சிங்களத்தில் அம்புலி மாமா – எம்.ரிஷான் ஷெரீப்
அம்புலி மாமா தமிழ் விக்கி
அம்புலி மாமா பற்றிய உங்கள் பதிவு பல பால்ய கால ஞாபகங்களைக் கிளறி விட்டது. நான் வாசித்த முதல் கதைப்புத்தகம் ‘அம்புலி மாமா’. சிறுவர் கதைகள் மாத்திரம் உள்ளடங்கிய கதைகளின் களஞ்சியம் அது. இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வெளிவரத் தொடங்கிய அம்புலிமாமா இதழ் ஏழு தசாப்தங்களைக் கடந்து தற்போது நின்று போயிருப்பது வருத்தத்தைத் தருகிறது.
அவற்றிலுள்ள கதைகள் பின்னாட்களில் திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்ததாக அறியக் கிடைத்தது. என்றாலும் கதைகளை வாசிக்கும்போது நாம் மனதில் உருவகித்துக் கொள்ளும் காட்சிகளைப் போல அவை இருக்காது, இல்லையா?
இந்தியாவில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி, மலையாளம், சிந்தி, சந்தாளி, பஞ்சாபி, ஒடிய, அஸ்ஸாமிய மொழிகளில் மாத்திரமல்லாமல், அந்தக் கால கட்டத்தில் இலங்கையில் சிங்கள மொழியிலும் வெளிவந்து கொண்டிருந்த சிறுவர்களுக்கான சஞ்சிகை அது. சிங்கள மொழியில் நான் பிறப்பதற்கு முன்பே 1978 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ‘அம்பிலி மாமா’ எனும் பெயரில் வெளிவந்து கொண்டிருந்த அந்த சஞ்சிகை இனக்கலவர காலத்தோடு வெளிவருவது நின்று போன ஒரு குறிப்பிடத்தக்க சஞ்சிகையாகும்.
இலங்கையில் அந்தக் காலகட்டத்தில் ‘அம்பிலி மாமா’ இதழ்களுக்கு பெரும் வரவேற்பு இருந்திருக்கிறது. அந்த இதழ்களை வாசித்த சிங்கள வாசகர்கள் பலரும் இன்றுவரையில் அவற்றைத் தமது வருங்கால சந்ததியினருக்காக சேகரித்து வைத்திருப்பதைக் காண முடிகிறது. அம்புலிமாமா என்று கூறியதுமே அவற்றிலுள்ள வேதாளக் கதைகள் உடனே நினைவுக்கு வருவதாக இன்றும் அவர்கள் சிலாகித்துக் கூறுகிறார்கள்.
அம்புலி மாமா இதழ் சிங்களத்தில் வெளிவருவது நின்று போன பிறகும் கூட, 1989 – 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் கல்வியமைச்சராகவிருந்து பின்னர் படுகொலை செய்யப்பட்ட லலித் அத்துலத்முதலி, ஆங்கில அம்புலி மாமா இதழ்களில் வெளிவந்த வேதாளக் கதைகளை மாத்திரம் சிங்களத்தில் மொழிபெயர்த்து பிரசுரிக்க ஏற்பாடு செய்திருந்ததை அறியக் கிடைக்கிறது.
சிறுவர்களிடம் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டக் கூடிய, நல்லறங்களைப் போதிக்கக் கூடிய, சிறந்த கற்பனை ஆற்றல்களை வளர்க்கக் கூடிய அம்புலிமாமா போன்ற இதழ்கள் தமிழில் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்பதே எனது அவா.
இத்துடன், சிங்களத்தில் வெளிவந்த ‘அம்பிலி மாமா’ இதழ்களின் முன்னட்டைகள் மற்றும் உட்பக்கங்கள் சிலவற்றின் புகைப்படங்களை இணைத்திருக்கிறேன். அவற்றை அவதானிக்கும்போது பௌத்த அறநெறிப் பாடசாலைகளில், பிள்ளைகளுக்கு வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த ‘அம்பிலி மாமா’ இதழ்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதாலேயே போகப் போக அவற்றின் அட்டைகளில் புத்தரின் ஓவியங்களும், புகைப்படங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது.
எம்.ரிஷான் ஷெரிஃப்
mrishansh@gmail.com
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

