சின்ன வீரபத்ருடு கவிதைகள்-3

மருந்து நீ அருந்திடவேண்டும்

பெத பிரம்மதேவம் என்கிற கிராமம். முதிர்ப்பச்சை விரித்த

வயல்கள். எந்த பழந்தமிழ் கவியின் கனவோ

சாளுக்கியர்களின் காலத்து சிவன்கோவில். பூங்குளம்.

வெண்நீலப் பனித்திரைகளுக்குப் பின்னால் முதல் சுடராட்டு.

 

எத்தனை அழகான நிலங்களுக்கு சென்றாலும், எல்லா

இடத்திலும் உன் தோற்ற மயக்கங்களே. உன் வேதனை அப்படி கிடக்கட்டும்,

உன்னையே நம்பி இருப்பவர்களின் வேதனை? இப்படியொரு பாசக்கயிறுதான்

சிவனை இங்கு கட்டிப்போட்டதென நினைக்கிறேன்.

 

சரி இனி என் சங்கதி? எதற்காக பிறந்தேன்? எங்கு

சேர்ந்தேன்? மீண்டும் எங்கு செல்கிறேன்?

ஒன்று மட்டும் புரிந்துவிட்டது. உன்னை நேசிப்பவர்களின்

நோய் தீரவேண்டும் என்றால் மருந்து நீ தான் அருந்தவேண்டும்.

 

* பெத பிரம்மதேவம் – ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி  மாவட்டம் சாமல்கோட்டை அருகில் உள்ள சிறு கிராமம்.

சுடரில் உள்ளதே விட்டிலிலும் உள்ளது. 

 

Something inside the moth is made of fire – jalaluddin rumi

 

மாநில கலை அருங்காட்சியகத்தில் ‘சுக்தாய்’ கேலரி. இன்னும்

விருந்தினர்கள் வராத உணவு மேசைபோல். நொடிக்குநொடி இங்கு

மது குடுவைகளை நிரப்புகிறார்கள், ஹுக்கா

எரிந்துக்கொண்டே இருக்கிறது. மயங்கி விழ இதயங்கள்தான் இல்லை.

 

‘உன்னை எனக்கு பிடிக்கும்’ என்கிறாள் அவள். பசும்

செடி போன்ற அந்த தேகத்தின் முன் காதலின் பரவசத்துடன்

நின்றிருக்கும் என் கண்களில்  கத்திகளை பார்க்கிறாள்.

‘இது வாள் அல்ல மணமாலை’ என்றால் நம்ப மறுக்கிறாள்.

 

உடல்களின் எடையை குறைத்தான் சுக்தாய். உருவங்களுக்கு

சிறகுகளை அளித்தான். அவன் முன்னிலையில் நிழல்கள் கூட

வெளிச்சங்கள் பாய்ச்சும். பொருட்களும் பாடல்கள்

பாடும். கொடுங்கோலர்களும் கவிதை வாசிப்பார்கள்.

 

சத்தமேதும் இடாத இந்த ஏரியில் ஒரு தூண்டிலிட்டுள்ளார்கள்.

இத்தனை காலத்திற்குப்பின் மீன் ஒன்று அதன் குரலைக் கேட்டது.

இந்த மண்அகலில் ஆறாத பிழம்பு. குமரியே,

ஒரு சொல் கேள், சுடரில் உள்ளதே விட்டிலிலும் உள்ளது.

 

(சுக்தாய் – அப்துல் ரஹ்மான் சுக்தாய்(1897-1975) நீர்வண்ண ஓவியர். கோடுகளின் நளினதுக்கும், மென்மையான நிற கலவைகளுக்கும் புகழ் பெற்றவர்

தெலுங்கில் இருந்து தமிழில் ராஜு

https://www.dawn.com/news/1201477)

தெலுங்குக் கவிதையின் அறுபதாண்டுகள்-இஸ்மாயில்

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:சின்ன வீரபத்ருடு

சின்ன வீரபத்ருடு கவிதைகள்

சின்ன வீரபத்ருடு கவிதைகள்- 2

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 16, 2021 10:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.