கல்வி இரு உரைகள், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நீங்கள்  சென்னை SRM கல்லூரியிலும் பிறகு நாகர்கோயில் UNCNல் உரையாற்றியதையும்  இப்போது குத்துமதிப்பாக நூறாவது தடவை பார்க்கிறேன். என்னை மிகவும் பாதித்த உரைகள் அவை. எனது கல்லூரி படிப்பை உண்மையிலே நான் கற்றதில்லை என்ற எண்ணம் படிக்கும்போதே இருந்தது. ஆதலால் ஒரு ஆதங்கத்திற்காக இப்போது கல்லூரிகளில் நடக்கும் கருத்தரங்குகள், கலை நிகழ்வுகளை பார்ப்பது வழக்கம்.

SRM கல்லூரியின் TEDXல் நீங்கள் பேசிய பேச்சில் இருந்துதான் எனக்கு பின் நவீனத்துவம் புரிய ஆரம்பித்தது. அந்த உரையில் நீங்கள் கூறிய இரு துறவறங்கள்  எவ்வளவு முக்கியமானது என என் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் உணர்ந்துகொண்டு இருக்கிறேன். பிரம்மசரியம் என்பது எந்த துறையை நாம் படிக்க ஆரம்பிக்கிறோமோ அந்த துறையை பிரம்மமாக கண்டு அதை ஆராதித்து விவாதித்து விமர்சித்து அனுபவித்து தொகுத்து அதையே எண்ணி உலகின் எந்த சபலத்திற்கும் ஆளாகாமல் ஒரு கூட்டு புழு பருவம்போல் சிறகை வளர்த்துகொள்வது என்று கூறியதும், கல்வி என்பதும் அறிதல் என்பதும் உண்மையிலே மிகவும் மகிழ்ச்சியை கொடுக்ககூடியது என்று கூறியதும் பெரிய திறப்பாக எனக்கு முதலில் கேட்கும்போது அமைந்தது. இன்றும் வாரத்தில் ஒருமுறையாவது அதை கேட்காமல் இருந்ததில்லை.

UNCNல் நீங்கள் ஆற்றிய உரையில்  “கான்செப்டை [ஐடியாக்களை]  புரிந்து கொள்வது என்றால் உதாரணத்திற்கு புவி ஈர்ப்புவிசை என்ற கான்செப்ட்டை உண்மையாகவே புரிந்து கொண்டாய் என்றால் புவி ஈர்ப்புவிசை இல்லை என்று ஒரு இருபது நிமிடம் வாதாடு” என்று நீங்கள் கூறிய கான்செப்டே எனக்கு புரிந்துகொள்ள ஒரு மாதம் ஆகியது. விமானம், கப்பல், பறவை, வவ்வால் என்று ஆராய்ந்துவிட்டு ஒன்றும் தேராமல் புரியாமல் கடைசியில் உங்கள் பேச்சில் நீங்கள் சோதனை செய்ததாய் கூறிய படிப்புக்கும் சுகாதாரதிற்குமான சம்பவத்தையே எழுதி எழுதி பார்த்தும்  முரணியக்கம் என்ற ஒன்றை உங்கள் கட்டுரைகளில் படித்து உணர்ந்தும்தான் புரிந்துகொண்டேன்.

இப்போதும் என் மனம் எதற்கும் சரியான உவமையை கண்டடைந்ததில்லை. இனி உலகை ஐடியாக்கள்தான் ஆளப்போகின்றன என்பதும்,அந்த ஐடியாக்கள் மனதுக்குள் உருவாக அல்லது கற்பனை செய்ய புனைகதையை வாசித்து புரிந்து கொள்வதும், அதன் விவரிக்கமுடியாத மன எழுச்சியை அல்லது மனம் முட்டி திகைத்து நிற்கும் தருணத்தை அறிந்து கொள்வதும் நல்லது என கூறினீர்கள். இலக்கியம் எதற்கு என்றால் இதுவரைக்கும் இல்லாத ஒரு விஷயத்தை கற்பனையாக கனவு  வடிவில் உருவாக்கி கொள்வதற்கு என்று நீங்கள் கூறியதை எல்லாம் இப்போதும் என் மனதிற்குள் விவாதித்துகொண்டு இருக்கிறேன்.

கனவு,கற்பனை,உள்ளுணர்வு மூன்றையும் கொண்டு ஒரு ஐடியாவை உருவாக்கி அதை சுவாராசியமாக மற்றவர்களிடம் விளக்க மொழித்திறன் எவ்வளவு முக்கியம் என்பதையும் அதற்கு இலக்கியம் வாசிப்பது எவ்வளவு முக்கியம் என்றும் உங்களின் உரையில் இருந்துதான் உணர்ந்து கொண்டேன்.

எவ்வளவு வயதானாலும் குழந்தையை தன்னுள் தக்கவைக்கவில்லையென்றால் படைப்பூக்கம் இருக்காது என இதில் கூறியது போலவே சமீபத்தில் கலாட்டா.காம் இன்டர்வியுவிலும் கூறியிருக்கிறீர்கள். அப்படி ஒரு குழந்தை உங்களிடம் இருக்கிறது என்பது அந்த பேட்டியில் தெரிந்தது. உண்மையான உலகமும் சந்தோஷமும் குழந்தைகளுக்குதான்.

நன்றி சார்.

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.