நீலம் குரலில், கடிதங்கள்

நீலம்- குரலில்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு.

நலம்.

எது முதல், எது அப்புறம் என்று வகைப்படுத்த முடியாமல், ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யவேண்டிய அவசியம்.  அதுவும் வாசிப்பு என்று வரும்பொழுது, தனி நேரம் ஒதுக்கமுடியாமல், ஓடிக்கொண்டே, சமைத்துக்கொண்டே, கார் ஓட்டிக்கொண்டே, வீட்டுத் தோட்டத்தில் புல் வெட்டிக்கொண்டே காதால் கேட்டால் நன்றாக இருக்கும், ஒலி வடிவில் வெண்முரசு இருக்கிறதா என்று கேட்கும் நண்பர்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள்.

பொதுவாக இலக்கிய ஒலி சிவகுமாரின் யூட்யூப்  நிரலை அனுப்புவேன். நானும், வாசித்து முடித்த அத்தியாயங்களையும் நூல்களையும் மீள்வாசிப்பிற்கு ஒலி வடிவை அவ்வப்பொழுது நாடுவேன்.  நான் என்ன கேட்பேன் என்று அறிந்திருக்கும் யூடுயூப் தானியிங்கி, சுபஸ்ரீ அவர்கள், நீலம் நூலின் ஒலி வடிவ அத்தியாயங்களை அவர் பதிவேற்றம் செய்தும் செய்யாததுமாக எனக்கு தகவல் அனுப்பியது. முதல் அத்தியாயத்தை கேட்கலாம் என்று கேட்கப் போனவன் ஏழு அத்தியாயங்களை ஒரே அமர்வில் கேட்டேன்.

“புவனமுழுதாளும் பெரும்பொற்புள்ளவளே, நான் தீண்டிய மலர்களே தெய்வங்களுக்கு. நான் தழுவிய பெண்களே மாமன்னர்களுக்கு. இதோ உன்னை அவனுக்காகக் கனியச்செய்கிறேன்.” தென்றலாக பேசும்பொழுது அவர் குரலில் கர்வம்.

“அமர்ந்திருப்பதன் அழகை இதுபோல் இனியொருவர் நிகழ்த்திவிடுவார்களா என்ன இவ்வுலகில்? என் தெய்வமே”  எனச் சொல்லும் மேனகையின் குரலில் பெருமிதம்.

பிச்சி ராதையின் பின்னால் ஓடும் தோழி லலிதையின் குரலில் பேதமை.

தேவயானியின் மணிவயிற்றில் பிறந்த யதுவின் வழி வந்தவர்கள் நாம் என்று யாதவர் கதை சொல்லும்பொழுது, மகிபானுவாக அந்தக் குரலில் ஒரு பக்குவம். நிதானம்.

எந்தக் குரலில் எப்படிப் பேசினாலும், பிரேமையில் திளைக்கும் ராதைக்கென்று தனிக்குரல்.

மூன்றாவது முறையாக, நீலத்தை, எப்பொழுது வாசிப்பது என்று இருந்தேன்.  மூன்று, நான்கு, ஐந்து என்று எண்ணிலா முறை கேட்க வைத்துவிடும் சுபஸ்ரீயின் குரலில் வடிவெடுத்திருக்கும் நீலம்.

நண்பர் சுபஸ்ரீக்கு வாழ்த்துக்கள், நன்றி, அன்பு என எல்லாமும்.

சௌந்தர்,

ஆஸ்டின்,

அன்புள்ள சௌந்தர்

என் மகள் ஆங்கில நூல்களை வாசிக்கையில் கூடவே காதில் ஒலிவடிவையும் ஒலிக்கவிட்டுக் கொள்வாள். இதென்ன வழக்கம் என நான் நினைத்ததுண்டு. ஆனால் பின்னர் எனக்கும் அது உதவியாக இருந்தது. உண்மையில் என் உள்ளத்தில் இருக்கும் பல ஆங்கிலச் சொற்களின் ஒலிவடிவை அப்போதுதான் காதால் கேட்கிறேன் என அறிந்தேன்.

இன்று தமிழுக்கே அப்படிப்பட்ட ’வாசகர்கள்’ வந்துவிட்டனர். தமிழ் அறிந்து தமிழ் எழுத்துக்கள் அறியாதவர்கள் ஒரு பெரும் கூட்டம். அவர்களால் தமிழை கேட்கத்தான் முடியும். அவர்கள் தமிழிலலக்கியத்திற்குள் வர ஒலிவடிவங்கள் மிகப்பெரிய வழியை திறக்கின்றன. இன்னொரு தரப்பு தமிழை வாசிக்கவும் தெரிந்து, ஆனால் தமிழின் உணர்ச்சிகரம் மற்றும் உச்சரிப்புகளை அறியாதவர்கள். அவர்களுக்கும் இந்த ஒலிவடிவம் பேருதவி புரிகிறது எனக் காண்கிறேன்.

ஜெ

அன்புள்ள ஜெ,

சுபா அவர்களின்”நீலம்” சிறிது கேட்டேன். எனக்கென்னவோ இந்தக் குரல் பதிவு முறையில் உடன்பாடில்லை. அது நம்முடைய கற்பனைத் திறனை கட்டுப்படுத்துகிறது மேலும் நமது மனம் விரிவடைவதை அனுமதிக்க மறுக்கிறது. உதாரணத்திற்கு “பனி விழும் வனத் தடாகம் போல தன் உடல் சிலிர்த்துக் கொள்வதை அவள் உணர்ந்திருந்தாள்,” “விதையிலிருந்து முளைக்கும் செடி போல அவள் எழுந்து வந்தாள்,” “தன்னுள் தான் நுழைந்து ஒரு விதையாக ஆக விழைபவள் போல,” எப்பேர்ப்பட்ட வரிகள், இந்த ஒவ்வொரு வரிகளையும் நாம் கற்பனையில் உணர்வதற்குள் குரல் பதிவு எங்கோ சென்றுவிடுகிறது, அதைத் தொடர முடிவதில்லை.

audio book என்பது ஆழ்ந்த வாசிப்பிற்கான தல்ல என்பது எனது புரிதல். கண் பார்வையற்றவர்களுக்கு அல்லது எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

பாலன் சுரேஷ் பாபு

அன்புள்ள சுரேஷ்,

அறிதலுக்கான இயல்புகள் அனைவருக்கும் ஒன்றல்ல. சிலருக்கு செவிசார் நுண்ணுணர்வு மிகுதி. சிலருக்கு அது அறவே இருக்காது. முழுக்க முழுக்க மூளை நரம்பமைப்பு சார்ந்தது அந்த தன்மை.

செவிசார் நுண்ணுணர்வு கொண்டவர்களுக்கு கேட்டால் நெஞ்சில் பதியுமளவுக்கு வாசிப்பால் பதிவதில்லை. அவர்களுக்கு ஒலிநூல்கள் மிக உதவியானவை. செவியுணர்வு குறைந்தவர்களால் ஒலிவடிவை ரசிக்க முடியாது.

மௌனவாசிப்பு, உள்வாசிப்பு எப்போதும் ஆழமானதுதான். ஒரு படி மேலானதுதான். நமக்கு நாமே நடித்துக் கொள்வது அது. பிரதி நமக்குள்ளே நிகழ்வது. நாமன்றி ஆசிரியர்கூட இல்லாத நிலை. இலக்கியம் அவ்வாசிப்பை உத்தேசித்தே உருவாக்கப்படுகிறது.

ஆனால் சில நூல்களுக்கு மேலதிகமாக ஓர் ஒலியொழுங்கு உண்டு. தாளம் என்று சொல்லலாம். அவை செவியில் ஒலிக்கையில் மேலதிகமாக ஓர் அழகு கொள்கின்றன. அவற்றைச் சொல்லிப் பார்த்து வாசிக்கவேண்டும். அவ்வாறு வாசிக்காதவர்களுக்கு வாசிப்பை செவியில் கேட்பது உதவலாம்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 08, 2021 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.