சு.வேணுகோபாலுக்கு தன்னறம் விருது

சு.வேணுகோபால் தமிழ் விக்கி

“கருமை படரும் மாலை நேரங்களில், கிராமப்புறங்களில் குன்றுகள் நிறைந்த இடங்கள் வழியாக நீங்கள் நடந்து போயிருக்கக்கூடும். சமவெளிகளில் குடிசைகளும் மரச்செறிவு களும் விளைநிலங்களும் அவற்றிடையே மனிதர்களும் இருக்கி றார்கள். வெளிச்சம் குறைந்துகொண்டே வருகிறது. காட்சிகள் மங்க ஆரம்பிக்கின்றன. குடிசைகளையும் மரங்களையும் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. இருள் அதிகரிக்கிறது. கடைசியில் ஒரு கறுப்புத்திரையால் மூடப்பட்டதுபோல் தோன்றுகிறது. ஆனால் முழுவதும் கருமை அல்ல. நடுவே ஆங்காங்கு சில ஒளிப்புள்ளிகள். குடிசைகளில் எரியும் சிம்னி விளக்குகள். அங்கு குடிசைகளும் அதற்குள்ளே மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம் அந்த விளக்குகள் மட்டுமே

உங்களுக்கு வழி தவறிவிடுகிறது என்றால் வெளிச்சம் தெரியும் இடத்தை நோக்கி நடக்கிறீர்கள். இருளில் துன்பப்படும்போது வெளிச்சத்திற்கு அருகில் வாழ்பவர்களை அணுகிச் சிறு பந்தம் கேட்கிறீர்கள். வெளிச்சத்தின் குறிக்கோளில் நீங்கள் மனிதாபிமானத்தைக் கண்டடைகிறீர்கள். வரலாற்றின் நிலையும் ஏறத்தாழ இதே போலத்தான் என்று சொல்லலாம். அதன் சமவெளிகளில் இருட்டு கவியும்போது ஏற்றி வைக்கப்படும் சிறுவிளக்குகள் மனித சமூகத்தின் செயல்பாட்டை, அதன் இருப்பை மறுப்பதில்லை; ஏளனம் செய்வதில்லை. மாறாக இங்கு மனித ஆத்மா துடிக்கிறது என்று கோஷமிடுகிறது. அந்த விளக்குகளை நாம் படைப்பாளிகள் என்று அழைப்பதாக வைத்துக்கொள்வோம். இதில் ஆட்சேபணைக்குரியதாக எதுவும் இல்லை”.

கேரளத்தைச் சேர்ந்த சிந்தனையாளர் எம்.கோவிந்தன் அவர்கள் படைப்பாளியைப் பற்றிக் குறிப்பிடும் வார்த்தைகளே மேற்கண்டவை. ‘இங்கு ஒரு மனித ஆத்மா துடிக்கிறது’ என்பதைத்தான் கலை-இலக்கியங்கள வெவ்வேறு விதமாக நமக்கு எடுத்துரைக்கின்றன. காலந்தோறும் கலைவடிவங்கள் மனித அகத்திற்குள் நுண்மையான பல மாற்றங்களை உருவாக்கி வந்திருக்கின்றன. அவ்வகையில், ஓர் மொழிச்சூழலில் சிறுகதை எனும் கலைவடிவம் உருவாக்கிய தாக்கத்தை இலக்கிய விளைவு என்பதோடு சுருக்கிக்கொள்ளாமல், மனித அகங்களின் மறுபரிசீலனைக்கு வித்திட்டவை என்றும் விரித்துப் பார்க்கலாம். எனவேதான் எழுத்தாளர் சுந்தர ராமசாமி, “சிறுகதையே படைப்புச் சக்தியின் கடைசிக் குழந்தை” என அதன் படைப்பு வடிவத்தைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

மனித வாழ்வானது இதுவரை தான் நம்பிவரும் மரபார்ந்த அறத்தினைப் பரிசீலிக்கும் கணங்கள் என்பவை, பெரும்பாலும் உச்சபட்ச துயர்களுக்குப் பின்தான் நிகழ்கின்றன. பெரும் கண்ணீருக்குப் பிறகுதான் கடவுள்கள் படைக்கப்படுகின்றன. நிராகரிப்பினால் நிகழ்கிற நிராதரவு, இயலாமையில் விளைகிற வெறுமை, கையறு நிலைகளின் பகிரங்கம், அவமானங்கள் தூண்டும் அநீதி… என இவ்வாழ்வினைப் பூடகங்களோ, பாவனைகளோ இன்றி அப்பட்டமாக அம்மணப்படுத்துகையில் மானுட அகம் தீமையின் இருளுக்குள் ஆழ்வது இயல்பாகிறது. ஆனால், ‘இத்தனைக்குப் பிறகும் எந்த நம்பிக்கை சாகவிடாமல் வைத்திருக்கிறதோ’ அந்த சிற்றொளி மட்டுமே மனிதரை, அத்தனைச் சீரழிவுக்குப் பிறகும்கூட மீட்கக்கூடிய வன்மைவாய்ந்தது. அந்த ‘நிகரற்ற ஒளி’யை நோக்கித்தான் ஒவ்வொரு படைப்பாளனும் தவமியற்றுகிறார்கள்

தமிழின் யதார்த்தவாதச் சிறுகதையுலகில் தீமையின் கொடும்பரப்பை எழுதி, இலக்கியம் வழியாக வாழ்வை விசாரணைக்கு உட்படுத்தி விளக்கமுயலும் படைப்புகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த வித்து புதுமைப்பித்தன் இட்டது. ஆனாலும், யதார்த்தத்தின் இருளை சிறுகதையின் கருப்பயையாகக் கொண்டு, உள்ளசையும் சினையாக வாழ்வு மீதான நம்பிக்கையைத் தருகிற புனைவுப் படைப்புகள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைவரை ஆயுள்நீளும் ஆற்றலைப் பெற்றுவிடுகின்றன. அவ்வாறு, தமிழ் மண்ணின் வேளாண் வாழ்வியலைத் தன்னுடைய பிரதானக் கதைக்களமாகக் கொண்டு சிறுகதைகளும் நாவல்களும் எழுதும் முன்னோடிப் படைப்பாளுமை திரு சு.வேணுகோபால்.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னுடைய யதார்த்தவாதப் புனைவுப் படைப்புகளால் மிகச்சிறந்த இலக்கியப் பங்களிப்பைத் தமிழுக்கு ஆற்றியிருக்கிறார் சு.வேணுகோபால் அவர்கள். அவ்வகையில் இவரை புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாரயணன், ஜி.நாகராஜன், ஆ.மாதவன் என நீளும் நவீனத்துவ சிறுகதைப் படைப்பாளிகள் வரிசையின் சமகாலத்திய முன்னோடி ஆளுமை எனத் தயக்கமின்றிச் சொல்லலாம். இவர், எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களால் தூண்டப்பெற்று எழுதத் தொடங்கியவர்; எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களால் தாக்கம்பெற்றுத் தன்னுடைய இலக்கியப் பார்வையை வகுத்துக்கொண்டவர். அவ்வகையில் இவர், ஆசிரியர் சுந்தர ராமசாமியிடம் உடன்தங்கிப் பயின்ற நேரடி மாணவர்களில் ஒருவர்.

“வேணுகோபாலின் நடை எழுத்தாளனுடையதல்ல, ஒரு விவசாயியினுடையது. தமிழின் முக்கியமான கலைஞனாக அவரை நிலைநாட்டுவதே இந்த அம்சம்தான். விவசாய வாழ்க்கையைச் சார்ந்த தகவல்களை இந்த அளவுக்கு அள்ளி அள்ளி வைக்கும் ஒரு படைப்பாளி இன்றுவரை தமிழில் உருவானதில்லை. கலைச்சொற்கள், நுண் தகவல்கள், கச்சிதமான விவரிப்புகள்  என நாம் காணத்தவறும் வேளாண்மை வாழ்க்கையில் மிக விரிவான சித்திரம் தமிழின் நூறாண்டுக்கால நவீன இலக்கிய மரபில் முதல் முறையாகப் பதிவாகிறது இவரது படைப்புகளில்” என்றுரைக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வார்த்தைகள், நம் மொழியில் சு.வேணுகோபால் அவர்களால் மட்டுமே நிரப்பப்பட்டுவரும் பெரும் மரபுத்தொடர்ச்சியை நமக்குத் துல்லியப்படுத்துகிறது.

சு.வேணுகோபால் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘வெண்ணிலை’ தமிழில் இதுவரை வெளியான மிகச்சிறந்த சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்று. வெண்ணிலை, பூமிக்குள் ஓடுகிறது நதி, திசையெல்லாம் நெருஞ்சி, கூந்தப்பனை, களவு போகும் புரவிகள், ஒரு துளி துயரம் உள்ளிட்ட சிறுகதை நூல்களும், நுண்வெளிக் கிரகணங்கள், பால்கனிகள், நிலம் எனும் நல்லாள், தாயுமானவள் ஆகிய நாவல்களும் அச்சுப்பதிப்பில் வெளியாகியுள்ளன. தமிழின் மிகச்சிறந்த முன்னோடிப் பதிப்பகங்களுள் ஒன்றான ‘தமிழினி பதிப்பகம்’ இவருடைய அத்தனை நூல்களையும் வெளியிட்டு, தமிழின் மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவராக இவர் நிலைபெறத் துணைநின்றுள்ளது.

தமிழ்ப்படைப்புலகில் தவிர்த்துவிட முடியாத எழுத்துப்படைப்புகளைத் தந்து, எல்லா தரப்புக்கும் உரிய நேர்மறையாளர்களாகத் திகழ்கிற முன்னோடி இலக்கிய ஆளுமைகளைக் கொண்டாடி மனமேந்தும் வாய்ப்பாகவும், இளைய வாசிப்பு மனங்களுக்கு அவர்களை இன்னும் அண்மைப்படுத்தும் செயலசைவாகவும் ‘தன்னறம் இலக்கிய விருது’ முன்னெடுப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. இதுவரை படைப்பாளர் யூமா வாசுகி, எழுத்தாளர் தேவிபாரதி ஆகியோருக்கு அவர்களின் இலக்கியப் பங்களிப்பினை பணிந்து வணங்கி தன்னறம் இலக்கிய விருது அளிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டிற்கான தன்னறம் இலக்கிய விருது எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களுக்கு வழங்குவதில் நெஞ்சார்ந்த மகிழ்வுகொள்கிறோம். இவ்விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் தொகையும் விருதாளருக்கு வழங்கப்படவுள்ளது. மேலும், இளைய வாசிப்புமனங்கள் ஆயிரம் பேருக்கு சு.வேணுகோபால் அவர்களுடைய ‘தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்’ தொகுக்கப்பட்ட புத்தகமும் விலையில்லா பிரதிகளாக அனுப்பப்படவுள்ளது. இதோடு, விருதாளரின் தன்னுபவப்பகிர்வு நேர்காணலும் காணொளியாகப் பதிவுசெய்யப்பட்டு வெளியிடப்படும். ஒட்டுமொத்தமாக, தமிழின் தலைசிறந்த சிறுகதைப் படைப்பாளியான சு.வேணுகோபால் அவர்களை சமகால இளைய மனங்களுக்கு மீளறிமுகம் செய்யும் நல்முயற்சிக்கான ஆதாரமாக இவ்விருதளிப்பு நிகழ்வினை உயிர்ப்பாக நிகழ்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வருகிற ஜனவரி முதல்வாரத்தில் விருதளிப்பு நிகழ்வு நிகழவுள்ளது. இலக்கியப் படைப்புகளால் நம் காலத்தை கருத்தியல் ரீதியாகவும், கலையழகியல் ரீதியாகவும் செழுமையாக்கித் தந்த எழுத்தாளர்களின் ஓயாத இலக்கியப் பங்களிப்பை வணங்கி இவ்விருது வருடாவருடம் அளிக்கப்படுகிறது. ஒரு படைப்பாளியின் ஆழுள்ளத்து வெளிப்பாட்டினைச் இச்சமகால சமூகம் கவனித்துப் போற்றுகிறது என்பதற்கான அகச்சாட்சியமாகவும் இவ்விருது அர்த்தமடைகிறது. இவ்வாண்டின் தன்னறம் விருது பெறும் எழுத்தாளுமை சு.வேணுகோபால் அவர்களைப் பணிந்து வணங்குகிறோம்.

நன்றியுடன்,

தன்னறம் நூல்வெளி

www.thannaram.in

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 06, 2022 11:36
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.