குழந்தைகள் தேவையா?

அன்புள்ள ஜெயமோகன்,

2015 அமெரிக்கா வந்த புதிதில் ஒருநாள் அமெரிக்கரான என் மேலாளர் சுமார் 50 வயதைக் கடந்த பெண்மணி. அவர் எப்படி திருமணமான புதிதில் அவரும் அவர் கணவரும் குழந்தைகள் வேண்டாம் என்று முடிவெடுத்ததையும் அந்த முடிவிற்காக உறவினர்கள் எப்படி விமர்சித்தனர் என்று கூறினார். என்னைத் தூக்கிவாரிப் போட்ட தருணங்களில் ஒன்று அது.

என்னுடைய குழப்பம் எல்லாம் பிறகு எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதே? அதுவரை நான் அறிந்தது இரண்டே திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது, இரண்டு மணம்முடித்து பிள்ளை குட்டிகளுடன் வாழ்வது, மிஞ்சிப்போனால் குழந்தைப்பேறை தள்ளிப் போடுவது. இப்படியிருக்க திருமணம் உண்டு, ஆனால் குழந்தைகள் வேண்டாம் என்போரின் மனநிலையை புரிந்துகொள்ள நெடுநாட்கள் ஆகியது. இதுதான் cultural clash  போலும் என்று எண்ணிக்கொண்டேன்.

நம் சூழலில் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு பிரதான தேவைகளுக்காக குழந்தை பெற்றுக்கொண்டார்கள்.  சிறுவயதில் அம்மாவின் வசைகளெல்லாம் நினைவிற்கு வந்தது “நீ இப்போவே இப்படி பண்ற, கடைசி காலத்துல என்ன உக்காரவச்சு சோறுபோடுவியா?”

இவ்வாறிருக்க முதலாளித்துவ மனநிலையின் நீட்சிதான் மேலைநாடுகளில் குழந்தைகள் தேவையில்லை என்று எண்ணக் காரணம் என்று ஒருவாறு யூகித்தேன். அரசாங்கத்தின் ஓய்வுகால சலுகைகள், உள்கட்டமைப்பு, சார்பின்மை இவையும் பெரும்பங்கு வகிக்கும் என நினைக்கிறேன்.

இணையத்தில் சில நாட்களுக்கு முன் இந்த காணொளியை கண்டேன். காணொளியின் தலைப்பு “எனக்கு குழந்தை தேவையா?” (“Do I want kids?”). காணொளியைப் பார்த்தது முதல் அன்றாடம் மனதிற்குள் குழப்பமே எஞ்சுகிறது. எதற்காக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்? ஆதலால் உங்களுக்கு எழுதலாம் என்று எண்ணினேன்.

காணொளி கமெண்ட்களில் பலர் உலகம் வெப்பம் அடைந்துவிட்டது,  உலகம் அழிந்து கொண்டிருக்கிறது அதனால் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்ற தொனியில் பதிவிடுகிறார்கள். இது முற்றிலும் ஒரு புதிய கோணத்தை காட்டுகிறது. குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று நினைத்துக்கொள்ளும் அளவுக்கு உலகம் நாசமாகி விட்டதா என்ன? இல்லை, இணையம் மக்கள் மனதில் அப்படி ஒரு பதிவை பதித்துள்ளதா?

பல்வேறு காரணங்களால் பெரும்பாலான இந்தியத்தம்பதிகள் ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்கிறார்கள். என்றாவது ஒரு நாள் இந்தியாவிலும் தம்பதிகள் குழந்தைகள் வேண்டாமென்று முடிவெடுக்கும் காலம் வருமா?

அன்புடன்,
அருண்

***

அன்புள்ள அருண்,

இங்கே என் நட்புச்சூழலிலும் இலக்கியச் சூழலிலும்கூட குழந்தைகள் தேவையில்லை என்னும் முடிவில் இருக்கும் பல தம்பதியினரை எனக்குத் தெரியும். அதற்காக அவர்கள் சொல்லும் காரணங்கள் பல.

அ. உலகம் மோசமானதாக மாறிக் கொண்டிருக்கிறது. சூழியல் அழிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குழந்தைகளை உருவாக்கி விடுவது தவறு.

ஆ. வாழ்க்கை அனுபவிக்கப்பட வேண்டியது. அதற்குச் சுதந்திரம் தேவை. குழந்தைகள் பொறுப்பும் சுமைகளும் ஆக உள்ளன. தங்களுக்கு இருக்கும் மலையேற்றம் பயணம் போன்ற விசேஷமான வாழ்க்கைமுறைக்கு குழந்தைகள் ஏற்றவை அல்ல.

இ. குழந்தைகள் பெற்று குடும்பமாக ஆவது ஒரு வழக்கமான வாழ்க்கைமுறை. அதில் நம்பிக்கை இல்லை. வேறொரு வாழ்க்கை முறையை விரும்புகிறோம்.

இந்த மூன்று காரணங்களுமே சரியானவை அல்ல.

அ. இந்த உலகம் நூறாண்டுகள் முன்புவரை பெரும்போர்களும் தொற்றுநோய்களும் பஞ்சங்களும் கொண்டிருந்தது. சமூகப்படிநிலையும் அடக்குமுறையும் அடிமைத்தனமும் இருந்தது. இன்று அவற்றிலிருந்து விடுபட்டு ஒரு வசதியான வாழ்க்கையை வந்தடைந்திருக்கிறோம். நாளை இன்னும் மேலான வாழ்க்கையே வரும். இதுவே உண்மை.

உலகம் அழிவைநோக்கிச் செல்கிறது என்பதெல்லாம் சிலவகை சோர்வுவாதப் பார்வைகள் மட்டுமே. நூறாண்டுகளுக்கு முன்பு ஒவ்வொருவரும் சொந்தக் குழந்தைகளின் சாவை பார்த்தாக வேண்டும். ஒவ்வொருவரும் கடும் உடல்வலிகளைச் சந்தித்தாக வேண்டும். இன்று அத்தகைய வாழ்க்கை இல்லை. நாம் நம் பிள்ளைகளுக்கு நம் தந்தையர் தந்ததைவிட மேலான வாழ்க்கையையே அளித்துச் செல்கிறோம்.

இனிவரும் உலகம் எதுவாக இருக்கும், என்ன நிகழுமென்று அறுதியாக எவரும் சொல்லிவிடமுடியாது. அதை முடிவுசெய்வது நம் கையில் இல்லை. நம்மை இயற்கையை, பிரபஞ்சத்தை முற்றறிந்த ஞானிகளாக நினைப்பதன் ஆணவத்தையே உலகின் எதிர்காலம் பற்றிய மிகையான கவலை, உறுதிப்பாடுகளில் காண்கிறோம்.

உலகம் நாளையே அழியலாம், கோடி ஆண்டு நீடிக்கவும் செய்யலாம். நாம் அதில் ஓரளவுக்குமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை. நாம் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டு பிரபஞ்ச நியதிகளுக்கு வழிவிட்டு நம் இடத்தை உணர்ந்து அமைவதே நம்மால் செய்யக்கூடியது.

இயற்கை மனிதனுக்கு இட்ட ஆணைகளில் ஒன்று குழந்தைகளை பெற்று அடுத்த தலைமுறையை உருவாக்குவது. அதை நிறுத்திக்கொள்ளும் உரிமை எவருக்கும் இல்லை. குழந்தைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்திக் கொள்கிறோம். இயற்கையே தன் கடுமையான ஆயுதங்கள் வழியாக தகுதியுள்ளதை வாழச்செய்யும். ஆனால் அது வலிமிக்க துயர்மிக்க வழி. அந்த துயரை தவிர்ப்பதற்காக நாம் குறைவாக பெற்று அவற்றை தகுதியுடையவர்களாக ஆக்குகிறோம். அவ்வளவுதான்.

ஆ. உலகியலில் உள்ள மகிழ்ச்சி, சாதனை முதலிய எதன்பொருட்டும் குழந்தைகள் பெறாமல் இருப்பவர்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து நூறுரூபாய் மதிப்புள்ள பொருட்களைப் பெறுபவர்கள். உலகியலின் முதன்மை இன்பமும் நிறைவும் மக்கட்பேறே. வள்ளுவரைவிட அதை சிறப்பாக எவரும் சொல்லிவிடமுடியாது. அதில் பொறுப்பு, பதற்றம் ஆகியவை உள்ளன. ஆனால் உலகியலின் எந்த களியாட்டுக்கும் வெற்றிக்கும் அதைவிடப் பலமடங்கு பொறுப்பும் பதற்றமும் உண்டு. உலகியல் களியாட்டின் பொருட்டு வெற்றியின் பொருட்டு குழந்தைகளைத் தவிர்ப்பவர்கள் மெல்லமெல்ல வெறுமையை, இழப்புணர்வைச் சென்றடைவார்கள்.

இ. குடும்ப அமைப்புகள் உலகில் பல உள்ளன. பெருந்திரள் குடும்பம் என்னும் அமைப்பே பழங்குடிகளில் உள்ளது. கம்யூன்கள் உள்ளன. ஆனால் அனைத்துக்கும் நோக்கம் ஒன்றே. நன்மக்கள் பேறு. குழந்தைகளுக்குச் சிறப்பான வளர்ச்சிப்புலத்தை உருவாக்குவதே எந்தக் குடும்ப அமைப்புக்கும் அடிப்படை நோக்கம். குழந்தைகளில்லா குடும்பம் என்பது நோக்கம் அற்றது. வேறுவகை குடும்பம் என்றால் வேறுவகை குழந்தை வளர்ப்பு என்றே பொருள்.

ஒருவருக்கு இங்கே பிறந்தமையாலேயே சில கடமைகள் உண்டு. பெற்றோர் பேணல், சுற்றத்தாருக்கு உதவுதல். அந்தப்பொறுப்பை தட்டிக்கழித்தால் குற்றவுணர்வே எஞ்சும். தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவே மண்டையின் அத்தனை சொற்களையும் செலவிட்டு, எதிர்மறையானவர்களாக ஆகவேண்டியிருக்கும். எதிர்மறை இருப்பு என்பது உடலுடன் இருக்கும் சாவுநிலை.

பிறருக்குச் செய்யும் கடமைகளை தவிர்ப்பவர்கள் நடைமுறையில் தங்களுக்குப் பிறரும் எதுவும் செய்ய வேண்டாமென அறிவிப்பவர்கள்தான். இப்புவியில் அப்படி ஒரு வாழ்க்கை இயல்வதல்ல. அது தனிமையும் வெறுமையும் மட்டுமே கொண்டது.

சரி, குழந்தைகளை தவிர்த்தல் எந்நிலையில் ஏற்கத்தக்கது?

ஆன்மீகத்தின் பொருட்டு மட்டும்தான். அந்நிலையில் நூறு ரூபாய் கொடுத்து ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றை பெறுகிறோம். இழப்புதான், ஆனால் ஈட்டுவது பெரிது.

ஆன்மீகத்தின் வழிகள் மூன்று. கல்வி, சேவை, ஊழ்கம். மெய்ஞானத்தை கற்று அறிதல். எளியோருக்கும் உயிர்களுக்கும் சேவை செய்தல். ஊழ்கத்திலமர்ந்து நிறைவுகொள்ளல். மூன்றுக்கும் துறத்தல் அவசியம். முழுமையான துறத்தல் இலக்கு. ஆனால் சற்றேனும் துறக்காமல் அவற்றை அடையவே முடியாது.

உலகியல் துறப்பே ஆன்மீகத்திற்கான வழி. ஆடம்பரங்களை துறப்பது. வசதிகளைத் துறப்பது. உடைமைகளை துறப்பது. பெருமைகளைத் துறப்பது. அடையாளங்களைத் துறப்பது. அதன் ஒரு பகுதியாக குடும்பத்தையும் குழந்தைகள் பெற்றுக் கொள்வதையும் துறப்பது வருகிறது. காலகாலமாக அந்த வாழ்க்கைமுறை இங்கே உள்ளது

ஆனால் அதை வெறும் விழைவால் அல்லது விருப்புறுதியால் எவரும் இயற்ற முடியாது. அவ்வண்ணம் துறந்து வாழ்வதற்கு சரியான வழிகாட்டுதல்கள் வேண்டும். அதில் பல படிநிலைகள் உள்ளன. ஒவ்வொன்றாக கடக்கவேண்டும். ஒவ்வொரு நிலையிலும் சரியாகத்தான் செல்கிறோமா என நாமே நம்மை மதிப்பிடவேண்டும். நம்மை பிறர் மதிப்பிடவேண்டும். அதற்கான அமைப்பில் நாம் இருக்கவேண்டும்.

துறவு என்பது குடும்பம் போலவே தொன்மையான இன்னொரு வாழ்க்கைமுறை. குடும்பம் போலவே அங்கும் பிரச்சினைகள் உண்டு, நெறிகளும் உண்டு.

ஜெ

***

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 08, 2021 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.