அசோகமித்திரனும் ஆன்மீகமும்

அன்புள்ள ஜெ

இது ஒரு முகநூல் குறிப்பு

கோவைக்கு அசோகமித்திரன் வந்திருந்தார். மெல்லிய பகடி இழையோடும் அவரின் சிற்றுரை முடிந்ததும் கேள்வி நேரம் தொடங்கியது. ஒருவர் கேட்டார். “உங்களுக்கு இந்த உள்ளொளி தரிசனம், ஆன்ம தேடல் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லியா?”

“அப்படின்னு இல்ல. நானொரு மத்தியதரக் குடும்பஸ்தன். ஒரு நல்ல டூத் பேஸ்ட்டை அறுபது வருடமா தேடறேன். அதுவே கிடைக்க மாட்டீங்குது. இதுல எங்க ஆன்ம தேடலுக்கு எல்லாம் போறது”

அசோகமித்திரன் ஆன்மிகமான தேடல்கள் இல்லாதவரா? உங்கள் கருத்து என்ன?

செல்வக்குமார்

அன்புள்ள செல்வா,

அந்தக் கேள்விக்கு அசோகமித்திரன் அவ்வாறு நையாண்டியாகப் பதில் சொல்லாமலிருந்தால்தான் ஆச்சரியம். பொதுவாக ஆன்மிகமான தேடல் கொண்டவர்களின் பொது இயல்பு அதை சம்பந்தமில்லாதவர்களிடம் பேசாமலிருப்பது. பெரும்பாலும் மென்மையான கேலி வழியாக அதைக் கடந்துசெல்வது.

அசோகமித்திரன் பொதுவாக ஆன்மிகத்தேடல், மதம் பற்றி எதுவும் சொல்லமாட்டார். அதன் மேல் ஐயத்துடன் கேட்பவர்களுக்கு முன் தன்னை முழுமையாக மூடிக்கொள்வார். தத்துவார்த்தமான ஓங்கிய பேச்சுகளைப் பேசுபவர்களிடம் அந்தப்பேச்சு பயனற்றது என்று பொதுவாகச் சொல்வார். அகத்தேடல் பற்றி அகத்தேடல் இல்லாதவர்களிடம் பேசலாகாது என்னும் எச்சரிக்கை ஒருபக்கம். அத்தகைய எந்தப் பேச்சையும் உடனே பிராமணசாதிப் பேச்சாக திரிக்கும் மொண்ணைகள் பற்றி எப்போதும் அவருக்கிருந்த அச்சம் இன்னொரு பக்கம்.

ஆனால் பதிவாகிவந்த பல்வேறு பேட்டிகளிலும் முன்னுரைகளிலும் அசோகமித்திரன் அவரிடம் என்றுமே இருந்த அகத்தேடல், அதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள், அவர் வெவ்வேறு மரபுகளை சார்ந்து செய்துகொண்ட ஆன்மிக- யோகப் பயிற்சிகள் ஆகியவற்றை குறிப்பிட்டிருக்கிறார். அப்படி பயிற்சிகள் எடுத்துக்கொண்ட, அதைப்பற்றி சொன்ன தமிழ் எழுத்தாளர்கள் வேறு எவருமில்லை. அவருக்கு அமானுடமானவை என்று சொல்லத்தக்க சில அனுபவங்களும் உள்ளன என்று சொல்லியிருக்கிறார்.

அந்த அகத்தேடல் சார்ந்த அனுபவங்களுடன் இணைந்த ஆளுமைகள் சிலரையும் அசோகமித்திரன் குறிப்பிட்டிருக்கிறார். அவர்களில் முக்கியமானவர் மணிக்கொடி எழுத்தாளரான கி.ரா.கோபாலன். அவர் பின்னாளில் துறவியாகி மறைந்துபோனார். மானசரோவரின் கதைநாயகனுக்கு கி.ராவின் சாயல் உண்டு என்று சொல்லப்படுவதுண்டு. முன்னரும் சில கதைகளில் அவர் வேறு பெயரில் வந்திருக்கிறார்.

அசோகமித்திரன் தன் பேட்டிகளில் அளித்த மெல்லிய குறிப்புகள், மற்றும் தனிப்பட்ட கடிதங்களுக்கு அப்பால்  [எனக்கு பல ஆலோசனைகள் அளித்திருக்கிறார், தெளிவுகள் தந்திருக்கிறார்] அவருடைய கதைகளையே நாம் அவருடைய ஆன்மிகத்தேடலுக்கான சான்றுகளாகக் கொள்ளவேண்டும். மற்றபடி அவருடைய அந்தரங்க ஆழம் அது. நாம் அறியமுடியாது.

அசோகமித்திரனின் கதைகளில் மிகத்தொடக்க காலம் முதல் அகத்தேடல், அல்லது ஆன்மிகத்தேடல் மிக வலுவான ஒரு கருவாக இருந்துள்ளது. சொல்லப்போனால் தமிழில் மிக அழுத்தமாகவும் நுட்பமாகவும் ஆன்மிகத்தேடலை கலையாக்கிய மிகச்சிலரில் புதுமைப்பித்தனுக்குப் பின் அவரே முதன்மையானவர். ஜெயகாந்தன், க.நா.சு, ஆகியோர் அடுத்தபடியாக.

[அகவயத்தேடல் அல்லது ஆன்மிகத்தேடல் அற்ற எழுத்துக்கள் சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் ஆகியோருடையவை. பின்னாளில் வண்ணநிலவன், வண்ணதாசன் ஆகியோருடையவை. அவை முழுக்கமுழுக்க உலகியல் சார்ந்தவை.]

இன்னும் சிலநாட்கள், பிரயாணம் முதலிய ஆரம்பகாலக் கதைகளில் ஆன்மிகத்தேடலின், அகப்பயிற்சிகளின் பல நுண்ணிய தளங்களை அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். ஆன்மிகப் பயிற்சிகளைச் செய்பவர்களுக்குத் தெரியும், எங்கே அவை தவறுகின்றன என்பது ஒவ்வொரு ஆன்மசாதகனையும் குழப்பியடிக்கும் மிகமிக நுட்பமான வினா என்பது. அதை அவர் ஒருவர்தான் தமிழில் அற்புதமாக எழுதியிருக்கிறார்.

அசோகமித்திரனின் ஆன்மிகத்தேடல் வெளிப்படும் அடுத்தகட்டக் கதைகள் ‘விடுதலை’, ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ போன்றவை. அவர் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் செல்வாக்கில் இருந்த நாட்கள் அவை. இக்காலக் கதைகளில் அறிவார்ந்த, தத்துவம் சார்ந்த ஆன்மிக அணுகுமுறை உள்ளது.

மூன்றாம் கட்டக்கதை என்றால் ‘கோயில்’ போன்றவை. இக்காலகட்டத்தில் அவர் மீண்டும் மாயங்கள் எனத்தக்க அனுபவநிலைகளுக்குள் செல்கிறார். முதல் கட்ட ஆன்மிகக் கதைகளில் அந்த மாயம் எதிர்மறைப் பண்பு கொண்டதாக, அதாவது எய்துதல் கைதவறிச்செல்வதைச் சொல்வதாக உள்ளது. மூன்றாம் காலகட்டக் கதைகளில் அந்த மாயம் அடிப்படையான ஒன்றைக் கண்டடைவதைச் சித்தரிப்பதாக உள்ளது, எய்துவதாக உள்ளது என்பது நான் கண்ட வேறுபாடு. அது அசோகமித்திரன் அடைந்த பரிணாமம்.

மூன்றாம் காலகட்டக் கதைகளின் உச்சம் மானசரோவர். தமிழில் ஆன்மிகத்தேடல் பற்றி எழுதப்பட்ட முக்கியமான மூன்று நாவல்கள் என்றால் அசோகமித்திரனின்  ’மானசரோவர்’, ஜெயகாந்தனின் ’விழுதுகள்’ க.நா.சுவின் ‘அவதூதர்’ ஆகியவற்றையே சொல்லமுடியும். [எம்.வி.வெங்கட்ராமின் ’காதுகள்’ நல்ல முயற்சி, கலையென ஆகவில்லை என்பது என் மதிப்பீடு] அவற்றில் முதன்மையானது மானசரோவர்தான். அதை வாசிக்க உலகியலுக்கு அப்பால் செல்லும் உளநிலை, தனிப்பட்ட மெய்த்தேடல் தேவை. ஆகவே இங்கே அதிகம் பேசப்படாத ஆக்கம் அது.

அசோகமித்திரனிடம் மெல்லிய நகைச்சுவை எப்போதும் உண்டு. ஆனால் எப்போதும் கேலியாகப் பேசுபவர் அல்ல. அவர் பேச நேரும் சூழல் எதிர்மறையானது அல்லது நுண்ணுணர்வற்றது என்று உணர்கையில் அவர் மேற்கொள்ளும் தடுப்புநடவடிக்கைதான் தன்னைத்தானே கேலிசெய்துகொள்வது. எந்தக் கேள்வியையும் எதிர்கொள்ளாமல் நையாண்டி வழியாக தன்னை கேட்பவருக்குக் கீழே வைப்பதுபோல பாவனைசெய் ’பொத்தினாப்போல’ கடந்துசெல்வது.

உண்மையிலேயே ’டூத்பேஸ்ட் தேடலை’த்தான் வாழ்நாள் முழுக்க அவர் எழுதினார் என அவர் சொன்னதைக் கொண்டு அங்கிருந்தவர்கள் முடிவுகட்டினார்கள் என்றால் அவர் அந்த சபையைப் பற்றி கொண்ட கணிப்பு மிகச்சரியானது என்றுதான் பொருள்.

தமிழிலேயே மிக அதிகமாக, மிக உச்சமாக ஆன்மிகத் தேடலை எழுதியவர் அவர். அதைப்பற்றிப் பேசியவர். அவரிடம் ஒரு கூட்டத்தில் ஒர் ஆசாமி எழுந்து அப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் என்னதான் செய்வார்? அவருடைய அந்த நட்பார்ந்த ஆனால் கசந்த கேலியை, அந்த சமயத்தில் அவர் முகத்தில் அவர் தருவித்துக்கொள்ளும் ஒரு பயந்த அப்பாவியின் பாவனையை, என்னால் மிக அருகே என காணமுடிகிறது.  அப்போது அவர் மனதுக்குள் சிரித்துக்கொண்டிருப்பார் என்றும் படுகிறது.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 23, 2021 11:37
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.