பேருருவனின் சொல், கடிதம்
அன்புள்ள ஜெ,
உங்கள் கீதை உரையை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் ஒலிப்பதிவுச் சிக்கல்களால் முழுமையாக கேட்கமுடியவில்லை. கீதையை அறிதல் நூலை வாசித்தேன். ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். ஒரு பெரிய அனுபவம். ஒரு சிறிய நூல். ஆனால் கீதையின் வரலாற்றுப்பின்புலம், கீதையின் அரசியல், அதன் குறியீடுகளை வாசிக்கவேண்டிய விதம், அதன் தத்துவ- ஆன்மிக உள்ளடக்கம், அதன் அழகியல் எல்லாமே சொல்லப்பட்டுவிட்டது. கீதையை வாசிக்க மிகச்சிறந்த ஒரு முன்னுரை இந்த நூல்.
நான் என் 28 ஆவது வயதில் கீதையை வாசிக்க ஆரம்பித்தேன். அதிலிருந்து அவ்வப்போது வாசிப்பேன். சித்பவானந்தர் உரை எனக்குப் பிடித்தமானது. ஆனால் கீதையைப் பற்றிச் சிந்திப்பதற்கான ஒரு தொடக்கம் இந்த நூல்தான். கீதை எனக்கு நன்றாகத் தெரிந்த நூல் என்னும் மாயை எனக்கு இருந்தது. ஆனால் இந்நூலை வாசிக்கையில்தான் கீதையை நான் உபதேசங்களாக மட்டுமே அறிந்திருக்கிறேன் என்ற உணர்வு வந்தது.அதன் வரலாற்றுப்பின்னணிகூட எனக்கு தெரிந்திருக்கவில்லை. இந்நூலை வாசிக்கையில்தான் ஒன்று தோன்றியது கிருஷ்ணனை ஒரு மனிதனாக, ஒரு வரலாற்று ஆளுமையாக எண்ணினாலொழிய கீதையை உண்மையாக அணுகமுடியாது என்று.
கீதையை வெவ்வேறு கோணங்களில் அழகாக விரித்துச் சொன்ன நூல் இது. இந்நூல் ஓர் உரை என்பதனால்தான் இந்த ஓட்டம் வந்திருக்கிறது. யோசித்து எழுதிய நூலில் செறிவு இருக்கும். ஓட்டம் அமையாது. இந்நூலில் என்னுடன் நீங்கள் பேசிக்கொண்டே இருக்கும் அனுபவம் அமைந்தது.
எந்த நூலையும் வாசித்து உள்வாங்கிக்கொள்ள ஒரு critical approach தேவையாகிறது. நாம் ஒரு நூலை வழிபட ஆரம்பித்தால் அந்த அணுகுமுறை இல்லாமலாகிவிடுகிறது. இந்நூலில் ஒரு துணிச்சலான விமர்சனப்பார்வை உள்ளது. அது இன்னும் ஆழமாக கீதைக்குள் செல்ல நம்மை அழைத்துச்செல்கிறது
நன்றி.
எஸ்.ரகோத்தமன்.
அங்குலப்புழுவின் நடனம்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

