பஷீரின் மதிலுகள்

.

வைக்கம் முகமது பஷீர் தமிழ் விக்கி

அன்பின் ஜெ,

நலம்தானே?

மூன்று வாரங்கள் முன்பு பஷீரின் “மதில்கள்” வாசித்தேன். முடித்துவிட்டு பஷீரைப் பற்றி இணையப் பக்கங்களில் தேடித்தேடி வாசித்துக் கொண்டிருந்தேன்.

பஷீர் ஒரு நூற்றாண்டின் களஞ்சியம்தான். அனுபவங்களின், வரலாற்றின் விதைகள் செறிந்த ஈரநிலம். இந்திய நிலம் முழுவதும் மட்டுமல்லாது சில விதேசி பரப்புகளையும் உள்ளடக்கிய அவரின் பயணம்/கற்றலின் வெளி/பெருவாழ்வு வியப்பும், பிரமிப்பும் அளித்தது.

திருவிதாங்கூர்  சமஸ்தானத்தின்  கோட்டயம்  மாவட்டத்தில்  வைக்கம்  தாலுகா  தலையோலப்பரம்பில்  1908-ல்  பிறந்தவர்  அப்துல் ரஹ்மான் முகம்மது  பஷீர்.  வைக்கத்தில் இடைநிலை பள்ளிக் காலத்தில்  அங்கு  சத்தியாகிரகப்  போராட்டத்திற்காக  வந்த  காந்தியைச்  சந்தித்ததிலிருந்து அவரின் வாழ்வு மாறுதல் கொள்கிறது. சுதேசி இயக்கத்தில் ஈடுபாடு கொள்ளும் அவர் இந்திய தேசிய காங்கிரஸில்  இணைந்து  சுதந்திரப்  போராட்டத்தில்  பங்கெடுக்கிறார். கொச்சியில் சுதந்திரப் போராட்டம் மித கதியில் இருக்க மலபார் மாவட்டத்தில் நடைபெறும் உப்பு சத்தியாகிரகத்திற்கு சென்று கலந்துகொள்கிறார். போலீஸிடம் அடிகள் வாங்கி பலமுறை கேரளாவின் பல மாவட்டச் சிறைகளில் சிறை வாசம் அனுபவிக்கிறார். போராட்டக் களத்தில் ராஜ்குரு, பகத்சிங், சுக்தேவ் ஆகியோரின் அணுகுமுறையில் அபிமானம் கொண்டவர். காலனிய அரசுக்கு எதிராக ஒரு இயக்கத்தை துவங்கி நடத்துகிறார். இயக்கத்தின் புரட்சி இதழாக “உஜ்ஜீவன”த்தை வெளியிடுகிறார். அரசு அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க கேரளாவை விட்டு வெளியேறுகிறார்.

அதன்பின்னான ஏழு வருட நீண்ட நாடோடி வாழ்வில் பஷீர் செய்யாத வேலைகளில்லை. சேகரிக்காத அனுபவங்களில்லை. ஆடு மேய்ப்பது, சமையல் செய்வது, ஜோசியம் சொல்வது, தினசரி செய்திப் பத்திரிகைகள் விற்பது, கணக்காளர், விளையாட்டு சாமான்கள் விற்பது, உணவக மேலாளர், வாட்ச்மேன் என்று கிடைத்த வேலைகளையெல்லாம் செய்திருக்கிறார். கங்கைக் கரையிலும், ஹிமாலய மடங்களிலும் இந்து துறவியாகவும், சுஃபி சன்யாசியாகவும் தேடலில் ஐந்து வருடங்கள் அலைந்திருக்கிறார்.

முப்பதுகளின் மத்தியில் எர்ணாகுளம் திரும்பும் அவர் வேறு வேலை ஏதும் கிடைக்காத நிலையில் ஹோட்டலில் பாத்திரம் கழுவியிருக்கிறார். ஒருமுறை ஜெயகேசரி நாளிதழின் அலுவலகம் சென்று அதன் ஆசிரியரிடம் வேலை ஏதும் கிடைக்குமா என்று கேட்க, வேலை எதுவும் காலியில்லையென்றும், வேண்டுமானால் பத்திரிகைக்கு கதை எழுதித் தந்தால் சன்மானம் தருவதாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இப்படியாக பஷீரின் முதல் கதை “என்டே தங்கம்”  1937-ல் ஜெயகேசரியில் வெளியாகி மிகப் பிரபலமடைந்தது. 41 வரை நவஜீவன் வார இதழில் தொடர்ந்து கதைகள் எழுதுகிறார். 41/42-ல் மறுபடி கைது செய்யப்பட்டு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு திருவனந்தபுரம் மத்திய சிறைக்கு அனுப்பப்படுகிறார்.

அங்குதான் பஷீர் நாராயணி எனும் இருபத்தியிரண்டு வயது பூவின் சுகந்தத்தை செவிகளில் வாங்கி மணம் நுகர்ந்து மனதுள் ஸ்பரிசிக்கிறார்.

***

பஷீரின் குட்டிக் குட்டி அத்தியாயங்கள் ஆழ்ந்து செறிந்து சரசரவென்று உள் விரியும் காட்சிகள்/வாழ்வின் பிரதிகள் மனதுக்கு மிக நெருக்கமானதாயிருந்தன. எங்கோ ஆழத்தில் எதனுடனோ ஒன்றுபவை போலத் தோன்றின.

குறுநாவலின் பின்னிணைப்பாக இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. பஷீர் “மதிலுகள்” எழுதிய நாட்களில் அவருடன் தொடர்பிலிருந்த “கௌமுதி” வார இதழின் இணை ஆசிரியர் “பழவிள ரமேசன்” அவர்களின் கட்டுரை ஒன்று. மற்றொன்று மதிலுகளைப் படமாக்கிய அடூரின் கட்டுரை (“வாக்கும் நோக்கும்”).

ரமேசனின் “மதில்களின் பணிமனை” அருமையான கட்டுரை ஜெ. “மதில்கள்” உருவான சூழலும் குறிப்புகளும் கொண்டது.  சரளம்! சுவாரஸ்யம்!. மலையாள சஞ்சிகைகளின் அப்போதைய இயங்குதளம், இதழ்களின் ஆசிரியர்களுக்கும் அங்கு பணிபுரிவர்களுக்கும் இடையிலான அந்நியோன்யமும் அன்பும், எழுத்தாளர்களின்/எழுத்தின் மீதான அபரிமிதமான மதிப்பும், பிரமிப்பும், நன்றியும், பிரேமையும், சுல்தான் பஷீரின் ஆளுமையும், அவரின் எழுத்து/படைப்பு உருக்கொள்ளும் பாங்கும்… என்று எல்லாவற்றைப் பற்றியும் ஒரு கீற்றுச் சித்திரம் தரும் பிரமாதமான கட்டுரை. ரமேசன் எழுத்துக்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதா?

1964-ல் டி.கே. பரீக்குட்டியின் சந்திரதாரா தயாரிப்பு நிறுவனத்திற்காக, அதன் புதிய படமான  “பார்கவி நிலைய”த்திற்கு (இயக்கம் வின்சென்ட்) தன் “நீல வெளிச்சம்” சிறுகதையைத் தழுவி ஒரு திரைக்கதையை எழுதித் தருகிறார் பஷீர். அதை எப்படியோ கைப்பற்றும் “கௌமுதி” வார இதழின் ஆசிரியர் கே. பாலகிருஷ்ணன், அவ்வருட ஓணச் சிறப்பிதழில் அத்திரைக்கதை வெளியாகும் என விளம்பரப்படுத்தி விடுகிறார். திரைக்கதை படம் வெளியாகும் முன்பே பிரசுரிக்கப்பட்டால் அது படத்தைப் பாதிக்கும் என பரீக்குட்டியும் வின்சென்ட்டும் பதட்டமடைகிறார்கள். பஷீர் திருவனந்தபுரம் வந்து பாலனைச் சந்திக்கிறார். பார்கவி நிலையம் திரைக்கதைக்குப் பதிலாக, கௌமுதியின் ஓணச் சிறப்பிதழுக்கு பஷீர் நான்கே நாட்களில் எழுதித் தந்த குறுநாவல்தான் “மதிலுகள்” என்று ரமேசன் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மதிலுகளுக்காக பாலன் பஷீருக்குத் தந்தது ஒரு தொகை குறிப்பிடாத காசோலையை. அக்காசோலை பஷீரின் ஒரு குறிப்புடன் பாலனுக்கே திரும்பி வருகிறது. “மதிலுகள்” வெளியான அவ்வருட கௌமுதியின் ஓணச் சிறப்பிதழ் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கிறது. வெகு சீக்கிரம் சிறப்பிதழுக்கு இரண்டாம் பதிப்பு போட வேண்டியிருந்ததென்றும், பத்திரிகைகளின் வரலாற்றில் அது ஒரு அபூர்வ நிகழ்வென்றும் ரமேசன் குறிப்பிடுகிறார்.

***

ஒரு காட்சி

அழகான ஓர் இரவு. ஒரு சின்ன கிராமம். அதற்கு அப்பால் ஆயிரமாயிரம் மைல்களுக்கு வெறும் பொடி மணல் மண்டிய பாலைவனம். தொடுவானம்…விரிந்த தொடுவானம். நான் அந்தப் பாலைவனத்துக்கு வந்தேன். கிட்டத்தட்ட ஒரு மைல் நடந்திருப்பேன். சுற்றிலும் வெண்பட்டை விரித்துப் போட்டது போல மணற்பரப்பு மட்டுமே. அந்த மகா பிரபஞ்சத்தின் நட்ட நடுவில் தனியாக நான்…தனியாக. தலைக்கு மேலே கைநீட்டி தொட்டுவிடும் உயரத்தில் தெளிந்த முழுநிலா. கழுவிச் சுத்தம் செய்த நீலவானம். முழுநிலாவும் நட்சத்திரங்களும். மிகுந்த பிரகாசத்துடன் மின்னும் நட்சத்திரங்கள் கோடி…அனந்தகோடி. அமைதிப் பிரபஞ்சம்…

…திவ்யமான நிசப்த சங்கீதம்போல…நாத பிரம்மத்தின் முடிவில்லாத சுழற்சி. எல்லாம் அதில் மூழ்கிப் போயிருந்தன. ஆனந்த அற்புதத்துடன் நான் நின்றேன். என்னுடைய ஆச்சரியமும் ஆனந்தமும் கண்ணீராக மாறின. நான் அழுதேன். தாங்கமுடியாமல் அழுதுகொண்டு நான் மனிதர்களுக்கிடையில் ஓடினேன்.

“உலகமான உலகங்களையெல்லாம் படைத்தவனே, என்னைக் காப்பாற்று. எனக்குள் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உன்னுடைய இந்தப் பெரும் கருணை…இந்த மகா அற்புதம்…நான் மிகச் சிறிய உயிரல்லவா? என்னால் முடியவில்லை…என்னைக் காப்பாற்று”

ஒவ்வொரு புலர் காலைக்கும் பஷீரைப் போல “சலாம் பிரபஞ்சமே!” என்று பணிவான நமஸ்காரத்தை சமர்ப்பிக்கத்தான் வேண்டும்.

வெங்கி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 14, 2022 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.