சாரு, கடிதங்கள்

விஷ்ணுபுரம் விருது,2022

அன்புள்ள ஆசிரியருக்கு,

முதலில் சாருவை வாசிக்கத் தொடங்கி பிறகு நீண்ட காலம் கழித்து, அவ்வெழுத்துக்களில் இருந்து விலகாமலே ஜெயமோகனின் எழுத்துக்களைப் படித்துக்கொண்டிருக்கும் வாசகனின் கடிதம் இது. என் ஒரு ஆசிரியர் இன்னொரு ஆசிரியருக்கு விருதளிப்பது உற்சாகத்தையும் மகிழ்வையும் ஏற்படுத்தியது.

கல்லூரியில் படிக்கும்போது தான் சாருவின் அபுனைவு எழுத்துக்கள் அறிமுகம் ஆனது. முதலில் கடும் ஒவ்வாமையை ஏற்படுத்தியது. முகத்தை சுளித்துக்கொண்டேனும் ‘கடவுளும் சைத்தானும்’, ‘வாழ்வது எப்படி?’, ‘கலையும் காமமும்’ போன்ற புத்தகங்களை முழுதாகப் படிக்காமல் விட்டதில்லை என்பது நினைவுக்கு வருகிறது. ‘திரும்பத் திரும்பத் தன்னையே முன்வைக்கும், தன்னைப் பற்றியே எழுதிக்கொண்டிருக்கும் இவர் யார்?’ என்று எரிச்சலும் ஆர்வமுமாகப் படித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய ஆசிரியர்களை ஒரு கட்டுரையில், ஒரே ஒரு தொடுகையில் கூட கண்டுகொண்டிருக்கிறேன். சாருவைப் போல் யாரும் இப்படி அலைக்கழித்ததில்லை.

ஒரு தேர்ந்த ரசிகனாகத் தான் சாரு என்னை முதலில் ஈர்த்தார். இசை, சினிமா, உணவு, குடி என ஒவ்வொன்றையும் ரசித்து வாழும் அந்த இளைஞனை என் நண்பனாக உணர்ந்தேன். உலக சினிமா, உலக இலக்கியம் எல்லாம் அறிமுகமான வயது அது. சாரு, எஸ்.ரா, இ.பா. போன்றோரது கட்டுரைகளை விரும்பிப் படித்துக் கொண்டிருந்தேன்.

அபுனைவு மூலம் ஒரு எழுத்தாளனை முழுதாக உள்வாங்கிவிட முடியாது என்ற தெளிவு இருந்தது. அதனால் சாருவின் அப்போதைய புதிய நாவலான (பழைய) ‘எக்சைல்’ வாங்கிப் படித்தேன். அத்தோடு சாரு என்னை ஆட்கொண்டுவிட்டார். ஒரு வாரம் முழுதும் உணவு, உறக்கம் குறித்த கவனம் இன்றி அவரது இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தையும் படித்தேன். ஒரு வருடம் முழுதும் அவரது நாவல்களை எல்லாம் திரும்பத் திரும்பப் படித்தேன். சாரு எழுதி நான் வாசிக்காமல் விட்ட சொல் ஒன்று கூட இல்லை என்றானது.

அதன் பிறகு அவர் பரிந்துரைத்த எழுத்தாளர்களைப் படிக்கத்தொடங்கினேன். அங்கே தான் என் கற்றலில் தேக்கம் விழுந்ததாகத் தோன்றுகிறது. அவர் காட்டிய திசையில் என் தேடல் அமையவில்லை. என்னுடைய கேள்விகள் வேறாக இருந்தது புரியத் தொடங்கியது. ‘அதிகாரம்’ குறித்த சாருவின் தரிசனம் எனக்குப் போதுமானதாக இல்லை; அல்லது நான் அதனை உள்வாங்கவில்லை. ஆனாலும் சாருவைப் படிப்பதை விடவில்லை.

வர்க்கம் ஒரு மனிதனின் ரசனையை, சிந்தனையைத் தீர்மானிக்கக் கூடாது. மத்திய வர்க்கத்தின் பொருளியலில் கட்டுண்டு இருப்பதாலேயே ஒருவன் அதன் மதிப்பீடுகளை ஏற்கவேண்டியதில்லை என்பதைத் தான் சாரு திரும்பத் திரும்ப எழுதி இருக்கிறார். எந்நிலையிலும் அக விடுதலை சாத்தியம் என்ற நம்பிக்கையே சாருவின் எழுத்தில் இருந்து நான் பெற்ற முதல் பாடம்.

சாருவின் எழுத்தில் திரும்பத் திரும்ப உலகியல் விவேகம் பேசப்படும். இது ‘உலகாயதம்’ என்னும் தத்துவத் தரப்பே தான். ‘காமரூப கதைகள்’ நாவலில் மிகத் தெளிவாகவே தியானம், ஆன்மீகம் ஆகியவற்றுக்கு எதிராக உலகாயதம் பேசப்பட்டிருக்கும். ராமகிருஷ்ணரையும் விவேகானந்தரையும் படித்து வளர்ந்த எனக்குப் பதற்றத்தை ஏற்படுத்திய நாவல் அது. ஒருவிதமான உறைநிலையை சாருவின் எழுத்து உடைத்துப் போடுகிறது. அந்த உலகியல் விவேகத்தின் இன்னொரு கூறு உறவுகளில் இறுக்கப்படாமல், யாரையும் இறுக்காமல் இருந்துகொள்வது.

தமிழ் விக்கி பதிவில் குறிப்பிட்டிருப்பதைப் போல் இலக்கியம், இசை, சினிமா என்று சகலத்தையும் உள்ளடக்கிய ரசனை ஒன்றை முன்வைக்கிறார். ஒரு விதமான சுரணையுணர்வு அல்லது கூருணர்வு எனலாம். தர்க்கப்பூர்வமான, ரசனை மதிப்பீடுகளை விடவும் இந்த ‘ரசிக்க சொல்லித் தருதல்’ எனும் செயல் வாசிப்பின் தொடக்கத்தில் இருப்பவருக்கு முக்கியமானது; உதவிகரமானது. எப்போதும் உடனிருந்து வழிகாட்டுவது. அதே பதிவில் சாருவின் எழுத்துக்கள் மூன்று காலகட்டங்களிலாகப் பிரிக்கப்பட்டிருக்கும். அதையும் கடந்து அவர் நான்காவது கட்டத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. அடுத்தடுத்து வரலாற்றுப் புனைவுகள் எழுதிக்கொண்டிருக்கிறார்.

‘ராஸலீலா’ ஒரே அமர்வில் இரண்டு முறை படிக்கவைத்த நாவல். உள் மடிப்புகளுக்குள் கதை சொல்லும் அந்நாவலின் முறையானது பின்னர் ‘பாகீரதியின் மதியம்’ போன்ற கடினமான நாவல்களைப் படிக்க உதவியது. குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போதும் மூன்று அடுக்குகளிலாகக் கதை சொல்லிப் பார்த்திருக்கிறேன். மூன்றாவது அடுக்கில் கதைக்குள் மூழ்கிவிடுவார்கள்.

அபுனைவையே புனைவைப் போல் எழுதுபவர் சாரு. அதனாலேயே அவரது புனைவுகளில் அபுனைவுத் தன்மை கைவிடப்படும் இடங்களை கவனித்து ரசிக்கப் பிடிக்கும். அப்படி புனைவெழுத்தில் சாருவின் உச்சம் என (புதிய) எக்சைல் நாவலைத் தான் சொல்லத் தோன்றுகிறது. உலகியலில் இருந்து மெய்யியல் நோக்கி எழ முயலும் மனிதனைப் பற்றிய கதையாக அதை வாசித்தேன். உலகியலைக் கடந்து எழுந்தவர்கள் மட்டுமே அந்நாவலைப் புறம் தள்ளமுடியும். பிறருக்கு நவீன வாழ்வு குறித்த குறுக்குவெட்டுத் தோற்றத்தை அளிக்கும், நம்மை நாமே கறாராகப் பரிசீலிக்கவைக்கும் அற்புதமான வாசிப்பனுபவத்தை அளிப்பது. அந்நாவலைப் பற்றித் தனியாகத் தான் எழுதவேண்டும்.

விருது அறிவிப்பினால் நண்பர்கள் பலரும் அதிர்ச்சியில் இருப்பதாகத் தெரிகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்கு சாருவைப் பற்றிய, அவரது எழுத்துக்கள் பற்றிய நேர்நிலையிலான விவாதங்கள் மூலம் அவர் மீதான வெறுப்பை, ஒவ்வாமையை, மரியாதையின்மையைக் கடக்க முயல்வது வாசகர்களாக நம்மைச் செழுமைப்படுத்தலாம்.

விஷ்ணுபுரம் விருது பெறும் சாருவுக்கு இந்த வாசகனின் வாழ்த்துக்கள்.

–    பன்னீர் செல்வம்

அன்புள்ள ஜெ

சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது என்பது சிலருக்கு அதிர்ச்சியை உருவாக்கியிருப்பதைக் காணமுடிகிறது. ஆனால் அது என்னைப்போன்ற ஒருவருக்கு ஏற்புடையதே. விஷ்ணுபுரம் போன்ற அமைப்பு சாருவின் ஒட்டுமொத்த பங்களிப்பை உதாசீனம் செய்ய முடியாது என்பதே என் எண்ணமாக உள்ளது. சாருவின் பங்களிப்பை ஒரு auteur என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். அவர் உருவாக்கும் ஒட்டுமொத்தமான ஒரு புனைவு உள்ளது. அதில் அவர் தன்னுடைய பெர்சனாலிட்டி, தான் வாசித்த நூல்கள், கேட்ட சங்கீதம், தன்னுடைய பயணங்கள் எல்லாவற்றையும் கலந்துகட்டி புனைந்துகொண்டிருக்கிறார். அவர் அதன் வழியாக உருவாக்குவது ஐரோப்பிய மற்றும் தென்னமேரிக்கப் பண்பாட்டின் ஒரு அடித்தளத்தை ஆதர்சமாகக் கொண்ட ஒரு வகையான விடுதலையை. என்னைப்போன்ற ஒருவன் ஒரு சின்ன நகரத்தில் பிறந்து, சாதிக்குள் வளர்ந்து, படிப்பு படிப்பு என்று வாழ்ந்து, அசட்டுத்தனமாக குடும்பத்துக்குள் சிக்கிக்கொண்டு வாழும்போது இதில் இருந்து ஒரு விடுதலையை அவருடைய அந்த personnalité de auteur அளிக்கிறது என்பதுதான் முதலில் அவர் அளிக்கும் பங்களிப்பு. என் வாழ்த்துக்கள்

தங்க.பாஸ்கரன்

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 08, 2022 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.