மேடைவதைகள், சில நெறிகள்.

(Peter Saul )

இலக்கிய கூட்டங்கள் பற்றிய ஒரு செய்தியை அண்மையில் வாசித்தேன். மறைந்த குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை பற்றி அமுதசுரபி ஆசிரியரும் எழுத்தாளர் சங்கத்தலைவருமாக இருந்த விக்ரமன் ( வேம்பு)  ஒரு கட்டுரையில் குறிப்பிடும்போது அவர் தமிழின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவர் என்றார். பிறரும் அதை பதிவு செய்திருக்கிறார்கள். கல்கி மறைந்தபோது எஸ்.ஏ.பி. ஆற்றிய உரை தமிழின் தலைசிறந்த உரைகளில் ஒன்று என்று அவருடைய மகன் ராஜேந்திரன் தன் குறிப்பொன்றில் பதிவு செய்திருக்கிறார். விவேகானந்தர், பகவத் கீதை இரண்டிலும் பெரும் ஈடுபாடு கொண்டவராகிய எஸ்.ஏ.பி. விவேகானந்தர் நூற்றாண்டின்போது தமிழகத்தின் பல ஊர்களுக்குச் சென்று பேருரைகளை ஆற்றியிருக்கிறார். அவர் உரைகளுக்குத் திரளாக மக்களும் வந்திருக்கிறார்.

ஆனால் சென்னையில் ஒரு விழா நடைபெற்றது அதில் புலவர் திரிகூட சுந்தரம் பிள்ளை எஸ்.ஏ.பிக்கு முன்னால் பேசினார். அவருக்கு அளிக்கப்பட்டிருந்த நேரம் அரைமணி.அவர் பேசி முடித்தது இரண்டரை மணி நேரம். பிறகு எஸ்.ஏ.பி. பேசுவதற்கு பொழுதிருக்கவில்லை. அந்தக்கூட்டத்தில் ஓரிரு சொற்கள் பேசி வெளிவந்த எஸ்.ஏ.பி. விக்ரமனிடம் அதுவே தன் கடைசி மேடைப்பேச்சு என்றும் மேற்கொண்டு எந்தக் கூட்டத்திலும் தான் பேசப்போவதில்லை என்று அறிவித்தார். அவருடைய பேச்சை தான் நிறுத்தக் காரணமாகிவிட்டோமோ என்று விக்ரமன் பதறினார்.

“நான் வாசிக்கிறேன், இதழியலிலும் இருக்கிறேன். இவ்விரண்டுமே பொழுதெண்ணி செய்யவேண்டியவை. பொருளற்று பொழுதை வீணடிப்பது மிகப்பெரிய ஊதாரித்தனம், அதை நாம் செய்யலாகாது. மேடையில் பிறர் பேசுவதற்குமேல் எனக்கு எந்தக்கட்டுப்பாடும் இல்லை. அவர்களுடைய நேரத்தை நான் ஆளமுடியாது. எனது நேரத்தை அவர்கள் ஆளமுடியும் என்பது ஒருதலைப்பட்சமானது ஆகவே இனிமேல் மேடை உரைகள் தேவையில்லை” என்று அவர் சொன்னார்.

இவ்வாறு தமிழில் மேடையிலிருந்து விலகிச்சென்றவர்கள் பலர் உண்டு. சுந்தர ராமசாமி மேடைப்பேச்சுக்கே எதிரானவர். ஏனென்றால் மேடை தமிழகத்தின் மாபெரும் பொழுது வீணடிப்பாக மாறியிருக்கிறது. ஒரு மேடையில் பேசுபவர் கேட்பவரைப் பற்றி எந்த அக்கறையும் கொள்ள வேண்டியதில்லை என்பதே தமிழின் பொதுமனநிலை. அவர் அங்கு பேசவேண்டிய தலைப்பைப் பற்றிக்கூட பேசவேண்டியதில்லை. தனக்கு நினைவு வரும் அனைத்தையுமே அங்கு பேசலாம். பேசப்பேச எழுந்து வருபவற்றை எடுத்து வைத்துக்கொண்டே இருக்கலாம். பிறருடைய நேரத்தை எடுத்துக்கொள்ளலாம். மேடை உரைக்கான எந்த நெறிகளையும் பேணவேண்டியதில்லை.

பெரும்பாலான மேடைகளில் தலைமைப்பேச்சாளர் அல்லது முதன்மைப் பேச்சாளர் இறுதியாகப் பேசும்படி அமைக்கப்பட்டிருக்கும். அவருடைய பேச்சை கேட்கவே பெரும்பாலான கூட்டம் வந்திருக்கும் முக்கியத்துவம் இல்லாத அல்லது இளம் பேச்சாளர்களை முகப்பில் பேச வைப்பார்கள். ஓர் அரங்கின் மிகவும் கூர்ந்த கவனம் இருக்கக்கூடிய பொழுது இவ்வாறு தொடக்கநிலையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. ஒருவகையில் அது நன்று ஏனெனில் அவர்கள் பயில்முறையாளர்கள். அவர்கள் தேறி வருவது நல்லது.

ஆனால் அந்த சலுகையை அவர்கள் சூறையாடுகிறார்கள். தங்களுக்கு அளிக்கப்பட்ட நேரத்தை எந்தப்பொறுப்புமின்றி செலவழிக்கிறார்கள். தலைமைப்பேச்சாளர்களின் நேரத்தை எடுத்து சிதைக்கிறார்கள் பலர். பல கூட்டங்களில் தலைமைப்பேச்சாளர் பேச எழும்போது அரங்கு சோர்ந்து துவண்டிருக்கும் மேற்கொண்டு பேச அவருக்கும் ஊக்கம் இருக்காது. அனைவரும் கிளம்ப வேண்டிய நிலைமை வந்துவிட்டிருக்கும்.

சமீபத்தில் சென்னையில் கருத்தரங்கு ஒன்றில் பலர் அப்படி நேரமோ அரங்க உளநிலையோ அறியாமல் பேசியதைப் பற்றி அங்கு சென்ற பல நண்பர்கள் எனக்கு குமுறி எழுதினார்கள்.அது அழைப்பை நம்பி அங்கே வந்த பார்வையாளர்கள் மீதான நேரடி வன்முறை. அந்தக் கீழ்மையை அவருக்கு உணர்த்தவேண்டியது அமைப்பாளர்களின் பணி ஆனால் பல தருணங்களில் அவை நாகரிகம், முகநட்பு கருதி அதைச் சொல்ல முடிவதில்லை. இழித்துரைத்தல் மென்மையாக அறிவுரைத்தல் போன்றவை இவர்களைப்போன்ற சுரணையற்றவர்களுக்கு எவ்வகையிலும் உறைப்பதில்லை. பலசமயம் மேடையில் அவ்வாறு வரும் அறிவுறுத்தல்களை அங்கேயே ஒரு பகடியாக ஒரு கோமாளி நடனமாக ஆக்கி மேலும் பொழுதை எடுத்துகொள்வார்கள்.

இன்று ஒரு இலக்கிய மேடைக்கு வரும் பொது வாசகன் என்பவன் தனது பணிகள் பலவற்றை விட்டுவிட்டு வருகிறான். ஒவ்வொரு நாளும் இயல்பாக கூட்டத்திற்கு சென்று அமைந்து உரைகளை நெடுநேரம் கேட்கும் அளவுக்கு எவருக்கும் இன்று பொழுதில்லை. பலகோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் ஒரு திரைப்படமே இரண்டேகால் மணி நேரம் ஓடுவதென்பது ஒரு ஊதாரித்தனம் என்ற எண்ணம் பரவலாக உருவாகிவரும் காலம் இது. சென்னையில் ஒருவர் ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு வருவதாக இருந்தால் ஒருமணிநேரத்திற்கு மேலாக அவர் பயணம் செய்து வருகிறார். மறுபடியும் ஒருமணிநேரம் திரும்பிச்செல்ல செலவாகிறது. அதற்கான பணச்செலவும் அவரால் செய்யப்படுகிறது. ஓர் இலக்கிய மேடையை சென்னையில் ஒருங்கிணைக்க இன்று கூடவாடகை மற்றும் செலவுகளோடு முப்பதாயிரம் ரூபாயாவது ஆகும். அதில் நூறு பேர் கலந்துகொண்டார்கள் என்றால் ஒவ்வொருவரும் தலா நூறு ரூபாய் செலவழித்தார்கள் என்றால் பத்தாயிரம் ரூபாய் பார்வையாளர் தரப்பிலிருந்து செலவழிக்கப்படுகிறது. அதைப்பற்றிய எந்த உணர்வும் மேடையில் பேசுபவர்களுக்கு இருப்பதில்லை.

வந்திருப்பவர்களுக்கு பயனுள்ள சிந்திக்க வைக்கக்கூடிய அவர்களை ஈர்க்கக்கூடிய எதையாவது அந்த மேடையிலே சொல்லியாகவேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை.இன்னொருவர் பொழுதை எடுத்துக்கொள்வது, அவைமுறைமைகளை பொருட்படுத்தாமலிருப்பது எல்லாம் நேரடியாக பார்வையாளர்களை அவமதிப்பதுதான். தமிழில் நாம் எதையாவது உடனடியாக கவனிக்க வேண்டும் என்றால் இந்த மேடை நாகரிகத்தைத்தான்.

இதைச் சொன்னதுமே, இப்படி ‘கட்டற்று’ இருப்பது ஜனநாயகம், கலைஞனின் சுதந்திரம், கலகம் என்றெல்லாம் சொல்பவர்கள் உண்டு. (மதிக்கத்தக்க எவரும் அதைச் சொல்வதில்லை, சொல்பவர்கள் அத்தனைபேரும் வெறுஞ்சொல்லர்கள்தான்) இதைச் சொல்பவர்கள் எவரும் எந்த அரங்கிலும் அமர்ந்து ஐந்து நிமிடம் எதையும் கேட்பதில்லை. இலக்கியக் கூட்டங்களில் வெளியே நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். அதையும் சுதந்திரம் ,கலகம் என்பார்கள். அதாவது நடைமுறையில் அவர்கள் சொல்வது இதுதான், அரங்குக்கு வருபவர்கள் ஏமாளிகளும் அசடுகளும் ஆதலாம் அவர்களை இவர்கள் நேரவீணடிப்பு செய்து இழிவுபடுத்துகிறார்கள். இவர்கள் புத்திசாலிகளாதாலல் பிறர் அதை இவர்களுக்குச் செய்ய இடமளிப்பதில்லை.

சென்ற காலங்களில் மேடை உரைகளைக் கேட்பது என்பது முதன்மைப் பொழுதுபோக்காக இருந்தது. எனது மாமனார் தன்னுடைய கேளிக்கையே மேடைப்பேச்சுக்களை கேட்பதுதான் என்றார். இன்று அரசியல் தலைவர்கள் பேசும் கூட்டங்களுக்குக் கூட திரட்டிக் கொண்டுவரவில்லை என்றால் எவரும் வருவதில்லை. மேடை உரை இன்று எவ்வகையிலும் ஆர்வமூட்டும் கேளிக்கை அல்ல. காட்சி ஊடகங்கள், இணைய ஊடகங்கள் பெருகி ஒவ்வொருவரைச் சுற்றியும் செறிந்து காத்திருக்கின்றன. அவற்றைக்கடந்து ஒரு கூட்டம் கேட்க வரும் வாசகன் மிக அரியவன். அவனுடைய பொழுதை வீணடிப்பதென்பது ஒரு பெருங்குற்றம்

தமிழில் இலக்கியக்கூட்டங்களை ஒருங்கிணைப்பவர்கள் இந்தக் குற்றவாளிகளை இனிமேலாவது அடையாளம்  கண்டுகொண்டாகவேண்டும். ஆள் கிடைக்கவில்லை என இவர்களையே அழைக்கக்கூடாது – இவர்கள் எல்லா அழைப்புக்கும் தயாராக காத்திருக்கிறார்கள். சொல்லப்போனால் அனைத்து கூட்டங்களிலும் நேரவிரயம் செய்பவர்களைத் தவிர்த்தாக வேண்டும். பொழுதுவீணர்களின் ஒரு பட்டியலையே தயாரித்து பொதுவெளியில் வெளியிடலாம் என்ற எண்ணம் எனக்கிருக்கிறது. தயாரித்தும் விட்டேன். தனிப்பட்ட சுற்றுவழியாக அவர்களின் பெயர்களை அனைவரும் அறியக்கொடுங்கள். அவர்களின் பெயர் அழைப்பிதழில் இருக்குமென்றால் அந்தக் கூட்டத்தை தவிர்த்துவிடுங்கள் என்றே நான் சொல்வேன். அது எந்த முதன்மைப் பேச்சாளர் கலந்துகொள்ளும் விழாவாக இருந்தாலும் சரி.

அமைப்பாளர்களைப் பொறுத்தவரை திட்டவட்டமாகவே பேச்சாளர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவேண்டும். அழைப்பிதழிலேயே ஒரு நிகழ்ச்சி எப்போது தொடங்கி எப்போது முடியும் என்பது வரையறுக்கப்பட வேண்டும். ஓரளவுக்கு நீளலாம். ஆனால் கட்டற்று நீளும் ஒரு இலக்கியக் கூட்டம் என்பது ஒரு பெரும்வன்முறை.பேச்சாளர்களுக்கு அவருக்கான நேரம் சொல்லப்படவேண்டும். அவர் மீறினால் அறிவுறுத்தலும் பின் எச்சரிக்கையும் விடுக்கப்படவேண்டும். அதற்கும் கட்டுப்படாவிட்டால் ஒலிப்பெருக்கியை அணைத்து அவரை மேடையை விட்டு வெளியேற்றவேண்டும். பார்வையாளர்களே அதைச் செய்யலாம். இனி நாகரீகம் பார்ப்பதில் பொருளில்லை. நாகரீகம் பார்த்தால் நாம் மேடை என்னும் நிகழ்வையே அழித்துக்கொண்டிருக்கிறோம் என்றே பொருள்.

இலக்கியக் கூட்டத்திற்கு வருபவர் இலக்கிய சொற்பொழிவுகளைக் கேட்பதற்காக மட்டும் வருவதில்லை. நண்பர்களைச் சந்திக்கத்தான் வருகிறார்கள். கூட்டம் முடிந்த பிறகு குறைந்தது ஒருமணி நேரமாவது அங்கு நின்று அளவளாவ விரும்புகிறார்கள். இலக்கியக் கூட்டங்கள் அந்தக் கூடம் அனுமதிக்கும் நேரத்தைத் தாண்டி போகும்போது அங்கு நிற்கவே முடியாமல் ஆகிறது. பெரும்பாலான இலக்கியக் கூட்டங்கள் அதனுடைய வாயிற்காப்போனால் வந்து நிறுத்தப்படுகின்றன. பார்வையாளர்கள் அங்கு நின்றிருக்கும்போதே விளக்குகளை அணைத்து கூடத்தை மூட ஆரம்பிக்கிறார்கள். அங்கு நின்றிருப்பவர்கள் அனைவரையும் கடிந்து வெளியே துரத்துகிறார்கள்.

மேடை நாகரீங்கள், மேடைநெறிகள் சில உள்ளன

1.தொழில்நுட்பக் கருத்தரங்குகள், கல்விக்கருத்தரங்குகள் தவிர எங்குமே கட்டுரையை படிக்கக்கூடாது. அப்படி ஒரு வழக்கமே உலகில் இல்லை. அது முழுமையான நேர விரயம். கட்டுரையை அல்லது படிப்பவர் ஒரு சொல்லைக்கூட அரங்கிடம் சொல்லவில்லை என்றே பொருள். எவருமே அதை கவனிக்கமாட்டார்கள், ஒரு சொல்கூட. தொழில்நுட்பக் கருத்தரங்குகள் மற்றும் கல்விக்கருத்தரங்குகளில் உரைகள் அச்சிடப்பட்டு ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும். அவற்றின் சுருக்கத்தையே அங்கே படிக்கிறார்கள். அதுவும் அதிகம்போனால் 15 நிமிடங்கள். நம் இலக்கியக்கூட்டங்களில் கைப்பிரதியில் இருபது பக்கங்களுடன் மேடையேறும் ஆசாமிகள் இருக்கிறார்கள்.

2.மேடையுரையில் தரவுகள், புள்ளி விவரங்கள் கூறுவது பெரும்பாலும் பயனற்றது. அவை நினைவில் நிற்பதே இல்லை. ஒரு கருத்தை நிறுவும்பொருட்டு ஓரிரு தரவுகளைச் சொல்லலாம். அங்கே கருத்தே முதன்மையானது. ஒரு பார்வை அங்கே ஒருவரால் முன்வைக்கப்படுகிறது

3.மேடையில் ‘நினைவுகூர்ந்து’ அந்த வரிசையில் பேசுவது பயனற்றது. ஏனென்றால் அதற்கு ஒரு வடிவம் இருக்காது. அந்த உரையை நினைவுகூரவே முடியாது. பேசவேண்டியதை ஏற்கனவே பேச்சாளர் முடிவுசெய்திருக்கவேண்டும். எந்த வரிசையில் எந்த வடிவில் முன்வைக்கவேண்டும் என அவருக்கு ஏற்கனவே ஒரு திட்டமும் இருக்கவேண்டும்

4.எக்காரணம் கொண்டும் மேடையில் முன்னர் பேசியவர் சொன்னதற்கு மறுப்பு சொல்லக்கூடாது. அதையொட்டி விவாதிக்கவும்கூடாது. ஏனென்றால் முன்னர் பேசியவர் தன் தரப்பை மீண்டும் சொல்ல வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.

5.தலைவர்கள், தொகுப்புரையாளர்கள் மேடை உரையில் சொன்னவற்றை மீண்டும் சுருக்கிச் சொல்லக்கூடாது. பெரும்பாலும் இது சம்பந்தமே அற்ற சுருக்கமாக, அபத்தமாகவே இருக்கிறது. ஓரிரு சொற்கள் சொல்லும் மரபு உண்டு. ஒருவர் சொன்னதை இன்னொருவர் திருப்பிச் சொல்வது பேச்சாளரை அவமதிப்பது.

6.மேடைப்பேச்சுக்கு பின் கேள்வி-பதில் என்பது அனுமதிக்கப்படக் கூடாது. கேள்விகள் எங்கு அனுமதிக்கப்படும் என்றால் ஒரு அரங்கு இணையான பயிற்சியும் அறிவும் கொண்டவர்கள் மட்டுமே அடங்கிய உள்வட்ட அரங்காக இருக்கையில் மட்டும்தான். அப்போதுதான் சரியான கேள்விகள் வரும். கட்டுமானப் பொறியியல் பற்றி கட்டுமானப் பொறியாளர்களின் அரங்கில் பேச்சுக்குப்பின் கேள்விபதில் அனுமதிக்கப்படலாம். பலவகையான பொதுப்பார்வையாளர்கள் உள்ள அரங்கில் கேள்விபதில் அனுமதிக்கப்பட்டால் அந்த அரங்கில் இருக்கும் மிகத்தாழ்ந்த புரிதல் கொண்டவரே கேள்வி கேட்பார். ஏனென்றால் அவருக்குத்தான் ஒன்றும் புரிந்திருக்காது. அக்கேள்வியையும் பதிலையும் மொத்த அரங்கும் சகித்துக்கொள்ளவேண்டியிருக்கும். அது உலகில் எங்குமே நிகழ்வது அல்ல

உண்மையில் நமக்கு மேடைநெறிகள் என சில இருப்பதே தெரியாது. நம் கல்விநிலையங்களில் சொல்லித்தரப்படுவதில்லை. ஆகவே உலகமெங்கும் மிக அடிப்படையாக உள்ள விதிகள் கூட இங்கே கடைப்பிடிக்கப்படுவதில்லை. எங்கும் இப்படித்தான் என நாமே நினைத்துக்கொள்கிறோம்.

என்னைப்பொறுத்தவரை ஒரு நெறியாகவே சிலவற்றைக் கடைபிடிக்கலாமென்று நினைக்கிறேன்

அ. ஏற்கனவே நேரம் கொல்லிகள் என அறியப்பட்ட எவரையும் ஊக்குவிப்பதில்லை. அவர்கள் பங்கு பெறும் எந்தக் கூட்டத்திலும். ஆகவே நான் கலந்துகொள்ள இயலாது. பங்கெடுப்பவர்களின் பெயர்கள் முன்னரே சொல்லப்படவேண்டும்.

ஆ.அழைப்பிதழில் பங்கெடுப்பவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் சொல்லப்படவேண்டும். அவர்களுக்கு அது அறிவிக்கப்படவேண்டும்

இ. அழைப்பிதழில் இல்லாதவர்கள் எதன்பொருட்டும் பேசக்கூடாது

ஈ. ஒருவர் அவருக்கு அளிக்கப்பட்ட நேரத்தைவிட ஐந்தாறு நிமிடங்களுக்கும் மேலாகப் பேசுவார் என்றால் அந்த அமைப்பாளர் உடனடியாக அவரை நிறுத்தி அடுத்தவருக்கு நேரம் அளிக்கவேண்டும். அன்றி அந்த அமைப்பாளர்கள் அதைச் செய்யவில்லை என்றால் அக்கணமே அக்கூட்டத்திலிருந்து நான் வெளியேறிவிடுவேன். எனது வாசகர்கள் உடனடியாக வெளியேறவேண்டுமென்று சொல்லிவிட்டுச் செல்வேன்.

இந்த நெறிகளை பார்வையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும். பார்வையாளர் தரப்பில் இருந்து கட்டாயம் எழுந்தாலொழிய இதெல்லாம் நடக்காது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 18, 2022 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.