சினிமா, நுகர்வோரும் பயில்வோரும்

சில தருணங்களில் நாம் ஏன் எரிச்சல் கொள்கிறோம் என நாமே எண்ணி பின்னர் வியந்துகொள்வதுண்டு. நேற்று (30-10-2022) ஒரே நாளில் இரண்டு முறை எரிச்சல். இரண்டுமே மெல்லிய எரிச்சல்கள்தான். ஆனால் ஒன்று இன்னொன்றை இழுத்துவந்தது.

பொதுவாகச் சந்திப்புகளை எண்ணி எண்ணி ஒப்புக்கொள்வது என் வழக்கம். ஏனென்றால் சென்னையில் நான் எப்போதுமே ஏதோ ஒரு தயாரிப்பாளரின் செலவில் இருக்கிறேன். என் நேரம் அவருக்குரியது. இருந்தாலும் நட்பின் அடிப்படையில் இரண்டு இளம் உதவி இயக்குநர்களைச் சந்தித்தேன்.

ஒருவர் வந்தமர்ந்ததுமே நான் எழுதிய 2.0 படத்தைப் பற்றிப் பேசினார். ‘அந்தப்படம் ஏன் தோல்வியடைஞ்சுதுன்னா…’ என தொடங்கி எனக்கு திரைக்கதை ஆலோசனைகள் சொல்ல ஆரம்பித்தார். நான் என் புன்னகையை தக்கவைத்தபடி கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஏனென்றால் தமிழகத்தில் எவர் வேண்டுமென்றாலும் திரைக்கதை ஆலோசனை சொல்லலாம். ஒரு சினிமா பார்த்துவிட்டு வெளியே வரும் எந்தப் பாமரனும் உடனடியாகச் சொல்ல ஆரம்பிப்பது அந்த திரைக்கதையில் என்னென்ன செய்திருக்கவேண்டும் என்றுதான். டிக்கெட் எடுத்து படம் பார்க்கும் எவரும் எதுவும் சொல்லலாம் என்பதுதான் என் எண்ணம். ஏனென்றால் இது தொழில். அவர்கள் சொல்லும் கருத்துக்கள் வழியாகவே இங்கே பணம் திரள்கிறது. எந்தக்கருத்தும் நல்லதுதான்.

மேலும் அது மானுட இயல்பு. ஒரு சினிமாவைப் பார்க்கும் எவரும் கூடவே அவர்களும் ஒரு கதையை கற்பனை செய்துகொண்டே இருக்கிறார்கள். அது அவர்களின் கதை என்பதனால் அதுதான் சரியானது, உயர்வானது என்னும் நம்பிக்கையும் அவர்களிடமுண்டு. அதை வைத்துத்தான் அவர்கள் சினிமாவின் கதையை புரிந்துகொள்வார்கள். அதை வைத்துத்தான் சினிமாவின் சுவாரசியத்தை மதிப்பிடுவார்கள். ஆகவே கதை அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்தமாதிரியும் இருக்கவேண்டும், கொஞ்சம் புதியதாகவும் இருக்கவேண்டும். முழுமையாகவே புதியது என்றால் புரியாது.

கவனியுங்கள், உண்மையில் நடந்த நிகழ்ச்சியை கண்கூடாக பார்க்கும்போதே மக்கள் அப்படித்தான் நடந்துகொள்கிறார்கள்.ஒரு நிகழ்வில் ‘நீங்க என்ன செஞ்சிருக்கணும்னா…’ என அங்கேயே பேச ஆரம்பிப்பார்கள். ‘ஆக்சுவலி இது அப்டி நடந்திருக்கணும்….’ என அந்த நிகழ்ச்சியையே திருத்தியமைக்க முயல்வார்கள். மனித உள்ளம் செயல்படும் இயல்பு அது. எளிய மக்கள் தங்களின் அவ்வியல்பை தாங்களே பார்க்கும் பார்வையும் இல்லாதவர்கள்.

ஆகவே நான் வழக்கமாக எல்லா ‘திரைக்கதைத் திருத்தங்களை’யும் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருப்பேன். அது அந்த நபரை புரிந்துகொள்வதற்காகத்தான். என் பெருநாவல்களுக்கு அத்தகைய வாசகர்கள் வருவதில்லை. ஏனென்றால் அவற்றை ஐம்பது பக்கம் படிப்பதற்கு ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி கொண்டவர்களுக்கு கொஞ்சம் ‘கூறு’ இருக்கும். ஆனால் அனல்காற்று, இரவு போன்ற ஒப்புநோக்க எளிய நாவல்களுக்கு ‘கிளைமாக்ஸை இப்டி வைச்சிருந்திருக்கலாம் சார்’ வகை வாசகர்கள் வந்துவிடுவதுண்டு. அவர்களை வேடிக்கை பார்ப்பது நல்ல அனுபவமாக இருக்கும்.

இந்த இளைஞர் உற்சாகமே உருவானவராக இருந்தார். அவருடைய தரப்பு இதுதான். 2.0 படத்தில் வில்லன் சரியாக எழுதப்படவில்லை. வில்லன் என்றால் கொடியவன், தீங்கிழைப்பவன், அச்சம் அளிப்பவன். அப்படி இருந்தால்தான் அவனை எதிர்க்கும் ஹீரோ தீவிரமானவனாக இருக்க முடியும்.உலகத்தையே அழிக்கும் கொடுமையை வில்லன் அவிழ்த்துவிட்டிருக்கவேண்டும். ‘தவற விட்டிட்டீங்க சார்’ என்றார். ‘சரி, சங்கரிடம் சொல்கிறேன்’ என நான் பணிவாக பதிலளித்தேன். “இப்ப பொன்னியின் செல்வனிலேகூட வில்லன் சரியில்லை…பழுவேட்டையர் (அப்படித்தான் சொன்னார்) கெட்டவனா காட்டப்படலை’ என்றார். ‘சரிங்க, நோட் பண்றேன்’ என்றேன்.

“சுஜாதா இல்லாமத்தான் 2.0 அப்டி தடுமாறிச்சுன்னு சொல்றாங்க. சுஜாதான்னா அப்டி எழுதியிருக்க மாட்டார். சுஜாதாவோ பாலகுமாரனோ இல்லாம சங்கர் குழம்பிப்போயிருக்கார்னு தெரியுது சார்”

அப்படியே பேச்சு சென்றது. நடுவே அவர் ‘உங்க படங்கள்லாம் தோல்வி அடையறது இதனாலேதான் சார்’ என்றார்.

நான் ‘எந்தப்படம் தோல்வி?’ என்று கேட்டேன்.

“2.0 தோல்வின்னுதான் சொன்னாங்க…” என்றார்

“யாரு?”

“மீடியாவிலே பாத்தேன்… 2.0 தோல்வி. அதனாலே நீங்க சங்கர் வாழ்க்கையை அழிச்சிட்டதாக்கூட பலபேர் ஃபேஸ்புக்லே எழுதினாங்க. அடுத்தாப்ல மணி ரத்னம் வாழ்க்கையை அழிக்கப்போறீங்கன்னுகூட பலபேர் எழுதினாங்க…வேணுமானா காட்டுறேன்…”

“இப்ப பொன்னியின் செல்வன் வந்து கலெக்‌ஷன் ரிப்போர்ட் வந்திட்டிருக்கு…. ஆனா இப்பகூட 2.0 குளோபல் வசூலை பொன்னியின் செல்வன் எட்டலை. அதுக்கு இன்னும் ஒருமாசம் வரை ஆகலாம். பொன்னியின்செல்வன் இரண்டாவது இடத்திலேயே இருக்கு. அதை பாத்திருப்பீங்கள்ல?”

“ஆமா, அதை எழுதியிருக்காங்க… நெறைய எடத்திலே பாத்தேன்”

“தமிழ் சினிமாவோட நூறுவருசத்து வரலாற்றிலேயே அதிகமா வசூல் பண்ணின 2.0 படம் எப்டி ஃப்ளாப் படம் ஆகும்? யோசிச்சுப் பாத்தீங்களா?”

“அது, வந்து, அப்டித்தான் எழுதறாங்க…”

“சரி, அவனுங்க சாமானிய ஃபேஸ்புக் கூட்டம். நீங்க இண்டஸ்ட்ரிக்குள்ள இருக்கிறவர்ல?”

“ஆமா சார்” என்றார்.

“சுஜாதா வசனம்   எழுதின எந்தப் படமாச்சும் 2.0 வசூலிலே பாதியாவது வசூலிச்சிருக்கா? சரி ,மூணில் ஒரு பங்காவது வசூலிச்சிருக்கா? விசாரிச்சு பாருங்க….”

அவர் பேசாமலிருந்தார்.

”சுஜாதா கதை எழுதின எந்தப்படம் ஓடின படம்? அவரே தயாரிச்ச மீடியா டிரீம்ஸ் படங்களிலே எது ஓடின படம்?”

அவரால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. அதன்பிறகு “ஆனா ஃப்ளாப்னுதான் எல்லாரும் சொல்றாங்க” என மீண்டும் ஆரம்பித்தார். “2.0 லே வில்லன சொதப்பினதனாலேதான்…”

நான் அங்கேதான் எரிச்சலடைந்திருக்கவேண்டும். “அந்தப்படம் அவ்ளவு பெரிய வசூலை அடைஞ்சதுக்கு காரணம் அதோட வசூலிலே பாதிக்கும் மேலே தமிழகத்துக்கு வெளியிலே கிடைச்சதுங்கிறதுதான். இந்தி பெல்டிலே அந்தப்படம் மிகப்பெரிய வெற்றி. அதுக்குக் காரணம் அக்ஷய்குமார். அவர் அப்ப இந்தியிலே உச்சத்திலே இருந்தார். இல்லியா?”

“ஆமா சார்” என்றார்

“அக்ஷய்குமார் கதாபாத்திரத்தை ஒரு சாதாரண வில்லனா ஆக்கியிருந்தா இந்தி பெல்ட்லே ஓடியிருக்குமா?”

அவர் திகைத்தார்.

“அதிலே அக்ஷய்குமார் கதைநாயகனுக்கு எதிர்க்கதைநாயகன். கதைநாயகனே கடைசியிலே எதிர்கதைநாயகன் சொல்றதுதான் சரி, அவரு செஞ்சதுதான் சரின்னு சொல்றார்…. அதனாலேதான் அந்தப்படம் அப்டி இந்தி பெல்டிலே ஓடிச்சு…உலகமெங்கும் பெரிய வசூல் வந்தது…வெறும் வில்லனா அவரை காட்டியிருந்தா அது நடந்திருக்காது. இல்லியா?”

“ஆமா”

“அப்ப, அதை யோசிச்சுத்தானே சங்கரோ நானோ எழுதியிருப்போம்? அந்த அளவுக்கு யோசிக்கிற திறமைகூட எங்களுக்கு இருக்காதுன்னு நினைக்கிறீங்களா? இங்க ஒவ்வொரு சாமானியனும் நினைக்கிறது எங்க மண்டையிலே உதிக்காதுன்னு சொல்ல வரீங்களா?”

அவர் வாயை மட்டும் திறந்து மூடினார்.

“ஒரு மேஜர் ஹீரோ படத்திலே ஹீரோவை எதிர்க்கிறார். இந்தப்பக்க ஆடியன்ஸுக்கு அவர் வில்லனா தெரியறார், அந்தப்பக்க ஆடியன்ஸுக்கு அவரே ஹீரோவா தெரியறார்னா, அந்த திரைக்கதையை சும்மா உக்காந்து காலாட்டிட்டு எழுதியிருப்பாங்களா? அதுக்கு வேலை செஞ்சிருக்க மாட்டாங்களா? சரி, நீங்க எழுதமுடியுமா அப்டி?”

அவர் “நான் அப்டிச் சொல்ல வரலை” என்றார்

“ஒரு சின்ன சினிமா முழுத்திரைக்கதையும் எழுதி எடுக்கப்படலாம். பெரிய ஹீரோக்களோட கமர்ஷியல் சினிமான்னா அவரோட இமேஜ் முக்கியம். அதிலே நடிக்கிற ஒவ்வொருத்தரோட இமேஜும் முக்கியம். அதுக்கு ஏற்றபடித்தான் திரைக்கதையை எழுதுவோம். சிலசமயம் திரைக்கதை முடிஞ்சு நடிகர்கள் உள்ள வர்ரப்ப அவங்களுக்கு ஏற்ப திரைக்கதை மாறும். படப்பிடிப்பிலே நடிப்புக்கு ஏற்ப திரைக்கதை மாறும். கடைசியிலே எடிட்டிங் பண்றப்ப திரைக்கதை மாறும். எழுதறப்ப அற்புதமா இருக்கிற சில இடங்கள் எடிட்டிங் டேபிளிலே தப்பா இருக்கும். அத தூக்கி போட்டிருவாங்க. கதைக்கு அது முக்கியமா இருந்தாலும் நடிப்பு தப்பா இருந்தா சினிமாவுக்கு சுமைதான்… கடைசியிலே நீங்க பாக்கிற திரைக்கதைங்கிறது இவ்ளவுபேர் கை பட்டு, ஃபில்டர் ஆகி வந்து சேருற வடிவம்…சினிமாவிலே இருக்கிற நீங்க இதையாவது தெரிஞ்சுகிடணும்ல?”

“ஆமா சார்”

“திரைக்கதையிலே ரெண்டு வகை இருக்கு. சீரான ஓட்டமா எல்லாத்தையும் தொட்டுத்தொட்டுச் சொல்லிட்டு போற திரைக்கதை. அதான் பழைய பாணி. அங்கங்க புள்ளிவைச்சுக்கிட்டே போற திரைக்கதைதான் புதிய பாணி. அதையெல்லாம் இணைக்கவேண்டியவர் ரசிகர்தான். திரைக்கதையிலே அது இல்லை இது இல்லைன்னு அங்க ரசிகர் சொல்லக்கூடாது. இணைச்சு புரிஞ்சுகிடணும்….பெரிய கதைகளை சினிமாவா ஆக்குறப்ப ரெண்டாவது பாணிதான் சரிவரும்… இடைவெளிகளிலேதான் உண்மையான கதையே இருக்கும்…. உலகம் முழுக்க அப்டித்தான் நாவல்கள் சினிமாவா ஆகியிருக்கு…”

கொஞ்சநேரம் அமைதி.

“நான் வர்ரேன் சார்” என்றார்

“சரி” என்றேன்

அவர் கிளம்பும்போது “சரி, நான் ஹார்ஷா சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க… சும்மா யோசிச்சுப்பாருங்க. அதான்” என சொல்லி அனுப்பினேன்.

ஏன் எரிச்சல் கொண்டோம் என என்னையே வினவிக்கொண்டு ஒரு டீ போட்டு குடித்தேன். அடுத்த நண்பர் வந்துவிட்டார். இவரும் இளம் உதவி இயக்குநர்.

அறிமுகம் முடிந்ததுமே ‘பொன்னியின் செல்வன் பாத்தேன் சார். நல்லா இருந்தது” என்றார்.

நான் “சரி” என்றேன்

உடனே அவர் ”ஆனா” என ஆரம்பித்து அதில் கண்ட  ‘குறைகளை’ சொல்ல ஆரம்பித்தார். அதுதான் இங்கே பொதுவான ‘டெம்ப்ளேட்’ . அதாவது பாட்டு தேவையில்லை, கிறிஸ்டோபர் நோலன் படம் போல பல உள்ளடுக்குகளாக படத்தை அமைத்திருக்கலாம் ….

முந்தைய எரிச்சலை உடனே மீட்டுக்கொண்டேன்.

“மத்தபடி அதிலே நீங்க கத்துக்க ஒண்ணுமே இல்லியா?” என்றேன்

”அதாவது, சில விஷயங்களைச் சரியா பண்ணியிருக்கலாமேன்னுதான்…”

சாமானிய ரசிகர்கள் ’நுகர்வோர் மனநிலை’ கொண்டவர்கள். அது சினிமாவில் எல்லாருக்குமே தெரியும். அதை எதிர்கொள்ளவும் தெரியும். நுகர்வோர் மனநிலை என்பது மூன்று அடிப்படைகள் கொண்டது.

அ. இதை நான் வாங்கியிருக்கிறேன், ஆகவே இது நான் எதிர்பார்த்தபடி இருக்கவேண்டும் என்னும் நிபந்தனை. அவர்கள் ஏற்கனவே அது எப்படி இருக்கவேண்டும் என எண்ணியிருந்தார்களோ அப்படி அது இருந்தாலொழிய நிறைவடைய மாட்டார்கள். எவ்வகையிலும் ஒரு புதிய விஷயம் நோக்கி நகர மாட்டார்கள். அதற்கான முயற்சியே இருக்காது.

’நுகர்வோரே தீர்மானிப்பவர்’ என்னும் இந்த மனநிலை உண்மையில் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சேர்ந்து உருவாக்கி நுகர்வோரிடம் நிறுவியிருப்பது. இந்த மனநிலை இருந்தால் நுகர்வோரின் தேவையை நிறைவுசெய்ய வேண்டியதில்லை, அகங்காரத்தை நிறைவுசெய்தால் போதும். அதை விளம்பரம் வழியாக எளிதில் செய்துவிடலாம்.

ஆ. இன்னும் தேவை என்னும் மனநிலை. நுகர்வோர் தன் பணத்திற்கான மதிப்பு கிடைக்கவேண்டும் என நினைப்பார்கள். ஆகவே தனக்கு அளிக்கப்பட்டதைவிட இன்னும் மேலான ஒன்றுக்கு தனக்கு தகுதி உள்ளது என நம்புவார்கள். ஏமாற்றப்பட்டுவிட்டோமோ என எண்ணி, கண்காணித்தபடியும் கணக்குபோட்டபடியும் இருப்பார்கள். இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் என்றே எந்த ஒன்றைப்பற்றியும் சொல்வார்கள்

உண்மையில் இந்த மனநிலையும் விற்பனையாளர்கள் உருவாக்குவதே. இந்த மனநிலையால்தான் நுகர்வோர் ஒரு பொருளை வாங்கியதுமே அதிருப்தி அடைகிறார். அடுத்ததை வாங்குவதைப்பற்றி கனவு காண்கிறார். ‘இதோ இன்னும் பெரிய, இன்னும் புதிய’ என ஒன்றை முன்வைத்தால் அதை வாங்கிவிடுவார். ஆகவே இங்கே எல்லா டூத்பேஸ்டும் ’புதிய’ டூத்பேஸ்ட்தான்.

இ. நுகர்வோர் எப்போதுமே ‘எல்லாரும் வாங்கும்’ பொருளையே தானும் வாங்குவார். பொதுப்போக்கிலேயே தானும் செல்வார். ஆனால் தனக்கு தனியான ரசனையும் தேவையும் இருப்பதாகவும் எண்ணிக்கொள்வார்.

இதையும் விற்பனையாளர்களே உருவாக்குகிறார்கள். மிகச்சிறிய கூடுதல் வசதிகளை அல்லது தனித்தன்மைகளை அளிக்கிறோம் என்று சொல்லி ஒரே பொருளையே திரும்பத் திரும்ப விற்க முடியும். விளம்பரங்களில் எப்போதுமே வாங்குபவரை பிடிவாதமான தனித்தன்மை கொண்டவராகவே காட்டுவார்கள். எல்லா ’புதிய’ பொருளும் முன்பு இல்லாத ஒரு விசேஷத்தன்மை கொண்டிருக்கும்.டூத்பிரஷின் அடியில் நாக்கை உரச வசதி கொடுத்தால் அது புதிய ‘மேம்படுத்தப்பட்ட’ டூத் பிரஷ்.

இந்த மூன்று மனநிலைகளுமே சினிமா ரசிகர்களிடமும் உண்டு. ஆகவே அவர்கள் எந்த சினிமாவும் அவர்கள் ஏற்கனவே நினைத்ததுபோல் இருக்கவேண்டுமென்றே எண்ணுவார்கள். ஒரு புதிய விஷயம் அளிக்கப்பட்டால் அதை நோக்கி நகர எந்த முயற்சியும் எடுக்க மாட்டார்கள். சினிமா ரசிகர்களின் எல்லா விமர்சனங்களிலும் உள்ளது தன் ரசனையும், தன் அறிவுமே எல்லாவற்றையும் விட மேலானது என்னும் நம்பிக்கைதான். ஆகவே மணி ரத்னத்துக்கு ஷாட் வைக்க ஆலோசனை சொல்ல ரசிகன் தயங்குவதில்லை.

எந்த சினிமாவை ரசித்தாலும் உடனே அதில் ஒரு சில குறைகளைத்தான் சொல்லவேண்டும், அதுதான் சரியான மனநிலை என நம் சினிமா நுகர்வோர் பயின்றிருக்கிறார்கள். குறைகாணும் மனநிலையிலேயே நீடிக்கிறார்கள். ’நல்லா இருக்கு, ஆனா…’ இதுதான் வழக்கமான வசனம். அவர்கள் தங்களுக்கான தனி ரசனையை நாடுவதில்லை. எவரும் ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ தேடிப்போய் பார்ப்பதில்லை. அது ஏன் பிடிக்கிறது என எழுதுவதும் இல்லை. அவர்கள் பீஸ்ட் அல்லது விக்ரம் அல்லது பொன்னியின் செல்வன்தான் பார்ப்பார்கள். ஆனால் நாலைந்து குறைகளைச் சொல்லி தாங்கள் வேறு என காட்டவும் முயல்வார்கள்.

சினிமா நுகர்வோர் அப்படி இருக்கட்டும். அப்படி இருப்பதே வணிகத்துக்கு நல்லது. அவர்களைக் கையாள சினிமாத் தொழிலில் இருப்பவர்களுக்கும் தெரியும். ஆனால் ஒரு சினிமா விமர்சகர் இந்த நுகர்வோர் மனநிலைகள் கொண்டிருப்பார் என்றால் அவருக்கு எந்த மதிப்பும் இல்லை. சினிமாவில் இருக்கும் ஒருவர் இந்த நுகர்வோர் மனநிலையில் இருந்தால் அவர் சினிமாவை கற்றுக்கொள்ளவே போவதில்லை.

நான் அந்த இளம் நண்பரிடம் சொன்னேன்.”நான் பல முக்கியமான இயக்குநர்களிடம் பேசினேன். அவர்கள் பொன்னியின் செல்வனை பலமுறை பார்த்திருக்கிறார்கள். ஒரு மாஸ்டர் எடுத்த படத்தை கூர்மையாக பார்த்து கற்றுக்கொள்கிறார்கள். நீங்கள் கற்க ஒன்றுகூட இல்லையா?”

பொன்னியின் செல்வன் படத்தின் ஷாட்களை வரைந்து பைண்ட் செய்து வைத்திருந்தார் இயக்குநர் ஒருவர். நான் அவரிடம் கேட்டேன். ‘இதையே ஆங்கிலப் படங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள முடியாதா?”

அவர் சொன்னார் “முடியாது. ஏனென்றால் நமக்கு அந்தக் கலாச்சாரத்தின் உள்ளடுக்குகளும் நுட்பங்களும் தெரியாது….சும்மா பார்க்கலாம். இந்தவகையான ஒரு உள்ளூர் படத்தில் ஒரு மாஸ்டர் என்ன செய்கிறார் என்பது மட்டும்தான் கற்றுக்கொள்ள ஒரே வழி”

சாதனையாளர் என ஏற்கனவே பெயர் வாங்கியவர்கள் ஷாட் ஷாட்டாக பார்த்து கற்றுக்கொள்கிறார்கள். ஒன்றுமே தெரியாதவர்கள், இன்னும் கற்க ஆரம்பிக்காதவர்கள் அதீத நம்பிக்கையுடன்  ‘இப்டி செஞ்சிருக்கலாம் மணி ரத்னம், ப்ச’ என பேசிக்கொண்டிà®

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2022 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.