ஒழுகிச்சென்ற ஒரு வாரம்

சென்ற சில மாதங்களாகவே நான் வீட்டில் மிகக்குறைவான நாட்களே இருந்தேன். மாதத்திற்கு ஐந்து நாட்கள் இருந்தால் அதிகம். நவம்பரில் பதினொரு நாட்கள் டெக்கான் டிராப் என்னும் இந்திய மையமேற்கு நிலப்பகுதியில் பயணம் செய்தோம். ஒன்பதுபேர் இரண்டு கார்களில். திரும்பி வந்தது நவம்பர் 27 ஆம் தேதி காலையில். அன்றே மாலையில் கிளம்பி சென்னை சென்றேன். திரும்பி ஊருக்கு வந்தது டிசம்பர் ஐந்தாம் தேதி.

ஆறாம் தேதி அருண்மொழியும் சைதன்யாவும் சுபஸ்ரீயும் அஜ்மீர் கிளம்பிச் சென்றனர். நான் சென்ற அதே பாதையில் செல்லவேண்டும், அதேபோல தர்காவில் வழிபாடு செய்யவேண்டும் என்று விரும்பினர்.  ஆகவே வீட்டில் தனியாக ஒரு வாரம். பயணக்கட்டுரைகள் எழுதலாமென நினைத்தேன். ஆனால் விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கான ஏற்பாடுகள். அதன் இலக்கிய உள்ளடக்கம் சார்ந்த வேலைகள்தான் என்னுடைய பொறுப்பு. சிறப்பு விருந்தினர்களுக்கான தேடல். அதன்பின் அவர்களை அறிமுகம் செய்யும் எழுத்துக்களை உருவாக்குதல். ஆனாலும் நேரம் இழுத்தது. கூடவே பலவகையான திரைக்கதை வேலைகள்.

ஒருவாரம் கிட்டத்தட்ட வீட்டுக்குள்ளேயே இருந்தேன். தம்பி ஷாகுல் ஹமீது இருமுறை வந்து பார்த்து பேசிக்கொண்டிருந்தார். இருளர்களுக்காக என ஒரு பதிவு அவர் எழுதி என் தளத்தில் வந்தது. அரசில் இருந்து தலைமை ஆட்சிப்பணி அதிகாரி அழைத்து அதை கவனித்ததாகவும், ஆவன செய்வதாகவும் சொல்லி எண்களைப் பெற்றுக்கொண்டார். ஷாகுலுக்கு அதில் பெரிய நிறைவு. இப்படி ஓர் இணையதளச் செய்தியை கவனிக்கும்படி அரசு இருப்பது வியப்புக்குரியதுதான்

ஒரே ஒருமுறை காலைநடை சென்றேன். ஆனால் செல்லும் வழிமுழுக்க குப்பைக்கூளங்கள். இரும்புக் கம்பிச்சுருள்கள். சேறு. இப்பகுதியில் மாபெரும் ஆறுவழிச்சாலை கட்டுமானம் நிகழ்கிறது. அவர்கள் தடம்போட்டதுமே குப்பைலாரிகள் வர ஆரம்பித்துவிட்டன. குப்பையாலேயே மேடாக்கிச் சாலைபோடுகிறார்கள். இனி இயற்கையெழில் நிறைந்த பாறையடி கணியாபுரம் சாலை இல்லை. இந்நிலம் இனி என் பதிவுகளில், புகைப்படங்களில் மட்டும்தான் எஞ்சும்.

வீட்டிலேயே நடை செல்லலாம் என எண்ணினேன். ஆனால் அதற்கும் வழியில்லை. மொட்டைமாடி நன்றாகவே வழுக்குகிறது. நீண்டநாள் மழையின் விளைவான பாசி. எப்படியும் கொஞ்சம் உடற் பயிற்சி தேவை. இப்போதெல்லாம் நான் ஒருமணிநேரத்துக்கு ஒருமுறை எழுந்து ஏதாவது செய்யவேண்டுமென்பதை நெறியாகக் கொண்டிருக்கிறேன். வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். அது கொஞ்சம் வியர்க்க வைத்தது.

எப்படியும் அருண்மொழி வீட்டுக்கு வந்ததும் “வீடு கிடக்குற கிடை” என்று ஒரு சில சொற்றொடர்கள் சொல்வாள். அதற்குமுன் வீட்டை சுத்தம் செய்து வைத்தாலும் அந்தச் சொற்றொடர் தவறாது. இதெல்லாம் என் கடமை. வீட்டைச்சுற்றி தூய்மை செய்யக்கூடாது என அருண்மொழி ஆணை. வீட்டுவேலையை ஆண்கள் செய்வது பக்கத்துவீட்டுக்காரர்களுக்கு தெரிந்துவிடக்கூடாது. இணையம் வழி உலகம் முழுக்க தெரியலாம்.

ஒரு ‘பேச்சுலர்’ வாழ்க்கை. அனீஷ் கிருஷ்ணன் நாயர் வந்து அவருடைய நண்பரும் நிலவியல் -தொல்லியல் ஆய்வாளருமான ராம்குமார் தமிழகத்தில் செய்த அகழ்வாய்வுகள் பற்றிய ஒரு கட்டுரையை அளித்தார். புகழ்பெற்ற ஆய்வேட்டில் வெளிவந்த கட்டுரை. அதை படித்து சுருக்கிக்கொண்டு புரிந்துகொள்ள ஒருநாள் ஆகியது. இதுவரையிலான பல அகழ்வாய்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய கோரும் ஆய்வேடு அது.

பேச்சுலர் வாழ்க்கையின் அம்சமாக ஒரு சினிமா பார்க்கலாமென முடிவுசெய்தோம். நானும் அனீஷும் போகனுமாக மரக்கார் அரபிக்கடலின் சிங்கம் படம் பார்த்தோம்.  மிகப் பெரிய பணச்செலவில், மிகப்பெரிய உழைப்பில் எடுக்கப்பட்ட படம். கடற்போர் இந்திய சினிமாவிலேயே இதுவரை இல்லாதவகையில் எடுக்கப்பட்டுள்ளது. உச்சகட்டப் போரும் சிறப்பு.

பத்தாம் தேதி பொன்னீலனின் பேத்தி [மகளுடைய மகள்]  பிரியதர்சினியின் திருமணம். நாகர்கோயில் கங்கா கிராண்ட்யூர். நான் சுத்தமாக மறந்தேபோனேன். அருண்மொழி இருந்தால் நினைவூட்டியிருப்பாள். ராம் தங்கம் அழைத்ததனால் அடித்துப்புரண்டு ஆட்டோவில் கிளம்பிச் சென்றேன்.

பொன்னீலனையும் பல நாகர்கோயில் இலக்கிய நண்பர்களையும் சந்தித்தேன். பொன்னீலன் வழக்கம் போல அழகாக இருந்தார். சமீபத்தில் கொஞ்சம் நோயுற்றபின் ஒரு சின்ன நடுக்கம் இருக்கிறது. மற்றபடி உற்சாகமாக இருந்தார். ராம் தங்கம், ராகுல், இளையராஜா போன்ற நண்பர்களுடன் உணவருந்தினேன்மிகச்சிறப்பான கேரள பாணி உணவு. பிரதமன்கள் அற்புதமாக இருந்தன.

பொன்னீலனின் அம்மா அழகியநாயகி அம்மாள் ஓர் எழுத்தாளர். அவருடைய கவலை என்னும் தன்வரலாற்றுநூல் முக்கியமான ஓர் இலக்கிய ஆவணம். பொன்னீலன் சாகித்ய அக்காதமி விருது பெற்ற படைப்பாளி. அவர் மகள் நூல்கள் எழுதியிருக்கிறார். திருமணமாகும் இந்த பேத்தி  பிரியதர்சினி பொன்னீலனின் கரிசல் நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அது பெங்குவின் வெளியீடாக வரவிருக்கிறது. நான்கு தலைமுறையாக ஒரு குடும்பத்தில் இலக்கியம் திகழ்வது அரிதான விஷயம்தான்.

மறுநாள் காலையிலேயே போனை மூடிவைக்கவேண்டியிருந்தது. வெந்து தணிந்தது காடு டீசர் வெளிவந்திருந்தது. ஒரு டிரெயிலர் பெறும் வரவேற்பு அரைமணிநேரத்திலேயே தெரிந்துவிடும். படம் மீது பயங்கரமான எதிர்பார்ப்பு இருப்பது தெரிந்தது. எப்படி எண்ணை கண்டுபிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை

‘அந்தக்கதை வெளியான தொகுப்புதானே சார் ஐந்து நெருப்பு? என்றார் நண்பர். ”அத ஏகப்பட்ட பேர் வாங்கிருவானுகளே?”.

நான் “ஆமா, ஒரு அம்பது காப்பி விக்க வாய்ப்பிருக்கு” என்றேன்.

அவர் என்னை குழப்பமாகப் பார்த்தார். “நான் கடவுள் வந்த பிறகு ஏழாம் உலகம் நூறு காப்பி கூடுதலா வித்தது…” என்று நான் சொன்னேன். “அது வேற இது வேற”

மொத்தத்தில் பயணக்கட்டுரை எழுதாமல் ஒருவாரம் கடந்து சென்றது. மாலையில் கிளம்பி ஈரோடு செல்கிறேன். அங்கே மருத்துவர் ஜீவா அவர்களுக்காக நினைவுக்கூட்டமும் அரங்கும். ஜீவா குறித்த நினைவுகள் எழுகின்றன. தளராத நன்னம்பிக்கையுடன் பணியாற்றிய ஒரு போராளி. காந்தியின் பெயர் சொல்லத் தகுதியான சிலரில் ஒருவர். என்னுடைய இன்றைய காந்தியை அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்திருந்தேன்.

ஐந்து நெருப்பு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2021 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.