அருட்செல்வப் பேரரசன் ராமாயணம் நிறைவு
வணக்கம் ஜெ.
இராமாயணம் மொழிபெயர்ப்பு நிறைவடைந்தது.
விவேக்ராஜ் என்று ஒரு நண்பர். மின்னஞ்சல், வாட்சாப் மூலம் மட்டுமே பழக்கம். அவரது முகத்தை ஒரு முறையும் பார்த்ததில்லை. இராமாயணம் மொழிபெயர்ப்பு தொடங்கியது முதல் நிறைவு வரை ஒவ்வொரு காண்டத்திலும் ஒவ்வொரு சர்க்கத்திலும் பிழை சுட்டிக் காட்டித் திருத்தியிருக்கிறார்.
வாட்சாப்பில் அவருக்கு நன்றி தெரிவித்த போது, அவரளித்த மறுமொழி பின்வருமாறு.
*
இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் சமகால தமிழ்நடைக்கு மொழிபெயர்க்கும் பெரும்பணியை செய்திருக்கிறீர்கள். பாரதத்தின் கும்பகோணம் பதிப்பும், இராமாயணத்தின் தமிழ் பதிப்புகள் பலவும் பழைய தமிழ் நடையில் அமைந்தவை. இனி வரும் இளைஞர்கள் அதற்குள் செல்வதென்பது சற்று கடினம்தான். உங்களுடைய இந்த மொழிபெயர்ப்பு பணி அவர்களையும் வாசிக்க வைக்கலாம். உங்களுடைய மொழிபெயர்ப்பை வாசிக்கும்போதுதான் நான் கும்பகோணம் பதிப்பையும் வாசித்தேன். இல்லையெனில் அதற்குள் சென்றிருப்பேனா என்பது தெரியாது.
மேலும் உங்கள் பணியை நான் அறிந்ததே ஜெயமோகன் வழியாகத்தான். அதனால் உங்கள் நன்றியை நான் அவருக்கு அளிக்கிறேன். தற்போது அன்றாடம் வெண்முரசு வாசித்துக் கொண்டிருக்கிறேன். முடிக்க சில ஆண்டுகள் ஆகலாம். புத்தக வாசிப்பிலேயே காவிய வாசிப்பு தனித்துவமான ஒன்றுதான்.
நன்றி. உங்கள் பணி மேலும் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
*
இப்படி எவர் மூலம் ஓர் உதவி கிட்டினும், அது தங்கள் மூலம் நிகழ்ந்ததாகவே இருக்கிறது.
அனைத்துக்கும் மிக்க நன்றி சார்.
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

