வெந்து தணிந்தது காட்டில் பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள். அவர்கள் ‘வில்லன்கள்’ அல்ல. அவர்களை கதாபாத்திரங்களாக காட்ட விரும்பினோம். ஆகவே புதிய முகங்கள். விமர்சகர் பலர் ஆவேசமான வில்லன் நடிகர்களை எதிர்பார்த்திருந்தாலும் ரசிகர்கள் அந்த புதுமுகங்களை ஏற்றுக்கொண்டிருப்பதை காணமுடிகிறது.
அவர்களில் ரிச்சர்ட் ரயிலில் கௌதமுக்கு அறிமுகமானவர். சரவணன் புதியமுகம். பத்மன் சினிமாவுக்கு புதியவரல்ல. ஆனால் அவருக்கு இதுதான் உண்மையில் முதல்படம். அவர்கள் உண்மையான மனிதர்களாக, அதே வட்டார உச்சரிப்புடன் இருப்பதனால்தான் படம் அந்த யதார்த்தத்தை அடைந்தது.
நான் படம் பார்க்கையில் ரிச்சர்ட், பத்மன், சரவணன் ஆகியோரை அந்தந்த கதாபாத்திரங்களாகவே பார்த்தேன். இன்றைய சினிமாவுக்குத் தேவை ‘நடிப்பு’ அல்ல. அந்த கதாபாத்திரங்களாக ஆகும் மனிதர்கள்தான்.
படத்தில் திரைக்கதையில் சின்னக் கதைமாந்தர் திட்டவட்டமாக எழுதப்பட்டிருந்தமையால் நீளம் குறைப்பதற்கான எந்த விவாதத்திலும் சின்ன கதைமாந்தர்மேல் கையை வைக்கத் தோன்றவே இல்லை.
படத்தின் வெற்றிக்கு அவர்கள் உதவினர். அவர்கள் அனைவருக்கும் படமும் பெரும் உதவி செய்திருப்பதை அறிகையில் நிறைவாக உணர்கிறேன்
Published on September 21, 2022 11:30