வெள்ளையானை,சர்வதேசப்பரிசு, பிரியம்வதா

வெள்ளை யானை, உலகளாவிய இலக்கியப்போட்டியில் வெற்றி

ஜெ,

உங்கள் ஐரோப்பா பயணம் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது என நினைக்கிறேன். புகைப்படங்களைக் கண்டேன். குளிரில் ஒரு எஸ்கிமொ குடும்பமாக மாறிவிட்டீர்கள் போல!

நேற்றும் முன்தினமும் அலுவலக பயணத்தில் இருந்ததனால் PEN/Heim மொழியாக்க நிதி பற்றி எழுத முடியவில்லை. அதனால் வாட்சாப் மூலம் செய்தியை மட்டும் பகிர்ந்திருந்தேன். அதைப் பற்றி இப்போது சற்று விரிவாகக் கூறலாம் என்று தோன்றியது. PEN நிறுவனம் பற்றி: PEN, Poets, Essayists, Novelists என்பதன் சுருக்கம். 1921இல் லண்டனில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு ஆக்கப்பூர்வ வெளிப்பாடுகளையும் அதைப் பேணும் கருத்து சுதந்திரத்தையும் தனது மையமாகக் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போர் மற்றும் பனிப்போர் காலங்களில் PEN அமைப்பு வலுப்பெற்று பல நாடுகளில் கிளைகள் உருவாயின. இப்போது PEN International என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

இதன் பகுதியாக PEN America 1992-வில் நியுயார்கில் துவங்கப்பட்டது. PEN International அமைப்பின் நூற்றுக்கணக்கான மையங்களில், இதுவே பெரியது.  7500+ உறுப்பினர்கள் கொண்டது. PEN America இலக்கியக் கூட்டங்கள், விழாக்கள் நடத்தியும், புனைவு, அபுனைவு, மொழியாக்கம் போன்ற பல தளங்களில் இலக்கிய விருதுகள் அளித்தும் வருகிறது. தவிர, வளர்ந்துவரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முறையில் எட்டு grants/fellowships மூலம் நிதி உதவியும் அளித்து வருகிறது. இதில் ஒன்று மொழியாக்கங்களுக்காக அளிக்கப்படும் PEN/Heim Translation Fund Grants. இந்திய அளவில் நான் அறிந்தவரை புனைவு மொழியாக்கத்துக்கு எந்த அமைப்பும் நிதியுதவி அளிப்பதில்லை (அபுனைவுக்கு New India Foundation Fellowship குறிப்பிடத்தக்கது).

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இம்மாதிரியான பல வாய்ப்புகள் உள்ளன. அதில் சிலரே, சர்வதேச அளவில் விண்ணப்பங்களை வரவேற்கின்றன. பெரும்பாலான திட்டங்கள் அந்நாட்டவருக்கு மற்றுமே உரியவை. எனவே PEN/Heim போன்ற வாய்ப்புகள் மிக அரிதானவையாகவும் அதனாலேயே கடும்போட்டிக்குரியவையாகவும் உள்ளன.

PEN/Heim தொடக்கம் மற்றும் நோக்கம் பற்றி அவர்கள் தளத்தில் உள்ள குறிப்பு: The PEN/Heim Translation Fund was established in the summer of 2003 by an endowed gift of $730,000 from Michael Henry Heim and Pricilla Heim, in response to the dismayingly low number of literary translations currently appearing in English. Its purpose is to promote the publication and reception of translated international literature in English. Thanks to the generosity of Michael Henry Heim and Pricilla Heim’s endowment, PEN America has awarded grants to almost 200 winning projects. The Fund has been uniquely successful in finding publishers for major international works, encouraging younger translators to enter the field, and introducing English-speaking readers to new and exciting voices. All other criteria being equal, preference is given to translators at the beginning of their career, and to works by underrepresented writers working in underrepresented languages.

இந்த வாய்ப்பைப் பற்றி அறிந்ததும் என் ALTA வழிகாட்டி கரீம் ஜேம்ஸ் அபு-செய்திடம் கேட்டேன். அவர் கடந்த சில வருடங்கள் PEN/Heim நடுவர் குழுவில் பணியாற்றியிருந்ததாகவும் இம்முறை பங்கேற்கவில்லை என்றும் கூறினார். ஆண்டுதோறும் 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வருகிறது, மிகவும் போட்டிக்குரியது, ஆனால் கண்டிப்பாக விண்ணப்பிக்கவும் என்றார். அதுவரை வெள்ளை யானையின் சில அத்தியாயங்களை என் மொழியாக்கத்தில் வாசித்திருந்தவர், இப்படைப்பு தேர்வு செய்யப்பட நல்ல வாய்ப்பு உள்ளது என்றும் ஊக்குவித்தார். எனவே என் விண்ணப்பத்தை சமர்ப்பித்தேன். அதற்காக, அவர்கள் கேட்டிருந்தவாறு நூலைப் பற்றிய ஒரு கட்டுரை, ஆசிரியரைப் பற்றிய விரிவான குறிப்பு, மொழிபெயர்ப்பாளருடைய தற்குறிப்பு, தவிர 5000 வார்த்தைகளுக்குட்பட்ட மொழிபெயர்ப்பு மாதிரி, வகையராக்களை இணைத்து விண்ணப்பித்தேன்.

10 தேர்ந்த மொழிப்பெயர்ப்பாளர்கள் கொண்ட சர்வதேச நடுவர் குழுவால் 2023-க்கான நிதியுதவிக்காக 11 நூல்கள் (பிலிப்பினோ, போலிஷ், உருது, ஸ்பானிஷ், பல்கேரியன், அரபிக், கொரியன், சுவாகிலி, தமிழ், ஜெர்மன், இத்தாலியன் ஆகிய மொழிகளிலிருந்து) தேர்வு செய்யப்பட்டுள்ளன. 20 வருடங்களாக நடத்தப்படும் இத்திட்டத்தில் இதுவரை 5 தெற்காசிய மொழிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன (ஹிந்தி, உருது, போஜ்புரி, நேபாளி மற்றும் வங்காள மொழி). தென்னிந்திய மொழிகளிலிருந்து முதல் முறையாக வெள்ளை யானை தேர்ந்தெடுக்கப்பட்டது எனக்கு பேருவகை அளித்தது.

நேற்று நீங்கள் எழுதிய குறிப்பை வாசித்தேன். அதை ஒட்டி ஒரு விளக்கம். PEN/Heim இவ்வாக்கங்களை முடிக்க மொழிபெயர்ப்பாளருக்கான நிதி உதவி மட்டுமே அளிக்கின்றது. PEN America பதிப்புப்பணியில் ஈடுபடுவதில்லை. ஆனால் இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கங்கள் பெரும்பாலும் தரமான பதிப்பாளர்களின் கவனத்தைப் பெற்று வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திட்டத்தில் தேர்வுசெய்யப்பட்ட நூல்களில் இருபது சதவிகிதம் முக்கியமான இலக்கிய விருதுகளைப் பெற்றிருக்கின்றன. உதாரணத்துக்கு, 2020-இல் PEN/Heim நிதியுதவி பெற்ற ஆன்டன் ஹுர் (Anton Hur) மொழியாக்கம் செய்த போரா சுங்கின் (Bora Chung) சிறுகதைத் தொகுப்பு Cursed Bunny இவ்வருடம் International Booker குறும் பட்டியலில் இடம்பெற்றது. 2015-இல் ஜெனிபர் கிராஃப்ட் (Jennifer Croft) மொழியாக்கத்தில் The Book of Jacob என்ற ஓல்கா தோக்கர்சுக்கின் (Olga Tokarczuk) நாவல் தேர்வுசெய்யப்பட்டது. 2018-இல் ஓல்கா நோபல் விருது பெற்றார். இந்த வரிசையில் உங்கள் படைப்பு PEN/Heim ஆதரவு பெறும் முதல் தமிழ் நாவல் என்பதில் மனநிறைவடைந்தேன்.

வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன, நண்பர்களுக்கு என் அன்பும் நன்றியும். இத்தேர்வு வளர்ந்துவரும் மற்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கும் ஊக்கம் அளிக்குமேயானால் மேலும் மகிழ்ச்சி. உங்கள் எழுத்து பல வகையில் என் வாழ்க்கையைப் பொலிவடையச் செய்துள்ளது. மொழியாக்கம் என்பது அடிப்படையில் மூலத்தை ஆழ்ந்து வாசிக்கும் கலை. உங்கள் படைப்புகளை அவ்வாறு வாசிப்பது பேரின்பம் தரும் ஈடுபாடு. அவ்வாய்ப்பை அளித்தமைக்கு என் உளமார்ந்த நன்றி.

அன்புடன்,

ப்ரியம்வதா.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 20, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.