நெருப்பு நெருப்பை எழுப்புக!
சென்ற வாரம், (நவம்பர் 7, 8, 9) விஷ்ணுபுரம் நண்பர்களில் அணுக்கமானவர்கள் பெரும்பாலானவர்களை வெவ்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் வழியாகக் காணநேர்ந்தது. அமெரிக்காவில் மட்டும் மூன்று நிகழ்வுகள். வாஷிங்டனில் ஒரு நாவல்பட்டறை, என் அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கமான Stories of the True நூலின் அமெரிக்கப் பதிப்பின் நூலறிமுக நிகழ்வுகள் வாஷிங்டனிலும் பின்னர் நியூஜெர்ஸியிலும். மற்றும் அ.முத்துலிங்கம் படைப்புகள் பற்றி பே ஏரியா விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஒருங்கிணைத்த சந்திப்பு. ஒவ்வொன்றிலும் சராசரி ஐம்பது பேருக்கு மேல் கலந்துகொண்டனர்.
இந்தியாவில் பெங்களூரில் நண்பர் ஈரோடு கிருஷ்ணன் தர்க்கபூர்வ அறிதல் மற்றும் தத்துவக்கல்வி பற்றி நிகழ்த்திய பயிலரங்கில் நூறுபேர் வரை கலந்துகொண்டிருந்தனர். அதே நேரம் முழுமையறிவு சார்பில் தில்லை செந்தில் பிரபு நடத்திய தியானம் – யோகம் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இன்னொரு கூட்டம் நண்பர்கள் ஜெயக்குமார் தலைமையில் திருமெய்யம் – சித்தன்னவாசல் – குடுமியான் மலை என பயணம் செய்துகொண்டிருந்தனர்.
இதே நாட்களில் எங்கள் நிகழ்வுகளின் ஆசிரியர்களில் ஒருவரான ஏ.வி.மணிகண்டன் சென்னை நேடிவ் கிரியா கேலரியில் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். சென்ற வாரம் குருஜி சௌந்தரும், சுனீல் கிருஷ்ணனும் மலேசியாவில் வகுப்புகள் நடத்தினர். லோகமாதேவியின் வகுப்பு ஒன்றும் நடைபெற்றுள்ளது. குக்கூ அமைப்பினர் இதே நாளில் திண்டுக்கல் காந்திய ஊழியரகத்தில் பனை எழுக என்னும் பனைவிதை நடும் இயக்கத்தை கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தொடங்கிவைக்க முன்னெடுத்தனர். அதில் பங்குகொண்டவர்களும் நம் நண்பர்களே.
இது தவிர சுக்கிரி, கம்பராமாயண அரங்கு உட்பட வெவ்வேறு குழுமங்களில் இலக்கிய உரையாடல்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நானே Invisible Magazine (A collective of Asian Pacific Islander South Asian American (APISAA) என்னும் இணைய இதழுக்காக ஒரு பேட்டியை கொடுத்தேன். இந்த மாதம் முழுக்க நிகழ்ந்தவற்றை இப்படி கணக்கெடுத்தால் இதைப்போல நான்கு மடங்கு இருக்கும். அடுத்த வாரமும் இதேபோல நிகழ்வுகள் உள்ளன. முழுக்க இதேபோன்ற சந்திப்புகள், வகுப்புகள் நிகழ்கின்றன. இலக்கியம், தத்துவம், யோகம் என பல களங்களில். ஒருவேளை தமிழில் இன்று நிகழும் மிகப்பெரிய தொடர் அறிவியக்கம் இதுதான்.
நான் என்றும் கனவுகண்டு வந்தது இதுவே. உறுதியான, கட்டுக்கோப்பான ஓர் அமைப்பை அல்ல. அதன் நிர்வாகம் என்பது மிகப்பெரிய சிக்கல். ஒரு கட்டத்தில் நிர்வாகம் மட்டுமே நிகழும், செயல்நிகழாது. பெரிய அமைப்புகள் ஒவ்வொருவரையும் தனித்தன்மையை இழக்கச் செய்து ஒரு பெரிய கட்டுமானத்தின் ஒரு பகுதியென ஆக்கிவிடுகின்றன. நான் உத்தேசிக்கும் இயக்கத்தில் ஒவ்வொருவரும் தங்கள் தனிவழிகளை தேடவேண்டும். தங்கள் தனித்த சாதனைகளைச் செய்யவேண்டும். ஒவ்வொருவரும் ஓர் அமைப்பாகச் செயல்படவேண்டும்.
முழுமையறிவு வகுப்புகளை தொடங்கியபோது நான் கிருஷ்ணனிடம் சொன்னது “இவை ஆசிரியர்களை உருவாக்குவதற்கான பயிற்சி வகுப்புகள்” என்றே. வாசிப்பு வழியாக மட்டும் அத்தகைய ஆசிரியர்கள் உருவாகி வர முடியாது. அவர்கள் தங்கள் கல்வியை பிற ஆசிரியர்களிடமிருந்தே அடையவேண்டும். ஆசிரியரின் ஆளுமை கல்வியில் செலுத்தும் செல்வாக்கு மிக அதிகம். ஒரு வகுப்பில் மட்டுமே கற்றல் எப்படியோ கற்பித்தலும் ஆகிறது. முழுமையறிவுக்கு வந்துகொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஆசிரியர்களும் ஆகிக்கொண்டிருக்கின்றனர்.
ஒரு பயிற்சி வகுப்பு என்பதற்கு அப்பால் இந்த அமைப்பின் தேவை என்ன? ஒரே அடிப்படைதான். ஒரேவகையான ரசனை, ஒரே தேடல்கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் கண்டடைய வேண்டியுள்ளது. அந்த இணைப்பும் அதன் விளைவான நம்பிக்கையும்தான் அவர்களைச் செயல்நோக்கிக் கொண்டுசெல்கிறது. இத்தகைய ஓர் அமைப்பின் தேவை என்ன என்பதை இப்போது அமெரிக்காவிலேயே காணமுடிகிறது. மிக இளம்வயதான அடுத்த தலைமுறையினரே இந்த வகையான ஓர் ஒருங்கிணைப்பை விரும்புகிறார்கள், அவர்களுக்கு தேவை உள்ளது. எங்கள் பறவை பார்த்தல், தாவரங்களை அவதானித்தல் நிகழ்வுகளுக்கு வரும் இளையோர் ஒவ்வொருவரும் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு வரத்தொடங்கியுள்ளனர். அவர்களுக்காக தர்க்கபூர்வ அறிதல், தத்துவார்த்தமான அறிதல் ஆகியவற்றைக் கற்பிக்கும் வகுப்புகளையும் விவாத அரங்குகளையும் ஒருங்கிணைக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் எப்படியானாலும் ஓர் இலக்கிய அமைப்பு அல்லவா? அது ஓர் எழுத்தாளரை மட்டும் மையமாகக் கொண்டது அல்லவா? அந்த எண்ணத்தை புரிந்துகொள்கிறேன். இந்தச் செயல்பாடுகளை ‘வெளியே’ நின்று பார்க்கும் ஒருவருக்கு இயல்பாக அப்படித் தோன்றுவதும் இயல்பானதே. ஆம், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மிக எளியமுறையில் ஒரு சில இலக்கிய வாசகர்கள் ஒருவரோடொருவர் இணைந்து செயல்படும் பொருட்டு, எளிய நட்புக்குழுமமாகவே தொடங்கப்பட்டது. அப்படித்தான் எல்லா நிகழ்வுகளும் தொடங்குகின்றன. அப்படித்தான் தொடங்கப்பட வேண்டும். செயல்வழியாக பாடங்களைக் கற்றுக்கொண்டு, புதிய கனவுகளை வளர்த்துக்கொண்டு விரியவேண்டும்.
நெறிகள் என நாங்கள் கொண்டிருப்பவை சிலவே. ஒன்று, எங்கள் நண்பர்களிடம் கடுந்தீவிர நிலைபாடுகள், அதைச்சார்ந்த காழ்ப்புகள் இருக்கலாகாது. அப்படி வெளிப்படும் நண்பர்கள் உண்டு, அவர்கள் நண்பர்களே ஒழிய நம் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆகவே புண்படுத்தும் விவாதங்களுக்கு முழுமையாகவே இங்கே இடமில்லை. அன்றாடக் கட்சியரசியல் முழுமையாகவே தவிர்க்கப்படுகிறது. அரசியல் நிலைபாடு தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு இருக்கலாம். ஆனால் அதற்கு இச்சூழலில் இடமில்லை. கலை, இலக்கியம், பண்பாடு, மெய்யியல் ஆகியவற்றுக்கு மட்டுமே இங்கே இடம்.
(அரசியல் ஏன் தேவையில்லை என்பதை முன்னரும் விரிவாகவே எழுதியுள்ளேன். அரசியல் என நாம் இன்று சொல்வது கட்சியரசியல், அதிகார அரசியல். அதில் ஒரு வாக்காளர் என்பதற்கு அப்பால் சாமானியர் அறிவதற்கும் செய்வதற்கும் உண்மையில் ஏதுமில்லை. கும்பல் சேர்ந்து பூசலிடவும், காழ்ப்பைக் கொட்டவும், சாதிமதக் கசப்புகளை வளர்ப்பதற்கும் மட்டுமே அதில் ஈடுபடுகிறார்கள். அதை முழுமையாக கடக்காமல் இன்று எவரும் இலக்கியம், கலை, மெய்யியலில் ஈடுபடமுடியாது. அவ்வாறு இலக்கியம், கலை, மெய்யியலில் ஈடுபடுபவர்களின் உலகை அரசியல் வம்பர்களால் உணரவும் முடியாது.)
இத்தகைய ஓர் அமைப்பு எப்போதும் ஒரு மனிதரை மையமாகக் கொண்டே நிகழும். ஒரு மனிதர்தான் பிறரை ஒருங்கிணைக்க முடியும். அந்த மனிதரின் கருத்துக்கள் அளிக்கும் ஊக்கம் காரணமாகவே அவ்வியக்கம் தொடங்கியிருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் ஓர் ஒருங்கிணைப்புப் புள்ளி, ஒரு குறியீடு மட்டுமே. ஒரு வட்டம் சுழலும்போது தானாக உருவாகும் மையப்புள்ளி போல. மையப்புள்ளி அவ்வட்டத்தை சுழற்றுவதுபோல தோன்றும், ஆனால் வட்டமே மையத்தை உருவாக்குகிறது. நான் தொடக்கத்தில் என் இலக்கிய அடையாளத்தை, என் புகழை இதற்கு அளித்தேன். இன்று என் பங்களிப்பு என பெரிதாக ஏதுமில்லை.
இத்தகைய அமைப்புகள் தங்கள் நோக்கத்தை விரிவாக்கிக்கொண்டே இருப்பதைக் காணலாம். சிற்றிதழ்களே கூட அவ்வாறு ஒரு நோக்கத்துடன் தொடங்கி அந்நோக்கத்தை விட்டு வளர்ந்தவைதான். எழுத்து இதழ் விமர்சனத்துக்காகத் தொடங்கப்பட்டது. புதுக்கவிதையை உருவாக்கியது. விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் இலக்கிய அமைப்பாகவே தொடங்கியது, இன்று அது இலக்கியத்துக்கு அப்பால் ஒரு பண்பாட்டுக் கல்வி இயக்கம்.
இதற்கு அப்பால் கலைக்கொள்கை, இலக்கியப்பார்வை என்பதில் எந்த விதமான ஒருங்கிணைப்பையும், வரையறையையும் கொண்டிருக்க வேண்டாம் என்பதே என் அணுகுமுறை. எல்லாவகையான பார்வையும் தனக்கான இடத்தில் தன்னியல்பாக வளரும் சூழலே உகந்தது. எங்கள் நண்பர்களில் ஒவ்வொருவருக்கும் கலை, இலக்கியம், மெய்யியல் சார்ந்து அவர்களுக்கான பார்வை உள்ளது. அவர்களுக்கான மாணவர்களும் உள்ளனர். ஒவ்வொருவரும் அவரவர் வழியில் முன்செல்கின்றனர்.
அவ்வாறென்றால் அவர்களிடம் நான் உருவாக்கும் பதிவு என்ன? என் கொடை என்ன? அவர்களை இணைக்கும் புள்ளி, அவர்கள் அனைவரும் மதிப்பு கொண்டுள்ள ஆளுமை, அவர்கள் விரும்பும் எழுத்தாளன், அவ்வளவுதான். மற்றபடி உண்மையிலேயே நான் எதுவும் செய்வதில்லை.
எழுத்தாளர்களுக்கான கூட்டமைப்பு? கைகோத்து முன்செல்லுதல்…Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

