கார்க்கியின் பாட்டி
மாக்சிம் கார்க்கி தனது வாழ்க்கை வரலாற்றை மூன்று பகுதிகளாக எழுதியிருக்கிறார். மூன்றும் மிகச் சுவாரஸ்யமான புத்தகங்கள். இதில் எனது குழந்தைப் பருவம் அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. தனது தந்தையின் மரணத்தைக் கார்க்கி எதிர்கொண்ட விதமும் பாட்டியோடு மேற்கொண்ட கப்பல் பயணத்தைப் பற்றிய நினைவுகளும் திரைப்படம் போல நம் கண்முன்னே விரிகின்றன.

கார்க்கியின் தந்தை அவரை எதற்காகவும் அழக்கூடாது என்று பழக்கியிருந்தார். ஆகவே தந்தை இறந்த போதும் அவருக்கு அழுகை வரவில்லை. ஒரு மழைநாளில் தந்தை இறந்த போது பாட்டி அவரிடம் கடைசியாகத் தந்தையை ஒரு முறை பார்த்துக் கொள். இனி அவரைப் பார்க்கவே முடியாது என்கிறார். அது ஏன் எனக் கார்க்கிக்குப் புரியவில்லை. ஏன் தனது தந்தையைச் சுற்றி இத்தனை பேர் அமர்ந்து அழுகிறார்கள். அவர் ஏன் பேசாமல் இருக்கிறார் என்று குழப்பமாக இருக்கிறது
மழையோடு தந்தையின் சவப்பெட்டியைப் புதைகுழியில் இறக்கி மண்ணைப் போட்டு மூடும் போது அந்தச் சவப்பெட்டி மீது ஒரு தவளை இருப்பதைக் கார்க்கி கவனிக்கிறார். அந்தத் தவளையும் சேர்த்து மண்ணைப் போட்டு மூடிவிடுகிறார்கள். அது தான் கார்க்கிக்கு வருத்தமாக இருக்கிறது.
அந்தத் தவளை என்னவாகும் என்று கேட்கிறார். தவளையைக் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்கிறார் பாட்டி.
முதன்முறையாக மரணத்தைச் சந்திக்கும் ஒரு சிறுவனின் மனத்தை எவ்வளவு துல்லியமாகக் கார்க்கி எழுதியிருக்கிறார் என்று வியப்பாக இருக்கிறது
இது போலவே அவர்கள் நீராவிக்கப்பலில் பயணம் செய்யும் போது பாட்டி சொல்கிறார்
“தவளைகளுக்காகக் கவலைப்படுகிறாயே.. உன் அம்மா இப்போது அநாதரவாக நிற்கிறாள். இனி அவளது வாழ்க்கை என்னவாகும் என்று நினைத்துப் பார்“ என்கிறார். கார்க்கிக்கு மெல்லத் துயரத்தின் வலி புரிய ஆரம்பிக்கிறது

அவர்கள் கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது கார்க்கியின் தம்பி இறந்து போய்விடுகிறான். அவனது உடலை வெள்ளைத் துணியால் சுற்றி ஒரு மேஜையில் கிடத்தியிருக்கிறார்கள். பக்கத்திலிருந்து அந்த உடலைக் காணும் கார்க்கியின் பயப்படாதே என்கிறார் பாட்டி
சாராட்டாவ் என்ற இடத்தில் கப்பல் நிற்கிறது. குழந்தையின் உடலைச் சவப்பெட்டியில் ஏந்திக் கொண்டு பாட்டியே புதைக்கச் செல்கிறார். பருத்த உடல் கொண்ட அவர் மெதுவாக நடந்து செல்லும் காட்சியைக் கார்க்கி உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார்.
அம்மாவை பாட்டி ஆறுதல்படுத்தும் விதமும் அம்மாவின் வேதனை படிந்த முகத்தையும் பற்றி கார்க்கி விவரிக்கும் போது அந்த ஈரமான கண்கள் நம் முன்னே தோன்றி மறைகின்றன.
வாழ்க்கை நெருக்கடிகளைப் பாட்டி எதிர்கொள்ளும் தைரியமும் உறுதியாக நடந்து கொள்ளும் முறையும் அழகாக எழுதப்பட்டிருக்கிறது. பாட்டி அவருக்கு நிறையக் கதைகள் சொல்கிறார். கப்பலில் வேலை செய்கிறவர்கள் அவளது கதையைக் கேட்கிறார்கள். பாராட்டுகிறார்கள்.
இதயத்தை வலுப்படுத்துவதற்குக் கதைகள் தேவைப்படுகின்றன என்கிறார் பாட்டி
உண்மையான மதிப்பீடு.
பாட்டிக்கு மிகவும் நீண்ட கூந்தல். சிக்குப் பிடித்த தனது கூந்தலைச் சீப்பால் சீவி சரி செய்யப் போராடுகிறாள். இதனால் அவளது முகம் சிவந்து போகிறது
தனது நீண்ட கூந்தலைப் பற்றிப் பாட்டி சொல்வது அசலான வார்த்தைகள்..
இது ஆண்டவனுடைய விருப்பத்தால் ஏற்பட்ட தண்டனை. இளமைப்பருவத்தில் நீண்ட கூந்தலை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் முதுமையில் கூந்தலை வாரி முடிப்பதிலே பொழுது கழிந்துவிடுகிறது. இது ஒரு சாபக்கேடு போலிருக்கிறது
பாட்டியின் பேச்சும் சிரிப்பும் கதை சொல்லும் விதமும் அவளை ஒரு நண்பனைப் போலாக்கியது என்கிறார் கார்க்கி.
பாட்டி கொடுத்த தைரியமே தன்னைத் தேசம் முழுவதும் சுற்றியலைய வைத்தது. தன் எழுத்தின் ஊற்றுக்கண் பாட்டியே என்கிறார் கார்க்கி
சமையல் அறையைக் காப்பதற்கென ஒரு தெய்வம் இருப்பதாகப் பாட்டி நம்புகிறார். அது தான் உணவிற்குச் சுவையை உருவாக்குகிறது. அந்தத் தெய்வம் கோவித்துக் கொண்டுவிட்டால் வீட்டில் உணவு சமைக்க முடியாது என்கிறார்.
அவர்கள் வீடு மாறிப் போகும் போது அந்தத் தெய்வத்தைத் தன்னோடு வரும்படி பாட்டி அழைக்கிறாள். பின்பு ஒரு பெட்டியில் கடவுளையும் அழைத்துக் கொண்டு சென்றார்கள் என்கிறார் கார்க்கி
கார்க்கியின் கதைகளில் வரும் விநோதமான நிகழ்ச்சிகள்.. தைரியமான பெண் கதாபாத்திரங்கள்.. வாழ்க்கை நெருக்கடிகளை அச்சமின்றி எதிர்கொள்ளும் விதம். கஷ்டமும் போராட்டமுமான அன்றாட வாழ்க்கையின் நடுவேயும் உணவும் நடனமும் இசையுமாக வாழ்க்கையை அனுபவிக்கும் விதம் யாவும் பாட்டியின் வழியே அவருக்கு கிடைத்த வளங்கள்.
ஒரு எழுத்தாளன் எப்படி உருவாகிறான் என்பதை அறிந்து கொள்வதற்குக் கார்க்கியின் இந்த மூன்று தொகுதிகளும் சாட்சியமாக உள்ளன.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

