மதுரை புத்தகவிழாவில் இறுதிநாளாக இன்றும் இருப்பேன்

மதுரை புத்தகவிழா 5 செப்டெம்பர் (வெள்ளி) முதல் 15 செப்டெம்பர் (திங்கள்) வரை நிகழ்கிறது. விஷ்ணுபுரம் அரங்கு எண் 44 மற்றும் 45.

மதுரை புத்தகவிழாவின் இறுதிநாளான இன்று (14 ஞாயிறு 2025) மாலை 5 முதல் இருப்பேன். நண்பர்களை வரவேற்கிறேன்

2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெற்ற ரமேஷ் பிரேதன் அவர்களின் படைப்புகள் கிடைக்குமா என விசாரிக்கிறார்கள். மதுரை புத்தகவிழாவில் யாவரும் புத்தக அரங்கில் (அரங்கு எண் 31-32) அவர் நூல்கள் கிடைக்கும்.

எங்கள் புதிய நூல்கள்

ஜெயமோகனின் புதிய நாவல். கடல் என்னும் திரைப்படம் இந்நாவலை ஒட்டி உருவானது. செவ்வியல் தன்மை கொண்ட இப்படைப்பில் ஓர் ஆன்மாவின் கடலில் தெய்வமும் சாத்தானும் மோதிக்கொள்ளும் அலைகள் கொந்தளிக்கின்றன. மகாகவி தாந்தேயின் டிவைன் காமெடியின் நீட்சியென அமையும் படைப்பு இது.

ஜெயமோகன் கீதை பற்றி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். நான்கு நாட்களில் ஆற்றிய தொடர் உரை என்பதனால் எளிய நடையில், நேரடியாக வாசகனுடன் பேசும் தன்மைகொண்டது. கீதைக்குள் நுழைய இன்றைய நவீன வாசகனுக்கு திறக்கப்படும் மிகச்சிறந்த வாசல்.

பண்பாடு பற்றிய ஜெயமோகனின் கட்டுரைகளின் தொகுப்பு. நாம் ஆன்மிகம், பண்பாடு என எண்ணியிருப்பவை பலசமயம் சம்பிரதாயமான கருத்துக்கள். அவற்றை நவீன வாழ்க்கையுடன் இணைத்துப்பார்க்கும் பார்வைகள் கொண்ட நூல் இது.

சுந்தர ராமசாமியின் ஆளுமையை தன் நினைவுகளினூடாக ஜெயமோகன் சித்தரிக்கும் இந்நூல் அக்காலகட்டத்தில் நிகழ்ந்த அழகியல் விவாதங்களையும் தொட்டுக்கொண்டு ஒரு நாவலைப்போல் விரிவது. நுணுக்கமான காட்சிவிவரணைகளும், புன்னகைக்கவைக்கும் தருணங்களும் கொண்டது.

தினமலரில் தொடராக வந்த எளிமையான கட்டுரைகள். இவை நம் ஜனநாயகத்தின் அடிப்படைகளை விவாதிக்கின்றன. நாம் அறிந்த தகவல்களை அறியாத கோணத்தில் காட்டி இன்றியமையாதவற்றைப் புரியவைப்பது இவற்றின் பாணி.

நாஞ்சில்நாடனைப் பற்றிய ஜெயமோகனின் நூல். அவரை பிரியமான நகைச்சுவையுடன் மதிப்பிடுகிறது, நட்பை விவரிக்கிறது.

எங்கள் நூல்கள்

தமிழில் விஷ்ணுபுரம் அளவுக்கு எந்த நாவலும் அத்தனை கவனமான வாசிப்பைப் பெற்றதில்லை. பல கோணங்களில் அவரவர் அரசியலுக்கும் கருத்துநிலைக்கும் ஏற்ப அதை வாசித்துள்ளனர். இரண்டாவது தலைமுறையில் விஷ்ணுபுரம் குறியீடுகளின் அடுக்குகள் செறிந்த, உணர்வுநிலைகள் உச்சம் தொட்ட, ஒரு நவீன இந்தியக் காவியநாவலாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் உலகவாசகர்களின் வாசிப்புக்குச் செல்லவுள்ளது.

குறைத்துச்சொல்லும் அழகியல் கொண்ட கதைகள். இளம்படைப்பாளியான விஷால்ராஜாவின் குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுதி இது. வாழ்க்கையின் மென்மையான புதிர்களைப் பேசும் கதைகள்

பின்தொடரும் நிழலின் குரல் தமிழின் முதன்மையான அரசியல் நாவலாக பல விமர்சகர்களால் மதிப்பிடப்பட்டது. அரசியலின் அடிப்படையாக உள்ள கருத்தியல் என்பதை ஆராயும் நாவல் இது. ஒரு கருத்துநிலைபாடு சாமானியனை எப்படி அபாயகரமான ஆயுதமாக ஆக்கிவிடுகிறது என்னும் கேள்வி வரலாற்றில் என்றும் உள்ள ஒன்று. அதை ஆராயும் படைப்பு இது.

மைத்ரி ஓர் உருவகக் கதை. ஒரு மலை. ஒரு பயணி. ஒரு காதல். ஆனால் இந்த பயணம் மலையின் ஆழங்களின் மடிப்புகளில் இருந்து மலையுச்சியின் வெறுமையின் பரவசம் வரை நீள்கையில் ஆன்மிகமான இன்னொரு பரிணாமத்தை அடைகிறது.

மருபூமி வைக்கம் முகமது பஷிர் தன்னந்தனியாக பாலைவனத்தை கடந்த அனுபவத்தைப் பற்றி எழுதிய சுருக்கமான குறிப்பில் இருந்து விரிவாக்கம் செய்யப்பட்ட குறுநாவல். ஓர் அகப்பாலையை கடக்கும் ஒருவனின் அனுபவம் என வகைப்படுத்தலாம். புகழ்பெற்ற பல சிறுகதைகள் அடங்கிய நூல்.

அல்கிஸா தமிழின் முதல் இஸ்லாமிகேட் நாவல் என்று விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டது. இஸ்லாமிய அழகியல் உச்சம் என சொல்லத்தக்க கவாலி இசை, இஸ்லாமிய ஆன்மிக உச்சம் என சொல்லத்தக்க சூஃபி மரபு ஆகியவை ஓர் அழகிய காதல்கதையால் இணைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் விரைவில் வெளிவரவுள்ளது.

தமிழின் தலைசிறந்த நாவல் என வாசகர்கள் பலரால் கருதப்படும் காடு மனித உறவின் உருவகமான குறிஞ்சி நிலத்தில் நிகழும் ஒரு காதல்கதை. வாழ்க்கையில் பாலை வரலாம். காதல் என்றும் ‘வறனுறல் அறியாச் சோலை’தான் என இந்நாவல் காட்டுகிறது.

சினிமாப்பின்னணியில் எழுதப்பட்ட ஓர் இழந்த காதலின் கதை. கறுப்புவெள்ளை சினிமாவின் உலகம் கவித்துவக்குறியீடாக ஆக்கப்பட்டுள்ளது இந்நாவலில். கற்பனாவாத அழகியல் கொண்ட படைப்பு.

முதுநாவல் ஜெயமோகனின் 133 சிறுகதைகளின் தொகுப்புகளான 14 நூல்களில் ஒன்று. இந்திய சூஃபி மரபின் ஆன்மிகநிலைகளில் இருந்து இந்திய வாழ்க்கையை ஆன்மிகம் வந்து தொடும் தருணங்களைச் சொல்லும் மகத்தான சிறுகதைகள் அடங்கியது. இதில் பல கதைகள் இன்று உலகப்புகழ்பெற்ற  அமெரிக்க இலக்கிய இதழ்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

கதாநாயகி ஓரு பேய்க்கதை. ஆனால் அந்தப் பேய்க்கதை சமகாலத்தில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை அடைகிறது. அதற்கு முந்தைய லண்டனை ஊடுருவி ரோமாபுரிக்காலம் வரை நீள்கிறது. பல அடுக்குகளாலான நாவல் இது.

முற்றிலும் மங்கலத்தன்மை கொண்ட நாவல். மதுரை மீனாட்சி திருமணத்தின் அழகியபெருந்தோற்றம். ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் வரவிருக்கிறது.

தமிழகத்தின் தலித் எழுச்சியின் தொடக்கப்புள்ளியை, இந்தியப்பெரும் பஞ்சங்களின் பின்னணியில் திகைப்பூட்டும் கச்சிதத்துடன் சொல்லும் படைப்பு. ஆங்கிலத்தில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வெளியாகவுள்ளது. தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆண் -பெண் உறவின் நுணுக்கமான சில ஆழங்களுக்குள் ஊடுருவிச்செல்லும் கன்யாகுமரி இருபத்தைந்தாண்டுகளாகத் தொடர்ச்சியாக வாசிக்கப்படும் நாவல். காலம் மாறுந்தோறும் அதன் அடிப்படை வினாக்கள் கூர்கொள்கின்றன.

பி.கே.பாலகிருஷ்ணன் என்னும் மலையாளச் சிந்தனையாளரின் கட்டுரைகள். நாவல் என்னும் கலையை புரிந்துகொள்ள, அதை வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முறையாகப் பயன்படுத்த வழிகாட்டும் நூல். கட்டுரை நூலாயினும் உத்வேகமிக்க வாசிப்பை அளிப்பது.

தமிழில் இளைஞர்களிடையே மிக அதிகமாக வாசிக்கப்படும் ஜெயமோகனின் நூல் இரவு. இது அவர்களின் உலகம். இரவில் விழித்து பகலில் தூங்கும் ஒரு சிறு சமூகத்தை சித்தரிக்கும் படைப்பு.

இலக்கியத்தை வாசிப்பதெப்படி? எது நல்ல இலக்கியம்? எது வணிக எழுத்து? இலக்கிய அடிப்படைகள் பற்றிய பல கேள்விகளுக்கு விடைசொல்லும் கட்டுரைகள் கொண்ட நூல்.

காமம் பாவமென உருக்கொள்வது சமூக உறவுகள் வழியாக. காமத்தையும் பாவத்தையும் பிரித்திப்பார்ப்பது ஒரு மனமுதிர்ச்சி. அனுபவத்தினூடாக நிகழும் பரிமாணம் அது. அந்த விடுதலையைப் பேசும் நாவல் இது.

இந்து மெய்யியலை மதத்தின் சம்பிரதாயங்கள் மற்றும் நம்பிக்கைகளில் இருந்து விலக்கி தத்துவமாகவும் ஆன்மிகமாகவும் அணுக முற்படும் நவீன மனத்திற்குரியவை இந்தக் கட்டுரைகள். விரிவான விவாதங்களை உருவாக்கியவை.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் செய்த பயணத்தின் நேரடிப்பதிவுகள். வடக்கின் அரசியலையும், பண்பாட்டையும் எளிய கோட்டுச்சித்திரம் வழியாக தெரியவைப்பது இந்நூல்.

ஜெயமோகன் கல்லூரிப்படிப்பை விட்டு அரைத்துறவியாக வீட்டைவிட்டுக் கிளம்பிச்சென்று திரும்பி வந்த அனுபவங்களைப் பேசும் நூல் இது. அவரது புனைவுகளுக்கு நிகரான உத்வேகத்துடன் சொல்லப்பட்ட நிகழ்வுகள் கொண்டது. விஸ்வநாதன் மொழியாக்கத்தில் ஆங்கிலத்தில் வெளிவரவுள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.