ஜே.ஜே.சிலகுறிப்புகளைப் பற்றி சில குறிப்புகள்

ஜே.ஜே.சில குறிப்புகள் வாங்க

அன்புள்ள ஆசானுக்கு

சுராவின் முக்கியப் படைப்பினை நவீனத்துவத்தின் முடிவிற்கும் பின் நவீனத்துவத்தின் துவக்கத்திற்கும் இடைப்பட்ட ஆக்கம் என்றும், இன்னும் நாம் நூலைப்பற்றி பேசவே துவங்கவில்லை என்றும் தளத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.

வாசிப்பின் படிகஅடுக்குகளை  அக ஒளி இன்னும் அலசி அளந்துவிட முடியவில்லை. ஆனாலும் தட்டையான வாசிப்பாயினும் ஒரு துவக்கம் இருந்தாக வேண்டும் என்பதாலும், வாசித்து திருத்த தாங்கள் இருப்பதாலும் வாசிப்பை எழுதுகிறேன்.

ஒரு புனைவின் வாசிப்பில் இருமுறைகள் இருப்பதாகத்  தோன்றுகிறது. ஒன்று  அதன் தத்துவத்தை (நவீனத்துவம்/ பின் நவீனத்துவம் என) கண்டடைந்து பரிதியை விட்டு வெளியேறி உள்ள பிசிறுகளையும் உட்குறைகளையும் வெளிப்படுத்தும் அறிவுச் செயல்பாடு. இது பிற ஆக்கங்களுடன் விடாமல் ஒப்பு நோக்கி அலசவும் செய்யும்.

மற்றது துண்டாக ஒரு புனைவினை உள்ளடக்கம் மட்டுமே கொண்டு, உத்தி, வடிவம், ஒளித்து வைத்து விளையாடல், உணர்ச்சி, படிம விளையாட்டு, உண்மைத்தேடல் என வாசிப்பது

முதல் வகைக்கு பரந்து பட்ட கோட்பாட்டு வாசிப்பும் இரண்டாம் வகைக்கு தேடும் உள்ளுணர்வும் தேவை. இவை இயல்பாக இல்லாவிடில் வளர்த்துக் கொள்ளக் கூடியவை. கூட்டு வாசிப்பு வாய்ப்பில்லாததால் உங்களுடன் வாசிப்பைப் பகிர்கிறோம். குற்றம் கடியற்க.

சுகுமாரனின் பின்னுரைப்படி, ஜே ஜே சில குறிப்புகள் இரு புதுமைகளைக் கொண்டுள்ளது. 1 உணர்ச்சிகரம் என்னும் கதை சொல்லும் நடைமுறையை மறுத்து அறிவார்ந்த விவாதத்திற்கான களமாக திறந்து வைத்தது,  2  கதை வடிவத்தை மீறியது.

ஆல்பெர் காம்யு இறந்த மறுநாள் ஜே ஜே இறக்கிறான் என்று கதை துவங்குகிறது. நவீனத்துவம் முடிகிறது , புதிய (பின் நவீனத்துவ ) காலம் துவங்குகிறது என்று இதைக் கொள்ளலாமா?

ஜே ஜே யின் ஆளுமை அறிவுக்கூர்மையுள்ள தர்க்கம் என்னும் கத்தியை கைகளிலும் நாவிலும் கட்டிக் கொண்டு உண்மையை முழுமையை சமரசம் இன்றித் தேடும் இளைஞனாக உள்ளது. அவனைப்புரிந்து கொண்டவர்கள் மூவர்- அவனது பேராசிரியர் மேனன், ஓவிய நண்பர் சம்பத் மற்றும் எழுத்தாளர் ஐயப்பன். ஓவியத்திலிருந்து எழுத்துக்கு இழுத்து வந்த பேராசிரியருக்கு குற்ற உணர்வு உண்டு. ஓவியத்துறையில் விவாதம் குறைவு; எதிரிகளும்.

அறிதலின் துயர், முழுமையின் வெக்கை, தனிமையின் சுமையால் தாக்கப்பட்டவனுக்கு ஒரே வெளிச்சம் மரணம் என்று புரிந்துகொண்டால் எதிர்மறைத் தன்மைக்காக இது பின் நவீனத்துவத்தின் உச்சம் என்றும் கொள்ளலாமா?

ஜே ஜே தன் வாழ்வில் சிறிது செம்பு கலந்திருந்தால் பிழைத்திருக்கலாம். ஆனால் அவன் வழி அது அல்ல. ராமகிருஷ்ணரின் வாழ்வில் ஒரு இளம் வயது சாதகன் அவரிடம் “நான் போகிறேன். என்னால் இவ்வுலகில் இருக்க முடியாது” என்கிறான். சில நாள்கழித்து அவன் உடலை உகுத்து விட்ட செய்தி வருகிறது. மிக குறைவான கர்மா ஸ்டாக் உள்ளவர்கள் வீட்டைப் பூட்டிக்கொள்ளத் துவங்குகிறார்கள்.

ஜே ஜே மீது எரிச்சலும் ஆதுரமும் ஒருங்கே தோன்றுகின்றன.

ரயிலில் உடன் வந்த தோழியிடம் அவளது கவிதையில் பிற்கால நல்ல கவிதைகளுக்கான விதை இருக்கிறது என்று சொல்லி இருந்தால் என்ன? நண்பருடன் விவாதம் முடிந்தவுடன் ஒரு தேனீர் குடித்து நலம் விசாரித்தால் என்ன?   கற்பனையைத் தூண்டும் தந்தையின் மரவேலையில் மனமொன்றி ஈடுபட்டால் என்ன? அம்மாவிடம் அன்புடன் காசு வாங்கிக் கொண்டால் என்ன? உறவுகளை நிலைப்படுத்திக் கொள்ளும் ‘போலித்தனம் ‘ இல்லாதவன் மணம் செய்து கொண்டிருக்காவிட்டால் என்ன?

இது எதுவும் இல்லாததாலேயே அவன் அவனாக இருக்கிறான்.

போலித்தனத்தை எரிக்கும் சினமுள்ள ஒருவன் உண்மையை காணாவிடின், ஒன்று சமரசம் அடையவேண்டும். அது கிடைக்காவிடின் மரணமே விடுதலை தருகிறது. குடும்ப பொறுப்புள்ளவன் இலட்சியவாதி முகமூடி அணிந்து கொள்வதும் போலித்தனம் என்று சொல்லலாம்.  குஷ்டரோகிக்கு உதவும் முன் தன்னிலை மறந்து மதம், சமுதாயம் பற்றி சிந்தித்து மயங்கி விழுபவன் சமுதாயத்திற்கு பாரமாகி விடுகிறான்.

எல்லாப் பிரச்னைகளுக்கும் தந்தை காரணம் என்று தோன்றுகிறது. தன்னிலிருந்து வந்த ஒன்று தன் பிம்பமாக இருக்கவேண்டும் என்ற ஆசைக்கும் இயல்பான வளர்ச்சி வேறாக இருப்பதற்கும் உள்ள முரணே எல்லாவற்றிற்கும் காரணம்.

சில தெறிப்புகள்

சுகுமாரன் அவர்கள் சொல்வது போல, நூலின் பல பகுதிகளை மனப்பாடம் செய்து அறிவின் அடையாளமாக வெளிப்படுத்திய காலம் இருந்திருக்கிறது

நீங்கள் சொல்வது போல சுந்தர ராமசாமி ஒவ்வொரு சொல்லையும் கவனத்துடன் வளர்த்து  எழுதி இருக்கிறார்.

கண்டிப்பாக இரண்டாம் முறை படிக்க வைக்கக் கூடிய மேற்கோள்கள் என்று தோன்றியவை:

1 மின் மினி போன்ற பரவசம் ஏற்படுத்தும் பொறிகள் தான் ஜே ஜே யிடம் பிறர் பெற்றது

2 நனவுகளே குழம்பிக் கொண்டிருக்கும் போது கனவுகள் பற்றிச் சொல்வானேன்?

3 மனசாட்சியின் குரலை அதன் அடி நுனியில் தெளிவுறக் கேட்கும் பயிற்சியை இடைவிடாது மேற்கொள்கிறேன். இதை மூளை, பாஷை வடிவத்தில் மாற்றிப் பதிவு செய்து வைத்துக் கொள்ளத் துடிக்கிறது. பொறிகள் சரிவர இயங்குவதில்லை. சதா சலனம்; சஞ்சலம்

4 மனித உறவுகளை நேசப்படுத்த வேண்டும்.

5 மூல அர்த்தங்களைப் பற்றி சிந்தித்த மனிதன், அது பற்றி எழுதி, எதிர் நிலைகள் பற்றீ எழுதி, வாதாடி, வியாக்கியானித்து, மீண்டும் எழுதியவற்றில் மூல அர்த்தங்களே சீரழிந்து போய்விட்டன. இச்சீரழிவில் சரியாத துறைகளே இல்லை.

6 தலைமைப் பீடத்திலிருந்து அசட்டுப் பிரியம் ஒழுகிய வண்ணம் இருக்கிறது. உள்நோக்கம் கொண்ட இலவச அன்பு அருவருப்பை ஊட்டுகிறது.

7 ஊசிகளின் மேல் வைக்கோல் போர்கள் சரிக்கப் படுகின்றன. ஊசியை மீண்டும் கண்டுபிடிப்பது மற்றொரு உண்மையான ஜீவனின் அவஸ்தை

8 இங்கு பலர் மொழிபெயர்ப்பது வேறொரு பாஷையும் தெரியும் என்று பயமுறுத்த

9 அறிவின் கதவு திறக்கும் போது, திறக்காத பல கதவுகள் தெரியும் விசித்திரக் கோட்டை இது. திறப்பதே திறக்காத  கதவுகளைப் பார்க்கத்தானா?

10 மனிதன் சந்தோஷம் கவியும் போது அதிருப்திக்கு ஆளாகி, வந்து சேராத சந்தோஷத்தைக் கனவு காண ஆரம்பித்து விடுகிறான்.

11 கவிதைகளின் மீது நாம் காட்டியிருக்கும் குரூரம் அளவிட முடியாதது

12 செயலின் ஊற்றுக் கண்ணான சிந்தனையை பாதிப்பதே என் வேலை

13 மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது மிகச் சுருங்கிய நேரத்தில் குறுக்குப் பாதை வழியாகக் கிடு கிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகை வாசலைச் சென்றடைகிறேன்.  என்மீது உன்துக்கத்தை எல்லாம் கொட்டு என்ற செய்தியை எப்படியோ மறைமுகமாக என்னால் உணர்த்தி விட முடிகிறது. (இந்த சிலுவைப்பாடு மனநிலை பெருவலி சிறுகதையை நினைவுறுத்துகிறது)

அன்புடன்

ராகவேந்திரன்

கோவை

ஜே.ஜே.சிலகுறிப்புகள், திறனாய்வு, ரசனை ஜே.ஜே.சில குறிப்புகள் தழுவலா?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 23, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.