ஆசியஜோதியின் வரலாறு – முன்னுரை

ஜெய்ராம் ரமேஷின் லைட் ஆஃப் ஏசியா வாங்க

ஜெய்ராம் ரமேஷ் எழுதிய The Light of Asia: The Poem that Defined The Buddha என்னும் ஆய்வுநூல் சர் எட்வின் ஆர்னால்ட் எழுதிய புகழ்பெற்ற காவியநூலின் பிறப்பு, செல்வாக்கு பற்றிய ஆய்வு. ஒரு நூலின் வாழ்க்கை வரலாறு எனலாம். அந்நூல் தமிழிலும் கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையால் ஆசியஜோதி என்ற பேரில் தழுவி எழுதப்பட்டுள்ளது. அந்நூலின் முன்னுரை இது

முதற்சொல்

இது  கவிதை வடிவில் எழுதப்பட்டு ஜூலை 1879ல் லண்டனில் முதலில் வெளியான ஒரு காவியநூலின் வரலாறு. இது வெளியான உடனேயே இங்கிலாந்தில் முக்கிய கவனத்தைப் பெற்றது. பின்னர் அமெரிக்காவிலும்  ஐரோப்பாவிலும் மிகவும் புகழடைந்தது. அது ஏற்படுத்திய பரவசம் உலகின் பிற பகுதிகளையும் தொற்றிப் பரவி பல்லாண்டுகள் அதன் தாக்கம் நீடித்தது. இப்புத்தகம் இந்தியாவின் தலைசிறந்த ஆளுமைகளில் ஒருவரான ஆன்மீகத் துறவி ஒருவரையும் ஈர்த்தது – சுவாமி விவேகானந்தர். ஏறக்குறைய அதே நேரத்தில் அநகாரிக தர்மபாலா என்று வரலாற்றில் பின்னர் புகழ் பெற்ற கொழும்பில் இருந்த ஒரு இளைஞனையும் அது ஆழமாக உலுக்கியது.  இது 1889 இல் லண்டனில் ஆர்வமும் உத்வேகமும் நிறைந்த இந்திய வழக்கறிஞர் ஒருவரின் கவனத்தையும் ஈர்த்தது.அவரே பின்னர் மகாத்மா காந்தி என்று காலத்தால் அழியாப்புகழ் கொண்டார்.

சில ஆண்டுகளில் இது அலகாபாத்தில் இருந்த ஒரு இளைஞனை பாதித்தது, அவர் 1947 இல் இந்தியாவின் முதல் பிரதமராக ஆனார் – ஜவஹர்லால் நேரு.இப்புத்தகத்தின் இரண்டு பிரதிகள் இந்திய அரசியலமைப்பின் முதன்மை சிற்பி பி.ஆர். அம்பேத்கரின் புத்தக அலமாரிகளை அலங்கரித்தன. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தென்னிந்தியாவில் சமூக நீதிக்கான இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மனிதர்களின் பணியை இது வெளிப்படுத்தியது.

உலகம் முழுவதிலுமிருந்து குறைந்தது பதினொரு இலக்கிய ஆளுமைகள் மீது இந்த புத்தகம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களில் ஐந்து பேர் நோபல் பரிசு பெற்றவர்கள்:1907 இல் ருட்யார்ட் கிப்ளிங், 1913 இல் ரவீந்திரநாத் தாகூர்,  1923 இல் டபிள்யூ.பி.யீட்ஸ், 1933 இல் இவான் புனின் மற்றும் 1948 இல் டி.எஸ். எலியட். மற்ற அறுவரும் பெரும்புகழ் பெற்ற ஆளுமைகள்: ஹெர்மன் மெல்வில், லியோ டால்ஸ்டாய், லாஃப்காடியோ ஹெர்ன், டி.எச். லாரன்ஸ், ஜான் மாஸ்ஃபீல்ட் மற்றும் ஜோஸ் லூயிஸ் போர்ஜஸ். இது ஜோசப் காம்ப்பெல்லுக்கு புதிய எல்லைகளைத் திறந்து வைத்து, பின்னாளில் தொன்மங்களின் ஒப்பீட்டு ஆய்வுகளில் முன்னோடி ஆக்கியது.

அறிவியல் மற்றும் தொழிற்துறையிலும் இதன் தாக்கம் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இது மெட்ராஸில் ஒரு இளம் அறிவியல் மாணவரின் வாழ்க்கையை வடிவமைத்தது – 1930 இல், இயற்பியலுக்கான இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற சி.வி. ராமன். ரஷ்ய வேதியியலாளரும் கால அட்டவணையின் கண்டுபிடிப்பாளருமான டிமிட்ரி மெண்டலீவ் மற்றும் ஸ்காட்டிஷ்-அமெரிக்க தொழிலதிபர்-பரோபகாரர் ஆண்ட்ரூ கார்னெகி ஆகியோர் அதில் ஒரு சிறப்புப் பிணைப்பைக் கொண்டிருந்தனர். ரஷ்ய வேதியியலாளரும் தனிம அட்டவணையை உருவாக்கியவருமான டிமிட்ரி மெண்டலீவ் மற்றும் ஸ்காட்டிஷ்-அமெரிக்க தொழிலதிபரும் மனிதநேயருமான ஆண்ட்ரூ கார்னெகி ஆகியோர் இப்புத்தகத்தோடு ஒரு  பிணைப்பைக் கொண்டிருந்தனர். பிரிட்டிஷ் இராணுவத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய நபராகவும் ஆனால் அவரது காலகட்டத்தில் ஒரு நாயகனாகவும் விளங்கிய – ஹெர்பர்ட் கிச்சனர் – அவர் எங்கு சென்றாலும் இந்த புத்தகத்தை அவருடன் எடுத்துச் செல்வார். பின்னர் நோபல் பரிசுகளை உருவாக்கி வழங்கிய ஸ்வீடிஷ் தொழிலதிபர் ஆல்ஃபிரட் நோபலின் தனிநூலகத்தில் இது இடம்பெற்றுள்ளது.

1925 ஆம் ஆண்டில், ஜெர்மன்-இந்திய அணியால் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் மௌனப்படங்களில் ஒன்றிற்கு இது அடிப்படையாக இருந்தது. இப்படம் சர்வதேச அளவில் வெளியாகி ஓரளவு வரவேற்பைப் பெற்றது. பின்னர் 1945 இல், இது ஒரு ஹாலிவுட் கிளாசிக் திரைப்படமான “The Picture of Dorian Gray”யில் இடப்பெற்றது. 1957 ஆம் ஆண்டில், மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த பிரிட்டிஷ்-அமெரிக்க துப்பறியும் கதையாசிரியர் ரேமண்ட் சாண்ட்லருக்கு இந்த புத்தகத்தைப் படித்து ஆறுதல் அடையுமாறு அவரது நீண்டகால செயலாளர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

இப்புத்தகம் பதின்மூன்று ஐரோப்பிய மொழிகளிலும், எட்டு வடக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய மொழிகளிலும் மற்றும் பதினான்கு தெற்காசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.  பல்வேறு நாடுகளில் பல நாடகங்கள், நாட்டிய நாடகங்கள் மற்றும் ஓபராக்கள் இதிலிருந்து தழுவி எழுதப்பட்டன. கடந்த ஐம்பது ஆண்டுகளில், இது கல்வித் துறையினரின் ஆர்வத்தைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. மற்றும் ஐக்கிய நாடுகள், கனடா, அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் அறிவார்ந்த வெளியீடுகளின் கருப்பொருளாக இது இருக்கிறது. இவற்றில் மிகச் சமீபத்திய ஆய்வுக்கட்டுரை ஜேம்ஸ் ஜாய்ஸ் படைப்புகளில் இப்புத்தகத்தின் செல்வாக்கைக் குறித்து பிப்ரவரி 2020 இல் வெளிவந்தது.

சர் எட்வின் அர்னால்ட் எழுதிய புத்தரின் வாழ்க்கை மற்றும் அவரது செய்தியை விளக்கும் “ஆசியாவின் ஒளி”(தி லைட் ஆஃப் ஏசியா) என்ற புத்தகம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் புத்தரின் மறு கண்டுபிடிப்பு நிகழ்ந்ததில் இப்புத்தகம் ஒரு மைல்கல். நவீன பௌத்தத்தின் வரலாற்று ஆய்வெழுத்தில் இது ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

இப்புத்தகம் எப்படி, எதற்காக எழுதப்பட்டது, அக்காரணிகளால் அதன் செல்வாக்கு நாட்டிற்கு நாடு வளர்ந்தது, குறிப்பாக இரண்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புத்தரைத் தோற்றுவித்த இத்துணைக் கண்டத்தில் அது எவ்விதம் வளர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள நான் முற்பட்டேன்.

நான் முதன்முதலில் ‘தி லைட் ஆஃப் ஏசியா’வை எனது பதின்ம வயதுகளில் மத்தியில் படித்தேன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அது என்னுடன் தொடர்ந்து உடன் வருகிறது. இரண்டு சமீபத்திய நிகழ்வுகள் இந்தக் கவிதையையும்  அதன் ஆசிரியர் பற்றிய எனது நினைவுகளையும் மீண்டும் எழுப்பின.

முதலாவது, ஜவஹர்லால் நேருவின் கடிதங்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது, ​​1955 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது:

“‘ஆசியாவின் ஒளி’ என்ற சொற்றொடரை நீங்கள் நினைவுறுவீர்கள் என்று நம்புகிறேன். கம்யூனிஸ்ட் பயிற்சிக் கட்டளைக் கையேடுகள் போலல்லாமல் தனி மனிதனின் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் இலட்சியமாகக் கொண்டு ஆசியா முழுவதுக்குமான வழியைக் காட்டுவதில்,  குறைந்தபட்சம் சிந்தனைத் துறையில்   இந்தியாவை வழிநடத்துவதில் வேறு எந்த மனிதனாலும் செய்ய முடியாததை உங்களால் செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.”

இவ்வரிகளை சர்ச்சில் பிரிட்டிஷாரால் 1921-இல் இருந்து 1945 வரை ஒன்பது முறை ஏறக்குறைய பாத்து வருட காலம் சிறையில் அடைக்கப்பட்ட ஒருவரைப் பார்த்து எழுதி இருக்கிறார். நேரு நீண்ட காலம் தொடர்ச்சியாக சிறையில் இருந்த காலம் 1942 ஆகஸ்டு முதல் 1945 ஜூன் வரை சர்ச்சில் பிரதமராக இருந்த பொழுதுதான். அதுவே இந்தக் கடிதத்தை மிகவும் கவனிக்கத்தக்கதாக ஆக்குகிறது. இது மட்டும் அல்ல. நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஜூன் 30, 1955இல் , சர்ச்சில் மீண்டும் நேருவுக்கு எழுதியிருக்கிறார்:

“ஏப்ரல் 8 ஆம் தேதியன்று நீங்கள் எழுதிய கடிதத்திற்கு பதிலளிப்பதில் தாமதமானதை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் மற்றும் இங்கு நடந்த பொதுத் தேர்தல் ஆகியவை கடிதம் எழுதுவதில் தாமதத்தை ஏற்படுத்திவிட்டன.

நீங்கள் சொன்னது என் மனதை மிகவும் தொட்டது.  நான் பதவியில் இருந்த கடைசி சில ஆண்டுகளின் மிக இனிமையான நினைவுகளில் ஒன்று நமது தொடர்பு. எங்கள் மாநாடுகளில் [காமன்வெல்த் தலைவர்களின் மாநாடுகள்] உங்கள் பங்களிப்பு முதன்மையானதாகவும் ஆக்கபூர்வமான ஒன்றாகவும் இருந்தது.

கடந்த காலத்தில் நம்மிடையே பிரிவை ஏற்படுத்திய பேதங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களில் கூட கசப்பில்லாத அமைதிக்கான உங்கள் தீவிர விருப்பத்தை நான் எப்போதும் பாராட்டுகிறேன். நீங்கள் ஏற்றிருப்பது உண்மையிலேயே ஒரு பெரும் சுமை மற்றும் பொறுப்பு. உங்கள் தேசத்தின் பல கோடி மக்களின் தலைவிதியை வடிவமைத்து, உலக விவகாரங்களில் உன்னதமான பங்கை வகிக்கும் பொறுப்பு. உங்கள் பணி சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள். ‘ஆசியாவின் ஒளி!’யை நினைவில் கொள்ளுங்கள்.”

புத்தக விரும்பிகளான இரண்டு பிரதம மந்திரிகளுக்கு இடையேதான் தங்கள் வாழ்வின் கடைசி பத்தாண்டுகளில் தங்கள் இளமைக் காலத்தில் படித்த புத்தகத்தை நினைவுகூர்ந்து அதைக் குறித்து இவ்விதம் கடிதம் எழுதிக்கொள்ள முடியும். உண்மையில், நேரு லக்னோ சிறையில் ஆங்கிலேயர்களால் இரண்டாவது முறை சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ​​அவர் தனது தந்தைக்கு 13 ஜூலை 1922 அன்று இவ்விதம் கடிதம் எழுதியிருக்கிறார்.

“உங்கள் அன்பான கடிதம் எனக்கு கிடைத்தது. . . எனது உடல்நிலை பற்றி நீங்கள் சிறிதும் கவலைப்பட வேண்டாம். நான் அதை கவனமாக பார்த்து வருகிறேன். . . நீங்கள் அனுப்பிய புத்தகங்கள் கிடைத்தன. இப்போது பின்வருபவை கிடைத்தன:

 

பாபரின் நினைவுகள்சர்க்காரின் சிவாஜிபெர்னியரின் பயணங்கள்வின்சென்ட் ஸ்மித்தின் அக்பர்மனுச்சியின் ஸ்டோரியா டூ மோகோர் (முகலாயர்களின் வரலாறு)பிரைஸின் புனித ரோமானியப் பேரரசுகீட்ஸின் கவிதைகள்ஷெல்லியின் கவிதைகள்டென்னிசனின் ஐடில்ஸ் ஆஃப் தி கிங்அர்னால்டின் லைட் ஆஃப் ஏசியாஹாவெல்ஸின் இந்தியாவில் ஆரியர்களின் ஆட்சி (இது தனியாக வந்தது)பேட்டரின் மறுமலர்ச்சி (நேற்று வந்தது)

 

ஆனந்த் பவனில் [அலகாபாத்தில் உள்ள நேரு குடும்பத்தின் இல்லம்] இருக்கும் மேலும் பல புத்தகங்களை நான் கேட்டிருந்தேன். . .”

அவரது மகள் சுவிட்சர்லாந்தில் உள்ள லேசினில் ப்ளூரிசியில்(நுரையீரல் அழற்சி) இருந்து குணமடைந்து கொண்டிருந்தபோது, ​​நேரு 22 பிப்ரவரி 1940 அன்று ‘அர்னால்டின் இரண்டு சிறிய புத்தகங்களை அனுப்பி வைத்தார்: ‘தி லைட் ஆஃப் ஏசியா’ மற்றும் ‘தி சாங் செலஸ்டியல்’.

இரண்டாவதாக, ராமாயண இதிகாசத்தின் நாயகனான ராமர் பிறந்த இடம் குறித்த சர்ச்சையால் சமகால இந்திய அரசியலில் பெரும் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. நான்கரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக, அயோத்தி நகரத்தில் அவர் பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்தில் ஒரு மசூதி இருந்தது. அந்த மசூதி 1992 டிசம்பர் 6 அன்று வன்முறைக் கும்பலால் இடிக்கப்பட்டது. நீண்ட கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நவம்பர் 2019 இல் இந்து அமைப்புகள் அந்த இடத்தைக் கைப்பற்றின. இப்போது அங்கு ஒரு கோயில் கட்டப்பட்டு வருகிறது.

இதே போல 1886 மற்றும் 1953 க்கு இடையில், கௌதம சித்தார்த்தர் ஞானம் பெற்று புத்தராக மாறிய போத்கயாவில் உள்ள ஒரு கோவிலின் உரிமை தொடர்பாக சிறிய ஒரு சர்ச்சை ஏற்பட்டது. 1886 ஆம் ஆண்டு இந்த புனித தலத்திற்கு வருகை தந்த சர் எட்வின் அர்னால்ட், பதினேழாம் நூற்றாண்டிலிருந்து கோவிலின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு இந்து பிரிவினருக்கும் மகாபோதி சொசைட்டியை நிறுவிய இலங்கை துறவி அநகாரிக தர்மபாலாவுக்கும் இடையிலான நீண்ட ஒரு சச்சரவைத் துவக்கி வைத்தார். சர் எட்வின் ஆதரவுடன், புத்த கயா மீதான இந்து கட்டுப்பாட்டில் இருந்து பௌத்த உரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தை தர்மபாலா தொடங்கினார். இந்த பிரச்சனை இறுதியாக 1953 இல் அமைதியாக தீர்த்து வைக்கப்பட்டது.

எட்வின் அர்னால்ட் எல்லா வகையிலும் ஒரு சிறந்த விக்டோரியனாகத் திகழ்ந்தவர். பன்மொழிப் புலமையாளர் – அவர் கிரேக்கம், லத்தீன், அரபு, துருக்கியம், பிரஞ்சு, ஜெர்மன், ஜப்பானியம், ஹீப்ரு, பாரசீகம், சமஸ்கிருதம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளை அறிந்தவர். சுமார் நாற்பது ஆண்டுகள் லண்டனின் ‘டெய்லி டெலிகிராப்’ செய்தித்தாளின் முன்னணி எழுத்தாளராக இருந்தார். அவர் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் குடிகளை நாகரீக சமுதாயமாக்கும் பணியில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார், ஆனால் அதே நேரத்தில் அவர் தீவிரமாக  இந்தியாவை நேசித்தவராக இருந்தார்.

அவர் பூனாவில் உள்ள புகழ்பெற்ற டெக்கான் கல்லூரியின் முதல் முதல்வராக 1857 இன் பிற்பகுதியிலிருந்து 1860 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை இரண்டரை ஆண்டுகள் இந்தியாவில் பணிபுரிந்தார். மண்ணின் மக்களுக்கான  கல்வி குறித்த அவரது கருத்துக்கள் அக்கால அளவுகோல்களின்படி முற்போக்கானவை.  அவர் 1885 இன் பிற்பகுதியில் நூறு நாட்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் வந்தார். மேலும் இந்த பயணத்தின் தெளிவான குறிப்புகளை எழுதியிருக்கிறார், அவை இன்றும் கூட படிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன. அவர் பல பாரசீக, அரபு மற்றும் சமஸ்கிருத செவ்வியல் மொழிகளின் மொழிபெயர்ப்புகளாக ஏராளமான புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

சர் எட்வின் இந்து மதம், பௌத்தம் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார். அவர் ‘தி லைட் ஆஃப் தி வேர்ல்ட்’ (உலகின் ஒளி) என்ற பெயரில் இயேசு கிறிஸ்துவைக் குறித்தும் எழுதியிருக்கிறார். பகவத் கீதையை  அவர் “விண்ணுலக கீதம்” (தி சாங் செலெஸ்டியல்) என்ற பெயரில் மொழிபெயர்த்த படைப்பே மகாத்மா காந்தியை முதன்முதலில் இந்த உன்னதமான நூலுக்கு அறிமுகப்படுத்தியது. அவர் தன் வாழ்நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு எழுதும் நூல்களில் ஒன்றாக அது அமைந்தது. இருப்பினும், அர்னால்டின் பிற படைப்புகள் எதுவும் ‘தி லைட் ஆஃப் ஏசியா’வின் புகழையும் நீண்ட ஆயுளையும் அடையவில்லை. லண்டனின் சைவ உணவுக்கழகச் செயல்பாடுகளில் காந்தி மற்றும் அர்னால்டு இருவருமே முக்கிய பங்காற்றினர், மேலும் இருவரும் ஒருவரையொருவர் மிகவும் போற்றியதாகத் தோன்றுகிறது.

ஆனால் அர்னால்ட் அவரது பல்துறை சாதனைகளுக்குப் பின்னரும் ஒரே ஒரு தீவிர வாழ்க்கை வரலாற்றாசிரியரை மட்டுமே ஈர்த்துள்ளார், அது 1957 ஆம் ஆண்டிலேயே நடந்துவிட்டது. எனவே, சர் எட்வின் அர்னால்ட் யார், அவருடைய வாழ்க்கை எப்படி மலர்ந்தது, அவருக்கு இந்தியாவுடனான பிணைப்பு எவ்விதம் தொடங்கியது, அவர் எப்படி ஆசியாவின் ஒளியை எழுத வந்தார் என்பதைப் பற்றி புதிய வெளிச்சம் போட முற்பட்டேன். ஆசியாவின் ஒளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படைப்பாக தன்னை நிரூபித்துவிட்ட ஒன்று. ஒரு பண்டைய தத்துவம் மற்றும் நம்பிக்கையின் மறு கண்டுபிடிப்பில் நீடித்த மைல்கல்லாக நிலைத்துவிட்ட ஒன்று.

[image error]

எட்வின் அர்னால்டுக்கு இந்தியத் தொடர்பைத் தவிர பிற முக்கிய முகங்களும் இருந்தன.  உதாரணமாக, அவர் 1874-76 இல் ஹென்றி மார்டன் ஸ்டான்லியின் முதல் காங்கோ பயணத்தில் ஒரு முக்கிய பயண வீரராக இருந்தவர். அங்கு ஒரு மலைக்கும் நதிக்கும் அவர் பெயரிடப்பட்டது.

ஆப்பிரிக்காவில் பிரிட்டிஷ் காலனித்துவ நலன்களை முன்னிறுத்திய ‘கேப் டு கெய்ரோ’ ரயில் இணைப்பை முதன்முதலில் ஆதரித்தவர். 1890 முதல் அவரது வாழ்க்கை பெரும்பாலும் ஜப்பானை மையமாகக் கொண்டது. அவரது மூன்றாவது மனைவி ஜப்பானியர், லண்டனில் கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்கள் அவரது மறைவுக்குப் பின்னர் வாழ்ந்தவர். ஜப்பானுடனான பிரிட்டிஷ் உறவின் வரலாற்றில், அவரது குரல் மிகவும் செல்வாக்கு மிக்கதாக இருந்தது. விக்டோரியா மகாராணி அர்னால்டை மிகவும் விரும்பினார். அவளுடைய விருப்பம் நிறைவேறி இருந்திருந்தால், 1892 இல் டென்னிசன் பிரபு இறந்தபோது அர்னால்டு பிரிட்டனின் அரசவைக் கவிஞராக மாறியிருப்பார்.

சர் எட்வின் அர்னால்டுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். ஒருவர் இலங்கையில் காப்பித் தோட்டம் அமைப்பதற்கு முயன்றார், அது தோல்வியடைந்ததால், அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஆனார். மற்றொருவர் மெக்சிகோவில் யுகடானை ஆராய்ந்து, அந்த அகழ்வாராய்ச்சியைப் பற்றி எழுதி, பின்னர் பர்மாவில் இதழாசிரியராகப் பணியாற்றி பின்னர் அந்த பிரிட்டிஷ் நிறுவனத்தை எடுத்துக் கொண்டார். அதன் பின்னர், இந்தியாவுக்குச் வந்து, போபால் அரச குடும்பத்திற்கு ஆசிரியராக ஆனார். இந்து இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றி நன்கு அறியப்பட்ட இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறார். இந்தியா, தாய்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எட்வின் அர்னால்டின் கொள்ளுப் பேரக்குழந்தைகளைக் கண்டுபிடிப்பதுடன் எனது கதை நிறைவுறுகிறது.

தமிழாக்கம் சுபஸ்ரீ

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்: ஜெய்ராம் ரமேஷ் ஜெய்ராம் ரமேஷ் – பாலசுப்ரமணியம் முத்துசாமி ஆசிய ஜோதி டிஜிட்டல் லைப்ரரியில் வாசிக்க Light Of Asiya வாசிக்க

புத்த கயா ஒரு பழைய விவாதம்

கயாவும் இந்துக்களும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 18, 2021 10:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.