றெக்கைகள் கொண்ட மனைவி
தெலுங்கு மூலம்: பூடூரி ராஜிரெட்டி
தமிழில்: சண்முக. விமல் குமார்
ஓவியங்கள்: செல்வம்

ஒருவழியாக அவன் இந்தக் கல்யாணத்திற்கு ஒப்புக்கொண்டான். இத்தனை வயதாகியும் மணமாகாமல் இருக்கும் ஆண்கள் யாருமே அந்தப் பக்கத்திலுள்ள ஊர்களில் இல்லை! இதில், பெண்களைக் குறித்து என்றால் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை; பக்கத்து ஊரிலிருக்கும் அவனுடைய சிநேகிதி – இந்த நேரம் தன்னுடைய மகள்களின் கல்யாணத்தைக் குறித்து விசனப்பட்டுக் கொண்டிருப்பாள்!
கொஞ்சம் வயது கூடிப்போனாலுங்கூட, எப்படியோ அவன் கனவு கண்ட மனைவி கிடைத்துவிட்டாள். இந்தச் சுற்று வட்டாரத்தில், அவளைப் போன்ற இன்னொரு பெண் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை!
முதலிரவு – மல்லிகைப் பூக்கள் செய்யும் களேபரங்களைக்கூட பொருட்படுத்தாமல் மனைவியின் முதுகை ஆர்வத்துடன் தடவினான்.
துருத்திக் கொண்டிருந்த விலா எலும்புகளின் ஸ்பரிசத்தைத் தவிர, தேவைப்பட்ட வஸ்துவேதும் கிடைக்கவில்லை. ‘எங்கேயோ மோசம் நடந்துவிட்டது.’
காலையில் – கலியாணத்திற்காக இத்தனை நாட்களாக அடம் பிடித்து வந்த அம்மாவை நிற்கவைத்துக் கேள்வி கேட்டான்.
“இருந்தாலும், நீ ரொம்ப வித்யாசமானவன் டா; றெக்கைகள் கொண்ட மருமகளை எங்கிருந்துகொண்டு வருவேன்!”
“நான் எத்தனை முறை சொல்லி இருப்பேன் உன்னிடம்!” அழுகை முட்டிக்கொண்டு வரும் நிலை அவனுக்கு.
“இத்தனை ஆண்டுகளாகியும் உனக்கு இந்தப் பைத்தியம் தீரவில்லை; எப்படித்தான் பிழைக்கப்போகிறயோ புத்திகெட்ட கழுதையே.”
அம்மா அவனுடைய கஷ்டத்தினைக் கண்டுகொண்ட மாதிரியே இல்லை. கண்டுகொள்ளாமல் போனதுகூட ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் இந்த விவகாரம் வருத்தப்படக்கூடிய ஒன்று என்றுகூட அவள் அடையாளப்படுத்தவில்லை.
நேற்றைய விசயங்கள் முடிந்துபோய், பால் சொம்புடன் நேராக தன் அருகில் வந்து உட்கார்ந்த மனைவியை, அவளிடமிருந்து சொம்பைக்கூட வாங்கிக்கொள்ளாமல், மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான். நேற்று கேட்டபோது ஏதோ வேடிக்கையாகக் கேட்கிறான் என்று நினைத்துக்கொண்டிருந்தாள்.
“தேவி! உனக்கு நிஜமாகவே றெக்கைகள் இல்லையா?”
“என் பெயர் தேவி இல்லை”. அருவருப்புடன் சொல்லி, முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“அது கிடக்கட்டும், சொல்லு. கிடையாதா?”
சிரித்தபடியே, ஆனால் அத்தனை சிரிப்புக்குரியதல்ல என்று அறியத்தரும் வகையில், வினவினாள்: “மன்னா, உமக்கென்று ஏதாவது துராய்1 இருக்கிறதா?”
இதை அவன் எதிர்பார்க்கவே இல்லை. “துராயா? எனக்கு எதற்கு இருக்கப்போகிறது. இருந்திருந்தால், தெரிந்திருக்கும் அல்லவா?” வெறுப்படைந்தான்..
“அப்படியென்றால், எனக்கு றெக்கைகள் இருக்கும் பட்சத்தில் உனக்கும் தெரிந்திருக்கும் அல்லவா?” இன்னும் கோபத்தை அடைந்திடாத குரலில் பதிலளித்தாள்.
“நான் உன்னைச் சரியாகப் பார்க்கவில்லையே. திருமணக் கோலத்தில் இருந்தாய் அல்லவா? பின்புறம் அவற்றை மடித்துக் கட்டியிருக்கிறார்களோ என்று நினைத்தேன்!”
“மடித்துக் கட்டுவதா… இது இன்னும் நன்றாக இருக்கிறது..” சிரிப்பதற்குத் தயாரான கன்னங்களைப் பின்னால் இழுத்தாள்.
“நான் தீர்மானமாகவே சொல்லி அனுப்பினேனே… றெக்கைகள் இருந்தால்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று…”
“உங்கள் ஆட்கள் சொல்லவும், ஏதோ பைத்தியக்காரக் கூத்து என்று நினைத்துக்கொண்டோம். அத்தைதான் கல்யாணமானால் சரியாகிவிடும் என்று சொன்னார்.” பேச்சில் கண்டிப்பு இருந்தாலும் சொன்னவிதம் மென்மையாகவே இருந்தது.
“இன்னும் என்ன? நான் முட்டாள் என்பதால், – முந்தானையில் முடிந்துகொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டாய், அப்படித்தானே!”
“இதோபார், உங்களை ஏமாற்றும் எண்ணம் எதுவும் எங்களுக்கு இல்லை; உங்கள் ஆட்களிடம் நாங்கள் எதையும் மறைக்கவில்லை; திரும்பவும் சொல்கிறேன். எனக்கு றெக்கைகள் இல்லை. இனி உங்களுடைய விருப்பம்” என்று தெளிவுபடுத்திவிட்டாள்.
கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தான். கொண்டு வந்த பாலைக் குடித்தான். “அடுத்த நாள் ராத்திரிக்குக்கூட பால் கொண்டு வருகிறீர்களா?”
“நாளைக்குக்கூட கொண்டுவர வேண்டும்தான்”.
உரையாடலை எந்தப் பக்கம் திருப்பினால் தன்னுடைய மானம் நிலைபெறுமோ என்று தெரியாமல்…
“ஆனால், துராய் உள்ள ஆணை விரும்பும் பெண்கள் யாரையும் நான் இந்தப் பக்கங்களில் பார்த்ததில்லை” என்றான்.
அவள் உடனே, “ஆசைப்பட்டால் மட்டும் கிடைக்கிறார்களா என்ன?” என்றாள், தான் எதற்காகப் பொறுத்துக் கொண்டேன் என்று சொல்பவளைப் போல. கல்யாணத்தன்று பட்டு வேட்டி கட்டிக் கொண்டிருக்கும் போது அது சரிந்து போகாமல் இருக்க இடுப்பிற்குத் துண்டை இழுத்து கட்டிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த மைத்துனன் முறை கொண்ட இளைஞன்.. தனக்கு உதவி செய்தபடி எதற்காகவோ தலையின் மீது கையை வைத்தான். இவன் கூட ‘ஏய் முடியைக் கலைக்காதே’ என்று அதட்டினான். இப்போதுதான் புரிகிறது! அவன் துராயைத்தான் தேடி இருக்கிறான்.
அவனுக்குப் பைத்தியம் பிடித்தது போலானது. தனக்குத் துராய் இல்லாத போது, மனைவியின் றெக்கைகளுக்காக அடம்பிடிப்பதில் இனி அர்த்தமில்லை.
புதிய குடித்தனத்தை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டிய மணமகன் ஆர்வமற்று இருந்தது இரண்டு குடும்பங்களையும் தொந்தரவு படுத்தியது.
உள்ளே ஏதாவது பேய் உட்கார்ந்திருக்கிறதோ என்று ஒரு கிழட்டுக் சாமியாடியிடம் அழைத்துக்கொண்டு போனார்கள். போதனைகள் மட்டுமில்லாமல், நல்ல வைத்தியம்கூட செய்பவர் என்று அந்தச் சாமியாருக்குப் பேர். அவருடைய வைத்தியத்தினால், அவருடைய போதனைகளுக்கும் மதிப்பு கூடியிருந்தது. சாது, அவனைத் – தனியாக நீல வண்ணத் திரைகள் கட்டிய மூங்கிலறைக்குக் கூட்டிச் சென்றார். கண்களாலும் உள்ளங்கைகளாலும் பரிசோதனை செய்தார்.
வெளியே வந்து, ‘ஞாயிற்றுக் கிழமைதான் மருந்து தயாராகும்; அன்று வரவேண்டி இருக்கும்,’ என்றார்.
மூன்று நாட்கள் கழித்து அவர்கள் திரும்பவும் சாமியாரிடம் சென்றார்கள். அதற்குள்ளாகத் தயார் செய்து வைத்திருந்த கசாயப் புட்டியைப் புது மாப்பிள்ளையிடம் கொடுத்து, ‘அந்த மரத்திற்குக் கீழே சென்று குடி’ என்று சொன்னார்.
கண்களை மூடிக்கொண்ட அவன் அந்தச் சொம்பு அளவுள்ள கசாயத்தைப் பாதிகூட குடிக்காமல் சட்டென்று வாந்தியெடுத்தான். வாயிலிருந்து வெள்ளையாக, சன்னமான, சிறுசிறு அங்குல அளவில் பிராணிகள் எவையெவையோ கீழே விழுந்தன. வைத்திய சாமியார், அவற்றை நுணுக்கமாக ஆராய்ந்து, தான் யூகித்ததே நிஜமானது என்ற முடிவுக்கு வந்தவரைப் போல, தலையை ஆட்டியபடி, ‘எல்லோருக்கும் இருக்கற மாதிரித்தான், பையனுக்குக் கொஞ்சம் குணதோஷம் இருக்கிறது; ஆனால், இது இந்தச் செய்கைக்கு நின்று போகக் கூடியதில்லை. நான்கு பேரோடு சேர்ந்து பழகினாலன்றிக் குறைகிறதா, முதிர்கிறதா என்று சொல்ல முடியும்’ என்றார்.
ஒருவேளை துராய் இருந்திருந்தால்! அந்த நாளே புது மாப்பிள்ளை உறுதியாக முடிவெடுத்தான்…

ஓர் அர்த்த ராத்திரி மனைவி ஆழ்ந்த உறக்கத்தில் ‘இருக்கும்போது, அவளுடைய பாதங்களை மெதுவாக ஸ்பரிசித்து, சத்தமிடாமல், பெரிய தர்வாஜா கதவுகளைத் திறந்துகொண்டு, தரித்திருந்த உடைகள் சகிதம் வீட்டிலிருந்து வெளியேறினான்.
ஒற்றையடிப் பாதையில் நடந்து, மண் பாதையில் நுழைந்து, சின்ன சின்ன கிராமங்களைத் தாண்டியபடி, கிடைக்கும் காயோ, பழங்களையோ பறித்து, வயிற்றை நிரப்பிக்கொண்டு, எந்த ஊர் கிணற்றிலோ நீரை இறைத்து, தாகத்தைத் தணித்துக்கொண்டு, ராத்திரி நேரம் எந்தெந்த திண்ணைகளிலோ தலையைச் சாய்த்தபடி, நாட்கள், வாரங்கள் கழிந்த பின், ஒரு நகரத்துள் அடி வைத்தான்.
அவன் அப்படியாக, கடை வீதிகளில் நடந்து போய்க்கொண்டிருக்கிறான். அதற்குள்ளாக இரண்டு நாட்கள் ஆகிவிட்டது, நகர்ப் பிரவேசம் ஆரம்பித்து.
‘என்னய்யா… ஓய்… உன்னைத்தான்… இங்க இங்க… ஒரு கையப் போடு,’ என்று அழைத்தான், வண்டியிலிருந்து மூட்டையை முதுகில் சுமந்துகொள்ளப் போதுமான சக்தியற்ற ஒரு விவசாயி. (‘சோள மூட்டை என்பதால் பரவாயில்லை, அதுவே நெல் மூட்டை என்றால்…’) அவன் சென்று உதவினான். இருவரும் சேர்ந்து அவற்றைக் கடையின் திண்ணைமீது கொண்டு சேர்த்தார்கள். மொத்தம் ஆறு மூட்டைகள்! பதிலுக்கு, இருவருக்கும் மேலே இருந்து கைப்பிடிப் பச்சைப் பயிறு சுண்டலை அவன் கைகளில் கொட்டினான் வியாபாரி. பசியைத் தீர்த்த நன்றிக்கு, பதில் முகமாகப் புன்னகையுடன் மேலே பார்த்தான். தலையின் மீது ஏதோ தெரிந்து, ஆச்சரியப்பட்டுப்போனான். ‘கொம்புகள் போன்று இருக்கின்றன!’
அந்த வியாபாரி தன் பேரத்தை முடித்துக் கொள்வதற்காகக் காத்திருந்தான். அவன் வந்த பின், அவன் அருகே நடந்து சென்று மெதுவாகக் கேட்டான்; “அந்த வியாபாரியின் தலைமீது ஏதோ இருக்கிறதே; என்ன அவை?”
நாணயங்களைப் பனியனுக்குப் பின்னால் இருக்கும் ‘உள் ஜோபியில்’ போட்டுக்கொண்டு, விவசாயி சொன்னான்: “இங்கு நிறைய பேருக்கு இருக்கிறது சாமி; இவனுக்கு என்ன பார்த்தாய்? ‘நாலு பஜாரில்’ பார்த்தாயானால் ஒரு ஆளுக்கு மூன்று அடி உயரம் இருக்கும்.”
“என்றால்… அவன் அவ்வளவு பெரிய வியாபாரியா?”
“அப்படி ஒன்றும் இல்லை. சமீபமாய்த்தான் என் மகனுக்குக்கூட முளைத்தது.”
அவன் அந்த முதல் உபகாரத்திற்காக வேண்டி சுமை இறக்கும் கூலியாக வேலை செய்தான். எப்போதாவது ஏதாவது ஈயோ, பூச்சியோ காற்றில் அடித்துக்கொண்டு அவனுடைய முகத்தை மென்மையாகத் தாக்கும். மனைவி நினைவுக்கு வருவாள்; உடல் வலி பூராவும் மாயமாகிவிடும். உடனே, அவள் முன் நிற்க முடியாத கையறுநிலை அவனைச் சுற்றி வளைத்தது. “பெரிய! உனக்கென்ன துராய் இருக்கிறதா?” காலையிலிருந்து, சுமந்த மூட்டைகளைவிட, இந்தக் கேள்வியே பாரமாகத் தோன்றும்.
மூட்டைகள் இறக்கும் வேலைகளுக்குப் பிறகு, அவன் கொஞ்ச நாட்கள் ஒரு பூட்டகூள2 வீட்டில் வேலை செய்து வந்தான். பிறகு சில காலம் அதே கடையில் மசகு3 நெய் தடவி, வண்டிக்குச் சக்கரங்கள் பூட்ட உதவி செய்தான். கொஞ்ச நாட்கள் ஆமணக்கிலிருந்து எண்ணெய் பிழிந்தான். பிறகு சில நாட்கள் இரவு வேளை ஆராதனைகளில் லாந்தர்கள் சுமந்தான். அதன் பிறகு கொஞ்ச நாட்கள் மல்லிகைப் பூ மாலைகள் கட்டினான். மென்மையான வேலை! ஆனால் அதில் இருக்கும் நாடகீயம் பிடிக்காமல் விட்டுவிட்டான். அவனுக்கு எழுத வருமென்று தெரிய வந்தவுடன், கொஞ்ச நாட்கள் எழுத்தராகவும் வேலை பார்த்தான், மெருகுற்றான். கடன் பத்திரங்கள் எழுத நேர்ந்தபோது, அவ்வளவு உற்சாகம் இருந்தது கிடையாது; ஆனால் யாராவது தூரத்தில் இருக்கும் தங்கள் மனைவி மார்களுக்கு நலம் விசாரித்து நான்கு வார்த்தைகள் எழுதச் சொன்னால் மட்டும், அவர்களிடம் கைநாட்டு வாங்குவதற்கு முன்பு கொசுறாக, தன்னுடைய சொந்த வாக்கியங்கள் இரண்டையும் சேர்த்துவிடக் கூடியவன். அவர்களுக்குப் படித்துக் காட்டினால், ‘என்ன பாபு3 இதெல்லாம்’ என்று உள்ளுக்குள் சிரித்தபடி, தலையைச் சொரிந்துகொள்வார்கள். அந்த எழுத்துகள் எப்படியாவது தன் மனைவியைச் சேரும் என்று நம்பத் தோன்றும் அவனுக்கு. இன்னும் ஆனந்தம் அதிகமாகும்போது, துராயிக்காக நடுமண்டையைத் தடவிக்கொள்வான். ஒருநாள் ஏதோ சின்ன குரு முளைத்தது. கீறிக்கொண்டால் ஜம்மென்று இருந்தது. ஒருவேளை அது கொம்பின் முளையோ என்னவோ! அழுந்தக் கீறினால், உடைந்துவிடுமோ என்னமோ என்று நினைத்துக்கொண்டான்.
காலம் ஓடுகிறது.
சில நேரங்கள் அவனைத் தீவிரமான தனிமை பீடிக்கிறது. அதற்கு நோய் முறியாகப் பால்ய நினைவுகளை நினைவுகூர்ந்துகொள்ளக் கூடியவன். ‘கறுப்பாக இருக்கக்கூடியவர்கள் செத்துப் போய் சொர்க்கத்துக்குப் போன பின்னே, அங்கு வெள்ளை ஆகிறார்களாம்… எங்கள் அம்மம்மா சொல்வாள்,’ என்று பால்ய கால கருத்த நண்பன் சொன்ன வார்த்தைகள், மாறாக, தான் வெள்ளையாக இருந்தமைக்கு ரொம்பவும் பயந்ததை எண்ணிச் சிரித்துக்கொள்வான்..
தனக்கு நேர்ந்த அனுபவங்களை, தன்னுடைய ஆலோசனைகளை, மனைவி தன் முன்னே உட்கார்ந்தி ருப்பதைப்போல நினைத்துச் சொல்லிக்கொண்டே இருப்பான். தன்னுடைய கற்பனையால் மனைவியைப் படைத்துக் கொள்ளக்கூடிய திறனை அவன் அப்போதைக்குச் சம்பாதித்தான்.
‘நேற்று என்ன ஆச்சு தெரியுமா… ஒரு முதியவர் அப்படியே வந்துகொண்டிருந்தார்…’
‘இதோபார், இன்றிலிருந்து நான் விறகுக் கட்டை வியாபாரம் செய்கிறேன்; கட்டைகளைப் பிளந்துபிளந்து என் கைகள் எப்படி ஆகிவிட்டன பார்த்தாயா…
‘தயக்கம், வருத்தம் போன்றவையே எனக்கு இங்கு கவச குண்டலங்களாக இருக்கின்றன; அவை எப்பொழுதும் என் உயிரை வாங்காது அல்லவா!’
‘மர வியாபாரத்தில் நான்கு காசுகள் மிஞ்சுவது வாஸ்தவம்தான்; என்றாலும் ஆபத்து அதிகம். அதனால்தான் தானிய வியாபாரத்தில் இறங்குகிறேன்.!
‘எனக்குக் கடன் வைத்தான் என்று சொன்னேனே… அவன் சொல்கிறான்: பிரபஞ்சம் புதிதாக உருப்பட வாய்ப்பில்லை. கெட்டுப்போவதும் இல்லை; உருப்பட்டாலும் அதன் நியமங்கள் அடிப்படையில் மட்டுமே, கெட்டுப்போனால், அதன் நியமங்கள் அடிப்படையில் மட்டுமே. இந்த வாதத்தினை நீ ஒப்புக்கொள்கிறாயா?’
உரையாடல்கள் ஒரே நேரத்தில் நடப்பவை அல்ல. துண்டுதுண்டாக, சந்தர்ப்பத்தைப் பொருத்து, உதைத்துக்கொண்டு வரும். சில நேரங்கள் அதற்கு முன்பு சொன்னவற்றிற்கே, அதற்கு முன்பு சொல்லாத விவரங்களைக் கட்டமைத்துக்கொண்டு திரும்பவும் சொல்லுவான். இவ்வளவு பெரிய நகரத்தில் அவனுக்கு உதவியாக இருப்பவையென்றால், கொஞ்சம் பேச்சுகளும் (தானிய) மூட்டைகளும்தான்… அவற்றை அவிழ்ப்பதற்கென்று மனைவியின் நிழல்!
கால மர்மம் புரியாதது. அது பொறுமையாக… நினைவுகளின் நிழல்களைப் பிறகும் ரத்தப் பிசுபிசுப்பான உண்மைகளை முன்பாகவும் அனுப்புகிறது.
இந்தப் பெண்கள் தங்கள் ஊர்ப் பெண்களைப் போன்று இல்லை. அனைத்து மூளைகளிலும் கறுப்பு, அவனை ஓர்மை தப்பச் செய்யக் கூடியது. பிடிக்காத பெண்ணைக் கனவில் புணருவதன் மூலம் காமத்தின்மீது தான் கொண்ட பவித்திர பாவத்தைத் தீர்த்துக் கொள்ளக் கூடியவன். விவேகத்துடன் ஆலோசித்தால் – பெண்ணின் உடல் அவ்வளவு அழகுடையது ஒன்றும் இல்லை; அந்த ஈர்ப்பைத் தீர்க்காமல் போனால், வாழ்க்கை நடக்காது என்பதால், அது சிருஷ்டி பூர்வமான வேலையைத் தவிர்த்து வேறு எதுவும் கிடையாது என்று நினைத்துக்கொள்வான்.
ஒரு மாலை நேரம் – புகையிலைக் கடையை மூடும் தருவாயில் கல்லாப் பெட்டியில் காசுகளை எண்ணி, லாந்தரின் வெளிச்சத்தைக் குறைத்து, திருப்தியாக, உடலை முறித்துக்கொண்டு, பிடித்துக்கொண்ட முழங்காலை விடுவித்த சுகத்தை அனுபவித்து, எழுந்து நின்று, வேட்டியின் ஒழுங்கைச் சரிசெய்து கொண்டிருக்கும்போது.. விற்றுக்கொண்டு சென்ற காலி எண்ணெய்க் கிண்ணங்கள் கொண்ட கூடைகளுடன் வந்தாள் அவள், நல்ல ஜர்தாவுக்காக5.
அவளைப் பார்த்தபடி, அவன் உதடுகள் முன்னே பிதுங்குவதைப்போல, கன்னங்களை அருகே இழுத்துக்கொண்டு, ‘மேல் உதட்டின் கீழ்ப் பகுதியினை மேற்பல்லினால் அழுத்திப் பிடித்தான். பதிலுக்கு – வலது கன்னத்தை நாக்கினால் எழுப்பி, ‘ச்சீ, புகையிலை நாற்றம்’ என்றாள் அவன் கைகளை எண்ணி.
எந்த முதல் தருணத்தின்போது உடலை அருகில் இழுத்துக் கொள்வதற்குத் தேவையான அளவு போதை மூடியதோ? மயிர்கள் மொத்தமும் நிற்குமளவு அவள் ரவிக்கையின் மீது கையைப் போட்டான்.
சலிப்பு தீர்ந்து, மூச்சை இழுத்துவிட்டு, பணி இடத்தின் புனிதத்தைக் கெடுத்தேன் என்று தோன்றிய வருத்தத்தின் பொருட்டு, கசகசவென்றாக, அவள் தன்னுடைய தலையில் வைத்த கைவிரல்களின் ஸ்பரிசத்தின் பொருட்டு ஒன்றிப்போனபடி திடீரென்று நினைவு வந்தவன் போல் கேட்டான் அவன், “ஆமாம், நீ எப்பொழுதாவது துராய் இருக்கும் ஆண்களைப் பார்த்திருக்கிறாயா?”
எதற்காக இந்தக் கேள்வி கேட்கிறான் என்று புரியாதவளைப்போல முகத்தை வைத்துக்கொண்டு, “என்ன துரை6, அப்படி கேட்கிறாய்?” என்றாள், துரையை, துரையாக அல்லாமல் உச்சரித்தப்படி.
“இல்லை, சும்மா… பார்த்தாயா… அப்படி இருக்கிறதா யாருக்காவது?”
ஒரு கணம் ஆலோசித்துச் சொன்னாள்: “ஒருவேளை இருந்தால் யாராவது வைத்துக்கொள்வார்களா?”
தான் எதற்காக நகரத்திற்கு வந்தோம் என்று சொல்லாமல் அவன் கேட்டான்: “பச், அதுயில்லை, கொம்பு இருக்கிறவர்களைத் தவிர துராய் இருப்பவர்களைக் காணவில்லையே என்று…”
அவன் கேட்காத கேள்விக்குப் பதில் சொல்லுபவளைப்போல சொன்னால் அவள், “நல்லதோ கெட்டதோ… தலைமீது எதுவும் இல்லாமல் சாதாரணமாக இருக்கக் கூடாதா மனிதர்கள்!”

முன்பெல்லாம் அவனுக்கு இந்த நகரம் பூராவும் ஆச்சரியமாக இருக்கும். வேலைக்காரர்களை உத்தேசித்து முதலாளிகள், ‘என்னய்யா, நேற்று வேலைக்கு வரவில்லை!” என்று சொல்பவர்கள்.
‘அய்யா, என் கணவனுக்கு உடம்பு சரியில்லை அய்யா’ போன்ற பதில்கள் ஏதோ வரும்.
அதே எஜமானர்கள் – தலையில் மூட்டைகளோடு செல்லும் விவசாயிகளிடம், ‘டேய் தம்பி, இங்க வா,’ என்று கூப்பிடுவார்கள்.
பேரம் பேசிக்கொண்டு விவசாயிகள், ‘தம்பி, கொஞ்சம் பார்த்துக் கொடு தம்பி,’ என்பார்கள்.
‘அய்யா’, ‘தம்பி’ எனும் வார்த்தைகள் ஒன்றே ஆனாலும், அவற்றிற்கு மாறான வழக்கு இருக்கும் என்று புரிந்துகொண்ட நாளில் அவனுக்கு நகர வாழ்க்கை கொஞ்சம் வரைக்கும் புரிந்தது.
வாழ்க்கை குறித்து, இருக்கும் நிலை குறித்து, முன்மாதிரிகள் குறித்து அவனுக்கு ரகரகமான ஆலோசனைகள் வரும். முதன்முதலாகச் சண்டை போட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ஆனால் அவனை இதற்கிடையில் ஓரிருவராவது, ‘வியாபாரி’ என்கிறார்கள். முதன்முறை அந்த வார்த்தையைச் சொல்லும்போது அவனுடைய நெஞ்சம் பூரித்தது; நிமிர்ந்தது. தனக்குத் தெரியாமலேயே தலைப்பாகையை எடுத்து துராயிக்காகத் தடவிக்கொண்டான். அப்பொழுதிருந்து சண்டை தேவை என்றும் அதேசமயம் அநாவசியம் என்றும் தோன்றியது. ஆனால் கொஞ்ச காலத்திற்கு அவன், இந்த எண்ணத்திலிருந்து வெளியேறினான். சண்டை அநாவசியமே என்று புரிந்துகொள்வதற்குள் அவனுக்கு நகர வாழ்க்கையில் இனி புரியாதது எதுவும் இல்லை என்றானது.
அது எப்படி நடந்ததோ அவனுக்கு நினைவில்லை. வெறுமனே பஞ்சு மெத்தையின் மீது படுத்துக் கொண்டு இருக்கிறான். திடீரென்று, உடலுள்ளிருந்து, பாதத்திலிருந்து ஒரு பாரம் எதுவோ தலைக்குப் பாய்ந்ததைப்போல இருந்தது. தடவிப்பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. ஆனால், அந்தப் பாரமான அனுபூதியைச் சுமப்பது விருப்பமாகவே இருந்தது.
அவன் வெறுமனே ஈர்க்கோலியைக் ஒருநாள் கைகளில் ஏந்தி, கண்ணாடியில் பார்த்து… தன் வயதைக் கணக்கிட்டபடி… வாரிக் கொண்டிருக்கும்போது ஏதோ தட்டுப்பட்டதைப்போல இருந்தது. அப்போதுதான் முளைத்த இரண்டு குருத்துக் கொம்புகள்! வலி தெரியாமல் தலையை எப்படி பிளந்ததோ! ஆனால், அபசகுனம். அதே நாள் அவனுடைய இடது பக்கப் பல் விழுந்துவிட்டது.
சில நாட்களில் ரெண்டு கொம்புகள் அழகாக வளைவு கண்டன. முனைகள் மென்மையாக, வெள்ளையாக இருந்தன. ஞாயிற்றுக் கிழமைதோறும் அவற்றிற்கு நல்லெண்ணெய் பூசுவான். அப்பொழுது இன்னும் கறுப்பாகப் பளப்பளக்கும். அவற்றிற்கு மூடிகள்7 செய்ய வேண்டும் என்று கூட நினைத்துக்கொள்வான்.
ஒருநாள் கடைக்குக் கிளம்பினான். பழகிய தெருதான் என்றாலும், கிர்8 செருப்புடன் நடக்கும்போது தட்டுப்படும் பார்வைகள் புதிதாக இருக்கின்றன. ‘நீயெல்லாம் எதற்காக உயிரோடிருக்கிறாய்?’ என்று யாரோ தன் பின்னால், கணவனைத் திட்டித் தீர்ப்பதைப்போல இருந்தது.
‘சம்சாரம் செய்யும் அளவு கடினமானதா சம்பாதிப்பது?’ என்று கணவன் பதிலளித்ததைப்போல கேட்டது.
‘கணவன்… மனைவி… என் மனைவி… ஆம் என் மனைவி எப்படி இருக்கிறாளோ! நிஜமாகவே அவர்கள் அப்படிச் சொன்னார்களா, நானாக யூகித்துக்கொண்டேனா? என் மனைவியைப் பார்த்து ஏழு ஆண்டுகள் ஆகியிருக்குமல்லவா? யாருக்காக அத்தனை ஆண்டுகள் கனவு கண்டேனோ அவள் சட்டென்று நினைவாக மாறிப்போவதென்ன?’
அவன் மனைவியிடமிருந்து நீண்ட தூரம் வந்துவிட்டான். ஆனால், இந்தப் பயணம் பூராவும் எதற்கு? ஆச்சரியம்! கனவுகள் எங்கு பறந்துபோனதோ என்பதுகூட தெரியாமல் அவன் பிழைப்பில் மூழ்கிவிட்டான். ‘நால்வருக்கு மத்தியில் நிற்க முடிந்தவனால் மனைவி முன் தலைநிமிர முடியாதா? உண்மையில், எந்த நால்வரைக் காப்பாற்ற இந்த நகரத்திற்கு வந்தான்? தன்னுடைய இளமைக் காலத்தின் ஆரம்ப நாட்கள் எதன் மூலமாகவோ அவனுடைய உடலுக்குள் மீண்டும் பிரவேசித்ததைப்போல இருந்தது. கால்கள் நிற்கவில்லை.
கொம்புகளைப் பூர்த்தியாக மூடுவதைப்போல தலைப்பாகை ஒன்றைத் தயாரித்தான், திடீரென்று விலக்கி மனைவியை ஆச்சரியப்படுத்தலாம் என்று! எப்பொழுதோ மறந்துபோன தன் ஊரை நோக்கி குதிரை வண்டியைக் கட்டினான். தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளுடன் இன்னும் மூன்று வண்டிகள் அவற்றைத் தொடர்ந்தன.
அவனுடைய ஊர்க்காரர்களில் சிலர் அவனைக் கண்டுபிடித்தனர், சிலர் அடையாளம் காண முடியாமல் போயினர், சிலர் கட்டிப்பிடித்துக் கொண்டனர், இன்னும் சிலர் கண்ணீர் சிந்தினர். அவன் அம்மா நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் வீழ்ந்து எப்போதோ செத்துப் போய்விட்டாள். ஒரு பெண்ணையும் ஓர் ஆணையும் சேர்த்து வைக்க முடியாத அந்த வீடு, பாழடைந்த வீடாக எஞ்சி நின்றது. வீட்டில் ஓரிருமுறை திருடர்கள்கூட வந்து சென்றார்கள் என்று தெரிந்தது, ஆனால் அவர்களுக்கு எதுவும் கிடைத்த மாதிரி தெரியவில்லை. எப்போதாவது – அந்த வீட்டிலிருந்து சில இறகுகள் காற்றுக்கு அடித்துக்கொண்டு வருகின்றது என்று நினைத்துக் கொள்வதைத் தவிர, அவன் வீட்டுடன் யாருக்கும் தொடர்பு இல்லாமல் போனது.
“பிறகு என் மனைவி?”
அவள் சில நாட்கள் அந்த வீட்டில் வசித்தாளே அன்றி, எங்கோ ஊரை விட்டுப் போய்விட்டாள்.
இந்தப் பிரபஞ்சம் முழுவதுமாகத் தன்னை யாரிடம் சேர்த்தால் தான் சாதித்ததிற்குரிய மதிப்பு கிடைக்குமோ… அந்த ஒரே மனுஷிதான் அவள்!
வண்டிகளைத் திருப்பி அனுப்பிவிட்டான். புத்தி சுவாதீனமற்றவனைப் போல நடந்தான். ஊர்க் காற்றைச் சுவாசித்தான். மலை, காடுகளில் திரிந்தான்; ஆடைகள் அழுக்குப்பட்டுவிட்டன, முடி பிசுபிசுத்துப் போனது. ஓரிரு மாடு மேய்ப்பவர்கள் றெக்கைகள் கொண்ட ஒரு பெண்ணைப் பார்த்தோம் என்று தகவல் சொன்னார்கள். அவற்றின்படி, கடைசியில், ஒரு சிறிய அருவி இருக்கும் மலைப் பகுதியில் அவளைக் கண்டுபிடித்துவிட்டான். எத்தனை நாள் பந்தம் என்று! உடலில் துடித்த ஏதோ உறுப்பினால், அவள் அவனை எளிமையாகவே கண்டுபிடித்தாள். நெஞ்சிலிருக்கும் மூச்சுக் காற்று தன் பாரத்தைக் குறைத்ததும் அவன் கேட்டான்: “எப்படி இங்கு இருக்க முடிகிறது உன்னால்?” அவன் உள்ளங்கையின் நெருக்கத்தை அனுபவித்தபடி சொன்னாள்: “எனக்கு வேலைகள் இருக்கின்றன. ஆனால் லட்சியங்கள் இல்லை.” அவள் கண்களின் வெளிச்சத்திற்குக் கண்களை மூட முடியாமல், “உனக்கு றெக்கைகள் இருக்கின்றனவாமே!” என்று பரவசத்துடன் கேட்டான். அவள் சின்னதாகச் சிரித்து, கேட்டாள்: “அது இருக்கட்டும்.. என்னைவிட்டுவிட்டு எதற்காகச் சென்றாய்?”
“என் கொம்புகளைப் பார்த்தால் உனக்குச் சந்தோஷமாக இல்லையா?”
“கொம்புகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது?” அவன் தலையை அப்படியும் இப்படியும் ஆட்டினாள்.
“ஆனால் இத்தனை ஆண்டுகள் போராடியது கொம்புகளுக்காகத்தான்…”
“இருக்க முடியாது; இல்லையென்றாலும் அதுவே முளைக்கக் கூடியது!”
அவன் அதையே ஆலோசித்தபடி ராத்திரியெல்லாம் தூங்கவில்லை. இவற்றைத்தான் மனைவிக்குக் காட்ட வேண்டுமென்று பெருமிதத்துடன் வந்தான். அவளைச் சமீபிப்பதற்கு வெட்கமாக இருந்தது. ஆனால் கொம்புகளைப் போக்கிக் கொள்ளத் தேவையான ஆயுதங்கள் தன்னிடம் இல்லையே! எது அவளுக்குப் பெருமை? சொல்லாமல் கொள்ளாமல் மீண்டும் போய்விட்டால்! உண்மையில் எதற்காக இத்தனை நாட்கள் பிழைத்தது? தன் மனைவிக்குக் கணவனாக இருப்பதைத் தவிர வேறெதிலும் உற்சாகம் இல்லையென்று தோன்றியது. ஆனால் இத்தனை ஆண்டு வாழ்க்கை பூராவும் ஒரு நிரூபணத்திற்கு அருகில் நின்றுபோகும் நிலை வந்தது வருத்தமாக இருந்தது. அவனுக்கு அழுகை வந்தது.
காலை எப்பொழுதோ ஒரு நிர்ணயத்துக்கு வந்ததும் கண்கள் மூடிக்கொண்டன. ஆழ்ந்த உறக்கம். தன்னை மறந்த உறக்கம். இத்தனை ஆண்டுகளின் அலைச்சல், உடல் புத்துணர்ச்சி பெற்றது. உற்சாகத்துடன் எழுந்தான். உடலின் உள்பகுதிகூட சுத்தம் ஆவதைப்போன்று ஓடும் நீரில் குளித்தான். அந்தப் பக்கம் வந்த முயலைப் பிடிக்க முயன்றான். நடந்தபடி அடர்ந்த மரங்களுக்கிடையில் சென்றான். ஆழ்ந்து மூச்சு இழுத்து, உடலுக்குள் சக்தியை நிரப்பிக்கொண்டு, ரெண்டு மரங்களுக்கிடையில் தன் கொம்புகளைச் செருகி பலமாக, கெட்டியாக, எங்குமில்லாத ஆற்றலுடன் ஒருமுறைக்கு அவற்றை முறித்துக்கொண்டான். ‘ஆஆஆஆ… அய்யோ அய்யோ… வலி… வலி… தேவீ தேவீ இறந்து போகிறே…’
ரத்தம் வெள்ளம்போல வழிகிறது; சோர்வு மேலிடுகிறது; வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஓடிய கால்கள் குலைகின்றன. ரத்தத்தின் தடங்கள், கூப்பாடுகளின் சங்கேதங்களுடன் அவனைத் தேடிக்கொண்டு அவள் ஓடி வந்தாள். அழுந்த அவனை மார்மீது சாத்திக்கொண்டாள்.
கொம்புகளின் அடிப்பகுதியில் கட்டுகட்டும் பிரயத்தனத்தை அவன் மறுத்தான். தன் மரணம் தெரிகிறது. இறுதி மூச்சைக் காற்றில் விடுவிக்கும்போது தன் கடைசிப் பார்வையைப் பார்த்தான்… அவள் திடீரென்று றெக்கைகளை விரித்தாள். இத்தனை நாட்கள் அந்த உடலில் அவை எப்படி ஒடுங்கியிருந்தனவோ… வாழ்க்கையின் கட்டங் கடைசிப் பாடத்தைப் புரிந்துகொள்வதற்குள்ளாகவே அவனுடைய பார்வை தவறிவிட்டது. கழுத்து சரிந்து போனது.
அந்தி சாயும் வேளையில் மாடு மேய்ப்பவர்களின் உதவியுடன் அவனைப் புதைப்பதற்குப் பள்ளத்தில் இறக்கும் போகும்போது கவனித்தாள் அவள். அவன் தலையில் கையளவில் ஒரு சிவப்பு நிற துராய்!
அவள் றெக்கைகள் குறித்து யாரும் பொருட்படுத்தவில்லை என்றாலும், பிணத்திற்கு துராய் முளைத்த விசயத்தை மாத்திரம் அச்சுற்றுப்புற ஊர்களில் நீண்ட காலம் பேசிக்கொண்டார்கள்.
குறிப்புகள்
சேவல் கொண்டையைப் போன்றது. கொண்டை என்கிற சொல் பொருள் மயக்கம் தருவதால், துராய் என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது. (மொ-ர்.)2. வீட்டின் ஒரு பகுதியில் கைம்பெண்கள் நடத்தும் சிற்றுண்டிக் கடை.
3. க்ரீஸ்
4. தம்பி
5. புகையிலை
6. மரியாதை விளி
7. கொம்புகளுக்கு அணிவிக்கும் மணிகள் கொண்டிருக்கும் பொருள்.
8. நடக்கும்போது அவ்வாறு சத்தமிடும்
தெலுங்கில் எழுதப்பட்ட மூலக்கதையானது ஜூன் 2014 கனிகே இணைய இதழில் வெளியானது.இத்தமிழ் மொழிபெயர்ப்பு காலச்சுவடு ஆகஸ்டு 2023 இதழில் வெளிவந்தது.பூடூரி ராஜிரெட்டி (1977) தெலுங்கில் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர். பூர்வீகம் நரசிங்காபுரம், ஸிரிஸில்லா மாவட்டம். விவசாயப் பின்புலத்தைச் சேர்ந்த இவர், பத்திரிகையாளராகப் பணி புரிந்தபடி ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும், ஒரு கட்டுரைத் தொகுப்பு முதலான வேறு சில நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

சண்முக. விமல் குமார் (1993) றாம் சந்தோஷ் வடார்க்காடு என்ற புனைபெயரில் எழுதும் சண்முக. விமல் குமார், சொல் வெளித் தவளைகள், இரண்டாம் பருவம், சட்டை வண்ண யானைகள் ஆகிய கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர். இயற்பெயரில், மொழிபெயர்ப்பு நூல், இரண்டு கட்டுரை நூல்களை வெளியிட்டுள்ளார். புனைவு நூலையும் வெளியிட்டுள்ளார். கவிதைக்காக ஆத்மாநாம் விருதினையும், ஆய்வுப் பங்களிப்பிற்காக பேரா. பா. ரா. சுப்பிரமணியன் பெயரிலான ‘இளம் ஆய்வறிஞர்’ விருதையும் பெற்றவர்.
மின்னஞ்சல்: sanmugavimalkumar@gmail.com
றாம் சந்தோஷ் வடார்க்காடு's Blog
- றாம் சந்தோஷ் வடார்க்காடு's profile
- 2 followers

