யுவபுரஸ்கார், கடிதங்கள்

யுவபுரஸ்கார் விருது வீண்விருதுகள்

அன்புள்ள ஜெ,

சாகித்ய அக்காதமியின் இந்த ஊழல் பற்றி இங்கே புலம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை. எழுத்தாளர்களும் வாசகர்களும் இப்படி கடுமையான கண்டனம் எழுந்திருப்பதை சாகித்ய அக்காதமியின் தலைவருக்கும் செயலருக்கும் ஆங்கிலத்தில் கடிதங்கள் வழியாகத் தெரிவிக்கவேண்டும். அவர்களுக்கும் தெரியட்டுமே

ஆனந்த்ராஜ்

secretary@sahitya-akademi.gov.in

 

அன்புள்ள ஜெ

யுவபுரஸ்கார் விருது பற்றிய குறிப்புகளை வாசிக்கிறேன். நீங்கள் விவாதமாக ஆக்குவது அந்தத் தெரிவைச் செய்த நடுவர்குழுவின் ரசனைத்தகுதியையும், அறிவுத்தகுதியையும்தான். அந்த வினாவை எழுப்ப எவருக்கும் உரிமை உண்டு. மடத்தனமான ஒரு செயலை அவர்கள் செய்யும்போது அதற்கு விமர்சனம் எழக்கூடாது என நினைப்பதுபோல அபத்தமான செயல் வேறில்லை.

நான் பார்த்தவரை முக்கியமான எல்லா கவிஞர்களும், எழுத்தாளர்களும் தங்கள் அதிருப்தியை பதிவுசெய்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் சொல்லாதவரை அது எதிர்ப்பாக பதிவாவதே இல்லை. செய்தியாக ஆவதில்லை. ஆகவேதான் இத்தனை காழ்ப்பு.

விருதுபெற்ற கவிஞரின் ஒரு நல்ல கவிதையைச் சுட்டிக்காட்ட எவராலும் இயலவில்லை. மாறாக அவர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் என்கிறார்கள். சாதியைச் சொல்லி ஆதரவு கோருகிறார்கள். (இங்கே கவிதை எழுதுபவர்கள் எல்லாருமே எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள்தான். நீங்கள் சுட்டிக்காட்டிய நல்ல கவிஞர்களும் அப்படித்தான்) உங்கள் மேல் மதவாத முத்திரை குத்துகிறார்கள்.

அபத்தம்தான். ஆனால் அசடுகளே ஆனாலும் ஓர் எண்ணிக்கையில் கூடினால் அவர்களுக்கு ஒரு சக்தி வந்துவிடுகிறது. அதை நினைத்தே புகழ்பெற்றவர்களெல்லாம் கொஞ்சம் அமைதியாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

இந்த வசைகளை கவனித்திருப்பீர்கள். நீங்கள் கண்டிப்பதனாலேயே பாய்ந்து சென்று ஆதரவு தெரிவிக்கிறார்கள். குமுறுகிறார்கள். அவர்களை வாசித்துவிட்டுச் சில இளைஞர்கள் ஜெயமோகன் வன்மத்துடன் தாக்குகிறார் என்று சொல்வதைக் கேட்டேன்.

அருண்குமார்

அன்புள்ள அருண்குமார்,

எல்லா இளைஞர்களுடனும் பேச எனக்கு ஒன்றும் இல்லை. நுண்ணுணர்வுகொண்ட, இலக்கியம் வாசிக்கும் இயல்பான அறிவுத்தகுதி கொண்ட ஓர் இளைஞனுக்கு அவர்களின் கூச்சல்களின் தரம், அவர்கள் சுட்டிக்காட்டும் கவிதைகளின் தரம் முதல்வாசிப்பிலேயே புரியும். அவர்கள் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று வந்து வாசிப்பார்கள். இங்கே வந்திருப்பவர்கள் அனைவருமே அப்படி வந்தவர்கள்தான்.

உண்மை, பத்துபேர் இங்கே வந்தால் நூறுபேர் அந்தப்பக்கம் செல்வார்கள். எளிய அரசியல், எளிய வம்புகள் மட்டுமே பிடிகிடைக்கும் அளவுக்கு மழுங்கியவர்கள். அவர்களுடைய உலகில் நான் நுழைய முடியாது, என் உலகில் அவர்கள் இல்லை. என் கண்ணிலேயே அவர்கள் தெரிவதில்லை.

நான் சொல்லும் தர அளவுகோல் ஒன்றும் அதிநுட்பமானது அல்ல. மிகமிக அப்பட்டமாகவே தெரிவது. மெய்யாகவே ஒருவருக்கு அந்த தர அளவு பிடிபடவில்லை என்றால், இவ்விருது அளிக்கப்பட்ட அரசியலின் கீழ்மை புரியவில்லை என்றால் அவருக்கு என்ன இலக்கியம் புரிந்துவிடப்போகிறது?

இரண்டு வகை காழ்ப்புகள் வெளிப்படுகின்றன. ஒன்று, தாங்களும் எவ்வகையிலும் பொருட்படுத்தத் தக்க எதையும் எழுதவில்லை என உள்ளூர உணர்பவர்கள். தங்களில் ஒருவருக்கு விருதளிக்கப்பட்டுள்ளது என நினைக்கிறார்கள். ஆகவே கொதிக்கிறார்கள். இவர்கள் ஒரு வகையில் எளிமையானவர்கள்.

இரண்டாம் வகையினர், அரசியலாளர்கள்.இலக்கியநுண்ணுணர்வு கொண்டவர்களை தங்கள் தரப்புக்கு அணிதிரட்டமுடியாது என இவர்கள் அறிவார்கள். ஆகவே இத்தகைய தருணங்களில் மிகையுணர்ச்சியை உருவாக்கி அணிசேர்க்கிறார்கள்.

பெரும்பாலான குரல்கள் இத்தகையவையே. ஆனால் அவற்றிலிருந்து உண்மையை, கலையை கண்டடையும் கண்கொண்ட சிலர்தான் என் இலக்கு. என்றும் இலக்கியம் அவர்களை நோக்கியே பேசுகிறது.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 29, 2022 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.