படையல் [சிறுகதை]

காலையில் இருந்தே மெல்லிய மழை பெய்துகொண்டிருந்தது. விடாமல் பிசுபிசுவென்று இறங்கிய தூறல் வானை முற்றிலுமாக மறைத்து, அந்தியை சீக்கிரமே கொண்டுவந்தது.மரங்களின் இலைகள் பளபளத்து அசைந்து நீர்த்துளிகளைச் சொட்டிக்கொண்டிருந்தன. நயினார் முகம்மது எங்கிருந்தோ கொஞ்சம் விறகுக்கட்டைகளை எடுத்துவந்தார்.அவற்றை கல்மண்டபத்தின் ஓர் ஓரமாக போட்டார். அவை நனையாமலிருக்க பழைய பாய் ஒன்றால் உருட்டி கட்டியிருந்தார்.

அங்கே அமர்ந்திருந்த ஆனைப்பிள்ளைச் சாமி “எங்கேருந்து எடுத்தே பாய்?”என்றார். “நல்ல உலந்த வெறகா இருக்கே? இந்த மளையிலே”

“பாத்துட்டே போனேன் சாமி. எல்லா எடமும் நனைஞ்சு சொட்டுது. மளை தொடங்கி பதினெட்டுநாள் ஆச்சுல்லா?”என்றார் நயினார் முகம்மது. “எல்லா எடமும் நனைஞ்சிருதது. அப்ப ஒரு குடிசையை பாத்தேன். அப்டியே சரிஞ்சு விளுந்து போட்டுது. உள்ள ஆருமில்லை. நாலைஞ்சு உடைஞ்ச சட்டிபானை மட்டும்தான். உளுது வெள்ளாமை போட்டிருக்கான். அதையும் அப்டியே விட்டுப்போட்டு ஓடியிருக்கான். குடிசைபோட்டிருந்த கட்டைங்களை அப்டியே எடுத்துட்டு வந்துட்டேன்… ரெண்டுநாளைக்கு போரும்…”

“அப்டியே மேக்கே போயிப்பாரு. அந்தப்பக்கம் திருணாமலை வரை இப்டி உடைஞ்ச குடிசைங்க ஆயிரமாவது இருக்கும். நீ சாவுறது வரை குளிரு காயலாம்” என்றார் மூலையில் ஒடுங்கியிருந்த சாம்பிராணி மஸ்தான்.

“தீ கடையணுமே”என்றார் நயினார் முகம்மது. “கல்லு வச்சிருக்கேரா சாயவு?”

“இந்தா” என்று சாம்பிராணி மஸ்தான் இரண்டு சிறிய கற்களையும் பஞ்சுத்திரியையும் நீட்டினார். “சாம்பிராணிவச்ச பஞ்சு… சமைஞ்சபுள்ள சிரிக்கிறாப்பிலே பத்திக்கிடும்”

ஆனைப்பிள்ளை சாமி விறகை அடுக்கி குவியலாக்கினார். முற்றிக் காய்ந்த மூங்கில்கழிகள் இரண்டு இருந்தன. அவற்றை தரையில் அறைந்து உடைத்து சிம்புகளாக்கி அடுக்கினார். நயினார் முகம்மது கற்களை உரசியதுமே பஞ்சு புகைந்து பற்றிக்கொண்டது. அந்த நெருப்பை மூங்கில்சிம்புகள் நடுவே வைத்து ஊதி ஊதி அனலை எழுப்பினார். அவை தயங்கியபடி பற்றிக்கொண்டன.

ஆனைப்பிள்ளை சாமி உடலை உந்தி எழுந்து அருகே வந்து தணலில் தன் சிலும்பியை பற்றவைத்துக்கொண்டார்.

“ஓய் ஓய், பொளுது இருட்டட்டும் ஓய்”என்றார் சாம்பிராணி மஸ்தான்

“இருட்டியாச்சு”என்றார் ஆனைப்பிள்ளை சாமி

“அது மளை இருட்டு”

”இருட்டாச்சுன்னா ராத்திரிதான்”

“கிரகணம் ராத்திரியாயிருமோ?”

”இரும், இப்ப என்ன? ராத்திரியா பகலான்னு தெரியணும், அவ்ளவுதானே? பாவா கிட்டேயே கேப்போம். ஏன் பாவா இப்ப ராத்திரியில்லா?”என்றார் ஆனைப்பிள்ளை சாமி

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று மண்டபத்தின் தெற்குமூலையில் சரிகை தொப்பி வைத்து பச்சை சால்வையப் போர்த்தி அமர்ந்திருந்த எறும்பு பாவா சொன்னார்.

“கேட்டாச்சுல்லா? பாவா சொல்லியாச்சு”

“வாப்பா எப்பமும் அதொண்ணுதானே சொல்லுவாரு?”என்றார் சாம்பிராணி மஸ்தான்

“அப்ப நீரு இப்ப பகலான்னு கேட்டுப்பாரும் ஓய்”

“அதெப்பிடி , வாப்பா சொல்லியாச்சுல்லா?”

“அப்ப வாயை மூடிட்டிரும்” என்றார் ஆனைப்பிள்ளை சாமி

“என்னா இருட்டு… இந்த மாதிரி இருட்டு உண்டுமா? மை போலே மானத்திலே இருந்து எறங்கிட்டிருக்கே”என்றார் சாம்பிராணி மஸ்தான்.

“எல்லாம் ஒரே இருட்டுதான்… அம்மையிருட்டுக்கு ஆயிரம் குட்டி இருட்டு” என்ற ஆனைப்பிள்ளை சாமி தீயை ஊதி ஊதி சிலும்பியை கனியவைத்தார். இருமிக்கொண்டு புகையை இழுத்து நெஞ்சில் நிறுத்தி சிவோஹம் என உறுமியபடி மூக்குவழியாக ஊதினார். அவரைச் சுற்றி ஒரு குட்டி மேகம் பறந்தது. கனைத்தபடியும் செருமியபடியும் மீண்டும் இழுத்தார். கையை தரையில் இரண்டு முறை அடித்தபின் பாடினார்.

“இருட்டுக்கு இருட்டான ஒளியே அல்லவோ? என்-

மருட்டுக்கு மருந்தான நோயே அல்லவோ?

கருத்துக்கு கருத்தான கருமையே அல்லவோ? இக்-

கருணைக்கும் கரவுக்கும் காரணமே அல்லவோ?”

அவர் குரல் காட்டுவிலங்கின் குரல்போல கடுமைகொண்டிருந்தது. அது கற்பாறை உருகிநெகிழ்வதுபோல் குழைந்தது.

“சொல்லிச் சொல்லி கண்ட சொல்லல்லவோ?- நான்

சொல்லாமல் விட்டுவிட்ட சித்தமே அல்லவோ?

எண்ணி எண்ணி சேர்த்த எண்ணமே அல்லவோ?- நான்

எண்ணாத வெளியான ஏகாம்பரம் அல்லவோ?”

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்றார் எறும்பு பாவா

மஸ்தான் “செரி, ஒரு இளுப்பு நமக்கும் குடும். குளிருல்லா ஏறி அடிக்குது? மய்யத்துக்குள்ள நெறைஞ்சிருக்குத அதே குளிரு” என்றார்.

“இந்தாரும் வே”

மஸ்தான் சிலும்பியை ஒருமுறை ஆழமாக இழுத்துவிட்டு “புகை நல்லதாக்கும். புகைமேலே மலக்குகளும் ஜின்னுகளும் ஹூறிகளும் உண்டு” என்றார்.

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் “என்றார் பாவா.

நயினார் முகம்மது மூன்று கற்களை கூட்டிவைத்தார். அதன்மேல் நீர் நிறைந்த பானையை கொண்டுவைத்து ஒரு பழைய சட்டியிலிருந்து அரிசியை எடுத்து அதன்மேல் கொட்டினார்.

”தண்ணி கொதிச்சு அதுக்குப்பின்னாடி அரிசிபோடுவாளுக குடும்பஸ்த்ரீகள்”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி . அதை அவர் ஒவ்வொருமுறையும் சொல்வதுண்டு

“இது பிச்சைக்காரன் சோறு”என்றார் நயினார் முகம்மது. “பிச்சைக்காரன் சோறும் பேய் திங்குத பொணமும்னு கணக்கு”

“பாவா கேட்டிட்டிருக்காரு” என்று நயினார் சொன்னார்.

”அவரு காணாத மலக்குகளா ஜின்னுகளா?”ஆழமாக இழுத்து மஸ்தான் சொன்னார்.“அவருல்லா பிச்சைக்காரனுக்க ராஜா” என்றார் மஸ்தான்

“ஆமா” என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி “வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு தாழ்ந்தென்ன வான்பிறைக்கே”

“அதென்னது பாட்டு?”

“பட்டினத்தார் பாட்டு. அவரும் நம்ம பாவா மாதிரி, நம்மளை மாதிரி பிச்சைக்காரனாக்கும்”

“எப்பவுமே இருந்திட்டிருக்கானுக பிச்சைக்காரனுக”என்றார் நயினார். ‘அந்தாலே சனம் பசிச்சு சாவுது. ராசாக்கள் அடிச்சு சாவுதானுக”

“ஆனை பொருதும் அருங்காட்டில் அஞ்சுவதுண்டோ அன்றில்கள்?” என்றார் ஆனைப்பிள்ளை சாமி. சிலும்பிக்காக கைநீட்டினார். அதற்குள் இருமல் வந்தது. மஸ்தானின் கண்கள் கனன்றுவிட்டன. ஆனைப்பிள்ளைச் சாமிக்கு பிந்தித்தான் ஏறும்.

“கேட்டேரா சாமி? நான் இங்க வாறப்ப இங்க இவரு மட்டும்தான் இருந்தாரு. இந்த மண்டபம் அப்ப இப்டி இல்ல. குப்பைகூளம் பாம்பு தேளு எறும்பு நட்டுவாக்காளி… இவரு அதுக்கு நடுவிலே இப்டியே இருந்திட்டிருக்காரு… மாடுமேய்க்குற பயக்க அப்பப்ப என்னமாம் திங்க குடுப்பாங்க. மாட்டுக்க பாலை கறந்து எலையிலே ஊத்தி குடுப்பாங்க. வளிப்போக்கனுங்க மிஞ்சிய அப்பமோ புளிசோறோ எறிஞ்சு குடுப்பாங்க. அம்பிடுதான். மத்தபடி சாப்பாடு இல்லை. எதுகேட்டாலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் மட்டும்தான் பதில். அது என்ன சொல்லுறாருண்ணு இங்க யாருக்கும் தெரியாது. பாக்க சின்ன உருவம்… இப்ப சால்வையும் தொப்பியும் போட்டு நான் கொஞ்சம் பெரிசு பண்ணியிருக்கேன். அப்ப இந்தா, ஒரு மூணுவயசு குளந்தை அளவுக்குதான் இருப்பாரு. கையையும் காலையும் ஊணி கனவேகமா நடப்பாரு. பாத்தா எறும்பு மாதிரி இருப்பாரு. அதனாலே எறும்பு பாவான்னு மாட்டுக்காரப் பயக்க போட்ட பேரு” என்றார் மஸ்தான்.

“எறும்புபாசையிலே எறும்புகளோட பேசுறதனாலே அப்டி பேருன்னு சொன்னீருல்லா?”என்றார் நயினார் முகம்மது , ஏமாற்றத்துடன்.

சமாளித்துக்கொண்ட மஸ்தான் “அப்டியும் சிலரு சொல்லுவாக” என்றார். “எறும்பு பாவான்னு நானும் சொல்ல ஆரம்பிச்சேன். அவரு தனியாட்டு உக்காந்து மலக்குகளிட்ட பேசிட்டிருக்கிறத பாத்த பிறகுதான் யா ரஹ்மான், இது ரஹ்மானுக்க குரலை கேட்க சக்தியுள்ள வலியுல்லாஹ் இல்லியோன்னு முடிவுசெய்தேன்… ஒரு ஞானத்தொப்பி வேணுமே? உம்மாணை ஓய், நான் நினைக்கல்லை. நினைச்சு முடிக்கல்லை. அப்ப ஒரு வண்டி போகுது. திருச்சிராப்பள்ளி போற கூட்டம். அதிலே ஒருத்தரு பச்சைத்தொப்பி போட்டிருந்தாரு. ’அய்யா, ஞானவானாகிய வலியுல்லாஹ் இங்க இருக்காரு. அந்த பச்சைத்தொப்பிய குடுங்கய்யா’ன்னு கேட்டேன். அவங்க எறங்கிட்டாக. ஒருத்தர் பாவாகிட்டே ’உம்ம பேரென்ன ஓய்’னு கேட்டார். பாவா அவரைப்பாத்து சிரிச்சு ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ன்னு சொன்னாரு. அப்டியே விளுந்து கும்பிட்டுடாங்க.  அவங்க குடுத்துட்டுப்போன பச்சைத்தொப்பி, பச்சை சால்வை… இப்ப இங்க என்ன ஒரு ஐஸ்வரியம்…”என்றார்

“அப்ப வேற கதை சொன்னீரு”என்றார் நயினார் முகம்மது மேலும் ஏமாற்றத்துடன்.

”அதுவும் உண்மை”என்றார் சாம்பிராணி மஸ்தான், மீண்டும் சிலும்பியை வாங்கி ஆழமாக இழுத்தபடி. புகையை ஊதிவிட்டு, கடுமையாக நயினார் முகம்மதுவை பார்த்தபிறகு “வலியுல்லாஹ் திவ்ய சரித்திரங்களை கேள்வி கேக்கப்பிடாது”என்றார்.”அது ஹராம்… அஹங்காரமான ஹராம். பர்க்கத்துள்ளவன் கேள்வி கேக்க மாட்டான்”

“நான் கேள்வி கேக்கல்லை”என்று நயினார் முகம்மது தரையைப் பார்த்து சொன்னார்

“நீ கேள்வி கேட்டே… முந்தாநாள் கேட்டேல்ல?”என்றார் சாம்பிராணி மஸ்தான் உரக்க. “சொல்லும் ஓய், சாமிகிட்ட சொல்லு”

“என்ன கேள்வி?”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி

“ஒண்ணுமில்லை”என்றார் நயினார் முகம்மது

“சொல்லும் ஓய்”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி

“ஒண்ணுமில்லை… போனவாரம் வந்தவாசியிலே நடந்த சம்பவம்… வழிப்போக்கன் ஒருத்தன் சொன்னான். இப்பம் எங்க பாத்தாலும் சண்டையும் கொள்ளையுமில்லா நடந்திட்டிருக்கு? இந்தப்பக்கம் பாளையக்காரனுகளுக்க பட்டாளம் வாளும் கோலுமா கண்டவனை எல்லாம் கொன்னு கொள்ளையடிச்சுட்டு போறாங்க. அந்தப்பக்கம் நவாபு பட்டாளம் காட்டுத்தீ மாதிரி ஒரு ஓரத்திலே இருந்து எரிஞ்சு பரவி ஒரு மிச்சம் மீதி இல்லாம அரிச்சு அள்ளி எடுத்து அழிச்சுப்போட்டு போகுது. நடுநடுவே மராத்திக்காரனுக குதிரைப்படையோட வாறானுக. மலைவெள்ளம் இறங்குற மாதிரி வந்து சூறையாடிட்டு அப்டியே போறாங்க… இதுக்குமேலே அங்கங்கே சின்னச்சின்னக் கொள்ளைக்கூட்டம்… பாவப்பட்ட மனுசப்பயக் கூட்டம் தீ பட்ட பூச்சிப்பட்டாளம் மாதிரி பரிதவிச்சு பதறிப்பறந்து கெடக்கு. காலெடுத்து நடக்குற நெலைமையிலே இருக்கிறவன்லாம் வலிஞ்சு இளுத்து எப்டியாவது கும்பினிக்காரன்  பாண்டிச்சேரிக்கும் மதராசப்பட்டினத்துக்கும் ஓடிட்டிருக்கானுக”

“அது தெரிஞ்சதுதானே? கோல்கொண்ட மன்னவன் குடிகெட்டு போனால் மால்கொண்டு இருளுமே மாநிலம் தானுமேன்னு சொல்லியிருக்குல்லா?”

“அது கொஞ்சநாளாட்டு நடக்குது… என் குடும்பமும் மாடும் கன்னும் எல்லாம் நவாப்புப் படையாலே அப்டியே போச்சு… என் சீவன் மட்டும் மிச்சமாச்சு, கொள்ளிக்கட்டையிலே மிஞ்சியிருக்க தீபோல எரிஞ்சுகிட்டு இந்தா இங்க இருக்கேன்” என்றார் நயினார் முகம்மது.

“நீரு கேட்டதைச் சொல்லும் ஓய்”என்று சாம்பிராணி மஸ்தான் கைநீட்டி சொன்னார்

“நான் ஒண்ணும் சொல்லல்ல”என்றார் நயினார் “நான் பாவப்பட்டவன். யா அல்லாஹ் உன் ராச்சியம் வரணும்னு மட்டும் சொல்லத்தெரிஞ்ச கபோதி”

“செரி, இப்ப நீ கேட்ட கேள்வியைச் சொல்லு” என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி

“இல்ல, வந்தவாசியிலே ஒரு பள்ளிவாசல்… அதிலே இமாம் இல்லை.முக்கிரி மட்டும்தான் இருந்திருக்காரு. மழைக்காலம்னு அந்தவழியா போன இந்துக்காரனுக முசல்மானுங்க எல்லாரும் பள்ளிவாசலுக்கு உள்ள ஏறி படுத்திருக்கானுக. எல்லாரும் மதராசப்பட்டினம் போறகூட்டம். பாதிப்பேரு கையிலே கிடைச்சத பொட்டலம் கெட்டி வச்சிருக்கானுக”

“ராத்திரிக்கூரைக்கு அணைஞ்சிருக்கானுக”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி

“ஆமா, அரைச்சக்கரம் வாங்கிக்கிட்டு முக்ரி எடம்குடுத்திருக்கான்… ஆளு உள்ள இருக்கிறத பாத்துட்டு போறவனும் வாறவனும் உள்ள வந்து உக்காந்துட்டான். கடைசியிலே உக்கார எடமில்லை. அடிபிடி சண்டை ஆயாச்சு. அந்தப்பக்கமா நவாப்பு பட்டாளம் போய்ட்டிருக்கு. அவனுக இந்த சத்தத்தை கேட்டானுக. இங்க யாரோ பட்டாளம் ஒளிச்சிருக்குன்னு நினைச்சு வந்திட்டாங்க. யாத்திரக்காரனுகன்னு தெரிஞ்சதும் வாளை உருவிட்டு உள்ள பூந்திட்டானுக…”

“பாவமே”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி

“மொத்தம் நூத்தி எளுவத்தெட்டு தலை சாமி…நூத்தி எளுவத்தெட்டு…ஆம்புள பொம்புள கெளடு கொளந்தை எல்லாம் உண்டு… ஆடு அறுக்குத மாதிரி அறுத்துப்போட்டானுக. மூட்டை முடிச்சையெல்லாம் வெட்டி அறுத்து தேடினானுக. ஒருமணி தங்கம் வெள்ளி ஒரு சக்கரம் காசு கிடைக்கல்ல. அப்டியே போய்ட்டானுக” நயினார் சொன்னார்.

“உம்ம கிட்ட இந்தக்கதைய யாரு சொன்னா?”

“இங்க ஒரு கூட்டம் வந்திச்சு… இந்தாலே திருச்சிராப்பள்ளி போற கால்நடைக்கூட்டம். நடந்து தளர்ந்து அந்த ஊற்றங்கரையிலே உக்காந்தாங்க. கஞ்சி காய்ச்சலாம்னு அரிசிப் பொக்கணத்தை அவுத்தாங்க. அது அரிசியில்லே சாமி, ரெத்தக் கட்டி… அப்டியே ரெத்தத்திலே ஊறிப்போய் கட்டிபிடிச்சு இருக்குற அரிசி… அந்த பள்ளிவாசலிலே இருந்து உசிரோட தப்பின கூட்டம்… வழிதவறி இந்தப்பக்கமாட்டு வந்திட்டானுக. தப்பி வாறப்ப கையிலே சிக்கின அரிசிப்பொதிய தூக்கிட்டு வந்திட்டானுக… அது மனுசரெத்தத்திலே ஊறி இருக்கு”

“என்ன செய்தானுக?”

“அப்பதான் நான் போயி கை நீட்டினேன்…. ’ஞானத்தொப்பி போட்ட எறும்பு பாவா வலியுல்லாஹ் சாகிப்புக்கு அன்னம் குடுங்கய்யா’ன்னு கேட்டேன். அப்டியே தூக்கி என் கையிலே குடுத்துப்போட்டான். ‘கொண்டுபோயி குடு உனக்க ஞானிக்கிட்டே. இந்த அரிசிச்சோத்த அவருதான் திங்கமுடியும். அவருக்குதான் எறங்கும்’னு சொன்னான். நான் அப்டியே ஓடிவந்துபோட்டேன்”

“பிறவு?”

“பிறவு மறுபடியும் போயி எடுத்துட்டு வந்தேன். அந்தா அங்க தூணுக்கு பொறத்தாலே இருக்கு… அது பாவாவுக்குன்னு குடுத்தது. அதை வேண்டாம்னு சொல்ல நாம ஆளில்லை. ஆனா அதை களுவி சமைக்க எனக்கு தெம்பில்லை”

“அதான் கேட்டியா?”

“ஆமா, நான் கேட்டது வேற ஒண்ணுமில்லை. இந்த ரெத்தச்சோறு பாவாவுக்கு செமிக்குமான்னு கேட்டேன்” என்றார் நயினார்

“பாவான்னா இவன் என்ன நினைச்சிருக்கான் பாருங்க”என்றார் மஸ்தான்

“நான் ஒண்ணுமே கேக்கல்ல…செமிக்கும்னா நான் சமைச்சு போடுறேன்”

“நீ சமைப்பே… பாவா மேலே உனக்கு அப்டி ஒரு சந்தேகம்”

“நான் சந்தேகப்படல்ல”என்றார் நயினார் முகம்மது. “நீங்க சொல்லுங்க. நான் சமைச்சுப்போடுறேன்”

“சமையும் ஓய்”என்றார் மஸ்தான் “பாவா, அதைச் சமைக்கவா?”

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்றார் எறும்பு பாவா.

”சொல்லியாச்சு”என்றார் மஸ்தான்

”ஓய், பாவா சாப்பிட்ட மிச்சத்தைல்லா ஓய், நாம கைநீட்டமாட்டு சாப்பிடுதோம்? நமக்கு செமிக்குமாவே?”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி

மஸ்தான் “ஆமால்ல?”என்றார். “ஓய் நயினார், அதை அப்டியே வச்சுப்போடும்… பிறவு பாப்போம்”

இரண்டு குதிரைகள் மழைக்குள் குளம்போசையிட்டபடி வந்தன. அதன்மேல் நனைந்த ஆடைகளுடன் குறுகி அமர்ந்திருந்த இருவர் மண்டபத்தை கண்டதும் குதிரைகளை திருப்பி அருகே வந்தனர். குதிரைகளை  அருகே நின்ற அரசமரத்தின் அடியில் கட்டிவிட்டு மண்டபத்திற்குள் வந்தனர். இருவரும் இடையில் உடைவாள்கள் தொங்கவிட்டிருந்தனர். கையில் நீண்ட ஈட்டியும் இருந்தது

“ஆருடா இங்க?”என்று ஒருவன் கேட்டான்

“நாங்க பிச்சைக்காரங்க”என்றார் நயினார் முகம்மது

“பிச்சைக்கார நாயிங்க நல்லா சமைச்சு தின்னு மழைநனையாம இருக்கீங்க போல?”என்றான் ஒருவன்.

இன்னொருவன் “அவனுகளுக்கு என்ன? நல்ல சீவிதம்”என்றபடி தன் வேட்டியையும் தலைப்பாகையையும் கழற்றி கோவணத்துடன் நின்றபடி பிழிந்தான்.

“தீயிருக்கு, நல்ல காரியம்”என்றான் முதல் வீரன். “அங்க பிடிச்ச மழை. நடுங்கின நடுக்கத்திலே நாலு எலும்பு உடைஞ்சிருக்கும்”

அவனும் ஆடைகளை பிழிந்தான். சுற்றுமுற்றும் பார்த்தபின் ஈட்டியை மண்டபத்தின் கல்லிடுக்குகளில் பொருத்தி குறுக்காக வைத்து அவற்றின்மேல் துணிகளை காயப்போட்டான். இன்னொருவன் அதைக்கண்டு அவனும் அப்படியே செய்தான்.

அவர்கள் உடைவாளுடன் அடுப்பின் அருகே அமர்ந்து உடலை குறுக்கிக்கொண்டு குளிர் காய்ந்தனர்.அவர்கள் உடலெங்கும் சிவப்பான புதிய காயங்களும், ஆறிக்கொண்டிருந்த நீலநிற காயங்களும், பழைய தழும்புகளும் நிறைந்திருந்தன.

ஒருவன் பாவாவை பார்த்து “இவரு யாரு?”என்றான்

“எறும்பு பாவா… வலியுல்லாஹ் சாகிப், ஞானியாரு”என்றார் நயினார் முகம்மது

“சின்னப்பையன மாதிரி இருக்காரு”

“அவருக்கு வயசு நூறுக்குமேலே”என்றார் நயினார் முகம்மது

“நூறு வயசா? பேசுவாரா?”

”பேசுவாரு”

“ஓய், உம்ம பேரு என்ன? எந்தூரு?”

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்றார் பாவா

“என்ன சொல்லுறார்?”

“கொரான் மந்திரம்… அல்லாவை கூப்பிடுதாரு”

“அதுக்கு என்ன ஓய் அர்த்தம்?”

“அல்லாவே பெரியவருன்னு…அல்லா பெயராலேன்னு”

“அப்ப நவாப்பு பெரியவரு இல்லியோ? உங்க நவாப்பு?”

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்றார் பாவா

“ஓய், உங்க நவாப்பை பாத்தா அந்த தொப்பியை எடுப்பேரா?”

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்றார் பாவா

“என்னவே இவரு சொன்னதையே சொல்லிட்டிருக்காரு?”

“அவரு அப்டித்தான், வேற ஒண்ணையும் சொல்ல மாட்டாரு”

“வேற பேசமாட்டாரா?”

”பேசமாட்டாரு”

“அய்யோ அம்மா ஆத்தான்னுகூட கத்த மாட்டாரா?”

”அவரு வாயிலே அது மட்டும்தான் வரும்”

“பாத்திருவோம்” என்று அவன் எழுந்து சென்று அவர் அருகே நின்றான். ஓங்கி அவரை உதைத்தான்.

அவர் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்றபடி உருண்டார். ஆனால் தொப்பியை கையால் பிடித்துக்கொண்டார்

”அய்யோ, வேண்டாம், அவரு அருளுள்ள ஞானியாரு” என்று நயினார் பதறி கூவினார்.

மஸ்தான் அவரை பிடித்து நிறுத்தி “அவன் அடிக்கட்டும் ஓய்… அவருக்கு எல்லாம் ஒண்ணுதான்”என்றார்

அவன் மீண்டும் அவரை உதைத்தான். அவர் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்று மட்டும் சொன்னார்.

“வெளையாடுறாண்டா”என்றபடி அவன் உடைவாள் உறையால் அவர் மண்டையில் ஓங்கி அறைந்தான். பச்சை தொப்பி கீழே விழுந்தது. உடைவாளின் உறை அவர் மண்டையில் பட்டு ஏதோ காய் உடைந்து சாறு தெறிப்பதுபோல ரத்தம் தெறித்தது.

அவர் அப்போதும் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்று மட்டும்தான் சொன்னார். குரல் உயரவோ தாழவோ இல்லை.

“மாப்பிள்ள, அது கிறுக்குன்னு நினைக்கிறேன். இவனுக அந்த கிறுக்கனை காட்டி பிச்சை எடுத்து பிழைக்கிறானுக”

“இருக்கும்” என்றபின் அவர்மேல் காறி துப்பிவிட்டு அவன் வந்து தீயருகே அமர்ந்தான்.

“கஞ்சி உங்களுக்காடா?”என்றான் அடித்தவன்.

“விருந்தாளிக்கு முதல்ல குடுப்போம். அவங்க பசியாறி மிஞ்சினா நாங்க சாப்பிடுவோம்”

“உங்க கிறுக்கன் செத்தானா இல்லியான்னு தெரியல்ல… பாரு”என்றான் இன்னொருவன்.

நயினார் ஓடிப்போய் எறும்பு பாவாவை எழுப்பினான். அவர் முகமெல்லாம் ரத்தம் வழிந்தது.

“வெட்டு பட்டிருக்கு” என்றான்.

“சால்வையை வைச்சு கட்டுடா… எந்திரிச்சு வந்தா உனக்கு இருக்கு”என்றான் அடித்தவன்.

நயினார் சால்வையால் பாவாவின் காயத்தை சேர்த்து முண்டாசு போல கட்டினான். பச்சை முண்டாசு ரத்தத்தால் நனைந்தது. அவன் அவரை தூக்கி அப்படியே சாய்த்து அமரச்செய்தான்.

”கஞ்சிய எடுத்து கொட்டுடா”என்றான் அடித்தவன்.

மஸ்தான் “இருங்க”என்று ஏற்கனவே பறித்து வைத்திருந்த அகலமான நவரை இலைகளை எடுத்து வந்தார். புழுதியில் பள்ளம் தோண்டி அதன்மேல் இலைகளை பரப்பி கிண்ணம்போல செய்தார். அதன்பின் அகப்பை ஒன்றை எடுத்துவந்து கஞ்சியை அள்ளி அள்ளி இரண்டு இலைக்குழிகளிலும் ஊற்றினார்

“தொட்டுக்கிட ஒண்ணும் இல்லியாடா?”

“தொட்டுக்கிடுறதுக்கு பாட்டுதான்”

“அதுசெரி”என்றான் அடித்தவன். “பாட்டு பாடுத காலம் வரும் உனக்கெல்லாம்… நாலுநாள் முன்னாடி என்ன நடந்ததுன்னு தெரியும்ல?”

“எங்க?”

“திருவண்ணாமலை கோயிலிலே?”

“நாங்க எங்க செய்திகளை கேள்விப்படுறோம்? பிச்சைக்காரப் பொழைப்பு” என்றார் மஸ்தான்.

“ஆர்க்காடு நவாப்பு ராஜா சாகிப்பு ஒரு வருஷமா திருவண்ணாமலைக் கோயிலிலேதான் தம்பு அடிச்சிருந்தான். அவன் பட்டாளம் நாலாயிரம்பேரு உள்ள தங்கியிருந்தாங்க… இப்ப அங்க மதசாரப்பட்டினத்திலே சண்டை தொடங்கியிருக்கிறதனாலே அவன் ஜமேதார் உபைதுகான்னு ஒருத்தன் தலைமையிலே எழுநூற்றம்பது பேரை மட்டும் அங்க விட்டுட்டு மிச்ச பட்டாளத்தை கூட்டிட்டு போயிட்டான்”

இன்னொருவன் கஞ்சி ஊற்றும்படி கைகாட்டினான். மஸ்தான் அவனுக்கும் கதைசொன்னவனுக்கும் கஞ்சி ஊற்றினார்.

“தியாகதுர்க்கத்திலே மராட்டிப்படை நின்னுட்டிருக்கு, தெரியும்ல? கின்னேதார் கிருஷ்ணராவுன்னா நவாபுக்கே பயம்தான். நாலுவாட்டி அவனை பிடிக்க போனாங்க. தப்பி மலைமேலே ஏறிட்டான். நவாப்புப் பட்டாளம் மதராசப்பட்டினம் போனதை அறிஞ்சதும் கிருஷ்ணராவு ராத்திரியோட ராத்திரியா வந்து கோயிலுக்குள்ள பூந்துட்டான். அவன்கூட வந்தவனுக மூவாயிரம்பேரு… மழைவேற அலறிட்டு பேயுது. அதுக்குள்ள சத்தம் காட்டாம வந்திட்டாங்க. பாதாளலிங்கம் சன்னிதி வழியா ஒரு சுரங்க வழி இருக்கிறது கிருஷ்ணராவுக்கு தெரியும். அவன் அங்கதான் நாலுமாசம் தம்படிச்சிருந்தான். உள்ளார பூந்து காவல்காரனுகளை கொன்னுட்டு கதவையும் திறந்துட்டாங்க. கிருஷ்ணாராவும் கூட்டமும் அப்டியே உள்ள பூந்து தூங்கிட்டிருந்த துலுக்கப்படை முச்சூடையும் கொன்னு குவிச்சிட்டானுக. கண்டம் துண்டமா வெட்டிட்டானுகன்னு கணக்கு… மொத்தம் எழுநூத்தி அம்பதுபேரு… உள்ள இருந்த அத்தனைபேரும்…”

மஸ்தான் “இன்னும் கொஞ்சம் கஞ்சி?”என்றார்

“ஊத்து”என்றான் கதை சொன்னவன்

மஸ்தான் இருவருக்கும் கஞ்சி ஊற்றினார். ”நவாப்பு நடுங்கியிருப்பான். ஆனா விடமாட்டான். அவன் திரும்ப வாரப்ப மராட்டிக்காரன் மலையேறியிருப்பான். ஊரிலே உள்ளவனுக அத்தனைபேரையும் நவாப்பு தலைவாங்குவான்”

“ஆமா, அது உள்ளதுதானே?”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி

“நீரு சாமியாருல்லா ஓய்? நீரு எதுக்கு இந்த துலுக்கன்கூட சேந்திருக்கீரு?”

“சேல்கொண்ட விழியாள் இருமங்கை மணம்கொண்டு வேல்கொண்டு வெண்பரி ஊரும் ராவுத்தனல்லோ என் தெய்வம்?”

”அது என்ன ஓய்?”

”அருணகிரி திருப்புகழ்”

“மயிரு மாதிரி இருக்கு பாட்டு. ஓய், நீரு தொப்பி போட்டாச்சா?”

“போட்டாலும் போடாட்டியும் நம்ம தலைமேலே முகில்மேவும் ஆகாசமாக்கும்”

“இன்னும் கொஞ்சம் கஞ்சி?”என்றார் மஸ்தான்.

“அவ்ளவுதானே இருக்கு? செரி ஊத்து”

அவர்கள் கடைசியாக சட்டியைக் கவிழ்த்தனர். இலையை வழித்து குடித்து விரல்களை நக்கிக்கொண்டனர்

“ஏன் ஓய், உம்ம எறும்பு இருக்கா செத்திரிச்சா?”

“அவருகிட்டயே கேக்கிறது” என்றார் மஸ்தான்.

”ஏன் ஓய்,இருக்கேரா செத்துட்டீரா?”என்றான் அடித்தவன்.

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்று பாவா சொன்னார்.

“சரியான குரலுடா இதுக்கு….மணியடிச்ச மாதிரி சொல்லுதே”

அவர்கள் எழுந்து வெளியே தேங்கி நின்ற நீரில் கைகளை கழுவிக்கொண்டார்கள்.

“மழை விட்டிருக்கு… சட்டுன்னு குதிரையை வெரட்டினா ஊருக்குள்ள போயிடலாம்… கட்டையைச் சாய்க்கணுமே” என்றான் அடித்தவன்

“துணி காயல்ல”

”பரவாயில்ல. காத்திலே கொஞ்சம் காயும்”

அவர்கள் ஆடைகளை அணிந்துகொண்டார்கள். விடைபெறும்படி ஒன்றும் சொல்லாமல் குதிரைகளை நோக்கி நடந்தனர்.

அவர்கள் குதிரைகளில் ஏறி செல்வதை மூவரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சென்றபின் சாம்பிராணி மஸ்தான் நயினாரிடம் “வேற அரிசி இருக்கா ஓய்?”என்றார்

“இல்ல” என்றார் நயினார் “அந்த ரெத்தம்பட்ட அரிசிதான் இருக்கு”

“அதுவேண்டாம்”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி.

“அப்ப இனிமே ராத்திரிக்கு அன்னத்துணையில்லை, உம்ம பாட்டுத்துணைதான்” என்றார் மஸ்தான்

“பாட்டிருக்க பயமேதுமில்லை”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி

“பாடும் ஓய்”என்றார் மஸ்தான். “பாவா, பாடச்சொல்லலாமா?”

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்றார் பாவா

மஸ்தான் அவரே எழுந்து சென்று சிலும்பியை மூட்டினார். அதை ஆழமாக இழுத்து மூக்கு வழியாக வெளிவிட்டார்

ஆனைப்பிள்ளைச் சாமி  தன் கைகளை தட்டிக்கொண்டு பாடினார்

“ஓணாண்டி தனைக்கண்டு மோகம் கொண்டாள்- மத

யானைமகள் நாணத்தால் குனிந்து நின்றாள்- அய்யா

கோலாண்டி தனைக்கண்டு காதல்கொண்டாள்-நல்ல

குறத்திமகள் கொஞ்சி குலாவி நின்றாள்!”

நயினார் பாவாவின் தலையை பார்த்தார் . ரத்தம் நின்றுவிட்டிருந்தது. பாவாவின் சிறிய விழிகள் எலிகளின் கண்கள் போல தெரிந்தன. அவர் ஆனைப்பிள்ளைச் சாமி கைதட்டி பாடுவதை கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனைப்பிள்ளைச் சாமி  சிலும்பியை வாங்கி ஆழமாக இழுத்தார். அதன்பின் மீண்டும் உரத்த குரலில் பாடத்தொடங்கினார்

”வேணாண்டி இந்த மகன் வெறும்பேச்சு சிறுக்கி மகன் -அடியே

அப்பனோ சுடலையாண்டி அம்மையோ வெங்கருப்பி.

கோணாண்டி கொம்பனடி அண்ணன் !மாமனோ பாம்பாட்டி- அவன்

இருக்கவோ மலைமேடு இவனோடி உனக்கு மாரன்?”

பாட்டு வேகம் பிடித்ததும் ஆனைப்பிள்ளைச் சாமி  எழுந்து நின்று கைவீசி நடனமிட்டார். நயினாரும் உடன் சேர்ந்துகொண்டார்.

“ஆறுமுக புருசனென்றால் அடுக்குமோடி எம்மகளே- ஏய்

அடுக்குமோடி எம்மகளே?

ஆறுமுகத்தால் வேவுபாத்தால்  எம்மகளே- நீ

அடுத்தமனை பாக்க ஏழுமுகம் வேணுமேடி! ”

ஹொஹொஹொ என்று சிரித்தபடி ஆனைப்பிள்ளை சாமி கைகொட்டி நடனமாடினார். சாம்பிராணி மஸ்தானும் சேர்ந்துகொண்டார். மஸ்தான் கைதட்டிச் சிரித்தபடி நின்றார்.

மழைக்குள் ஒரு கூன் விழுந்த உருவம் மெல்ல நடந்து வந்தது.

“ஓய், பாட்டு தின்னு பசியடக்க ஒரு விருந்தாடி வாறான் ஓய்”என்றார் மஸ்தான்.

வந்தவர் ஒரு கிழவர். சடைமுடியும் காதுகளில் அணிந்த எலும்புக் குண்டலமும் அவரை சிவனடியார் என்று காட்டின.

“சிவாய நம”என்றார்

“சிவாய நம”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி  “உள்ள வாரும்”

சிவனடியார் உள்ளே வந்தார். “சிவாய நம… நனைஞ்சிட்டேன்”என்றார்

“இங்க நனையாம இருக்கலாம்… தணலிலே சூடும் இருக்கு”

“தணல் எம்பெருமான் வடிவம். அண்ணாமலையென எழுந்த பரம்”

“பாடுவேரா ஓய்?”என்றார் மஸ்தான்

“நாமாவளி சொல்லுவேன்”

“சொல்லவேண்டியிருக்கும்… ஏன்னா இப்ப இங்க பசிக்கு அதுதான்”

“எனக்கு பசி இருக்கு… ஆனா சிவநாமம்னா அதுவும் போதும்தான்… இது யாரு சின்னப்பையன்?”

“சின்னப்பையன் இல்லை. அது எறும்பு பாவா… ஞானியார்”என்றார் மஸ்தான்

“என்ன பேரு?”

“எறும்பு பாவா…”

“சிவாய நம”என்றார் சிவனடியார் பாவாவை நோக்கிக் கைகூப்பியபடி.

”பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்று  பாவா சொன்னார்.

“ஓம் ஓம் ஓம்”என்றார் சிவனடியார்.

அவர் நெருப்பின் அருகே அமர்ந்துகொண்டார்.

“எங்க போறீர்?”என்றார் மஸ்தான்.

“சிதம்பரத்துக்கு”என்று சிவனடியார் சொன்னார் “பல இடங்கள் பாத்தாச்சு… காசியும் கேதாரமும் கண்டாச்சு… நடந்த காலு. சிதம்பரம் போனா உக்காந்திரும். வேற எங்கயும் போறதா இல்லை”

“ஏன்?”

“அதான் சித் அம்பரம்… சித்தம் அம்பரமாயாச்சு”

“சாமி சித்தி கூடுறதுக்கு போற வழி போல”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி

“சித்தியா? தெரியல்ல. ஆனா கேள்விக்குமேல் கேள்வியா இருந்ததெல்லாம் போயாச்சு. எல்லா கேள்விக்குமான ஒற்றைப் பதிலா ஒண்ணு வந்து சேந்தாச்சு. இனி சொல்லடங்கணும். இடம் அமையணும்”

“சாமி திருணாமலையிலே இருந்து வாறிகளோ?”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி

“ஆமா”

“சாமிக்கு சிவமூலிப் பழக்கம் உண்டுதானே?”என்று மஸ்தான் சிலும்பியை நீட்டினார்

“வேண்டாம்… இனி வேண்டியிருக்காது”என்றார் சிவனடியார்

“இனி இனின்னு சொல்லுதீக”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி

“நான் முந்தாநாள் புதிசாப்பெறந்தேன்… கருப்பை புகுந்து குருதியும் சலமும் சீழும் மலமும் ஆகிய வைதரணியிலே நீந்தி மறுபடி பிறந்து வந்தேன்.. நமச்சிவாயம்”

“என்ன ஆச்சு?”என்றார் மஸ்தான்.

“நான் காளஹஸ்தி பக்கத்திலே ஒருத்தனை வெட்டிக்கொன்னுட்டேன்” என்றார் சிவனடியார்

“சாமி, நீங்களா? உங்க கையாலா?”என்று நயினார் முகம்மது கூவினார்

“ஆமா”

”பாவா கேட்டீங்களா?”என்றார் நயினார் முகம்மது

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்றார் பாவா

”எதுக்காக வெட்டினீங்க?”என்றார் மஸ்தான்

“நான் ஊரிலே இரந்து உண்டு வாழுறவன். ராத்திரி சிவன்கோயில் சன்னிதியிலே படுப்பேன். அப்டி அந்த ஊரிலே ஒரு சிவன்கோயில் சன்னிதியிலே படுத்திட்டிருந்தேன். ராத்திரி ஒரு ஏழெட்டுபேரு அந்தப்பக்கமா வந்தானுக. எல்லாரும் ஈட்டி வச்சிருந்தானுக. உள்ளூர் பாளையக்காரனோட ஆளுங்க…கோயிலை பாத்ததும் உள்ள பூந்துட்டானுக. கதவை உடைச்சு உள்ளபோயி சாமிக்கு வச்சிருந்த சாமான்களை திருடினானுங்க”

“எங்காளுங்களா?”என்று நயினார் கேட்டார்

“இல்ல, எங்காளுங்கதான். இப்பதான் அந்த பேதமே இல்லாம கெடக்கே”

“நீரு தடுத்தீரா?”

“இல்ல, திருடினா திருடுறான்னு நான் பேசாம படுத்திருந்தேன். அப்ப ஒருத்தன் கருவறைக்கு மேலே ஏதாவது சின்ன அறை இருக்கான்னு பாக்க சிவலிங்கம் மேலே காலைவைச்சு ஏறி நின்னுட்டிருந்தான்… என்னாலே பொறுக்க முடியல்லை. அப்டியே பாய்ஞ்சு எந்திரிச்சு அங்க நின்ன ஒருத்தன் கையிலே இருந்த ஈட்டியை பிடுங்கி ஓங்கி ஒரே போடு…அப்டியே செத்து விழுந்துட்டான்”

“பிறகு?”

“நான் அங்க நிக்கலை… அப்டியே ஓடிட்டேன். என்னைய துரத்திட்டு வந்தாங்க. நான் ஓடி உயிரோட தப்பிட்டேன்”என்றார் சிவனடியார் “ஆனா அதோட என் மனசு மாறிட்டுது. சிவநாமம் ஒரு கணம்கூட மனசிலே நிக்கல்லே. என்னை யாரோ கொல்ல வாறாங்கன்னு நினைப்பு வந்துபோட்டுது. எப்ப பாத்தாலும் மரணபயம். யாரைப்பாத்தாலும் கிலி… ஓடிட்டே இருந்தேன். ஊரூரா ஓடினேன். எங்க போனாலும் நிலைக்கமுடியல்லை… ”

“அப்ப ஒருத்தர் கிட்டே கேட்டேன். பெரியவரு… அணைக்குடிங்கிற ஊரிலே ஒரு மண்டபத்திலே இருக்காரு. இந்தா இந்தமாதிரித்தான் இருப்பாரு… மெலிஞ்சு சின்னப்பையனாட்டமா… நான் காலிலே விளுந்து கேட்டேன். சாமி அம்பதுவருசம் அலைஞ்சு சேத்த எல்லாத்தையும் இழந்துட்டேன். உசிருக்குப் பயந்த கோழையா ஆயிட்டேன். எனக்கு கதிமோட்சம் உண்டான்னுட்டு”

“என்ன சொன்னாரு?’என்று மஸ்தான் ஆவலாக கேட்டார்.

“அவரு சிரிச்சாரு. ‘நீ சாமிக்கே காவலு ந

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2021 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.