உண்மை இல்லாதை புனைவு ஏது – 2: புதுச்சேரி முதல் தூத்துக்குடிவரை – துப்பாக்கிச் சூடுகள்

உலகில் வேறு ஜனநாயக நாடுகளில் காணாதவகையில் இங்கே துப்பாக்கியை அதிகாரம் கூடுதலாகக் கையிலெடுப்பதன் காரணத்தை யோசிக்க வேண்டியிருக்கிறது. காங்கிரஸ், திமுக, அதிமுக என ஆட்சி அதிகாரத்திற்கு வந்த எந்த கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒருவகையில் இவையும் Encounter Killings அல்லது Extrajudicial killings வகைமை சார்ந்தவைதான். துப்பாக்கிச்சூடுகள் மட்டுமல்ல, 1970களில் அறிவு ஜீவிகளின் அசீர்வாத த்துடன் நடந்த அண்ணாமலைப் பல்கலைக் கழக உதயகுமார் வகை மரணமும் அதிகாரத்தின் அத்துமீறலுக்கு உதாரணமாகச் சொல்லப் படவேண்டியவைதான்.

லா போயெஸி ( La Boétie) பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவாதி அவர் ஒரு பக்கம் முழுமையான அதிகாரத்தையும்( le pouvoir absolu)மறுபக்கம் அடிமைத்தனத்தையும்(La servitude) நிறுத்தி தனது கருத்தியலை முன்வைக்கிறார். அவரைபொறுத்தவரை மனிதர்களிடமுள்ள இயல்பான அடிமைப் பண்பே முழுமையான அதிகாரத்தை தமது எஜமானர்களுக்கு கையளிக்கிறது. அதற்கு கைமாற்றாக , கையூட்டாக அது அதிகாரத்திடமிருந்து எதையோ எதிர்பார்க்கிறது. பசிக்குச் சோறு, உயிர்வாழ்க்கைக்கு உத்தரவாதம், ஊதியம், சலுகைகள், பரிசுகள், விருதுகள் என அனைத்தும் அவர் கருத்துப்படி கைக்கட்டி வாய்புதைப்பதற்கு கிடைக்கும் கூலிகள், கடைசியாக நமக்கேன் வம்பு என்கிற கூட்டமும் இதற்குள் வருகிறது. கிடைக்கும் எலும்புத் துண்டுக்கு வாலைச் சுருட்டிக்கொண்டுஅதிகாரத்தின் காலடியில் சுருண்டுகிடக்க அடிமைகள் பெரும் எண்ணிக்கையில் எப்போதும் காத்திருப்பதுதான் பிரச்சனை.

இறந்த காலம் நாவலிலிருந்து…..

புதுச்சேரி, ஈஸ்வர வருடம் சித்திரைமாதம் 23ந்தேதி (1937 ஆம் வருடம் மேமாதம்  5ந்தேதி)

அன்பிற்கும் பாசத்திற்குரிய அக்காளுக்கு தம்பி சதாசிவம் வணக்கத்துடனும் அன்புடனும் எழுதிக்கொண்டது.

இங்கு நம்முடைய அப்பா, அம்மா, நான் எனது சம்சாரம், பிள்ளை வெங்கட்ராமன் பாகூர் சித்தப்பா சித்தி, மற்றும் யாவரும் ஷேமம். அதுபோல உன்னுடைய நலனையும், மாமா, பிள்ளைகள் ஷேமத்தையும் அறிய ஆவல். இக்கடித த்தை மிகவும் தாமதமாக எழுதுகிறேன் அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன

தம்பி சிங்காரவேலுவை நீ பார்த்த தகவல் தெரியவந்த பின் எங்கள் மகிழ்ச்சிக்கு அளவில்லை. யாரையாவது அவன் திருமணம் செய்துகொள்ளட்டும், நல்லபடியாக ஊர்வந்து சேர்ந்தால் சரி. ஒரு சில தமிழர்கள் வியட்நாம் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு நம்ம தேசத்துக்கு வருவதை நிறுத்திவிட்டார்கள் என்று, கடித த்தில் இருந்த வரிகளைப் படிக்க கஷ்டமாக இருந்தது. அப்படி எதுவும் சிங்காரவேலு விஷயத்தில் நடந்துவிடக்கூடாது என்பதுதான் எங்கள் பிரார்த்தனை. அம்மா சிங்காரவேலு பெண்டாட்டியின் கழுத்தில் மாங்கல்யம் இருக்கிறதா? நம் குலவழக்கப்படி செய்துகொடுக்க தட்டார்கள் இருக்கின்றார்களா, இல்லையெனில் யாராவது வந்தால் செய்துகொடுத்தனுப்பலாமா, ஒழுங்காய் வந்து சேருமா என்றெல்லாம் கேட்டாள்.  மாரி அம்ம்மன் கோவிலுக்கு அவர்களை வரவழைத்து அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டும்படி நீ வற்புறுத்தவேண்டும் என்பதும் அம்மாவின் விருப்பம். அவள் கூறியதை அப்படியே எழுதிவிட்டேன்.

 இதற்கிடையில் ஒர் அமங்கலச் செய்தியையும் உனக்குச் சொல்லவேண்டியக் கட்டாயம்.  உன்கடிதம் கிடைத்த பிறகு புதுச்சேரியில் பல அசம்பாவிதச் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தேறிவிட்டன. எங்கிருந்து ஆரம்பிப்பது என யோசிக்கிறேன். அப்பா பின்வாசல் கிணற்றடியில் வழுக்கி விழுந்துவிட்டார், புத்தூருக்கு அழைத்துச் சென்று கட்டுகட்டவேண்டியிருந்தது. வாயதாகிவிட்டதால் எலும்பு கூடுவதற்கு நாளாகும் என்று வைத்தியர் சொல்கிறார். அப்பா தைரியமாக இருக்கிறார்.  அம்மா வழக்கம்போல மூக்கைச்சிந்திக் கொண்டிருக்கிறது. அம்மாவின் குணம் உனக்குத் தெரியாதா. தன் கவலைகளையெல்லாம் மருமகள் மீது காட்ட, அவள் என்னிடம் புலம்புகிறாள். அம்மா உனக்கு மட்டுமே பயப்படுவாள். நீ இங்கில்லை என்றானது அவளுக்கு மிகவும் சௌகரியமாகி விட்டது.

     இரண்டாவது, சித்தப்பா பெண், வடிவு குடும்பச் செய்தி. அவள் புருஷன் கெபெலே ஆலையில் தறி ஓட்டுபவராக வேலைசெய்கிறார் என்றும் குடும்பம் சாரத்தில் இருப்பதாகவும் உனக்கு எழுதியிருந்த ஞாபகம். அந்த மனுஷன் ஆலைத் தொழிலாளர்கள் நட த்திய வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டார். அது பெரும் கலவரத்தில் முடிந்தது. கலவரத்தை அடக்க நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களில் அவரும் ஒருவர். இளம் வயது, உழைப்பாளி. அதிர்ந்து ஒரு வார்த்தை பேசமாடார். வெத்திலைப்பாக்கு பீடி புகையிலை லாகிரிவஸ்துகள் என்று எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது.  ஆடிமாதம் வந்தால் ஒரு வருடம் ஆகபோகிறது. அவன் போனது ஒரு பக்கம் எனில் அந்தப் பெண்ணின் முடிவை நினைத்தால் ஆத்திரமும் கோபமும் வருகிறது.  புருஷன் செத்த மூன்றாம் நாள் பாகூர் சென்றிருந்தேன். இளம்வயதில் தாலியைப் பறிகொடுத்துவிட்டு, கையில ஒண்ணு வயிற்றில ஒண்ணுன்னு, பாக்க சகிக்காம திண்ணையில வந்து உட்கார்ந்துட்டேன்.  ஆனால் அதற்கடுத்த மூன்றாம் நாள் கைக்குழந்தையோடு கிணற்றில் குதித்து விட்டாள், பாதகி. முடிந்தவரை அழுதிருக்கிறாள், இனி தனால் முடியாது என்று நினைத்தாளோ என்னவோ.

புதுசேரியில் அந்தக் காலந்தொட்டு நடந்த மிகப்பெரிய தொழில் நெசவுதான். சிலருக்குக் குலத்தொழிலும் அதுதான். பரம்பரை பரம்பரையாக அத்தொழிலில் ஈடுபட்டிருந்த குடும்பங்கள் ஏராளம். நம்ம குடும்பத்தில்தான் இந்தத் தலைமுறையில் அதை மறந்துட்டோம். நம்முடைய உறவினர்கள் பலருக்கும் அதுதான் தொழில்: சாயம் போடுதல், பாவு, இழைகளில் சிக்கெடுத்தல், கஞ்சிபோடுதல், என்று நாள்முழுக்க வேலை இருக்கும். புருஷன் பொண்டாட்டி பிள்ளைகளென ஒரு குடும்பத்தில் இருக்கிற அத்தனைபேருக்கும் வேலை இருந்தது.  ஐரோப்பாவில் நம்முடைய நுணுக்கமான நெசவு ஆற்றலைப்பார்த்து அப்படி வியப்பார்களாம். கட்டுகட்டாக ஏற்றுமதி ஆயின. இந்த நிலமையில்தான் எங்கெல்லாம் கைத்தறி அதிகமோ அப்பகுதியில் நெசவாலைகளைக் கட்டினார்கள்.  பிரிட்டிஷார் அகமதாபாத்திலும், பம்பாயிலும் ஆலைகளைக் கட்ட, பிரெஞ்சுக்காரன் எங்கே போவான் ஒன்றுக்கு மூன்றாக ஆலைகளைப் புதுச்சேரியில் கட்டினான். உழைப்பதற்கு ஏழை சனங்கள் மலிவாகக் கிடைத்தார்கள்.  ஒரு நாளைக்கு 12 மணிநேர வேலை, மாதத்திற்கு 24 நாட்கள் உழைக்கவேண்டும். இந்த நிலமையில்தான் உலகில் எங்கோ ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இங்கிருந்த சென்ற துணிகளின் விற்பனையைப் பாதித்ததாம். அந்த நட்டத்தை சரிகட்ட நம்முடைய தொழிலாளர் ஊதியத்தைக் குறைத்தனர்.

30 களின் தொடக்கத்தில் பிரான்சு நாட்டில் துறைமுகத் தொழிலாளர்கள், தொழிற்சாலை ஊழியர்கள் பலரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட பின்னர் பிரான்சு அரசாங்கம் முதலாளிகள் தொழிலாளர்கள் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து அதன் அடிப்படையில் செய்துக்கொண்ட ஒப்பந்தப்படி சில சலுகைகளை வழங்க இருந்தது. அதேவேளை பிரிட்டிஷ் இந்தியா ஆலைத் தொழிலாளிகளுக்கும் வேலை நேரம், பணி ஓய்வுக்காலம் ஆகியவற்றில் சில சலுகைகள் கிடைத்திருக்க, புதுச்சேரியும் பிரான்சு தேச காலனி நாடுதானே குறைந்தபட்சம், சமீபத்திய ஒப்பந்தப்படியேனும் கிடைக்கவேண்டிய சலுகைகள் கிடைக்கும் எனப் புதுச்சேரி ஆலைத் தொழிலாளிகள் எதிர்பார்த்தனர்.  கிடைக்காதெனத் தெரியவந்ததும் ரோடியர் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சினையில் ஒரு தொழிலாளிக் கொல்லப்பட அதன் எதிரொலியாக சவானா ஆலையிலும் கெபெலே ஆலையிலும் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் தொடங்கியது. நிர்ப்பந்தம் காரணமாக ரோடியர் மில் தொழிலாளர்களும் வேலைக்குச் செல்லவில்லை. மூன்று நாட்கள் தொடர்ந்து ஆலைகளுக்குள் மறியலில் ஈடுபட்டும் அரசாங்கமோ, நிர்வாகமோ பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்ற கோபம் தொழிலாளர்களுக்கு, அதிகாரத்தின் சக்தியை தொழிலாளர்கள் உணரவில்லையென அரசுக்குக் கோபம், இந்நிலையில் ஆலைக்குள் நடந்த சில அசம்பாவிதங்களை சாக்காக வைத்து, உள்ளூர் போலீசாரும், இதற்கென தருவிக்கபட்டிருந்த பிரெஞ்சுகாலனி பிறபகுதி போலீசாரும் ஜூலை 30 1936 காலை எட்டுமணிக்கு போராடிய தொழிலாளிகள் மீது நடத்திய துப்பாகி சூட்டில் ஒருத்தன் ரென்டு பேரில்லை பன்னிரண்டு பேரை சுட்டுக்கொன்றார்கள். ஏதோ காக்கா குருவியைச் சுடுவதைப்போல.

 அன்றைய தினம் புதுச்சேரியே அல்லோலகல்லோலப்பட்ட து.   வீல் நுவார் என்று சொல்லப்படும் புதுச்சேரியின் மேற்கு பகுதியில் அதிகம் இந்த ஆலை சனங்கள்தானே. எங்கு பார்த்தாலும் அழுகுரல். பலர் அதிகாரத்திற்கு பயந்து கதவை அடைத்துக்கொண்டு வீட்டில் கிடந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் ஏன் சுட்டார்கள் எதற்காகச் சுட்டார்கள் என்று கேள்வி.  

சுட்டவனும் மனுஷன் சுடப்பட்டவனும் மனுஷன். சீதையை இராவணன் கொண்டுபோனான், நியாயமா பார்த்தா அது இராமன் இராவணன் சண்டை.   இராவணனிடத்தில் ஆரம்பத்திலேயே இராமன் ஒற்றைக்கு ஒற்றையா நின்றிருக்கனும். சண்டை போட்டிருக்கனும் அத்தனை சக்தியும் இருக்கிற மனுஷன் எதற்காக வானர சேனையையெல்லாம் மடிய விட்டார், அந்தப்பக்கம் இராவணன் செய்த தப்புக்கு எதற்காக இந்திரஜித், கும்பகர்ணனெல்லாம் மடியனும். பாரதத்திலேயும் அதுதானே நடந்தது பங்காளிச் சண்டைக்கு சம்பந்தமில்லாத சனங்கள் இரு தரப்பிலும் வெட்டி மடிந்தார்கள். இவர்களை இப்படித்தான் பார்க்கனும்: இராமன் இராவணன் துரியோதனன் தருமன் இவர்களெல்லாம் அதிகார சாதி, இவர்களுக்காக ஏதேதோ காரணங்களால் தன் பெண்டாட்டிப் பிள்ளைகளை மறந்து வீரமரணமென்ற பெயரில் செத்து மடிந்த பைத்தியக்கார மந்தையெல்லாம் சேவக சாதி.

 கோவலனைச் சிரச்சேதம் செய்த கொலையாளிக்கும் கொலையுண்ட கோவலனுக்கும் வரப்பு சண்டையா வாய்க்கால் சண்டையா.  பிரான்சு தேசத்துல அனத்தோல் தெய்பிளெர் என்று ஒரு கொலையாளி இருக்கானாம். அவன் வேலை, கொலைதண்டனை பெற்றவர்களின் தலையை கில்லெட்டினால் சீவுதல். ஒருத்தர் இரண்டுபேரில்லை, இதுவரை நானூறு மனிதர்களின் தலைகளைத் துண்டித்திருப்பதாகக் கேள்வி.  அவனால் கொல்லபட்டவர்களெல்லாம் அவனுடைய எதிரிகள் இல்லை. அவனைக்கொல்லச் சொல்லி ஆணையிட்ட அதிகாரத்தின் எதிரிகள். அதை நிறைவேற்றினால்தான் கொலையாளியின் ஜீவனம் நடக்கும். அய்ய்யோ என பரிதாபப்பட்டால், கொலையாளி தலை மறுநாள் உருளும். அதிகாரம் உத்தரவு இடுகிறபோது அதனை நிறைவேற்ற அன்றைக்கு கத்தி, இன்றைக்குத் துப்பாக்கி. நீ வெட்டு, நானிருக்கிறேன் என்றது முடியாட்சி.  நீ சுடு நானிருக்கிறேன் என்கிறது இன்றைய அரசு. நான் பார்த்துகொள்கிறேன், உனக்கு எந்தச்சிக்கலும் வராமல் நான் பாதுகாக்கிறேன் என்கிற உத்தரவாதத்தை அதிகாரம் தருகிறபோது, 12 பேரைஎன்ன 12000 பேரைக்கூட கூலிப்படைகள் சுடும்.  

அண்ணனாவது தம்பியாவது, குருவாவது, குருகுலவாச சினேகிதனாவது, பாணத்தைவிடு நான் இருக்கிறேன், என்று அதிகாரத்தின் அவதாரமாக கண்ணன் சொல்லலையா? தம்பி சிங்காரவேலு, தனக்கு வாழ்க்கைக் கொடுத்த பிரெஞ்சு அரசாங்கத்திற்கு இரத்தவரி செலுத்துகிறேன் என்ற பெயரில் துப்பாக்கி எடுத்தான். கர்ணன், துரியோதனன் எதிரிகளைக் குறிவைத்த அதே காரணம்.  சிங்காரவேலுவால் போரிலே சுட்டுக்கொல்ல இருக்கும் மனிதர்களுக்கும் அல்லது இவனை சுடுவதற்கு போர்முனைகளில் காத்திருக்கும் மனிதர்களுக்கும் பகையா என்ன? அதிகாரம் தனது எல்லைகுறித்த பிரச்சனைகளில் ஏவலர்களைப் பயன்படுத்திக்கொள்கிறது.  அடிமைகளை மோதவிட்டு அதிகாரம் பாதுகாப்பாக வாழக் கற்றிருக்கிறது. கொல்லப்பட்டசேவகத்தின் பெண்டாட்டிப்பிள்ளைகள் திக்கின்றித் தவிக்க, அதிகாரம் தன் மனைவி மக்களுடன் சொகுசாக வாழ்கிறது.  உன் சித்தி மகள்கூட நடு வீதியில், தலை விரிகோலமாக மண்ணை வாரி இறைத்து சபித்தாளாம். அழுதழுது தொண்டைகட்டியிருந்ததால் வார்த்தைகள் இல்லை. வாயிலிருந்து வெறும் காற்று மட்டுமே. “எந்தச் சாமியும் இறங்கிவந்து கேட்காது, அவளை வீட்டுக்குள்ளே இழுத்து போங்க”, என்றாராம் கூடியிருந்த கும்பலில் ஒரு நபர்.  அடிமைகளைக் காப்பாற்றக் கடவுள் வர வேண்டாம், ஆனால் அதிகாரத்தைத் தண்டிக்க கடவுள் வரவேண்டும். சில நாட்களாக அப்படிப்பட்ட மனநிலையில்தான் நான் இருக்கிறேன்.

அந்தக் காலத்திலாவது அதிகாரமும் ஒரு கட்ட த்தில் ஆயுதம் எடுத்து தனது எதிரியோடு நேருக்கு மோதியதைக் காப்பியங்களிலும் வரலாற்றிலும் படித்திருக்கிறோம்.  இராமயணத்திலும், மகா பாரதத்திலும் அதுதானே நடந்தது. அப்படியொரு நெருக்கடி, மாற்றம் இன்றைய அதிகாரத்திற்குள்ளும் நிகழவேண்டும். இறந்தால் நாட்டைக் கவனித்துக்கோள்ள துணை அதிபரோ துணை பிரதமரோ இருக்கிறார் என்பதால் (நடப்பதுதானே?) போர்முனையில் ஆயுதம்  ஏந்தி  எதிரிநாட்டு  பிரதமர் அல்லது  அதிபரோடு, ஒரு நாட்டின்  பிரதமர் அல்லது அதிபர் மோதவேண்டுமென அரசியல் சட்டத்தை திருத்தட்டும்,  உலகில்  யுத்தங்கள் இல்லாதொழிந்துவிடும்.  

கடித த்தின் தொடக்கத்தில் எழுதியிருந்த ஷேமங்களின் பின்னே இவ்வளவு விவகாரம் இருக்கிறது. சில சமயம் கடிதங்களே எழுதிக்கொள்ளாமல் இருப்பதும் நல்லதென்று படுகிறது. பிழைக்கப்போன நாட்டில் சொந்த மண்ணைக்காட்டிலும் கூடுதல் பிரச்சினைகள் இருக்கலாம். இந்தோ- சீனா மக்களுக்கும் நீங்கள் அந்நியர்கள். ஆளுகின்ற அரசாங்கத்திற்கும் நீங்கள் அந்நியர்கள். அந்த வாழ்க்கை மனதைப் பாதிக்கக் கூடும். ஆறுதல் அளிப்பதைப்போல சிங்காரவேலு குடும்பம் இருக்கிறது. நீ அவனுக்கும், அவன் உனக்கும் துணை அதற்குப்பிறகுதான் மாரியம்மன் துணையெல்லாம்.  மாமாவையும் விசாரித்த தாகச் சொல்.

இப்படிக்கு

தம்பி சதாசிவம்.

 ———————————————————————

[image error]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2022 22:19
No comments have been added yet.


Nagarathinam Krishna's Blog

Nagarathinam Krishna
Nagarathinam Krishna isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Nagarathinam Krishna's blog with rss.