விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 7
அன்புள்ள ஜெ
நலம்தானே? ‘ செய்தி வாசித்தேன். இதென்ன, கவிஞனைப் பற்றி சென்சிபிளாக எழுதுமளவுக்கு தமிழக ஆங்கில ஊடகங்களும் இதழாளர்களும் தேறிவிட்டார்களா என்று திகைத்துவிட்டேன். அதன்பின் வாசித்தால் எம்.டி.சாஜு. மலையாளி. சரிதான். நன்றாகவே தயாரித்து பலரிடம் விசாரித்து எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். சிறப்பு. விக்ரமாதித்யனைப்பற்றி ஆங்கிலத்தில் வெளிவரும் முதல் குறிப்பு என்றும் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.
சந்திரசேகர்
அன்புள்ள ஜெ,
விக்ரமாதித்யன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டதை ஒட்டி வெளிவரும் கடிதங்களும் மகிழ்ச்சி அளிக்கின்றன. அவரைப்பற்றி பலரும் பேசியிருந்தாலும் வாசகர்களுக்கு அவரைப்பற்றி எதையாவது சொல்வதற்கான ஒரு தருணமாக இருக்கிறது இது என்று நினைக்கிறேன். நான் ஆன்மிகமான வாசிப்பு உள்ளவன். பல ஆண்டுகளுக்கு முன் பாம்பன் சுவாமிகளின் வழி வந்த ஒருவரிடம் தீட்சையும் பெற்றுக்கொண்டேன். நவீன இலக்கியமெல்லாம் அதிகம் வாசிப்பதில்லை. ஆனால் எப்படியோ விக்ரமாதித்யன் அறிமுகமானார். அவருடைய கவிதைகளிலுள்ள சைவம் எனக்கு பிடித்தமானது.
விக்ரமாதித்யன் அவர்களுடையது சித்தர்மரபு வந்த சைவம் என்று சொல்லவேண்டும். அதில் ஈசனுடன் ஒரு சகஜஸ்திதி உள்ளது. நாயன்மார்களிலே இதைக் காணமுடியாது. சித்தர்களில் இதைக் காணலாம். அவர்களும் சிவனைப்போலவே வேண்டுதல் வேண்டாமை இலாதவர்கள்தான். விக்ரமாதித்யனுக்கு சிவனுடன் இருக்கும் அணுக்கமும் உறவும்தான் முக்கியமானவை.
அவரை காலம் ஒரு சித்தகவிஞர் என்று அடையாளப்படுத்தும். இன்றைக்கு அவருடைய கவிதைகளிலுள்ள இந்த ஆன்மிகமான ஆழத்தை அறியாத நவீன இலக்கியவாதிகளும் குடிகாரர்களும்தான் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள். அவர் அவர்களுக்கு அப்பாற்பட்டவர். அவரை எவர் படிக்கவேண்டுமோ, அவரை எவர் படித்தால் அவர்களுக்கு புரியுமோ அவர்கள் அவரை இன்னமும் படிக்கவில்லை. அவ்வாறு படிக்க ஆரம்பிக்கும்போதுதான் அவரை அவர்கள் கண்டடைவார்கள். நவபாஷாணம் என்ற கவிதைதான் தமிழ் கவிதையிலே இந்த நூற்றாண்டிலே பாரதிக்குப்பிறகு எழுதப்பட்ட மிகச்சிறந்த கவிதை.
செல்வ ராஜகணபதி
***
அன்புள்ள ஜெ
விக்ரமாதித்யன் கவிதைகளை பலகாலமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். என் பிரிய கவிக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சூழலில் இருக்கும் மௌனம் வருத்தம் அளிக்கவுமில்லை. என்றைக்குமே நாம் கவிஞர்களைப் பொருட்படுத்தியவர்கள் அல்ல. கவிஞர்களுக்கு எந்தச் சிறப்பும் செய்தவர்கள் அல்ல. ஆனால் எங்கோ கவிஞனை அவன் வாசகன் கொண்டாடிக்கொண்டேதான் இருக்கிறான்.
அவ்வாறு வாசகன் நினைவில் நின்றிருக்கும் சில வரிகள் இருக்கும். அவற்றின் வழியாகவே கவிஞன் சரித்திரத்தில் வாழ்கிறான். விக்ரமாதித்யன் அண்ணாச்சியின் கவிதைகளில் எனக்கு பிடித்தமான கவிதை ஒன்று உண்டு. அது எனக்கே எனக்கான கவிதை. அதை ஒரு தமிழ்க்கவிஞன் மட்டும்தான் எழுதமுடியும். காதல்கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் இந்தக்கவிதையிலுள்ள துக்கம் புரியாது. இது ஒன்றும் வெற்றுத்தத்துவமோ அரசியலோ இல்லை. இது வாழ்க்கை. இந்த கவிதையை வாசிக்கவும் ரசிக்கவும் வாழ்ந்து அறிந்த உண்மை ஒன்று நமக்கு இருக்கவேண்டும்
எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு
முதன் முதலில்
கோழிதான் கேட்டது
கஷ்டப்படுத்தவில்லை வேறே
பிறகு பிறகு
கடாய் வெட்ட சொல்லியது
குறைவைக்கவில்லை அதையும்
இப்பொழுது
என்னையே பலியிட வேண்டும் என்கிறது
எங்கே ஒளிந்துகொள்ள .
என்னுடைய தெய்வமும் தன்னையே பலியிடும்படிச் சொல்லியது. பலிகொடுப்பேனா என்று தெரியவில்லை. என் தெய்வம் எனக்கு பின்னாலேயே இருக்கிறது. என் அப்பன் பாட்டன் பூட்டனை எல்லாம் பலிகேட்ட தெய்வம்தான் அது. ஏகப்பட்ட மண்டையோடுகளை அது மாலையாகச் சூட்டியிருக்கிறது. விக்ரமாதித்யனுக்கு அந்த தெய்வம் என்ன என்று தெரியாது. எனக்கு அது என்ன என்று தெரியும். நிழல் மாதிரி பின்னாடியே இருந்துகொண்டிருக்கிறது
எஸ்.கதிரேசன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

