மலைப்படிகள்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]

விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்

அரியவையும் வினோதமானவையுமான அனுபவங்களில்தான் மானுடத்தின் உச்சதருணங்கள் திரள்கின்றன. ஒரு மானுட வாழ்க்கையில் மிக அரிதாகவே அத்தகைய புள்ளிகள் வாய்க்கின்றன. அவையே இலக்கியத்தின் பேசுபொருட்கள். இலக்கியத்தைத் திரும்பிப் பார்க்கையில் செவ்வியல் புனைகதைகளினூடாக நாம் சென்று தொட்டு அறியும் பெருந்தருணங்கள் ஏராளமானவை.

ஆனால் அன்றாடத்தில், இயல்பாக ஒழுகிச்செல்லும் வாழ்க்கைத் தருணங்களில் வெளிப்படும் மானுடசாரம் என்ன என்னும் வினாவை எதிர்கொள்ளவே சிறுகதை என்னும் வடிவம் உருவானதோ என்று தோன்றுவதுண்டு. ஏனென்றால் வேறெந்த இலக்கிய வகைமையை விடவும் வாழ்க்கையின் துளிகளைச் சொல்ல வல்லது சிறுகதை. நிகழ்ந்தது அறியாமல் கடந்துசெல்லும் கணங்களை உறையச்செய்து வாழ்வெனக் காட்டும் ஆற்றல் கொண்டது.

மகத்தான தருணங்கள் எழுதப்பட்ட செவ்வியல்சிறுகதைகள் உலக இலக்கியத்தில் ஏராளமாக உள்ளன. ஆனால்  அவற்றுக்கிணையான ஆழத்துடன் அன்றாடத்தருணங்களைச் சொன்ன சிறுகதைகளும் நின்றிருக்கின்றன. செக்காவ் முதல் ஜான் ஓ ஹாரா வரை, புதுமைப்பித்தன் முதல் அசோகமித்திரன் வரை அத்தகைய சிறுகதைகள் எழுதிய முன்னோடிகள் பலர். உலக இலக்கியத்தின் அத்தகைய அன்றாடவாழ்க்கைக் கணங்களை மட்டுமே தொகுத்தால் பல்லாயிரம் புள்ளிகளைக் கொண்டு மானுட வாழ்க்கையின் ஒட்டுமொத்தத்தையே சொல்லிவிடமுடியும்.

செந்தில் ஜெகன்னாதனின் சிறுகதைகள் இரண்டு களங்களின் அன்றாடத் தருணங்களால் ஆனவை. கீழத்தஞ்சையின் வேளாண்குடும்பம் அதன் பின்னணியாகிய சிற்றூரும். திரையுலகம். வேளாண்மை தொடர்ந்து உழவர்களைக் கைவிடுகிறது. பூச்சிமருந்து நோயளிக்கிறது. அதன் விளைவாக குடும்பங்களில் வன்முறை எழுகிறது. அந்த வன்முறையின் ஒரு தருணத்தில் பிரியத்தைக் கண்டுகொள்கின்றனர் மனிதர்கள்.

இன்னொரு பக்கம் சினிமா. அது ஒரு செயற்கையான சிற்றுலகம். புறவுலகை அது நடித்துப் பார்க்கிறது. அந்நடிப்பினூடாக வாழ்க்கையின் ஒரு தருணம் உணர்ச்சிகரமாக அல்லது பகடியாக வெளிப்படுகிறது. வாழ்க்கை சினிமா என்னும் ஆடியின் வழியாக இடம்வலம் திரும்பி வெளிப்படுகிறது.

இந்த இரண்டு உலகங்களிலும் மாறிமாறி அலையும் செந்தில் ஜெகன்னாதனின் கலை வெறுமே வாழ்க்கைச் சித்திரம் என்பதிலிருந்து அரிய கவித்துவம் வழியாக மேலெழும் தருணங்களே அவரை கலைஞராக்குகின்றன. காமிரா முன் செத்தவனாக நடித்தவனை மீண்டும் எழுந்து காமிரா நோக்கிச் சிரிக்கவைக்கிறார்கள்.வாழ்க்கையை நடிக்கும் சினிமா அதை விரும்பியபடி மாற்றிக்கொள்ளமுடியும். சாவையும்தான்.சினிமாவுக்குச் சென்ற காதலனை அதன்பொருட்டே பிரிந்தவள் அவன் முன் தன் குழந்தையை கொண்டு விட்டு நடிக்க வாய்ப்பு தேடுகிறாள். மகளாக மறுவடிவு எடுத்துவந்து அவன் முன் நிற்பவள் அவளே.

மூர்க்கமாக சாவின்மேல் முட்டிக்கொண்டே இருக்கும் தந்தையின் உள்ளிருந்து தவிப்பது எது என மகன் அறியும் தருணம் ஆயினும், நோய் என வந்து உடலை ஆட்கொண்டு பிச்சியென தாயை ஆட்டிவைப்பது வாழ்வென்று சூழ்ந்த பயிரே என்று அறிவதிலும் சரி வாழ்க்கையின் அடிப்படைத் தரிசனம் நோக்கிச் செல்லும் ஒரு பயணம் உள்ளது. அதுதான் செந்தில் ஜெகன்னாதனை இத்தலைமுறையின் முக்கியமான சிறுகதையாசிரியர்களில் ஒருவராக ஆக்குகிறது.

அன்றாடத்தருணங்களைச் சொல்ல சிடுக்கற்ற ஒழுக்குகொண்ட மொழி தேவை. தன்னிச்சையான சொற்றொடர் இணைப்புகள் வழியாக அந்த மொழி நிகழவேண்டும் என்றால் இயல்பான மனநிலையும் அதை வெளிப்படுத்தும் மொழிப்பயிற்சியும் இன்றியமையாதவை. அவை செந்தில் ஜெகன்னாதனின் கதைகளில் எப்போதுமுள்ளன. சொற்சுழற்சிகளோ செயற்கையான யத்தனங்களோ இல்லாமல் ’கிளாரினெட்டின் துளைகள் மீது தானியம் கொத்தும் சிட்டுக்குருவிகள் போல அசைந்த விரல்கள்’ என்று சொல்லிச் செல்லும் நடை அவருக்கு எப்போதும் கைகொடுக்கிறது. சிறுகதையின் கலை அவர் கதைகளில் துலங்க இந்த மொழி எப்போதும் உதவுகிறது.

சிறுகதை ஆசிரியன் ஒவ்வொரு சிறுகதையையும் ஒரு பெரிய மலைச்சரிவில் சிறு பாறைவிரிசல்களில் ஆணிகள் என அறைந்து இறுக்கி அவற்றின் மேல் கால்வைத்து மேலேறிக்கொண்டிருக்கிறான். மேலும் உயரத்தில் நின்று பார்க்க செந்தில் ஜெகன்னாதனுக்கு வாய்க்கட்டும்

ஜெயமோகன்

 

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை

விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்

விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா

விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 20, 2021 10:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.