நினைவுகளின் வழியே
டிசம்பர் 1943 இல் நாஜி ராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட “கலாவ்ரிட்டா படுகொலை” எனப்படும் கிரேக்கப் படுகொலை நிகழ்வினை மையமாக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் Echoes of the Past.

2021ல் வெளியான இப்படம் கற்பனையான சித்தரிப்புகளுடன் இந்த உண்மை சம்பவத்தை விவரிக்கிறது.
படத்தின் துவக்கக் காட்சியில் கலாவ்ரிட்டா படுகொலை நிகழ்விற்கான இழப்பீடு கேட்டு சட்டப்பூர்வமான நடவடிக்கையை இன்றைய கிரேக்க அரசாங்கம் துவங்குகிறது.
அன்றிருந்த ஜெர்மன் இப்போது இல்லை. இது புதிய நாடு. புதிய அரசு ஆகவே நாஜி ராணுவத்தின் கொடுமைக்காக நாம் நஷ்டஈடு தரத் தேவையில்லை என அரசிற்குச் சட்ட ஆலோசகர் ஆலோசனை தருகிறார். பிரச்சனையை வளரவிடக்கூடாது. நாளை ஒவ்வொரு நாடும் இது போன்று நஷ்டஈடு கோரி வழக்கு தொடரக் கூடும் என நினைக்கும் அரசாங்கம் உண்மை நிலையை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்கும் படி வழக்கறிஞர் கரோலினை அனுப்பி வைக்கிறது.
கரோலின் பயணத்தின் வழியே கடந்த காலத்தின் நிகழ்வுகள் விரியத் துவங்குகின்றன.

நாஜி எதிர்ப்பு போராளிகளை ஒடுக்குவதற்காக ஜெர்மன் ராணுவத்தின் 117வது பிரிவு கிரேக்கத்தின் கலாவ்ரிட்டா மலைப் பகுதியினைச் சுற்றி வளைத்துக் கொள்கிறது. வீடு வீடாகச் சோதனை நடைபெறுகிறது. இதற்கிடையில் நாஜி ராணுவத்தின் மீது கொரில்லா தாக்குதல் நடைபெறுகிறது. இதற்குக் காரணமாக இருந்த ஒட்டுமொத்த மக்களையும் கொன்று குவிக்க ராணுவம் முடிவு செய்கிறது
நகரத்தை கொள்ளையடித்து அதை எரித்த பிறகு ஊரில் வசித்த ஆண்கள் அனைவரையும் மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொன்றுவிடுகிறார்கள். பெண்கள் குழந்தைகளை ஒரு பள்ளியில் அடைத்துத் தீவைத்து எரிக்கிறார்கள். ஆஸ்திரிய ராணுவ வீரன் ஒருவனின் உதவியால் அவர்கள் தப்பிப் பிழைக்கிறார்கள்.
இந்தக் கலாவ்ரிட்டா படுகொலையில் 438 பேர் கொல்லப்பட்டார்கள். சுமார் 1,000 வீடுகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன, மேலும் 2,000 க்கும் மேற்பட்ட கால்நடைகள் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டன.

இந்த நிகழ்வுகள் நடந்த போது சிறுவனாக இருந்த நிகோலாஸ் ஆண்ட்ரூவின் பார்வையில் பிளாஷ்பேக் விவரிக்கப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிகோலஸ் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதி கேட்கப் போராடுகிறார். மருத்துவருடன் அவர் நடந்து கொள்ளும் விதம். கடந்தகால நிகழ்வுகளுக்குத் தான் ஒருவனே சாட்சியாக இருக்கிறேன் என்பதை உணர்ந்து செயல்படும் விதம் என நிகோலஸின் கதாபாத்திரம் அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரிய ராணுவ வீரன் உதவி செய்த சம்பவத்திற்கு எவ்விதமான சாட்சியங்களும் இல்லை என்று கரோலின் நினைக்கிறாள். ஆனால் அதற்கும் சாட்சியம் கிடைக்கிறது. உண்மையைத் தேடி பயணிக்கிறாள்.
கடந்த கால உண்மைகளை அறிந்து கொள்ளும் கரோலின் இந்தப் படுகொலையை மறைத்துத் தன்னால் பொய்யாக அறிக்கை சமர்ப்பிக்க முடியாது என்ற முடிவிற்கு வருகிறாள்.
உறைந்து போன கடந்தகாலம் உயிர்பெறுவதே படத்தின் மையப்புள்ளி. பற்றி எரியும் வீடுகள், புகைமூட்டமான வீதிகள். இறந்து கிடக்கும் உடல்கள். தீபற்றி அலையும் குதிரை என மறக்க முடியாத காட்சிப்படிமங்கள்.
இயக்குநர் டாம் சோலெல்ஸின் பெற்றோர் இருவரும் கலாவ்ரிட்டா மலைப்பகுதியிலுள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.ஆகவே நாஜிக் கொடுமைகளைக் கேட்டு வளர்ந்த இயக்குநர் இதைப் படமாக்குவதற்காக நிறைய ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறார்.
இந்தத் தலைமுறையினர் போரின் கொடூரத்தைப் புரிந்துகொள்ளவும் மறுக்கப்பட்ட நீதியின் குரலை ஒலிக்கவும் இந்தப் படத்தை உருவாக்கியதாகச் சொல்கிறார்

நாஜி ராணுவத்தினைப் பின்தொடரும் சிறுவன் நிகோலாஸ் அவர்கள் ஊருக்குள் வருகிறவர்களை வழிமறித்து விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்வதைக் காணுகிறான். அப்போது ஆஸ்திரிய வீரன் தான் பரிவுடன் அவனுக்கு உதவி செய்கிறான். நிகோலாஸின் வீட்டினை ராணுவம் ஆக்கிரமித்துக் கொள்கிறது. அவனது அம்மா வெறுப்பை மறைத்துக் கொண்டு எப்படி நடந்து கொள்கிறாள் என்பதை நிகோலாஸ் கவனிக்கிறான். ஒரு நகரம் எப்படி ஆக்ரமிக்கபடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலையை இழந்து முடிவில் மரணத்தின் விளம்பிற்குத் தள்ளப்படுகிறது என்பதை மிகச் சிறப்பாகச் சித்தரித்துள்ளார்கள்
நாஜி ராணுவத்தினர் அவர்கள் வீட்டினை ஆக்கிரமித்துக் கொள்ளும் காட்சியில் சிறுவனுக்கு ஒரு சாக்லேட் பரிசாகத் தருகிறார்கள். அதைச் சாப்பிடுவதா, அல்லது தூக்கி எறிந்துவிடுவதா என்று நிகோலஸ் குழம்புகிறான். குற்ற நிகழ்வு ஒன்றை மறைத்துவிட்டு எதுவும் நடக்காதவன் போல அவன் அந்தச் சாக்லேட்டை பையிலிருந்து எடுத்துச் சாப்பிடும் காட்சி அழகானது. அவன் சூழ்நிலையைப் புரிந்து கொண்டிருக்கிறான் என்பதன் அடையாளமது.
ஊரைக் காலி செய்து வெளியேற்றும் ராணுவத்திடமிருந்து எப்படித் தப்பிப் போவது என நிகோலாஸின் அப்பா அம்மாவிற்குத் தெரியவில்லை. முக்கியமான பொருட்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாகச் செல்கிறார்கள். தனது நகையை மறந்து வைத்துவிட்டதை அம்மா சொன்னவுடன் நிகோலஸ் வீட்டிற்கு ஓடுகிறான். அங்கே அவன் காணும் காட்சி அதிர்ச்சிகரமானது.
போர் என்பது ஆயிரமாயிரம் துயர நினைவுகளை உள்ளடக்கியது. 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டபோதும் அந்தத் துயரத்திலிருந்து விடுபட முடியவில்லை என்று தான் நிகோலாஸ் ஜெர்மன் அரசிற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுகிறார்.

கலாவ்ரிட்டா படுகொலையில் இறந்து போனவர்களின் புகைப்படங்களைக் காணும் கரோலின் கண்ணீர் விடுகிறாள். என்றோ நடந்து முடிந்துவிட்ட சம்பவம் என்று ஆரம்பக் காட்சியில் அவள் கேலி பேசுகிறாள். ஆனால் மறுக்கப்பட்ட நீதி என்றும் மறைவதில்லை என்பதை அவள் முடிவில் உணர்ந்து கொள்கிறாள்.
இதே கதைக்கருவில் இதே போன்ற காட்சிகளின் மூலம் நாஜிக் கொடுமைகள் பற்றி விவரிக்கும் படங்கள் முன்னதாக வெளியாகியுள்ளன. ஆனாலும் ஒவ்வொரு படமும் எழுப்பும் கேள்விகள் முக்கியமாகவே இருக்கின்றன. உண்மையை எத்தனை நாளைக்கு மறைத்துவைக்க முடியும் .
மலையுச்சிக்கு அழைத்துச் செல்லப்படுகிறவர்கள் தாங்கள் அநியாயமாகக் கொல்லப்படப்போகிறோம் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் கண்களில் நிர்கதி வெளிப்படுகிறது. ஒரேயொரு கிழவர் மட்டும் தன்னை விட்டுவிடும்படி மன்றாடுகிறார். ஆனால் துப்பாக்கிக் குண்டு அவர் மீதும் பாய்கிறது. அங்கிருந்த அத்தனை பேரும் கொல்லப்படுகிறார்கள். இறந்தவர்களை தேடி பெண்கள் பதற்றமாகச் செல்லும் காட்சி துயரத்தின் உச்சம்.
படத்தின் இறுதிக்காட்சியில் அங்கே அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தைக் காட்டுகிறார்கள். இன்று அந்த மலைப்பகுதி அமைதியாக உள்ளது. என்றோ நடந்த வரலாற்று நிகழ்வின் மௌனசாட்சியமாக இந்த நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன.
நடந்து முடிந்த போர்க்குற்றங்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்று படம் எழுப்பும் கேள்வி முக்கியமானது. உலகெங்கும் இன்று நீதியின் குரலை ஒலிக்கும் படங்கள் தொடர்ந்து உருவாக்கபடுகின்றன. வரலாறு கேள்வி கேட்கப்படுகிறது. இன்றைய தேவையும் அதுவே
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

