எழுதி வரும் புது நாவல் ‘மிளகு’வில் இருந்து- சபோலாவும் பச்சைக் கற்பூரமும் வாசனையடிக்கும் அரண்மனைக் காலையுணவு

எழுதி வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி (சீராக்கப்பட வேண்டிய பிரதி)

குறிப்பு – இங்கே தரப்படும் சிறு நாவல் பகுதிகள் எந்த வரிசையிலும் வருகின்றவை அல்ல.

——————————————————-
“மகாராணி அவர்களின் அறுபதாம் பிறந்த நாள் கொண்டாட்டம் மிக சிறப்பாக இருந்தது. அந்த விருந்து என்ன சுவை இன்னும் நாவில் உண்டு.”

பெத்ரோ நிஜமாகவே லயித்துச் சொன்னார். சென்னா தேவியின் முகம் மலர்ந்தது. கை இரண்டையும் கூப்பி எல்லாம் இறைவன் செயல் என்றாள். பிரதானி மொழிபெயர்க்கவில்லை அதை. அவரும் வணங்கினார்.

பிறந்தநாள் சாப்பாடு விஷயத்தில் நான் ஒரு விஷமம் செய்தேன். கண்கள் மின்ன பெத்ரோ சின்னப் பையன் போல் குறும்பு மிளிரச் சொன்னபோது மகாராணிக்கு வியப்பும் உதட்டில் மாறாத புன்சிரிப்பும். அதென்ன குறும்பு?

அந்த வாழைப்பூக் குடுவையில் வைத்த உணவு. என் வீட்டுப் பணியாளர்களுக்குத் தெரு முனையில் கொடுத்தபோது அதிகமாக ஒரு குடுவை கேட்டு வாங்கிவரச் சொல்லியிருந்தேன். எனக்கு ஒன்றல்ல இரண்டு கிடைத்தது. ராத்திரி இரண்டையும் சற்றே சூடுபடுத்திச் சாப்பிட்டேன். அடடா ஓ அடடா. அதுவும் அற்புதமான சுவைதான் மகாராணி. தினசரி உங்கள் பிறந்தநாள் வரக்கூடாதா என்று ஏக்கமாக இருக்கிறது.

பெத்ரோ சொல்லி முடிப்பதற்குள் சென்னபைரதேவி கலகலவென்று சிரித்தாள். அறுபது வயதிலும் அவள் சிரிப்பு வனப்போடு ஒலித்ததை பெத்ரோ கவனிக்கத் தவறவில்லை.

அடடா நான் சாப்பிடாமல் போய் விட்டேனே என்று அவள் அங்கலாய்த்தபடி நஞ்சுண்டையாவைக் கேட்டாள் – நீங்க உண்டீர்களா?

நானும் தவறவிட்டு விட்டேன் என்று குரலில் ஏமாற்றம் தெரியக் கூறினார் அவர். மறுபடி சிரித்தாள் மகாராணி. “போகிறது அடுத்த பிறந்தநாளுக்கு போர்ச்சுகல் அரசப் பிரதிநிதி நமக்கு அதேபோல் விருந்து அளிப்பார்” என்றார் மகாராணி அடுத்து. அவருடைய அரசரின் பிறந்தநாள் அல்லது அவருடைய பிறந்த நாளாக இருக்கும் அந்த நல்ல நாள்”.

உடனே மறுபடி எழுந்து குனிந்து வணங்கினார் பெத்ரோ. இன்றைக்கு அவர் முக்கியமான வர்த்தக உடன்படிக்கை ஒன்றை அல்லது சிலவற்றை அரசியின் கையொப்பத்தோடு பெறப் போகிறார். அல்லது அதற்கான முதல் செயல்களை நடந்தேற வைக்கப் போகிறார்.

“கள்ளிக்கோட்டையில் என்ன ஆச்சு?” முக பாவத்தை சிரிப்பு இல்லாமல் துடைத்து அரசாங்க முகம் காட்டினாள் மகாராணி திடீரென்று. பெத்ரோ அதை எதிர்பார்க்கவில்லை. கள்ளிக்கோட்டையில் நடந்தது கவலையளிக்கும் செயல்தான். அதற்காகத் தன்னைத் தனியே கூப்பிட்டுக் கண்டிப்பான தொனியில் ஏதும் சொல்வாள் மகாராணி என்று எதிர்பார்த்திருந்த பெத்ரோவுக்கு இந்தத் திடீர் விசாரணை சிரமமான ஒன்றுதான்.

கள்ளிக்கோட்டையில் மலையாளக் குடியானவர்கள் பெயரில் மிளகு பயிரிட்டு விளைச்சலை அங்கே இருக்கும் போர்த்துகீசியர்களுக்கு விற்பதாகக் காட்டி அவர்களுக்கே முழுதும் அளித்துவிட்டு அதற்கான கூலி வாங்கிக் கொள்வது என்று சில வருடமாக நடக்கிறது. போன வாரம் அது சம்பந்தமாக அந்த மிளகு விவசாயத்தில் தொடர்புடைய இரண்டு போர்ச்சுகீசியர்களும் அவர்கள் நியமித்த மலையாளி விவசாயிகளும் விளைச்சலில் பங்கு, அதிக விவசாயக் கட்டணம் கேட்டு, மறுத்துப் போராடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு போர்த்துகீசியர் பெத்ரோவின் மாமனார். இன்னொருவர் அவருடைய தம்பி. இரண்டு பேரும் பல வருடமாக காசு கொடுத்து மிளகு விவசாயம் செய்து விளைச்சல் வாங்கும் வேலையைச் செய்து வருகிறார்கள். போர்த்துகீஸ் நாடாளுமன்றம் அதை வெகுவாகக் கண்டித்திருப்பதோடு, போர்த்துகல் அரசரும் அபராதம் விதித்திருக்கிறார். அதெல்லாம் ஒரு வாரம் முன்னால் நிகழ்ந்தது. அதற்குள் சென்னபைரதேவிக்குத் தெரிந்து விட்டதா?

மன்னிக்கவும் மகாராணி. நானே உங்களை தரிசித்து இது பற்றிப் பேச நினைத்திருந்தேன். இன்று தரிசன வேளையில் முதலாவதாக அதைத்தான் பேச இருந்தேன். அதேபடி…

மகா தவறு. மகா தவறு. நீங்கள் இங்கே வணிகம் செய்ய வந்தவர்கள். சொத்து சுகம் வாங்கி நாடு பிடிக்க வந்தவர்கள் இல்லை. போர்ச்சுகீசியர்கள், ஒலாந்துக்காரர்கள், இங்கிலீஷ்காரர்கள் யாருக்கும் குடியுரிமை கிடையாது என்று உங்களை எங்கள் கடற்கரையில் கப்பல் இறங்கும்போதே காகிதம் கொடுத்துக் கையொப்பம் வாங்கித் தெரிவித்திருக்கிறோம். இப்படி போர்ச்சுகீசியர்கள், அதுவும் ராஜப் பிரதிதியான உங்கள் உறவினர்கள் செய்வது மகா தவறு. நீங்கள் இது தெரிந்ததும் சொல்லி இருக்கலாம்.

சென்னாதேவி நிறுத்தி நிதானமாகப் பேச துபாஷி அதே ஏற்ற இறக்கத்தோடு போர்ச்சுகீஸ் மொழியில் அதை மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். தலை குனிந்து நின்றபடி அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் பெத்ரோ

இன்னும் ஒரு மாதத்துக்குள் காகிதம் அனுப்பியதற்கு உங்கள் அரசர் நடவடிக்கை என்ன எடுத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியவேண்டும். இதில் சம்பந்தப்பட்ட போர்த்துகீசியர்கள் நாடு திரும்ப வைக்கப்பட வேண்டும். உங்கள் மாமனார் உட்பட சகலமானவர்களும்.

பெத்ரோவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவருடைய மாமனார் ப்ரான்சிஸ்கோ தன் இருபதாம் வயதில் லிஸ்பனில் இருந்து கள்ளிக்கோட்டை வந்தவர். இப்போது அறுபத்தைந்து வயதில் அவருக்கு கள்ளிக்கோட்டை பழகிய அளவு லிஸ்பன் தெரியாது. அவருக்குக் குடியுரிமை. சட்டென்று நினைவு வந்தது பெத்ரோவுக்கு.

மாண்புமிகு மகாராணி அவர்களே, தெண்டனிட்டுத் தெரிவிக்கிறேன். என் மாமனாருக்கு மலையாள பூமி குடியுரிமை கள்ளிக்கோட்டை சாமுரின் வழங்கியிருக்கிறார் என்பதால் அவரை திரும்ப அனுப்புவது அதுவும் இங்கே ஐம்பது வருடம் வசித்த பிறகு, ஒரு மலையாளம் சரளமாகப் பேசும் ஒரு இந்தியனாகவே வாழும் பொழுது திருப்பி அனுப்பினால் அரசியல் சிக்கல் ஏதும் ஏற்படுமா தெரியவில்லை.

அவர் சொல்லி முடிக்கும் வரை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் சென்னபைரதேவி.

ஓ அவருக்கு குடியுரிமை உண்டா? போகட்டும். இந்த முறை நான் இங்கே மன்னிக்கிறேன். உங்கள் அரசர் மன்னிப்பதும் இல்லாமல் போவதும் அவர் இஷ்டம். ஆனால் மறுபடி அவர் பேரில் புகார் வந்தால் எங்கள் நாட்டு தண்டனையாக விதிக்கப்பட்டவை நிறைவேற்றப்படும்.

நிச்சயம் அப்படி எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். பெத்ரோ சொல்லத் தலையாட்டிக் கேட்ட அரசி முகம் மறுபடி மலர, பெத்ரோ கொண்டு வந்த சிறு பேழையைக் கொடுத்தார். அதன் உள்ளே இருந்த சிறு கடியாரத்தை ஆசையோடு பார்த்தாள் மகாராணி.

இந்தக் கடியாரத்தில் எப்படி நேரம் பார்க்கிறது என்று என் மகன் நேமிநாதனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு இதைப் பயன்படுத்துவேன்.

ராணியம்மா சொல்ல, பெத்ரோ ஆச்சரியத்தை முகத்தில் காட்டாமல் இருந்தார். இந்தச் சிறிய காரியத்தைக் கூட மகனிடம் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அளவு அவன் மேல் சார்ந்திருக்கிறாள். இந்த முக்கியமான, போர்த்துகல் ராஜ பிரதிநிதியிடம் புகார் சொல்லும் நேரத்தில் அவன் இல்லாமல் எப்படி இந்தச் சந்திப்பு நடக்கிறது என்ற ஆச்சரியம்தான்.

மகாராணியார் அனுமதி கொடுத்தால் ஒரே நிமிடத்தில் இந்த கடியாரத்தில் எப்படி நேரம் பார்ப்பது என்று தெரிவிக்கிறேன். உங்கள் மற்றும் இளவரசர் நேரம் இதற்காகச் செலவிடாமல் மற்றப் பணிகளுக்கு செலவழிக்கலாம்.

பெத்ரோ சொல்ல, அதுவும் சரிதான், எங்கே சொல்லுங்கள் என்றபடி அருகே நின்ற ஊழியர்களைப் பார்க்க, அவர்கள் குறிப்புணர்ந்து அரசியாரின் ஆசனத்தைச் சற்றே பெத்ரோ பக்கம் நகர்த்தினார்கள்.

சின்ன முள், பெரிய முள், வினாடி முள், மணி நேரத்துக்கான அரேபிய எண்கள், மணி பார்ப்பது என்ற இரண்டே நிமிடத்தில் கற்றுக்கொண்டாள் அரசி. தன் சங்கிலிக் கடியாரத்தை முள் முன்னே பின்னே போக வைத்து நேரம் என்ன என்று சொல்ல இன்னும் இரண்டு நிமிடம் பயிற்சியும் ஆனது.

மகாராணியிடம் கிராம்பும் ஏலமும் பச்சைக் கற்பூரமும் கலந்த வாசனையும் அதை மீறி சற்றே வெங்காய வாசனையும் அடித்தது கவனிக்க பெத்ரோவுக்கு ஆசுவாசமாக இருந்தது. மிளகை கொடுத்துவிட்டு சபோலா, என்றால் வெங்காயம், மற்றும் மிளகாயை இங்கே கொண்டு வர எல்லோரும் ஆர்வம் காட்டுகிறதாக அவருக்குத் தோன்றுவது சரிதான் என்று இப்போது புலப்பட்டது. மிர்ஜான் கோட்டைக்குள்ளும் அரச உணவில் கலந்து வெங்காயம் பயன்படுத்தப் படுகிறது. மிளகாயும் ஊரில் அங்கே இங்கே பயனாகிறது. வீடுகளில் மிளகாய் கடித்து சோறு உண்கிறவர்களின் சந்தோஷமான உரைப்பு அனுபவிப்பை அவர் சாரட்டில் சவாரி செய்யும்போது கவனித்திருக்கிறார். சோறோடு கூட ஒரு சிட்டிகை உப்பும் ரெண்டு பச்சை மிளகாயும் இருந்தால் சோறு கடகடன்னு தொண்டைக்குள்ளே இறங்காதா என்று இந்தியக் கிராமங்களில் எளிய விவசாயிகள் வரை மிளகாயைத் தத்தெடுத்து இருக்கிறார்கள் என்பது பெத்ரோவுக்குச் சந்தோஷமளிக்கும் தகவல். அவர்கள் யாரும் மிளகைப் பயன்படுத்துகிறவர்கள் இல்லை.

”காலை உணவு உண்டீர்களா, பெத்ரோ அவர்களே” ராணி கேட்டாள். உண்டேனம்மா. பணிவாகச் சொன்னார் பெத்ரோ.

Fort Mirjon Pic Ack wikimedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 11, 2021 19:17
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.