குடும்ப உறவுகளிலுள்ள சுயநலமும் பொறுமையும்
அன்பின் ஜெ,
எனது வாழ்க்கையில் நான் கவனித்து வரும் மூன்று நபர்களின் நடத்தைகளையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக இந்திய கலாச்சாரத்தின் பின்னணியில் காட்டும் அசாதாரண பொறுமையையும் புரிந்துகொள்ள உங்கள் ஆலோசனையை நாடுகிறேன். மேலும், இந்த நபர்களுடன் பேசும்போது, அவர்கள் தங்களை மிகவும் புத்திசாலிகளாகவும், எல்லாம் தெரிந்தவர்களாகவும் கருதுவதை கவனித்துள்ளேன்.
நபர் 1: எனது உறவினர்களில் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்யாமல், தனது மனைவியின் வருமானத்தில் முழுமையாகச் சார்ந்து வாழ்கிறார். அவரது மனைவி குடும்பத்தில் பல சவால்களை எதிர்கொள்கிறார், மேலும் இவர் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கியுள்ளதால் அவரது பிரச்சனைகள் மேலும் அதிகரித்துள்ளன. ஆனால், இவருடன் பேசும்போது, இவர் தன்னை மிகவும் புத்திசாலியாகவும், எல்லாம் அறிந்தவராகவும் கருதுகிறார்.
நபர் 2: எனது நண்பர் ஒருவர், 40 வயதாகியும் திருமணம் செய்யாமல், வேலை ஏதும் செய்யாமல், ஒரு சிறிய ஊரில் தனது தாயின் ஓய்வூதியத்தில் வாழ்கிறார். நான் அவரது வீட்டிற்கு செல்லும்போது, அவரது தாய் அடிக்கடி கவலையுடன் இருப்பதை காண்கிறேன். இவரும் தன்னை மிகவும் அறிவாளியாகவும், எல்லாம் தெரிந்தவராகவும் நினைத்துக்கொள்கிறார்.
நபர் 3: மற்றொரு உறவினர், 40 வயதை எட்டியும் உயர்கல்வி பெறவில்லை, நிலையான வேலை இல்லை, மேலும் திருமணமும் செய்யவில்லை. இவர் தனது சகோதரியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று, அங்கு மூன்று வேளையும் உணவு உண்கிறார். இவரது வருகை அந்த வீட்டில் பல முரண்பாடுகளையும் பதற்றங்களையும் ஏற்படுத்துகிறது. ஆயினும், இவரும் தன்னை மிகவும் புத்திசாலியாகவும், அனைத்தையும் அறிந்தவராகவும் எண்ணுகிறார்.
இந்த மூன்று நபர்களின் மனைவி, தாய், மற்றும் சகோதரி ஆகியோரின் பொறுமை என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த ஆண்களின் குறைபாடுகளையும், அவர்கள் ஏற்படுத்தும் சிரமங்களையும் பொருட்படுத்தாமல், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து ஆதரவளித்து, பராமரித்து வருகின்றனர். இத்தகைய ஏற்பு இந்திய கலாச்சாரத்தில் மட்டுமே காணப்படுகிறதா என்று எண்ணத் தோன்றுகிறது, அங்கு குடும்ப பந்தங்கள் மற்றும் கடமைகள் தனிப்பட்ட சிரமங்களை மீறி நிற்கின்றன.
இவர்களின் பொறுமைக்கு பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்ள எனக்கு உதவ முடியுமா? இந்த பெண்கள், இந்த சிரமங்கள் இருந்தபோதிலும் ஏன் இவர்களை ஆதரிக்கின்றனர்? இந்த ஏற்பு கலாச்சார மதிப்புகளில் வேரூன்றியதா? மேலும், தங்களை மிகவும் புத்திசாலிகளாகக் கருதும் இந்த நபர்களை எவ்வாறு கையாள்வது மற்றும் அவர்களைப் புரிந்துகொள்வது?
அன்புடன்
ராஜேஷ்
பெங்களூர்
அன்புள்ள ராஜேஷ்,
இது சாமானியமாகத் தோன்றினாலும் நம் குடும்பம் என்னும் அமைப்பை, அதன் தொடக்கம் முதல் இன்றைய நிலைவரையிலான பரிணாமத்தைக் கருத்தில்கொண்டு யோசிக்கவேண்டிய விஷயம்.
குடும்பம் என்னும் அமைப்பு எங்கல்ஸ் எண்ணியதுபோல (குடும்பம் தனிச்சொத்து சமூகம்) செயற்கையான ஒன்று அல்ல. முதிராச் சிந்தனையுடன் பின்நவீனத்துவர் சிலர் சொன்னதுபோல அது இல்லாமலாகப் போவதுமில்லை. அது ஏராளமான உயிர்களில் ஏதேனும் வகையில் நீடிக்கும் ஓர் அமைப்புதான். குடும்பம் என நாம் எண்ணுவது மனிதக்குடும்பம்.ஆனால் குடும்பம் என்னும் அமைப்பு குரங்குகளில் உள்ளது. எறும்புகள் வரை வெவ்வேறு உயிர்களில் வெவ்வேறுவகையான குடும்பங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்ப மாதிரிகளை இன்றைய உயிரியலாளர் அடையாளப்படுத்தியுள்ளனர்.
குடும்பம் என்னும் அமைப்பு உயிரியல் பரிணாமத்தின் ஒரு பகுதியாக உருவாகி வந்தது. எந்த உயிரினமும் தனித்து வாழமுடிவதில்லை. சேர்ந்து வாழவேண்டும் என்றால் ஒரு திரள் அமைப்பு தேவை. தனியாக இருக்கையில் ஓர் உயிர் கொள்ளும் குறைபாடுகளை நிரப்பும் பிறர்தான் குடும்பம். மனிதக்குழந்தைக்கு அறிவும் உடற்திறனும் உருவாக நீண்ட ஆண்டுகள் ஆகின்றன. ஆகவே நிலையாந குடும்ப அமைப்பு தேவையாகிறது. உயிரியல்தேவை அமைப்பை உருவாக்கியது. அமைப்பு தன்னை பலபடியாக வளர்த்துக்கொண்டு நெறிகளை, நம்பிக்கைகளை , உணர்வுகளை உருவாக்கிக்கொண்டது.
ஓர் அமைப்பு, அது எதுவானாலும் அதில் அதிகப் பங்களிப்பாற்றுபவர், குறைவாகப் பங்களிப்பாற்றுபவர் என்னும் வேறுபாடு இருக்கும். கொடுப்பவர் -பெறுபவர் என்னும் இடங்கள் இருக்கும். ஆதிக்கம் செலுத்துபவர், வழிநடத்துபவர் என்னும் ஆளுமைகள் இருக்கும். அடங்குபவர்,தொடர்பவர் என்னும் ஆளுமைகளும் இருக்கும். நீங்கள் உங்கள் அலுவலகத்தையே உதாரணமாக எடுக்கலாம். அலுவலகம் என்பது அண்மைக்கால உருவாக்கம். அது இயற்கையானது அல்ல. அதில் ‘செண்டிமெண்ட்ஸ்’ இல்லை. ஆனாலும் இந்த வேறுபாடுகள் உள்ளன.
அப்படி வேறுபாடுகள் ஏதுமற்ற ‘சமத்துவ’ அமைப்புதான் தேவை என கற்பனை செய்யலாம். ஆனால் உயிரியல் ரீதியாக அது சாத்தியமல்ல. எறும்புகளிலும் சிம்பன்ஸிக்களிலும் இல்லாத ஒன்று மனிதனில் மட்டும் திகழமுடியாது. வேண்டுமென்றால் அந்த வேறுபாட்டை குறைக்கலாம். அந்த வேறுபாடு வன்முறையற்றதாக ஆகும்படி முயலலாம். ஆனால் அந்த வேறுபாடு இருக்கவே செய்யும்.
நம் குடும்பங்கள் அனைத்திலுமே அளிப்போர், பெறுவோர் என்னும் இரு நிலைகள் எப்போதும் இருக்கின்றன. நாம் வளர்ந்து நம் வருமானத்தில் நிற்பது வரை நாம் பெறுவோர் மட்டுமே. நம் பெற்றோர் அளிப்போராக திகழ்கிறார்கள். பல நடுத்தரக் குடும்பங்களில் தந்தை மட்டுமே பணமீட்டுபவர், பிற அனைவருமே அதைப் பெற்று வாழ்பவர்கள்தான்.
பழைய கூட்டுக்குடும்பங்களில் திறனற்றவர்களை அக்குடும்பங்களே பேணும் தன்மை இருந்தது. சிலரால் வேலை செய்ய முடியாது. சிலருக்கு போதிய அறிவுத்திறனோ உடல்வளர்ச்சியோ இருக்காது. அவர்கள் சுமை என கருதப்பட்டதில்லை. குடும்பத்தின் பொறுப்பு அவர்களையும் பேணுவதுதான் என்றே கொள்ளப்பட்டது.
குடும்பம் என்னும் நிறுவனத்தின் விரிவான அமைப்பே குலம். குலம் விரிந்து ஊர். ஊர் விரிந்து நாடு அல்லது சமூகம். சென்றகாலங்களில் தானாக வாழும் தகுதியற்ற ஒருவனை அக்குலம் பேணியதுண்டு. அந்த ஊர் பேணியதுண்டு. நான் சிறுவனாக இருந்தபோது என் ஊரில் பத்துக்கும் மேற்பட்ட மனவளர்ச்சி இல்லாதவர்கள், உடல்வளர்ச்சி இல்லாதவர்கள் இருந்தனர். முதுமையால் உடல்நலிந்தவர்கள் ஐம்பதுபேராவது இருந்தனர். அவர்களை ஊர்தான் பேணியது. என் அப்பா அவருடைய வருமானத்தில் கால்வாசிப்பங்கை வெவ்வேறு நபர்களுக்கு அளித்தார்.
இன்று சமூகம், நாடு அத்தகையோரைப் பேணுகிறது. அப்படிப் பேணுவதுதான் நல்ல சமூகம். நவீன மேலைச்சமூகங்களில் உழைப்பவர் அளிக்கும் வரிப்பணத்தில் கால்பங்கு உழைக்கமுடியாதவர்களுக்கு நலனுதவிகளாக வழங்கப்படுகிறது. அவர்களில் முதியோர், உடற்குறை உள்ளவர்கள் உண்டு. வேலை இழந்து வேலைதேடும் நிலையிலுள்ளவர்களும் உண்டு. வேலைசெய்யமுடியாது என அறிவித்து, தெருவில் வாழும் ஹிப்பிகள், சமூக எதிர்ப்பாளர்கள் மற்றும் போதையடிமைகளுக்கும் குறைந்தபட்சம் சாப்பாடாவது கிடைக்கும்படி அந்த அரசுகள் ஏற்பாடு செய்கின்றன. சாகவிடுவதில்லை.
பெறுபவர்கள் எல்லாமே இழிந்தோர், அவர்களுக்கு கொடுப்பது வீண் என்னும் மனநிலை சமூகத்தை அழிக்கும். ஒவ்வொருவரும் உழைக்கவேண்டும் , உழைக்காதவர் அழியவேண்டும் என்பது ஓர் உயர்ந்த மனநிலை என்றும்; அது ‘உழைப்பைப் போற்றும் மனநிலை’ என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. ஆனால் அது ஒரு குறுகிய, சுயநல மனநிலை. நீங்கள் எவரென்றாலும் உங்களால் ஈட்டப்படும் செல்வத்தில் சிறு பங்கையே நீங்கள் செலவழிக்கிறீர்கள். எஞ்சியதை முழுக்க குடும்பத்திற்காகச் செலவழிக்கிறீர்கள், சேர்த்து வைக்கிறீர்கள். அதில் ஒரு பங்கை இயலாதோருக்கு அளிப்பதில் என்ன பிழை?
ஒரு குடும்பத்தில் எவர் இயலாதோர்? குழந்தைகள், மாணவர்கள் எப்படியும் பிறரை நம்பி இருக்கவேண்டியவர்கள். முதியோரும் அவ்வாறே. இதைத்தவிர பலவகையான உடல், உளக் குறைபாடுள்ளவர்களும் பேணப்படவேண்டும். குடும்பம் அவர்களை பேணுவதே முறை. அல்லது ஊர் அல்லது சமூகம் பேணவேண்டும். ஏனென்றால் இங்கே இன்னும் முழுக்க அனைவர்நலனையும் நாடும் அரசு உருவாகவில்லை.
நம் சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக துறவிகள், நாடோடிகள் பேணப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் சாவடிக்குச் சென்று “இரவுணவு உண்ணாத எவரேனும் உண்டா?” என்று கேட்டு, இருந்தால் அவர்களுக்கு உணவிட்டுவிட்டே ஊர்த்தலைவர் உண்ணவேண்டும் என்னும் மரபு அண்மைக்காலம் வரை இருந்தது. என் அப்பா அவருடைய இறுதிவரை அதைச்செய்துவந்தார். அவ்வாறு சாப்பிடுபவர் உழைக்கமுடியாதவரா, உழைக்க மனமில்லாதவரா என்று பார்க்கக்கூடாது. அது அறமின்மை. ஏனென்றால் நாம் எப்படி அதை அறியமுடியும்?
“போய் உழைக்கவேண்டியதுதானே?” என்று பிச்சைக்காரர்களிடம் கேட்பவர்கள் உண்டு. (கேட்பவர் என்ன உழைக்கிறார் என்று பார்த்தால் பத்துரூபாய்க்கு பொருள் வாங்கி இருபது ரூபாய்க்கு விற்பவராக இருப்பார். உண்மையில் சமூகத்தைச் சுரண்டும் கிருமி அவர். அல்லது அதேபோல ஏதாவது வெட்டிவேலை செய்வார். எதையாவது உற்பத்திசெய்பவர் இங்கே எத்தனைபேர்?) அந்தப் பிச்சைக்காரர்களில் ஒருவராக நித்யசைதன்ய யதி இருந்திருக்கிறார். நடராஜகுருவும் நாராயணகுருவும் விவேகானந்தரும் இருந்திருக்கிறார்கள். அவர்களை அழியவிடவேண்டும் என்றும், இந்த சம்பாதிக்கும் கூட்டம் மட்டும் சோறுதின்று கொழுக்கவேண்டும் என்றும் நான் சொல்ல மாட்டேன்.
மிக அரிதாக நீங்கள் சொல்வது போல உழைக்க மனம் ஒவ்வாதவர்கள், இயல்பிலேயே உழைக்கும் உளமில்லாதவர்கள் குடும்பத்தில் இருப்பார்கள். அதுவும் மனித இயல்பே. மானுடத்தின் வண்ணமே. அவர்களுக்கான காரணங்கள் அவர்களுக்கு இருக்கலாம். அவர்கள் வேண்டுவது வெறுமே சோறு, உறைவிடம், துணி மட்டுமே என்றால் அதை அளிப்பது அவசியம் என்பதே என் எண்ணம். அது கொடுப்பவர்களுக்கு பெரிய சுமை அல்ல என்றால் கொடுப்பதன் வழியாக அவர்கள் உறவை நிலைநாட்டுகிறார்கள் என்றும், குடும்பம் என்னும் அமைப்பின் இயல்பான அறத்தை நிலைநாட்டுகிறார்கள் என்றும்தான் பொருள்.
அவ்வாறு சார்ந்திருப்பவர்கள் உழைப்பவர்களின் பணத்தை வாங்கி வீணடித்தார்கள் என்றால் அதை அனுமதிக்கக்கூடாது. போதைக்கோ சூதுக்கோ பணம் அளிக்கலாகாது. ஆனால் அவர்கள் உழைக்காவிட்டால் சாகவேண்டும் என்று சொல்வது குடும்பம் என்னும் அமைப்புக்கே எதிரானது. என் அப்பா வாழ்ந்த நாளெல்லாம் கடைப்பிடித்த அறம் இது. அவர் மறைந்தபோது கிட்டத்தட்ட இருபதுபேர் அவரைச் சார்ந்திருந்தனர் என அறிந்தேன். அவர்களில் பலர் வெறுமே சாப்பிட்டுவிட்டுச் சும்மா இருந்தவர்கள்தான்.
ஏனென்றால் குடும்பம் என்னும் அமைப்பே ஒருவரின் பலவீனத்தை, குறைபாட்டை இன்னொருவர் ஈடுகட்டுவதில்தான் உள்ளது. உழைக்கமுடியாதவர் உழைப்பவரைச் சார்ந்திருக்கிறார். அவர் உழைப்பவரைச் சுரண்டுகிறார் என்று எண்ணுவது குடும்பம் என்னும் மனநிலையை அழிப்பது. இன்றைக்கு உழைப்பவர் சட்டென்று நோயாளியாகி பிறரைச் சார்ந்திருக்கவும்கூடும். எந்நிலையிலும் ஒரு தனிநபரை குடும்பம் கைவிடக்கூடாது. அதுவே குடும்பம் என்னும் அமைப்பின் அடிப்படை அறம். அந்த நம்பிக்கையில்தான் நீங்களும் நானும் உயிர்வாழ்கிறோம். அந்த நம்பிக்கை இல்லாமலானால் நாமனைவருமே அனாதைகள், அல்லது அனாதைகளாக ஆகும் வாய்ப்புள்ளவர்கள்.
பிச்சை எடுக்க வருபவர்கள் ‘தர்மம் செய்யுங்க’ என்றுதான் சொல்கிறார்கள். ஈதல் அறம் என்றே நம் மரபு சொல்கிறது. ஒருவருக்கான அடிப்படை உணவு என்பது ஒருபோதும் வெட்டிச்செலவு அல்ல. அவர் என்னவாக இருக்கிறார் என நாம் அறியமுடியாது. ஒருவேளை அவர் சிந்தனையாளரோ, கலைஞரோ ஆக இருக்கலாம். அல்லது அப்படி எதிர்காலத்தில் மாறலாம். அல்லது வெட்டியாகவே இருந்தால்கூட அவரைப்போன்ற ‘வெட்டிக்கூட்டத்தில்’ ஒருவராக ஒருவேளை கலைஞனும் சிந்தனையாளனும் இருக்க வாய்ப்புண்டு. வெட்டிக்கூட்டத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டோம் என்றால் கலைஞர்களையும் சிந்தனைகயாளர்களையும் அழித்துவிடுவோம். அதை உழைப்பை சிரமேற்கொண்டு போற்றும் மேற்குநாடுகளே கூட செய்வதில்லை.
நடராஜகுருவும் நித்யாவும் ரயிலில் செல்கிறார்கள். ஒரு குழந்தை வந்து பிச்சை கேட்கிறது. உடனிருக்கும் மார்க்ஸியர் ஒருவர் அருவருப்புடன் பிச்சை எடுப்பதை இழித்துப்பேசுகிறார். அது சோம்பலை வளர்க்கும் என்கிறார். நடராஜகுரு சொல்கிறார். ‘ஒரு குழந்தை எனக்குப் பசிக்கிறது என்று உலகத்திடம் கேட்பதில் மகத்தானதாக ஒன்று உள்ளது. இந்த உலகம் மீது அக்குழந்தை வைத்திருக்கும் நம்பிக்கை அது. அதை எப்போது பார்த்தாலும் எனக்குக் கண்ணீர் வருகிறது. அந்த நம்பிக்கையை ஒருபோதும் உலகம் இழந்துவிடலாகாது’
‘எனக்கு சோறு மட்டும் போதும்’ என சொல்லும் ஒருவரிடம் ‘சோறுதானே, சாப்பிடு’ என்று சொல்லும் நிலையில் உள்ள குடும்பமே அறம் சார்ந்தது, அப்படிச் சொல்லும் சமூகமும் நாடுமே வாழும் அறம் கொண்டவை. சோற்றில் கணக்குபார்ப்பவர்கள் ஒன்றை யோசிக்கலாம், அவர்கள் உண்ணும் சோறுக்கு எங்கோ கணக்குகள் பார்க்கப்படும்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

