ஸ்ரீராகமோ- சினிமாவில் இருந்து மேடைக்கு

நிர்வாணமான இசை

அகம்

செண்பகம் பூத்த வானம்

சில பாடல்கள் வளர்வது வியப்பூட்டுவது. கடந்தகால ஏக்கம் துள்ளும் பாடல்களுக்கு கேரளத்தில் என்றும் முதன்மை இடம் உண்டு. ஏனென்றால் மலையாளிகளில் பெரும்பாலானவர்கள் கேரளத்துக்கு வெளியே வாழ விதிக்கப்பட்டவர்கள். கேரளமே அவர்களுக்கு ஓர் ‘இழந்த சொர்க்கம்’ தான். அவற்றில் ஒன்று இப்பாடல்.

1994 ல் வெளிவந்த பவித்ரம் என்னும் சினிமாவுக்காக ஓ.என்.வி. குறுப்பு எழுத, சரத் இசைமைத்த பாடல் இது. சரத் வாசுதேவன் என்னும் சரத் அன்று 25 வயதான இளைஞர். பாலமுரளிகிருஷ்ணாவின் மாணவர். தன் பதினாறு வயதிலேயே பின்னணிப் பாடகராக அறிமுகமானார். தன் இருபத்தொரு வயதில் இசையமைப்பாளர் ஆனார். அவர் இசைமைத்த இடண்டாவது படம் இது.

சரத்

சரத் பின்னர் பல படங்களுக்கு இசையமைத்தார். இசைக்கான விருதுகளையும் பெற்றார். இன்று இசைநிகழ்வுகளின் நடுவராக அறியப்படுகிறார். அவருடைய பிற்காலப் பாடல்கள் பெரும்புகழ் பெறவில்லை. தமிழில் அவர் தாரை தப்பட்டை படத்துக்காக இளையராஜா இசையமைப்பில் பாடிய இடறினும்’ பரவலாக அறியப்பட்ட பாடல்

பவித்ரம் மரபிசைப் பாடல்கள் நிறைந்தது. இப்படத்தில் இப்பாடல் இன்று கேரளத்தின் ஒரு ‘கல்ட் கிளாஸிக்’ பெரும்பாலான இசைநிகழ்வுகளில், குடியரங்குகளில் இது ஒலிக்கிறது.

சினிமாவில் யேசுதாஸ் பாடியது. சுமாராகவே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இசைமெட்டில் இருந்த நேர்த்தி மொத்த இசையொழுங்கில் இல்லை என்றே சொல்லவேண்டும். ஆனால் அதை பின்னணி இசை இல்லாமல் வெறுமே வாயால் பாடும்போது ஆழ்ந்த உணர்வுத்தளம் உருவாகிறது. அதைக் கண்டடைந்து பரப்பியவர் அகம் இசைக்குழுவின் ஹரீஷ் சிவராமகிருஷ்ணன் .

வெவ்வேறு அரங்குகளில் வெவ்வேறு வகையில் இப்பாடலை விரித்தெடுத்து ஓர் உச்சத்தையே அடைந்திருக்கிறார்கள் அகம் குழுவினர். மூலவடிவை விட நூறு மடங்கு பிரபலமானது ஹரீஷ் பாடிய வடிவம். பல மேடைகளில் பலவகையான விரிவாக்கங்கள், பலவகையான பாடுமுறைகளில் பாடியிருக்கிறார்.

இவ்வாறு நிகழ்வது இந்திய சினிமாவிலேயே அரிதானது.  ஏற்கனவே  ‘செம்பகத் தைகள் பூத்த மானத்து’ போன்ற பாடல்கள் சினிமாப்பாடல்களாக இருந்து உம்பயி போன்ற கஸல் பாடகர்களால் மேடைகளில் கஸல் வடிவில் புகழ்பெறச் செய்யப்பட்டன. ஆனால் இப்பாடல் அந்த பாணியில் ஒருவகை உச்சம்.

ஸ்ரீராகமோ ஹரீஷ் மேடைநிகழ்வு-1

ஸ்ரீராகமோ தேடுந்நு நீ

ஈ வீணதன் பொன் தந்தியில்

ஸ்னேகார்த்ரமாம் ஏதோ பதம்

தேடுந்நு  நாம் ஈ நம்மளில்

நின் மௌனமோ பூமானமாய்

நின் ராகமோ பூபாளமாய்

என் முன்னில் நீ புலர் கன்யயாய்

 

பிலாவிலப் பொன் தளிகையில்

பால்பாயசச் சோறுண்ணுவான்

பின்னெயும் பூம்பைதலாய்

கொதி துள்ளி நில்குவதெந்தினோ

செங்கதளிக் கூம்பில்

செறு தும்பியாய் தேனுண்ணுவான்

காற்றினோடு கெஞ்சி

ஒரு நாட்டு மாங்கனி வீழ்த்துவான்

இனியுமீ தொடிகளில் களியாடான் மோகம்.

 

கோயிலில் புலர்வேளையில்

ஜயதேவ கீதாலாபனம்

கேவலானந்தாம்ருத

திரயாழியில் நீராடி நாம்

புத்திலஞ்ஞிச் சோட்டில்

மலர்முத்து கோர்க்கான் போகாம்

ஆனகேறா மேட்டில் இனி

ஆயிரத்திரி கொளுத்தாம்

இனியுமீ நடகளில்

இளவேல்கான் மோகம்

ஸ்ரீராகமோ- ஹரீஷ் மேடைநிகழ்வு-2

ஸ்ரீராகத்தையா தேடுகிறாய் நீ

இந்த வீணையின் பொன் தந்தியில்?

அன்பில் நனைந்த ஏதோ பாடலை

தேடுகிறோம் நாம் நம்மிடையே

உன் மௌனம் பூத்தவானமாகியது

உன் காதல் பூபாளமாகியது

என் முன் நீ புலரிமகளானாய்!

 

பலா இலைப் பொன் கிண்ணத்தில்

பால்பாயசச் சோறு அருந்த

மீண்டும் கைக்குழந்தையென

ஆசைகொண்டு ஏன் நிற்கிறேன்?

செங்கதலி வாழைப்பூவில்

சிறு தும்பியென தேன்குடிக்க

காற்றிடம் மன்றாடி

ஒரு நாட்டு மாம்பழம் வீழ்த்த

இனியும் இந்த தோட்டத்தில்

விளையாடி அலைய மோகம்கொண்டேன்

 

கோயிலில் விடிகாலையில்

ஜயதேவ கீதத்தின் ஆலாபனை

தூய ஆனந்தத்தின் அமிர்த

அலையாழியில் நீராடினோம் நாம்

பூத்த இலஞ்சி மரத்தடியில்

மலர்முத்து கோக்கச் செல்வோம்

யானை ஏறா மேட்டில் இனி

ஆயிரம் தீபங்கள் கொளுத்துவோம்

இனியும் இந்த வாசல்களில்

இளைப்பாறவே விழைகிறேன்

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 29, 2021 10:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.