ஆயிரம் ஊற்றுக்களின் அழகியல்-கடிதம்
ஆயிரம் ஊற்றுகள், வாங்க
தாங்கள் எழுதிய ஆயிரம் ஊற்றுகள் என்ற திருவிதாங்கூர் ஸம்ஸ்தான சரித்திரத்தை அடியொற்றிய வரலாற்றைப் புனைவுக்கதை தொகுப்பை சமீபத்தில் படித்தேன்; உண்மையில் இதுவரை சிந்தித்து அறியாத ஓர் பார்வையை அதில் கூறியிருந்தீர்கள்.
இதுகாலம் வரை நமது காலனிய வரலாற்றில் வெள்ளையரை துணிந்து எதிர்த்த வீரபௌருஷத்தை கொண்டாடவே கற்றுத்தரப்பட்டிருக்கிறது; ஆனால் வெள்ளையரை தந்திரமாக கையாள வேண்டிய விதத்தில் கையாண்டு முடிந்தளவு தனது சுய அதிகாரத்தை செலுத்தி அதன் வழி மக்களுக்கு இயன்றதை மக்களுக்கு செய்திருக்கிற அரச/அரசிகளை இது போன்ற வரலாற்று புதினங்கள் வழியே தான் அறிந்த கொள்ள முடிகிறது.
பரந்து விரிந்த இந்நாவலந்தீவின் வரலாற்றில் இன்னும் எத்தனை பார்வதி பாய்கள் இருந்திருக்கிறார்களோ தெரியாது ; அவர்களுள் எத்தனை பேரை நான் கண்டடைவேனென்பதும் தெரியாது ஆனால் தற்சமயம் கௌரீபார்வதீ பாய் அரசியைப்பற்றியும் அவரைத்தொடர்ந்து நல்லாட்சி புரிந்த திருவிதாங்கூர் அரசர்களை பற்றியும் அறிய Travancore State Manualஐ புரட்டத்தொடங்கியுள்ளேன்;
இத்தொடக்கத்திற்கு வித்திட்ட ஆயிரம் ஊற்றுகளுக்கும் அதை எழுதிய உங்களுக்கு நன்றியும் – வணக்கமும்.
அன்புடன்,
ஜயந்த்
*
அன்புள்ள ஜெ
ஆயிரம் ஊற்றுக்கள் கதைகளை தனித்தனியாக வாசித்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் முற்றிலும் பெரியஒரு பார்வை கிடைத்தது. அதில் வரும் வேலுத்தம்பி போன்ற கதைநாயக பிம்பங்கள் சுயநலவாதிகள். ஆணவத்தாலும் புகழாசையாலும் அதிகார மோகத்தாலும் போரையும் அழிவையும் உருவாக்குகிறார்கள். பார்வதிபாய் போன்ற அரசிகள் மக்கள்நலம் நாடும் அன்னையராக இருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் அரசிகள் அனைவருமே மாபெரும் ஆட்சியாளர்களாக இருந்தனர் என்று நீங்கள் சொன்னது ஞாபகம் வந்தது
சிவா அருண்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

