பசித்தவன்

எட்வர்ட் மன்ச் வரைந்த The Scream என்ற ஓவியத்தைக் காணும் போதெல்லாம் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான நட் ஹாம்சனின் பசி நாவலே நினைவிற்கு வருகிறது. ஒன்று, பசியால் துரத்தப்படும் எழுத்தாளனின் ஓலம். மற்றொன்று நகரவாழ்வின் நெருக்கடி உருவாக்கிய அலறல். மன்ச்சின் ஓவியத்திலிருப்பவன் தான் ஹாம்சன் நாவலில் எழுத்தாளனாக வருகிறான் என்றே நினைத்துக் கொள்கிறேன்.

The Scream

நட் ஹாம்சனின் பசி நாவல் 1890 இல் வெளியானது. இளம் எழுத்தாளனின் வாழ்க்கை போராட்டத்தை விவரிக்கும் இந்த நாவல் திரைப்படமாகவும் வந்துள்ளது.

நாவல் கிறிஸ்டியானியா நகரில் நடக்கிறது (இப்போது அந்த நகரின் பெயர் ஒஸ்லோ) நாவலில் கதாநாயகனுக்குப் பெயரில்லை. அவன் ஒரு அடையாளம் மட்டுமே. கிறிஸ்டியானியா என்ற நகரில் வசித்தவர்கள் அதன் நினைவுகளிலிருந்து விடுபட முடியாது. அதிசயமான நகரமது என்கிறார் ஹாம்சன்

எழுத்தாளனின் கடந்தகாலம் பற்றி நாவலில் அதிகமில்லை. அவனது நிகழ்காலமும் அவனைத் துரத்தும் பசியும் தான் நாவலாக விரிவு கொள்கின்றன. கிறிஸ்டியானியா நகரம் நாவலில் விரிவாகச் சித்தரிக்கப்படுகிறது. .

ஹாம்சனின் முன்னோர்கள் நார்வே நாட்டு விவசாயிகளாக இருந்தனர். அந்தப் பின்புலத்தைக் கொண்டே நிலவளம் நாவலை எழுதியிருக்கிறார். பசி நாவலின் நாயகன் போலவே ஹாம்சனும் அலைந்து திரியும் வாழ்க்கையைக் கொண்டிருந்தார். செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் பயிற்சி பெற்ற அவர், தனது சிறிய சேமிப்பைப் பயன்படுத்தி, தனது பதினெட்டாவது வயதில் சிறுநூல் ஒன்றைத் தானே வெளியிட்டார். அது இலக்கிய உலகில் கவனம் பெறவில்லை. பள்ளி ஆசிரியர், சாலைப்பணியாளர், சர்வேயர், கார் ஓட்டுநர், நிலக்கரி சுரங்கத்தில் வேலை எனப் பல்வேறு வேலைகளைச் செய்திருக்கிறார் ஹாம்சன்.

இந்த நாவல் முழுவதும் பசி எழுத்தாளனைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது. அவனை அவமானப்படுத்துகிறது. பொய் சொல்ல வைக்கிறது. எச்சிலை உணவாக விழுங்கி வாழச் செய்கிறது. பசியின் உச்சத்தில் அவன் வாந்தியெடுக்கிறான். தனது கைவிரல்களைத் தின்றுவிடலாமா என யோசிக்கிறான். கடித்துப் பார்க்கிறான். தீராப்பசியில் பித்தேறியவன் போல நடந்து கொள்கிறான்.

சிறிய அறை ஒன்றில் வசிக்கும் எழுத்தாளனின் குரலிலே நாவல் துவங்குகிறது. அவன் வேலை தேடுகிறான். தொடர்ந்த நிராகரிப்புகள், அரைகுறை வாக்குறுதிகள், ,ஏமாற்றப்பட்ட நம்பிக்கைகள் கொண்டதாக நீள்கின்றன அவனது நாட்கள். .ஏதேனும் அதிர்ஷ்டம் நடந்துவிடாதா என்று ஏங்குகிறான். நிச்சயம் நான் வெற்றி அடைவேன் என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறான்.

அவனது பாக்கெட்டில் எப்போதும் ஓரு பேப்பரும் பேனாவும் இருக்கின்றன. புதிதாக யோசனை வந்தால் உடனே எழுதி வைத்துக் கொள்வான். எங்கே செல்வது எனத் தெரியாமல் இலக்கில்லாமல் கிறிஸ்டியானியாவின் தெருக்களில் அலைந்து திரிகிறான்.

வழியில் தெரிந்தவர் தென்படுகிறார். எங்கே அவன் கடன் கேட்டுவிடுவானோ என நினைத்து விலகிப் போகிறார். தனது மேல்கோட்டை அடகு வைத்து ரொட்டி வாங்குகிறான். பசியை அவனால் வெல்ல முடியவில்லை. ஆனாலும் அவனிடம் விளையாட்டுத்தனமிருக்கிறது. பொய் சொல்லி ஒருவரை நம்ப வைக்க முடிகிறது. பகற்கனவுகள் காண முடிகிறது.

இரவு எங்கே தங்குவது. நாளை என்ன செய்வது என்று தெரியாத நிலையிலும் அவன் சாலையில் செல்லும் அழகிகளை ரசிக்கிறான். அவர்களுடன் உரையாடுகிறான். அந்தப் பெண்கள் போதையில் இருப்பவனாக அவனை நினைத்துக் கொள்கிறார்கள்.

கையில் காசில்லாத அவனிடம் ஒருவன் ஐந்து ஷில்லாங் கடன் கேட்கிறான். அந்த நிலையை நினைத்து வியந்து கொள்கிறான். அவனது வயிறு பட்டினி கிடப்பதால் மூளை பட்டினி கிடப்பதில்லை. அது எதை எதையோ யோசிக்க வைக்கிறது. கிறுக்குத்தனங்களைச் செய்ய வைக்கிறது.

வாழ்க்கை நெருக்கடிகள் ஒருவனை முடக்கும் போது அவன் சமரசம் செய்து கொள்வதே உலக நியதி. ஆனால் இந்த நாவலின் நாயகன் அப்படிச் சமரசம் செய்து கொள்வதில்லை. எழுத்தாளாராக வேண்டும் என்று அவன் விரும்பினால் மட்டும் எழுத்தாளனாகி விட முடியாது. அதற்கான சந்தர்ப்ப சூழல் உருவாக வேண்டும். வாழ்க்கை எதையும் எளிதாக அனுமதித்துவிடுவதில்லை என்பதை அவன் நன்றாக உணர்ந்திருக்கிறான். ஆகவே காயங்களை விரும்பி ஏற்றுக் கொள்கிறான். கடந்து செல்கிறான்.

இந்த நாவலோடு ஆல்பெர் காம்யூவின் The Fall மற்றும் சீர்ஷேந்து முகோபாத்யாயவின் கரையான் நாவலையும் தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும். நகர்ப்புற வாழ்வின் அந்நியமாதலையே இந்த மூன்று நாவல்களும் பேசுகின்றன. .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 22, 2024 06:25
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.