பெருநாவல் மிளகு – Lord Coutinho and the retired Science teacher engaged in botanical experiments

கஸாண்ட்ரா முகம்  பார்த்து கவுட்டின்ஹோ பிரபு உன்மத்தம் கொண்டு அவளை கட்டிலுக்கு தூக்கிப் போக யத்தனம் செய்தது, அவர் தரையில் மயங்கிக் கிடப்பதிலும், கொதிக்க வைத்திருந்த தண்ணீர் சிந்தி பேய் மிளகு ராட்சசத்தனமாக வளர்ந்து பிரபு காலைச் சுற்றி வளர்ந்ததிலும்  முடிந்தது. தற்போது அவர் இன்னும் தரையில் கிடந்து உறங்கியபடி, மிளகுக்கொடி சுற்றி, கர்ப்பத்தில் சிசு போல் பிரசவிக்கப்படக் காத்திருக்கிறார்.

விக்ஞான உபாத்தியாயரிடம் ஒரு நாள்பட்ட பழக்கம் உண்டு. காலையில் ஐந்து மணிக்கும் சாயந்திரம் ஐந்து மணிக்கும் நாலு கடைவீதி சுற்றி வீட்டுக்குப் போவது. மாலையில் அப்படிப் போகும்போது கடைக்காரர்கள் அவருக்கு தினசரி ஒரு கொட்டைப் பாக்கும், அரை வெற்றிலைக் கவுளியும் காணிக்கையாகத் தருவதுண்டு. அவரிடம் சிறப்பாகப் படித்து முன்னுக்கு வந்த பிரகாசமான மாணவர்கள் மண்டிக்கடையில் கைமேஜை போட்டுக் கணக்கு எழுதும்போது வாத்தியார் சம்பாவனை என்று ஒரு வராகன் செலவுக் கணக்கு எழுத, அதை ஏற்று அனுமதிப்பார்கள் கடை அதிபர்கள். இவர்கள் பெரும்பாலும் விக்ஞான உபாத்தியாயரின் கடைந்தெடுத்த அடிமுட்டாள் பழைய மாணவர்களாக இருப்பது சகஜம்.

ஒரு மனுஷன் வெற்றிலையையும் பாக்கையும் பட்சணம் பண்ணி பசியாற முடியாது என்பதால் தினசரி வரும் சம்பாவனையில் முக்கால் பாகத்துக்கும் மேல் விக்ஞான உபாத்தியாயர் பெண்டாட்டி வீட்டு வாசலில் கூறு கட்டி விற்பது வழக்கம். அந்தப் பணம் மீன் வாங்கவோ கருவாடு வாங்கவோ தினசரி பிரயோஜனப்படுவது வாடிக்கை.

உபாத்தியாயர் சாயந்திர உலா அப்படிப் போகும்போது மாலையில் மட்டும் கவுட்டின்ஹோ பிரபு மாளிகையில் படியேறி அரை மணி அவரோடு சல்லாபம் செய்துவிட்டு, என்றால், இலக்கியம், விக்ஞானம் பற்றி எல்லாம் உரையாடிவிட்டு வீடு திரும்புவது அவ்வபோது நிகழும்.

அவர் பிரபுவோடு ஆராய்ச்சி செய்வது வாரம் மூன்று தடவையாவது காலை எட்டில் இருந்து பகல் இரண்டு வரை இருப்பதால் சாயந்திரம் வெட்டிப் பேச்சு அதற்குக் குந்தகம் விளைவிக்காமல் போகும்.

அபூர்வமான தினங்களில் பகல் ரெண்டுக்கு மேல் ஆராய்ச்சி நீளும்போது பிரபு மாளிகையிலேயே மாளிகை நிர்வாகி சுபமங்களத்தம்மாள், தாரா முட்டை அல்லது வான்கோழி முட்டை உடைத்து உப்பிட்டுவோடு சேர்த்துக் கிண்டி. புளிக்காடியோடு உபாத்தியாயருக்குத்தர மடையருக்கு ஆக்ஞை பிறப்பிப்பார்.

சுபமங்களத்தம்மாளுக்கு கொங்கணி, கன்னடம், தமிழ், தெலுகு, போர்த்துகீஸ், இங்க்லீஷ் என்று ஊர்ப்பட்ட பாஷை அத்துப்படி. என்றாலும் அவரிடம் போய்ப் பேச பிரபுவோ மற்றவர்களோ முற்படுவது அபூர்வம்.

அறுபத்து மூன்று வயது அம்மாளோடு போர்த்துகீசிய இலக்கியத்தில் காதல் பற்றி ஐந்து நிமிடம்  பேசிவிட்டுப் போக யார் உத்தேசிப்பார்கள்?

விக்ஞான உபாத்தியாயருக்கு அம்மாளின் கருப்படித்த பற்கள் பார்க்க அவ்வளவாக, அவ்வளவாக என்ன, முழுக்கவே பிடிக்காது. முட்டை கொண்டு வரும் போது அவளுடைய அக்குளில் கற்றாழை வாடை லோகம் முழுவதும் அடிப்பதும், சுபமங்களம் அம்மாளின் வாய் வாசனையும் எட்டு ஊர் தாண்டி விரட்டும். என்ன செய்வது, கவுட்டன்ஹோவின் மனைவி, காலம் சென்ற விக்டோரியா கவுட்டன்ஹோவுக்கு ஏதோ தூரத்து சொந்தம்.

சாவுப் படுக்கையில் சித்தம் கலங்கிப்போய் அவள் கவுட்டின்ஹோ பிரபுவிடம் சொல்ல நினைத்தது – நான் போனபின் சுபமங்களத்தைக் கல்யாணம் செய்து கொண்டு, வீரையனை வீட்டு நிர்வாகி ஆக்க வேண்டியது. அவள் சொன்னதோ, நான் போனபின் சுபமங்களத்தை வீட்டு நிர்வாகி ஆக்கி, வீரையனை கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 17, 2021 20:06
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.