அறுபடா பொன்னிழை -சுபஸ்ரீ

அன்புநிறை ஜெ,

இடையறாத செயல் வேள்வி ஒன்றின்  உச்சமான ஒரு கொண்டாட்டமாக விக்கி தூரன் விருது விழா நடந்து முடிந்திருப்பதை வாசித்து மனம் மகிழ்வாக இருக்கிறது. இதில் தொடர்ந்து ஊக்கத்துடன் செயல்படும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கர்ம வேள்வியாக நடந்து கொண்டிருக்கும் மற்றொரு செயல் குறித்து இக்கடிதம்.

குருஜி சௌந்தர் யோக ஆசிரியப் பயிற்சி வகுப்பு ஒன்றைத் துவக்கியிருக்கிறார். அவரது வழக்கமான யோகப்பயிற்சி வகுப்புகளைத் தவிர இப்பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. பெரும் உழைப்பையும் நேரத்தையும் கோரும் பணி. ஓராண்டு அல்லது அதற்கும் மேலாக நீளக் கூடிய மிகச் செறிவான பாடத்திட்டம். கற்பவர்களிடமும் ஒவ்வொரு நாளும் தீவிரமான பயிற்சியையும் அதற்கான நேரத்தையும் கோரும் பயிற்சித்திட்டம்.  தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் இணையம் வழியாக நடக்கிறது. வாரந்தோறும் இரண்டு முதல் மூன்று வகுப்புகள் என தொடங்கி இதுவரை அறிமுக வகுப்பும் மேலும் இரண்டு வகுப்புகளும் நடந்திருக்கின்றன. வேற்று மொழி பேசுபவர்களும் வேறு நாடுகளில் இருந்து கலந்து கொள்பவர்களும் இருப்பதால் இரு மொழிகள். கலந்துகொள்பவர்களின் இடம்/காலம் சார்ந்த தேவைகளுக்கேற்ப எல்லா வகுப்புகளும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் ஏதேனும் புதிதாக மிக முக்கியமான அறிதல் ஒன்றைப் போகிற போக்கில் சொல்லி விடுவதால், மறுமுறை எடுக்கப்படும் வகுப்புகளில் கூட பலரும் மீண்டும் இணைந்து கொள்வதைப் பார்க்கிறேன்.

இப்பயிற்சி திட்டத்தை இருகட்டமாக குருஜி சௌந்தர் வகுத்திருக்கிறார். யோகப் பயிற்சி பெறுபவர்களை தீவிர யோக சாதகனாக மாற்றுவது முதற் கட்டம். இது ஆறு மாதங்கள் வரை நீளக்கூடும். பின்னர் அவர்களை பிறரைப் பயிற்றுவிக்கும் திறன் கொண்டவர்களாக ஆக்கும் ஆசிரியப் பயிற்சி – என இரு நிலைகள்.

வெறும் யோகப் பயிற்சி தரக்கூடிய ஆசிரியர்களை உருவாக்குவதல்ல, தீவிரமான யோக சாதகனை உருவாக்குவதும், சக ஆத்மனுக்கான தேவையை உணர்ந்து அதை வழங்கக்கூடிய ஆற்றல் கொண்ட யோக ஆசிரியர்களை உருவாக்குவதுமே நோக்கம் என்பதை முதலில் வகுத்துவிட்டார்.

வழக்கமான யோகப் பயிற்சி வகுப்புகளில் இருந்து மிக முக்கியமான சில கூறுகளால் இப்பயிற்சி தனித்து இருக்கிறது.

முதலாவதாக யோகத்தை மரபான குருநிலையிலிருந்து கற்ற ஆசிரியர் என்பதால் குரு மரபின் அறுபடாத ஞானச் சரடின் ஒரு கண்ணியாக நம்மை இணைத்துக் கொள்ளும், உணரும் ஒரு வாய்ப்பு. அது சார்ந்த முக்கியமான மரபார்ந்த குருநிலைகள், குரு நிரை, அவர்களது நூல்கள் அனைத்துக்குமான அறிமுகம்.

இரண்டாவதாக, இருபத்திரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து சாதனா செய்து கொண்டிருக்கும் சாதகர் என்ற வகையில் அவரது அனுபவங்களும் அறிதலும் சாரமாகக் கனிந்து வகுப்பின் மையப் புள்ளிகளாக அமைகின்றன.  ஒவ்வொரு வகுப்பிலும் விளக்கும் போது தான் கற்றவற்றை, வாசித்தவற்றை மட்டுமன்றி தன் அனுபவமாக ஆன ஒன்றை முன்வைக்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு யோகப் பயிற்சிக்கான செயல்முறை விளக்கமும், அந்த குறிப்பிட்ட யோகப் பயிற்சியின் உடல்நலம் சார்ந்த பலன்களும், அதைப் பயிற்றுவிக்கும் முறையும் கூட  இணைய வெளியில்  நமக்குக் கிடைத்து விடுகிறது. இதுபோன்ற சாதனா மூலமாக மட்டுமே பெறப்படும் அனுபவங்களை அறிந்து கொள்ளும் பேறு அரிதானது. கேட்பவருக்கு அது அனுபவமாக வேண்டும் என்ற கனிவோடு அது சொல்லப்படுகிறது.

மூன்றாவதாக யோகப் பயிற்சியின் செயல்முறை மட்டுமின்றி, அதன் தத்துவம் மற்றும் இதுவரை மரபில் அப்பயிற்சிகள் குறித்து பல உபநிடதங்களிலும், சம்ஹிதைகளிலும், முக்கியமான  நூல்களிலும் கூறப்பட்டற்றைத் தொகுத்து தன் அறிதலால், விரிவான இலக்கிய வாசிப்பால் அவற்றை மேலும் கூர்தீட்டிச் சொல்லும் விதம் வகுப்புகளை மிக செறிவாக்குகிறது. வகுப்புகள் முடிந்ததும் அன்றைய வகுப்போடு தொடர்புடைய வெண்முரசின் சில வரிகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். வெண்முரசில் இல்லாததென ஏதுமில்லை.

அடுத்ததாக, ஒவ்வொரு வகுப்பிலும் அன்றைய பயிற்சியோடு இயைந்த மையப் புள்ளி ஒன்று நங்கூரமாக அமைகிறது. குருபௌர்ணமியன்று தாங்கள் சாங்கியமும் யோகமும் குறித்து பேசும்போது மரபார்ந்த தத்துவம் ஒவ்வொன்றும் ஒரு பயிற்சியால் செயல்முறையாக்கப் பட்டுள்ளதை சொன்னதை இவ்வகுப்புகளில் கண்கூடாக காண முடிகிறது.

உதாரணமாக அறிமுக வகுப்பில் ஞானத்துக்கான கலமாகத் தன்னை சாதகன் ஆயத்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை ‘சுபாத்திரம்’ என்ற சொல்லை விளக்கி அதனோடு யோகம் எவ்விதம் உடல்நலம், மனநலம் என்பதைத் தாண்டி ஆன்மீக நாட்டம் கொண்டவர்களுக்கு அதற்கான ஆயத்தமாக அமைகிறது என்பது வரை நீண்டு சென்றது அந்த உரை.

பின்னர், காயசித்தி என்பதை அறிமுகப்படுத்தி ’நிலைகொள்ளுதல்’ என்பதையும் அதற்கான பறிற்சிகளும் என ஒரு வகுப்பும், ‘யோக சமத்வ உச்யதே’ எனத்தொடங்கி சமநிலை கொள்வதை விளக்கி அதற்கான பயிற்சிகளுடன் ஒரு வகுப்பும் என நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அதே நேரம் யோகம் குறித்த எந்த விதமான மனமயக்கங்களோ உயர்வு நவிற்சிகளோ எங்கும் முன்வைக்கப்படுவதில்லை. மாறாக அது போன்ற மயக்கங்கள் முதலிலேயே தகர்க்கப்பட்டுவிடுகின்றன.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை நேரடியாக கலந்து கொள்ள சாத்தியமுள்ளவர்கள் அனைவரும் நேரில் சந்தித்து ஒரு சில வகுப்புகள், அவற்றை முடிந்தால் ஆன்மீகமான இடங்களில் நடத்தலாம், வாய்ப்பும் ஆர்வமும் உள்ளவர்கள் மரபான ஆசிரமங்களுக்கு சென்று  தங்கி அந்த அனுபவத்தைப் பெற்று வர உதவி செய்வது என்பது போன்ற  செயல்திட்டங்களோடு தொடங்கப்பட்டிருக்கிறது. இறையருளும் குருவருளும் துணை நிற்கட்டும்.

கடந்த ஆறுமாதங்களாக வாரம்தோறும் இடையறாத பயணங்களில் இருக்கிறேன். ரிஷிகேஷ், கங்கையின் பிரயாகைகள்,  துங்கநாத், எனத் தொடங்கி கேரளம், அமர்நாத் வரை தொடர்ந்து பல்வேறு ஊர்கள், குருநிலைகள், ஆலயங்கள். இது தவிர சென்னையைச் சுற்றியுள்ள பல தொன்மையான ஆலயங்கள்.

ஒரு நாள் சின்னக்காவனம் நூற்றெட்டீஸ்வரர் ஆலயம் சென்றிருந்தபோது, அங்கு வெளிப்பிரகாரத்தின் மேற்கு மூலையில் ஒரு சிறு குழு அமர்ந்து தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருபதிலிருந்து முப்பது வயதுக்குள் ஏழெட்டு பேர் இருக்கும் குழு. அதில் மையமாக அமர்ந்திருந்த ஒருவரது சொற்கள் காதில் விழுந்தன. பிரம்மம் குறித்தும் ஆத்மன் குறித்தும் அங்கிருப்பவர்களுக்கு அவர் சென்னைத் தமிழில் விளக்கிக் கொண்டிருந்தார். அதைக் கடந்து வந்த போது பிரகாரத்தின் வலக்கோடியில் கால பைரவர் சன்னதியில் அஷ்டமி பூஜை வேத மந்திரங்களோடு நடந்து கொண்டிருந்தது. மிக இளம் வயது கொண்ட ஒரு அர்ச்சகர் தானும் தனது தெய்வமும் மட்டுமே தனித்து நின்றிருப்பது போன்ற ஒரு அகவெளியில் அமைந்து, பைரவருக்கு நீரூற்றி, மலர் சூட்டி, மந்திரம் ஓதி ஆராதனை செய்து கொண்டிருந்தார். சன்னதியில் பூஜைக்காக மக்கள் அமர்ந்திருந்தனர். இது குறித்து குருஜி சௌந்தரிடம் பேசியபோது, ‘இந்த நிலம் பல்வேறு அடுக்குகளாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது, வேத கால இந்தியா ஒன்று இன்றும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. மரபான ஞானமும் அதற்கான குருநிலைகளும் இன்றும் அப்படியே இருக்கின்றன.  அதற்கான தேடலுடன் செல்பவர்களால் காண முடியும், அதன் இரு அறுபடாத இழைகள் இவை’ என்றார்.

இதே போல அறுபடாத பொன்னிழைகள் தாங்கள் நிகழ்த்தத் திட்டமிடும் தத்துவ மெய்யியல் சார்ந்த வகுப்புகளும், இந்த மரபார்ந்த யோக வகுப்புகளும்.

ஆம், என்றும் தொடரும்  இழைகளின் கண்ணிகள் நாம் என்பதாலேயே எண்ணற்ற ஞானிகள், ரிஷிகள், குருநிரைகள் அனைத்தின் ஞானத் தொடுகையையும் அதன்வழி மிகச்சிறு துளி அமுதமேனும் இங்கு தாகம் உள்ள எவரும் பெற்று விடமுடிகிறது.

வணக்கங்களுடன்,
சுபாsoundar_rajang@yahoo.com
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2022 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.