முதற்கனலில் இருந்து…

அன்புள்ள ஜெ,

நலம். நலம் அறிய‌ஆவல்!

முதற்கனல் முதல் முதலாவிண் வர வாசித்து விட்டேன்.

அள்ள அள்ள குறையாமல் வந்து கொண்டிருக்கும் நாவல்நிரை. அதுவும் இலவசமாக இணையத்தில். நான் நூலாய் வாங்கி படித்ததிருந்தால் அதன் விலை காரணமாகாகவே அனைத்தையும் வாசித்து முடிப்பது என்பது சந்தேகம் தான், அப்படியே ஆனாலும் ஒன்றரை வருடத்தில் எல்லாம் வாங்கி வாசித்திருக்க முடியாது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒரு புத்தகம் கமல் பரிந்துரைத்து வந்தார். அவ்வாறு கமல் கூறி தான் தங்களையும் வெண்முரசையும் கண்டடைந்தேன். திரௌபதி துகிலுரியப்படும் காட்சியை நீங்கள் கையாண்ட விதத்தை எடுத்துக் கூறியிருந்தார், இலவசமாக இணையத்தில் படிக்கலாம் என்பதையும் கூறியிருந்தார். இன்று அவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

என்றோ முடியும் என தெரிந்தும், முதலாவிண் வாசிக்கும் பொழுது இன்னும் இன்னும் என்றே மனம் ஏங்கியது, முதலாவிண் -இல் வரும் அக்கிளி இன்னும் முழுமை பெறவில்லை என்று ஒவ்வொரு முறைகூறும் பொழுதும் மகிழ்ந்தேன். “அந்த முகில் இந்த முகில்” மற்றும் “கதாநாயகி” இரண்டையும் இரவு பன்னிரண்டு மணிக்கே தொடர்ந்து வாசித்தேன், அப்பொழுது ஒன்று தோன்றியது  வெண்முரசையும் அவ்வாறு வாசித்தவர்கள் பாக்கியவான்கள்.

அப்படி வாசிக்க முடியாவிட்டாலும்‌ என் இளமையிலேயே வாசித்தளவில் எனக்கு மகிழ்ச்சி.மனம் சோர்வாக இருக்கும் பொழுது வெண்முரசில் முங்கி எழும் பொழுது அச்சோர்வு மறந்து மறைந்திருக்கும். அதை எப்பொழுதும் தொடும் தொலைவிலே வைத்ததற்கு என் நன்றியும் வணக்கங்களும்.பாரதத்தை மேலும் விரித்து எவரேனும் இனி தமிழில் எழுதுவது என்பது சந்தேகம் தான்.

என் தமிழ் சொற்வளம் வலுப்பெற்று வருவதற்கும் வெண்முரசே காரணம். தங்களுக்கும் தங்கள் வெண்முரசிற்கும்‌ நான் நன்றி கூற இன்னும் பல காரணங்கள்‌ இருக்கலாம்.இந்நொடியில் சித்தத்தை எட்டியனவையை குறிப்பிட்டுள்ளேன். வெண்முரசை அருளியதற்கும் அதை இவ்வாறு வாசிக்க அருளியதற்கும் என் கோடி வணக்கங்களும் நன்றிகளும்.

அன்புடன்,

செ.  சரவணப்பெருமாள்

முதற்கனல் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

அன்பு ஜெ

வெண்முரசின் முதற்கனலை இன்று முடித்தேன். அதில் வாழ்ந்தேன். மகாபாரதக்கதைகளை இளமையிலேயே கேட்டிருக்கிறேன். வெண்முரசு என்ன தந்தது? ஒன்று, அக்கதைகளை நான் உண்மையான வாழ்க்கை போல கண்ணெதிரே காணவைத்தது. அந்த நிலத்தையும், மக்களையும், உணர்ச்சிகளையும் கண்டேன். நானே வாழ்ந்தேன். மகாபாரதத்தில் வாழ்வதற்காகவே வெண்முரசை எவரானாலும் படித்தாகவேண்டும்.

அத்துடன் மகாபாரதக் கதைகள் நடுவே ஒருமை இல்லை. அவை வெவ்வேறு கதைகளாகவே என் மனதில் இருந்தன. அக்கதைகள் அனைத்தையும் மிகச்சரியாக ஒன்றோடொன்று பொருத்தி ஒரே கதையாக ஆக்கியிருந்தீர்கள். மகத்தான அனுபவமாக இருந்தது அது.

வெண்முரசு மகாபாரதத்தின் சாராம்சமான பெரும் உணர்வுநிலைகளை எடுத்து முன்வைக்கிறது. பீஷ்மர் சிகண்டியைச் சந்தித்து வரம்கொடுக்கும் காட்சி. ஈடிணையற்ற ஒன்று அது. ஒரு மாபெரும் காவியத்தின் உச்சம்போலிருந்தது

நன்றி

செந்தில்வேல்

சென்னை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2021 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.