மோகினியின் ஆசி – விஜயபாரதி

அன்புள்ள ஜெ,

திருநங்கை பற்றிய என் முதல் நினைவு ஒருமுறை நறுக்கென தலையில் கொட்டு வாங்கியதுதான். கல்லூரி நாட்கள். ரயிலில் நண்பர்களுடன் சென்னையிலிருந்து வாலாஜா வரை பயணம். ஒரு திருநங்கை அனைவரிடமும் பணம் வசூலிக்கும்போது நான் காசு இல்லை என மறுத்தேன். அப்போதுதான் அந்த கொட்டு விழுந்தது.

ஆனால் இன்று அந்த கொட்டு பணத்துக்காக இல்லை எனவே நினைக்கிறேன். என் முகம் ஒவ்வாமையை வெளிப்படுத்தியிருக்கலாம். அங்கு பணமில்லை என மறுத்த அனைவரும் கொட்டுவாங்கிவிடவில்லை. மேலும் அன்று நான்  நோஞ்சான் சிறுவன். எனவே அந்த செல்ல தண்டனை. கொஞ்சம் பெரியவர்களாக இருந்தால், அவமரியாதை செய்தால் துணியைத் தூக்கிக்காட்டுதல், வசை என வேறு அருவருக்கத்தக்க எதிர்வினைகள் கிடைத்திருக்கும். இந்த எதிர்வினை ஒரு சமூகமாக அரவாணிகள் வளர்த்துக்கொண்ட எதிர்ப்பு சக்தி என்கிறார் கரசூர் பத்மபாரதி. அவரது “திருநங்கையர் – சமூக வரைவியல்” புத்தகத்தில் இது அரவாணிகளின் நேர்க்கூற்றாகவே பதிவாகியுள்ளது.

அரவாணிகள் பெரும்பாலும் அறுவை சிகிழ்ச்சை மூலமாகவும், ஹார்மோன் மாற்றுக்கான  மருந்துகளாலும் வலுவிழந்தவர்களாக உணர்கின்றனர். அவர்கள் விரும்பும் ஒதுக்கும் வேலைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. கடின வேலைகளை ஒதுக்கியே வைத்துள்ளனர். பலவான்களின் தொந்தரவிலிருந்து தப்பிக்க பலவீனமாக உணரும் ஒரு அரவாணிக்கு இருக்கும் ஒரே வழி அருவருப்பைத் தூண்டி, அவர்களை தாமாகவே விலகிச் செல்ல வைப்பது மட்டுமே.

ஒரு நண்பரிடம் இந்த புத்தகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அரவாணிகளால் எந்தத் தொழிலையும் தொடங்க முடியாது அவர்களால் எங்கும் நிரந்தரமாக வேலை பார்க்கவும் முடியாது நிலையான வருமானம் இல்லாதது அரவாணிகளின் பொருளாதார நிலை மட்டமாக இருக்க காரணம். இந்த நிலைக்கு அரவாணிகள் நடந்து கொள்ளும் விதம்தானே காரணம் என்றார். அதுதான் இன்றைய பொதுப் புரிதல்.  நிலையான வருமானம் இல்லாமையால் அவர்களது தொழிலும் நடத்தையும் அருவருப்பாக உள்ளதா அல்லது அந்நடத்தையால் நிலையான வருமானம் இல்லாமல் போனதா? பத்மபாரதியின் புத்தகம் இன்றைய பொதுப்புரிதலை கேள்விக்குள்ளாக்குகிறது‌. M.A படித்த பட்டதாரி அரவாணி , வேலை கிடைக்காமல், 10 நாள் பட்டினிக்குப் பிறகு, தன் சுயமரியாதையை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு முதன்முதலாக பிச்சை கேட்டு கையேந்தும் தருணம் வாசிப்பவர்களை நஞ்சதிரச்செய்வது.

ஒரு எளிய சிற்றுண்டி விடுதி தொடங்கினால் கூட அங்கு பெண்கள் யாரும் சாப்பிட போவதில்லை. ஆண்கள் மட்டுமே செல்கின்றனர். அதிலும் சிலர் உணவுக்கு பணம் கொடுப்பதில்லை, மாறாக வம்புக்கு இழுத்து கடையை அடித்து நொறுக்குகின்றனர். எந்த வேலையில் சேர்ந்தாலும் பணியிடத்தில் கிண்டலும், பாலியல் தொந்தரவும் நிச்சயம்.

எனில், பிச்சை எடுப்பதையும், பாலியல் தொழிலையும் மட்டும்தான் இந்த சமூகம் அரவாணிகளின் தொழிலாக ஏற்றுக்கொள்கிறது.  பிச்சை எடுப்பதையும்கூட அவர்கள் நிம்மதியாக செய்துவிட முடியாது. பிச்சை இரந்து செல்லும் இடத்தில் “மேலே கைவைக்கும்” கடை முதலாளிகளும் உண்டு. அதனால்தான் “தரங்கெட்ட தென்னாடு, தேய்ந்துபோன தென்னாடு” என்ற வழக்கு அரவாணிகளிடையே புழங்குகிறது என்பதை அரவாணிகளின் வாய்மொழியாகவே பதிவு செய்கிறார்.

ஆனால் வட இந்தியா அரவாணிகளுக்கு இந்த அளவு மோசமில்லை . அரவாணிகளின் வாழ்த்தை மோகினி அவதாரம் எடுத்த கிருஷ்ணனின் வாழ்த்தாகவே கொள்கின்றனர். வீட்டிலும், கடையிலும் நடக்கும் விழாக்களுக்கு அரவாணிகளை பல மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து அழைத்து வந்து வாழ்த்த வைப்பதும் நடக்கிறது. அங்கெல்லாம் பிச்சை எடுப்பதோ, பாலியல் தொழிலோ இல்லை என்றல்ல. இப்படி ஒரு மதிப்புமிக்க ஒரு வழியும் உள்ளது என்பதே “வாழவைத்த வட நாடு” என்று போற்ற காரணம்.

வருமானம் சற்று செழிப்பான எல்லா இடங்களிலும் போலிகள் உண்டு. சாதாரண ஆண்கள் போலி அரவாணிகளாக வேடமிட்டு வசூல் செய்வதும் உண்டு. இதை மற்ற அரவாணிகள் கண்டுபிடித்து துரத்திவிடுகின்றனர். போலி அரவாணிகள் “கைதட்டலில் சொதப்புவது” காட்டிக்கொடுத்துவிடும் என்று வாசித்தபோது புன்னகைத்துக்கொண்டேன். வெண்முரசில் அர்ஜுனன் போல, எழுகதிர் சிறுகதையில் ஸ்ரீகண்டன் நாயர் போல உள்ளூர அவர்களால் பெண்ணாக உணர முடியவில்லை. அதனால்தான் கைதட்டல் சொதப்புகிறது.

புத்தகத்தின் இந்த இயல் வெறும் வடக்கு தெற்கு பற்றிய அவதானிப்போடு நிற்கவில்லை. அங்கிருந்து திரும்ப தென்னாட்டுக்கே வருபவர்களையும் அடையாளம் காண்கிறது.  சிறு எண்ணிக்கையிலிருக்கும் அரவாணிகளிலும் சிறுபான்மையினரின் இந்த “வீடு திரும்புதல்” நிகழ்வையும் அவதானித்து பதிவு செய்தது வியப்புதான். ஆனால் இத்தகைய கோணங்கள்தான் புத்தகத்துக்கு ஆழம் சேற்கின்றன. ஆம், வடக்கு வாழ வைக்கிறது, ஆனாலும் அங்குள்ள வாழ்க்கை கிட்டத்தட்ட அடிமையாக வாழ்வதுதான். பணம் இருக்கும், பாதுகாப்பு இருக்கும். ஆனால் ஒரு குடும்பமாக குருவுக்கு கட்டுப்பட்டு வாழும் இடத்தில் சுதந்திரம் இருப்பதில்லை. அந்த இறுக்கம் தாளாமல் சிலர் திரும்பி தென்னாட்டுக்கே வந்து வேறு வழியின்றி இழிதொழிலை ஏற்றுக்கொள்கின்றனர். சுதந்திரத்திற்காக வருமானத்தையும், பாதுகாப்பான, மதிப்பான வாழ்க்கையையும் விட்டுவிட தயாராக இருப்பது தான் இங்கு ஆழமான முரண். ஒரு இலக்கியவாசகன் இதன் வழியே வெகுதூரம் செல்ல முடியும்.

கூத்தாண்டவர் திருவிழா பற்றிய இயல் முக்கியமான ஒன்று. அரவான் தான் கூத்தாண்டவர். அரவான் பற்றிய கதைகளே மூன்று உள்ளன. அனைத்துமே கிருஷ்ணனை பெரும் சூழ்ச்சிக்காரன் ஆக காட்டுகின்றன. அதில் ஒரு கதையில் அரவானே திரௌபதியிடம் “அறுத்திடம்மா” என்று சொல்ல திரௌபதி அரவாணை பலி கொடுக்கிறாள். எல்லா கதைகளிலுமே அரவான் மகாபாரதப் போரை ஒரே நாளில் முடிக்கும் வல்லமை உடையவனாகவே வருகிறான். அரவாணிகள் அரவானை கணவனாக வரித்துக் கொண்டவர்கள். அரவான் இறக்கும் முன் கேட்ட வரத்துக்காக கிருஷ்ணன் மோகினியா வடிவம் எடுப்பதை மீள நடிக்கும் நிகழ்வு. மிகவும் விந்தையான ஒரு விஷயம் கூத்தாண்டவர் திருவிழாவில் சாதாரண ஆண்கள் கிட்டத்தட்ட 3000 பேர் அரவாணிகளுடன் நின்று அரவானுக்கு மனைவியாக தாலி கட்டிக் கொள்கின்றனர். அன்று ஒருநாள் அத்தனைபேரும் மோகினிகள்தானே.

அரவானை கணவனாக நினைத்து வழிபட்டாலும் முர்கே வாலி மாதா தான் அரவாணிகளின் தெய்வம் . மாதாவுக்காக நடத்தப்படும் சடங்குகள், முக்கியமாக விரைத்தறிப்பு சடங்குகளை வாசிக்கும்போது பற்கள்கூச கண்கள் மங்கிவிடுகின்றன. ஆனால் பத்மபாரதி அதை மூடநம்பிக்கை என்று புறந்தள்ளுவதை விட ஒரு சமுதாயம் அவர்களுக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு பண்பாடு என்றும் அதை அவர்களே எண்ணி வெளியே வரவேண்டும் என்றும் தான் எழுதுகிறார்.

சமுதாயம் பற்றிய இயல் அரவாணிகள் தங்களுக்குள் திருமணம் செய்துகொள்வதையும், தாய் மகள் என்ற உறவுகளை தத்தெடுத்துக்கொள்வதையும் விரிவாக பதிவுசெய்கிறது. மருத்துவம் பற்றிய பகுதியை வாசிக்கும்போது கள ஆய்வு எத்தனை உழைப்பை கோருவது என்பதை உணர முடிந்தது. உள்ளம் பெண்ணாக உணர ஆரம்பித்த பிறகு உயிரை பணயம் வைத்தாவது தன் உடலையும் பெண்ணாக்கிவிடுவது என்பது அரவாணிகளின் துணிவு. விரைத்தறிப்பின்போது இறப்பு நிகழலாம் என்பதால் முந்தைய நாள் பிடித்தவற்றை சாப்பிடச்சொல்கிறார்கள். எத்தனை பேர் அப்படி இறந்திருந்தால் இந்த சடங்கு வழக்கமாகி வந்திருக்கும். எண்ணவே மலைப்பாக இருக்கிறது.

விருது அறிவிக்கப்பட்ட பின்தான் பத்மபாரதி பற்றி அறிந்து புத்தகத்தை வாசித்தேன். ஆய்வு புத்தகம் என்றாலும் மொழி அவ்வப்போது பத்மபாரதி நம்மிடம் கதை சொல்வது போலவே உள்ளது. தேவையான இடங்களில் கறாரான வரையறை, வாய்மொழியாக கேட்ட தகவல்களைச் சொல்லும்போது ஊகங்களுக்கு இடம் கொடுக்கும் மொழி. இந்த வாசிப்பு அரவாணிகள்மீதான பல பிம்பங்களை உடைத்துவிட்டது.  அன்று சிறுவனாக நான் தலையில் வாங்கிய அடியை இன்று அரவாணியின் ஆசியாகவே எடுத்துக்கொள்கிறேன்.

ஆய்வாளர் பத்மபாரதியின் அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் முன்னால் பணிகிறேன். இந்த புத்தகத்துக்காகவே அவருக்கு நன்றிகள். தமிழ் விக்கி தூரன் விருது பெறும் பத்மபாரதிக்கு வாழ்த்துக்கள்.

நன்றி
பா.விஜயபாரதி
சென்னை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2022 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.