்பது கொடிய விரோதமாய் இருக்கின்றது. பெண்களுக்குச் சொத்தும், வருவாயும், தொழிலும் இல்லாததால் குழந்தைகளை வளர்க்க மற்றவர்கள் ஆதரவை எதிர்பார்த்தே தீரவேண்டியிருக்கின்றது.
பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக் காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதவர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும்.
ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் பெண்கள் மறந்துவிடக் கூடாது. அந்த ‘ஆண்மை’ உலகிலுள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதை பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். உலகத்தில் ‘‘ஆண்மை’’ நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ‘‘ஆண்மை’’ என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி. ‘‘ஆண்மை’’யால்தான்
இந்துமதம் என்பதில் பெண்களுக்கு என்றென்றும் விடுதலையோ, சுதந்திரமோ எத்துறையிலும் அளிக்கப்படவே இல்லை என்பதைப் பெண் மக்கள் நன்றாய் உணரவேண்டும்.
பெண் மக்கள் அடிமையானது ஆண் மக்களாலேதான் ஏற்பட்டது என்பதும், அதுவும் ‘‘ஆண்மை’’யும் பெண் அடிமையும் கடவுளாலேயே ஏற்படுத்தப்பட்டதாக எல்லா ஆண்களும் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அதோடு பெண் மக்களும் இதை உண்மை என்றே நினைத்துக் கொண்டு வந்த பரம்பரை வழக்கத்தால் பெண் அடிமைக்குப் பலம் அதிகம் ஏற்பட்டிருக்கிறதென்பதும் நடுநிலைமைப் பெண்களுக்கும், ஆண்களுக்கும் யோசித்துப் பார்த்தால் விளங்காமற் போகாது. பொதுமக்கள்
பெண் மக்கள் உண்மைச் சுதந்திரம் பெறவேண்டுமானால், ‘ஆண்மையும்’, ‘பெண்மையும்’ கடவுளால் உண்டாக்கப்பட்டவை என்பதற்குப் பொறுப்பாயுள்ள கடவுள் தன்மையும் ஒழிந்தாகவேண்டும்.
பெண்கள் பிள்ளை பெறும் தொல்லையில் இருந்து விடுதலையாக வேண்டும் என்கின்ற மார்க்கத்தைத் தவிர - வேறு எந்த வகையிலும் ஆண்மை அழியாது என்பதோடு, பெண்களுக்கு விடுதலையும் இல்லை என்கின்ற முடிவு நமக்குக் கல்லுப்போன்ற உறுதியுடையதாய் இருக்கின்றது.
பெண்களின் அடிமைத்தன்மை பெண்களை மாத்திரம் பாதிப்பதில்லை; அது மற்றொரு வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது. இதைச் சாதாரண ஆண்கள் உணருவதில்லை.
சுயமரியாதையின்றி சுதந்திரம் பொய்யே!

