உதிர்ந்த கனவுகள்

A Fortunate Man என்ற டேனிஷ் திரைப்படத்தைப் பார்த்தேன். வெளியான படம். பில்லி ஆகஸ்ட் இயக்கியிருக்கிறார்

கதை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடக்கிறது.

தீவிரமான மதப்பற்றுள்ள குடும்பம் ஒன்றில் பிறந்த பீட்டர் தந்தையைப் போல மதகுருவாக விரும்பாமல் பல்கலைக்கழகத்தில் சென்று பொறியியல் படிக்க விரும்புகிறான்.

இதை அவனது தந்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிடிவாதமாக வீட்டை விட்டுப்புறப்படும் மகனுக்கு ஒரு பாக்கெட் கடிகாரத்தைப் பரிசாகத் தருகிறார் தந்தை.

அந்தக் கடிகாரம் அவன் தவறான பாதையில் செல்வதை நினைவுபடுத்தி அவன் மனதை மாற்றும் என்கிறார்

அந்தக் கடிகாரத்தை ஏற்க மறுக்கும் மகன் அவரை எதிர்த்து வாதிடுகிறான். இதனால் ஆத்திரமான. தந்தை அவனை அடித்துவிடுகிறார். பீட்டர் குடும்பத்தை விட்டு வெளியேறிப் போகிறான்.

அவனது வெளியேற்றம் ஒரு குறியீடு போலவே காட்டப்படுகிறது. உண்மையும் அப்படியானதே. மரபான சமூகம் மற்றும் பண்பாட்டுச் சூழலிலிருந்து விடுபட்ட புதிய தலைமுறையின் அடையாளம் போலவே பீட்டர் சித்தரிக்கப்படுகிறான்.

வறுமையான சூழலில் கல்வி பயில கோபன்ஹேகனுக்கு வருகிறான். வசதியில்லாத அறை. பகுதி நேர வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய நெருக்கடி. இதற்குள் தனது புதிய கனவுகளை வளர்த்தெடுக்கிறான் பீட்டர்.

ஆனால் அவன் நினைத்தது போல வாழ்க்கையில் வெற்றி பெறுவது எளிதாகயில்லை. தந்தையிடம் துவங்கும் படம் பீட்டர் தந்தையாகி உலகைப் புரிந்து கொள்வதுடன் நிறைவு பெறுகிறது. அந்த வகையில் ஒரு மனிதனின் முழு வாழ்க்கையை நாம் திரையில் காணுகிறோம்

டேனிஷ் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஹென்ரிக் பொன்டோப்பிடனின் நாவலைத்தான் படமாக்கியிருக்கிறார்கள். ஆகவே கதையின் செவ்வியல் தன்மை மிக அழகாகத் திரையிலும் வெளிப்பட்டுள்ளது.

கோபன்ஹேகனுக்குப் படிக்கச் செல்லும் பீட்டர் அங்கே நீர் மற்றும் காற்றாலையைப் பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்கும் திட்டத்தை உருவாக்குகிறான். இதைச் செயல்படுத்தப் பலரையும் சந்திக்கிறான்.

இந்தத் திட்டம் செயல்வடிவம் கொண்டால் தேசம் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெறும் என்று நம்புகிறான். ஆனால் அவனுக்கு நிதியுதவி செய்ய யாரும் முன்வரவில்லை.

இந்நிலையில் உணவகத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் நட்பாகப் பழகுகிறான். அவனது தேவைகளைப் புரிந்து கொண்டு பல்வேறு வகையிலும் அவள் உதவிகள் செய்கிறாள். ஆனால் அவளையும் தான் கடந்து செல்லும் ஒரு பாலம் போலவே பீட்டர் நினைக்கிறான்.

இந்நிலையில் ஒருநாள் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இவான் சாலமோனை சந்திக்கிறான். அவனிடம் நீர்மின்சாரத்திட்டத்தைப் பற்றி விவரிக்கிறான். இதில் ஆர்வம் கொண்ட இவான் உதவி செய்ய முன்வருகிறான்

நீர்மின்சக்தி திட்டத்தில் முதலீடு செய்வதற்காக வங்கி உரிமையாளர் பிலிப் சாலமனை சந்திக்க ஏற்பாடு செய்கிறான். இதற்காகப் பிலிப் சாலமன் வீட்டிற்குச் செல்லும் பீட்டர் தன்னை வசதியான குடும்பத்து ஆள் போலக் காட்டிக் கொள்ளப் புத்தாடைகள் அணிந்து செல்கிறான்.

அங்கே சாலமனின் இரண்டாவது மகளைச் சந்திக்கிறான். அவள் பீட்டர் மீது காதல் கொண்டவளாக நடந்து கொள்கிறாள். அதைத் தனக்குச் சாதமாக அவன் பயன்படுத்திக் கொள்கிறான்.

பின்னொரு முறை சாலமனின் மூத்தமகள் ஜேகோப்யை சந்திக்கிறான். அவளது அறிவாற்றலை வியந்து அவள் மீது காதல் கொள்கிறான். ஆனால் அவளை மணக்கவிரும்பும் கொண்டிருந்த யூதவணிகரான ஐபெர்ட் இதற்குத் தடையாக இருக்கிறார்.

தனது பிடிவாதமான நம்பிக்கை மற்றும் முயற்சிகளால் அவன் ஜேகோப்பை திருமணம் செய்யச் சம்மதம் பெறுகிறான். குதிரைவண்டியின் முன்னால் பீட்டர் ஒடுவது அவனது ஆளுமையின் அடையாளம். அந்தக் காட்சியில் அவன் தான் விரும்பியதை அடைய எதையும் செய்வான் என்பது தெளிவாக உணர்த்தப்படுகிறது

ஜேகோப் அவனது காதலை ஏற்றுக் கொண்டு திருமணத்திற்குச் சம்மதிக்கிறாள். ஆனால் அவர்கள் யூதகுடும்பம் என்பதால் மதம் குறுக்கீடு செய்கிறது. இதை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் பீட்டரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து அனுமதி கேட்கிறாள். அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது

இதற்கிடையில் பீட்டரின் நீர் மின்சக்தி திட்ட அறிக்கையை அரசின் தலைமை பொறியாளர் நிராகரித்துவிடுகிறார். இதனால் அரசின் ஒப்புதல் கிடைக்காமல் போகிறது. தற்காலிகமாக பீட்டர் ஆஸ்திரியாவிற்குச் சென்று பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகிறது.

இந்தப் பின்னடைவு அவனது கசப்புணர்வை, தனிமையை அதிகமாக்கிவிடுகிறது. இந்த நிலையில் ஒரு நாள் அவனைத் தேடி ஜேகோப் வருகிறாள். எதிர்பாராத அவளின் சந்திப்பும் அன்பும் பீட்டரை நெகிழச்செய்கிறது. இருவரும் ஒன்றாகத் தங்குகிறார்கள். உல்லாசமான நாளை கழிக்கிறார்கள்.

அந்த நாளின் போது பீட்டருக்குள் வேர்விட்டுள்ள மதவெறுப்பை அறிந்து கொள்கிறாள் ஜேகோப்.

பின்னொரு நாள் பீட்டரின் தந்தை இறந்து போன செய்தி வருகிறது. அவன் அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவில்லை. அவரது மரணம் தனக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்கிறான். தந்தையின் பிடியிலிருந்து முழுமையாக விடுபட்டு விட்டதாக உணரும் அவன் தாயின் நிலையை எண்ணி கண்ணீர் வடிக்கிறான்.

பீட்டரின் தேவையற்ற பிடிவாதம் காரணமாக அவனது கனவுத்திட்டம் தோற்றுப்போகிறது. உடல்நலமற்ற அவனது அம்மாவும் இறந்து போகிறாள். பீட்டர் மனம் உடைந்து போகிறான். மீளாத்துயரத்தில் கரைந்து போகிறான்.

தந்தையின் மரணம் ஏற்படுத்தாத வலியைத் தாயின் மரணம் ஏற்படுத்திவிடுகிறது. அதுவும் அம்மாவின் கடைசிக்கடிதம் அவனைத் தன்னிலை உணரச் செய்கிறது. மனம் திருந்திய மைந்தன் போலாகிவிடும் பீட்டர் நகரவாழ்க்கையை விட்டு ஒதுங்கி இயற்கையான சூழலில் தனது மரபான வேர்களைத் தேட ஆரம்பிக்கிறான்.

அம்மாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்கிறான். தந்தையின் நண்பரான மதகுருவின் ஆலோசனைப் படி தீவிரமான மதப்பற்றுக் கொள்கிறான். ஜேகோபை விலக்கி மதகுருவின் மகள் இங்கரை திருமணம் செய்ய முயல்கிறான். அவன் வாழ்க்கை திசைமாறிப் போகிறது

பீட்டரின் திருமண வாழ்க்கை எப்படியிருந்தது. அவன் கனவு நிறைவேறியதா என்பதை நோக்கி படம் நகர்கிறது

பீட்டரின் ஆளுமை தான் படத்தின் மையம். பீட்டர் பல்வேறு விதங்களில் இங்க்மர் பெர்க்மனை நினைவுபடுத்துகிறான். அவரும் இது போலத் தந்தையின் மீது ஒவ்வாமை கொண்டவரே. தந்தைக்கு எதிராகவே அவர் சினிமாவை தனது வடிவமாகத் தேர்வு செய்திருக்கிறார். பீட்டரும் பெர்க்மெனும் ஒரு புள்ளியில் தந்தையின் அகத்தைப் புரிந்து கொள்கிறார்கள்

மனக்குழப்பம் மிகுந்த ஒரு தருணத்தில் இங்கரின் தந்தையிடம் பீட்டர் புலம்பும் போது அவர் உன் மனத்துயரம் நீங்கும்வரை அழுது கொள் என்கிறார். அத்துடன் உன் குழப்பங்களுடன் நீயே போரிட வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறார்.

இங்கரை அவளது வீட்டில் சந்திக்கும் காட்சியும் அவளோடு காதல் கொள்வதும் அழகான காட்சிகள்

ஜேகோப் அறிவாளியான பெண். அவள் பீட்டரைப் புரிந்து கொண்டு தேவையான உதவிகள் செய்கிறாள். ஆனால் அவளைப் பீட்டர் புரிந்து கொள்ளவில்லை. அவனது தடுமாற்றங்கள். குழப்பங்கள் அவளது காதலை நிராகரிக்கிறது.

அதிர்ஷ்டசாலியாகக் கருதப்படும் பீட்டர் உலகியல் வாழ்க்கையில் தோற்றுப் போகிறான். இதற்கு முக்கியக் காரணம் பீட்டர் எவரையும் தனது விருப்பத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டு உதறி எறிகிறான் என்பதே

சாலையோரம் உள்ள இயேசுநாதரின் சிலையினை நோக்கி ஒரு காட்சியில் பீட்டர் கேள்விகேட்கிறான். இது போலவே ஜேகோப்புடன் தனிமையில் இருக்கும் போது மரத்தால் செய்யப்பட்ட சிலையின் மீது தனது கோபத்தைக் காட்டுகிறான். இயேசுவை அவன் தனது தந்தையின் மாற்று வடிவம் போலவே கருதுகிறான்.

வாழ்க்கை வரலாற்றுச் சித்திரம் போல உருவாக்கப்பட்டுள்ள இதற்குள் எத்தனை அடுக்குகள். தனித்துவமான கதாபாத்திரங்களே இதன் தனிச்சிறப்பு. அவர்களை முழுமையாகப் படம் சித்தரிக்கிறது. ஆரம்பக் காட்சிகளில் பீட்டருக்கு உதவி செய்யும் பணிப்பெண் அவனது கனவுகளைப் பற்றி எதையும் அறியாதவளாக அவனுக்குத் தேவையான உடற்சுகத்தை மட்டுமே தருகிறாள். அவனுக்கான பணஉதவியைச் செய்கிறாள். ஜேகோப் அவனது லட்சிய மனைவி போல நடந்து கொள்கிறாள். இங்கர் மரபான, பணிவான பெண்ணாகச் சித்தரிக்கபடுகிறாள். இங்கருடன் பீட்டர் பேசிக் கொண்டபடியே நடக்கும் காட்சியில் முன்னதாகவே அவள் தன்மீதான அவனது ஈர்ப்பினை உணர்ந்து கொண்டுவிடுகிறாள். இது போல நுட்பமான பல காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

இயற்கை ஒளியும் வண்ணங்களும் மிக அழகாகப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. டிர்க் ப்ரூயலின் சிறப்பான ஒளிப்பதிவு சிறந்த இசை. சிறந்த நடிப்பு எனப் படம் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது

நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் ஹென்ரிக்கின் தந்தை இது போல ஒரு மதகுரு. ஆகவே இந்த நாவல் பெரிதும் சுயசரிதைத்தன்மை கொண்டிருக்கிறது.

நாவலைப் படமாக்கும் போது கதாபாத்திரங்களை அதன் துல்லியத்துடன் மறு உருவாக்கம் செய்திருப்பது பாராட்டிற்குரியது

இயக்குநர் பில்லி ஆகஸ்ட் தனது படங்களைப் புகழ்பெற்ற நாவல்களை மையமாகக் கொண்டே உருவாக்கி வருகிறார். இந்தப்படம் சிறந்த அயல்மொழி திரைப்படமாக ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் விருதைப் பெறவில்லை

தான் எதிர்பார்ப்பதை உலகம் கொடுக்க வேண்டும் என்று பீட்டர் நினைக்கிறான். அது போதும் நடக்காத விஷயம் என்பதை முடிவில் அவனே உணர்ந்து கொள்கிறான்.

பீட்டர் தனது தந்தையிடம் காட்டிய கோபமும் பீட்டரின் மகன் அவனிடம் காட்டும் கோபமும் ஒன்று தான். இரண்டு தந்தைகளும் ஒன்று போலவே நடந்து கொள்கிறார்கள். ஆனால் பீட்டரைப் போலின்றி அவனது மகன் தனது தந்தையின் அன்பை அழகாக வெளிப்படுத்துகிறான்.

இங்கரின் தந்தை அழகான கதாபாத்திரம். அவர் பீட்டரின் அகக் கொந்தளிப்புகளைச் சரியாகப் புரிந்து கொள்கிறார்.

இதுபோலவே பீட்டரின் அண்ணனை ஜேகோப் சந்திக்கும் காட்சியிலும் பீட்டர் சந்திக்கும் காட்சியிலும் அண்ணன் தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்வதேயில்லை. ஆனால் அவன் பீட்டர் மீது பேரன்பு கொண்டிருக்கிறான் என்பது அழகாக உணர்த்தப்படுகிறது

தனது கர்ப்பத்தை மறைத்துக்கொண்டு அம்மாவிடம் தான் வெளியூர் பயணம் செல்ல இருப்பதாகப் பணம் கேட்கும் ஜேகோப்பை அவளது அம்மா புரிந்து கொள்ளும் விதமும் நடத்தும் முறையும் படம் எவ்வளவு நுட்பமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதன் அடையாளம்

பீட்டரின் முதுமையைக் காணும் போது நமக்குள் இவ்வளவு தான் வாழ்க்கையா என்ற பெருமூச்சு எழுவே செய்கிறது. ஆனால் புதிய கனவுகளுடன் ஜேகோப் அடுத்த நிலையை நோக்கி நகர்வதைக் காணும்போது வாழ்க்கையின் புதிய சாலைகள் முடிவற்றவை என்ற நம்பிக்கையும் உருவாகிறது.

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2021 19:20
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.