மாபெரும் கம்பளம் பற்றிய கனவு [சிறுகதை]

பதினாலாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் தேங்காய் நாரினால் பின்னப்பட்ட தரைக்கம்பளங்களுக்கு யவன தேசங்களைச் சேர்ந்த பிரபுக்களிடையே மவுசு ஏற்பட்டதன் விளைவாக குளச்சல் முதல் கொச்சி வரையிலான பகுதிகளில் தொழில் மறுமலர்ச்சி ஏற்பட்டதாகவும், புதிய மாடம்பி வர்க்கமொன்று உருவாகி அதிகாரமும் செல்வமும் பெற்றுத் திருவிதாங்கூர் அரசர்களுக்கு தீராத தொல்லைகள் கொடுத்ததாகவும்  சரித்திரம் கூறுகிறது. கருவிலேயே குழந்தைகளுக்கு கம்பளம் பின்னும் கலை கற்பிக்கப்பட்டது. அரிய மந்திரங்கள் மூலம் அவற்றின் விரல்கள் தேவையானபடி வடிவமைக்கப்படுவதற்கு கணியான் என்ற ஜாதியே நியமிக்கப்பட்டிருந்தது.

குழந்தைகள் வெளிவந்த உடனேயே அவற்றை நார்களில் பிணைத்து விடுவதும் தன்னிச்சையாக அவற்றின் பின்ன ஆரம்பிப்பதும் சகஜமாக இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. கருப்பை உலகத்து வினோத வண்ணங்கள் கம்பளங்களின் கலைமதிப்பை ஒரே தூக்காகத் தூக்கி பாரீஸ் நகரத்துக் கலை விற்பன்னர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மலைச்சரிவுகளும் நதிகளும் கடலும் கூடி இணைந்த நிலப்பகுதியின் பறவைப்பாடலும் நீர் நெளிவும் வான் நீலமும் நார்களில் பதிந்து உருவான ஏற்றுமதிச் செல்வம் ஒரு கட்டத்தில் குறுமிளகு விற்பனையையே தாண்டியது என்று யவன யாத்ரிகரான ஹிராடடஸ் குறிப்பிடுகிறார்.

அவருடைய பயணக்குறிப்பு நூலில் அவர் குறிப்பிடும் பல நம்ப முடியாத செய்திகளில் ஒன்று பிரம்மாண்டமான கம்பளம் ஒன்றை நெய்யும் வாய்ப்பைப்பெற்ற -கீவ் நகரத்து மையக் கதீட்ரலில் விரிப்பதற்காக இருக்க வேண்டும் இது- ஒரு மாடம்பியின் அதீத உற்சாகத்தைப் பற்றியது. இவன் பெயரை ஹிராடடஸ் ‘யாப்பன்’ என்று குறிப்பிடுவதை அய்யப்பன் என்று திருத்தி வாசிக்க முடியும். அகஸ்தியர்கூட மலைக்கும் அரபிக்கடலுக்கும் இடையேயான நிலப்பகுதியை இவன் ஆண்டிருக்கக் கூடும் என்றும், பிரபலமான அய்யப்பன் மார்த்தாண்டன் என்ற மாடம்பிதான் இவன் என்றும், பிற்பாடு திருவனந்தபுரம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் அச்சுதன் குறுப்பு அவ்வளவாகப் பொருட்படுத்தப்படாத ஆய்வொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

அய்யப்பன் அக்காலத்தில் கலைஞர்களின் செயல்திறனை ஒருங்கிணைத்து கூர்மைப்படுத்தும் வழி முறைகளில் பிரதானமாக விளங்கி வந்த மரபை அடியொற்றி கம்பளம் பின்னும் குழந்தைகளை நடமாடவும் பேசவும் கேட்கவும் முடியாதவர்களாக ஆக்கியதாகவும் அவர்களை விரல்களில் காட்டு இருளுக்குள் அலைந்து திரிந்த மூதாதையரின் ஆவிகளை புள்ளுவப்பாட்டு மூலம் வசீகரித்து பிடித்தடக்கிக் கொண்டு வந்து குடியேற்றியதாகவும் ஐதீகம் குறிப்பிடுகிறது. மூதாதையரின் சன்னதம் கொண்ட குழந்தைகள் அசுர வேகத்தில் பின்னித்தள்ளிய கம்பளம் கடலலை போல சுருண்டு எழுந்ததாக ஒரு நாட்டுப்பாடல் வர்ணிக்கிறது.

பல்லாயிரம் சிறுவிரல்கள் போட்ட முடிச்சுகளில் வினோதமான எழுத்துகள் உருவாகிப் படிக்க முடியாத சொற்றொடர்களை தன்னிச்சையாக உருவாக்கின என்றும் அவை உருக்குலைந்தும் புதிதாகப் பிறந்து மர்மமாகப் பெருகின என்றும் தெரிகிறது. குழந்தைகள் பின்னும் செயலில் ஒன்றிப்போய் ஒரு தருணத்தில் கம்பளத்தின் வண்ணச் சித்திரங்களில் இரண்டறக்கலந்து மறைந்தன. எனவே கம்பளம் தன்னைத் தானே பின்னிக்கொள்ளும் அற்புதம் நிகழ ஆரம்பித்தது. கம்பளம் தேவையான அகலத்துக்கு பின்னப்பட்ட போது அய்யப்பன் மார்த்தாண்டன் உற்பத்தியை நிறுத்த ஆணையிட்டான்.

ஆனால் குழந்தைகளின் விரல்கள் தவிர வேறு உறுப்புகள் அனைத்தும் முழுமையாக இறந்துவிட்டிருந்தன. மந்திரங்கள் மூலம் மூதாதையரின் ஆவிகளைப் பிடித்துத் திரும்ப காடுகளுக்குச் செலுத்த முயன்றபோது அவை கம்பளத்தின் இருண்ட கட்டங்களுக்குள் புகுந்து கொண்டு போக்குக் காட்டின. கோபமும் அச்சமும் கொண்ட மார்த்தாண்டன் பின்னும் விரல்களைத் துண்டித்து குழந்தைகளை அழிக்கும்படி ஆணையிடவே வாளுடன் அலைந்த கிங்கரர்கள் மகத்தான கம்பளத்தின் பல்லாயிரம் பிம்பங்களிடையே கண்மயங்கித் தவித்து இறுதியில் அவற்றினூடே தாங்களும் பிம்பங்களாகச் சிக்கிக்கொண்டார்கள். பிம்பங்கள் கலந்து அலையலையாக முகங்கள் நிறைய கம்பளமானது நாலாதிசைகளிலும் பொங்கி விரிந்து கொண்டிருந்தது.

தரையில் விழுந்த தண்ணீர் பரவுவது போல என்கிறது அந்த நாட்டுப்பாடல் அய்யப்பன் மார்த்தாண்டன் மீதும் கிங்கரர்கள் மீதும் அரண்மனைகள் மீதும் கம்பள வியாபாரிகளின் கடைவீதிகள் மீதும் அனந்த பத்மநாப சாமி ஆலயத்தின் மீதும் கம்பளம் விரிந்து பரவியது. கிழக்கே அரபிக்கடலையும் மேற்கே அகஸ்தியர்கூட மலைகளையும் அடைந்து அது விரிந்து சென்றது. கடலின் ஆழத்தில் நீலநிறப்படுகையின் ஒளியை உள்வாங்கியும் காட்டின் அடர்த்திக்குள் பச்சை இருட்டில் கரைந்தும் கம்பளம் வளர்ந்து செல்வதாக வெகுகாலம் நம்பப்பட்டு வந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் இக்கடற்கரையும் மலைச்சரிவும் முழுமையாக மறக்கடிக்கப்பட்டுவிட்டன.

பிற்காலத்து ரொமான்டிக் கவிஞன் “வானத்து அதீத சக்திகளின் மகத்தான் பாதங்கள் தோய இயற்கை விரித்த மாபெரும் கம்பளம்” என்று இப்பகுதியின் அடர்ந்த காட்டைப்பற்றிப் பாடியிருப்பது மட்டுமே ஒரே இலக்கியக்குறிப்பு எனலாம். கம்பளம் பின்னும் குழந்தைகளின் வெறும் கனவு என்று யதார்த்தவாதிகளினால் இது குறிப்பிடப்படுகிறது என்றாலும் இப்பாடலைப் பாடும்போது கம்பளம் பின்னுவது எளிதாக ஆவதாக  இளம் தொழிலாளிகள் கூறி என் இளம்வயதில்  கேட்டிருக்கிறேன்.

[மூன்று சரித்திரக்கதைகள்-2, சுபமங்களா 1993]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 06, 2021 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.