செயல் எனும் விடுதலை

வணக்கம்..

தங்களின் வாசகன் நான். எந்தவொன்றை செய்யவும் மனநிலை வேண்டும். வாசிக்கவும். அந்த மனநிலையை நமது கட்டுபாட்டில் வைத்து கொள்ள முடியுமா. மனநிலை அமைவதில் சூழலின் பங்கு அதிகம் எனில் சூழல் நமது கட்டுபாட்டில் இல்லையே. மனம் நமது கைக்கு எப்படி அகப்படும். சிறப்பாக செயல்படுபவர்கள் சாதிப்பவர்களின் மனநிலையில் ஆச்சர்யம் எனக்கு உண்டு.. அந்த மனநிலையை தானே உருவாக்குகிறார்களா அல்லது தானே உருவாகுகிறதா?

உருவாக்கிக் கொள்கிறார்கள் எனில் அந்த எண்ணம் அவர்களிடம் வருவதும் மனசெயல்தானே.. விளக்கம் அன்பு வேண்டல். தங்களின் இணைய கட்டுரைகள் 300 மேல் வாசித்திருப்பேன்.. முதற்கனல் மழைப்பாடல் முடித்து தற்போது வண்ணக்கடலில் பாதி தூரத்தில் பயணித்துக கொண்டிருக்கிறேன்.விஷ்ணுபுரம் பாதி படித்தேன். தங்களின் ஓட்டப் பயிற்சியால் நானும் அதை துவங்கியுள்ளேன்.. நன்றி.

முத்தரசு.

வேதாரண்யம்.

அன்புள்ள முத்தரசு

நான் திரும்பத்திரும்ப சொல்வது செயலுக்கான உளநிலையை உருவாக்கிக்கொள்ளுங்கள், அதில் இருங்கள் என்றுதான்.செயலூக்கம் தானாக அமையும் என்பது மாயை. மானுட இயல்பு செயல் அல்ல, சும்மா இருத்தலே. இயல்பில் அதற்கான நியாயங்களை உருவாக்கிக்கொள்வோம். அதற்கான உளநிலைகளை பெருக்கிக்கொள்வோம். ஒவ்வொரு பொருளும் அசையாமலிருக்கவே விழைகிறது. வெளியில் இருந்து அல்லது பஉள்ளிருந்து விசை வந்து தொட்டாலொழிய அது அசைவதில்லை.

செயலூக்கம் எவருக்கானாலும் அவர்களே உருவாக்கிக் கொள்வதுதான். தொழில்செய்பவர்களைப் பாருங்கள். லாபம் என்னும் கனவு அவர்களை வெறிகொண்டு வேலைசெய்ய வைக்கிறது. வெற்றிக்காக வேலைசெய்பவர்கள் உண்டு. நான் நிறைவுக்காக வேலை செய்யுங்கள் என்று சொல்வேன்.

செயலே கல்வி,விடுதலை இரண்டுக்கும் வழி. செயலின்மை என்பது நம் எல்லைகளுக்குள் நாம் சிறையிட்டுக்கொள்ளுதல். செயலின்மையை வெறுக்கும் மனநிலையை உருவாக்கிக்கொண்டாலேபோதும், செயலை நோக்கிச் செல்லத்தொடங்கிவிடுவோம்.

செயலுக்கு என சில மூளைரசாயனங்கள் உண்டு. செயல்படுகையிலேயே அவை உருவாகின்றன. செயலில் போதையை அளிக்கின்றன. செயல்படாதபோது அவை உருவாவதில்லை. சோர்வை வெல்ல சிறந்த வழி செயலே. இன்றைய உளச்சிகிழ்ச்சையிலேயே இந்த வழிமுறைகள் கையாளப்படுகின்றன.

நான் செயல்பற்றிய சில கொள்கைகளை வைத்திருக்கிறேன். இவற்றை நானே என் செயல்களிலிருந்து கற்றுக்கொண்டேன்

அ. உகந்த சரியான செயலைத்தான் செய்யவேண்டும் என்று காத்திருப்பதில்லை. எதுவானாலும் செய்யவேண்டும் என்பதே என் எண்ணம். பெருஞ்செயல்கள் சிறு செயல்கள் என்னும் படிகளின் வழியாக ஏறிச் சென்றடையவேண்டியவை. ஆகவே அருகிருக்கும் செயல் எதுவானாலும், அப்போது செய்யத்தக்க செயல் எதுவானாலும் உடனே செய்யத்தொடங்கிவிடுவேன்

ஆ. செயலை ஒத்திப்போடுவதனால் அது மேம்படுவதில்லை. அந்த கால இடைவெளியில் எவ்வகையிலும் நாம் நம்மை மேம்படுத்திக்கொள்வதோ தகுதிப்படுத்திக்கொள்வதோ இல்லை. உண்மையில் ஒத்திப்போடும் அந்த கால இடைவெளியில் நாம் நம்மை பின்னுக்கிழுத்துக்கொண்டு மேலும் தகுதியும் தயாரிப்பும் குறைவுடையவர்களாகவே ஆகிறோம்

இ. செய்வதே செயலை அறியும் ஒரே வழி. ஒரு செயலை செய்ய நாம் தகுதியுடையவர்களா, அதைச் செய்ய நம்மால் முடியுமா, மேலதிக தேவைகள் என்னென்ன என்பது நாம் செய்ய ஆரம்பித்தபின்னர்தான் தெரியவரும். நம் எல்லைகள் தெரியவருவதுபோலவே நம் சாத்தியங்களும் தெரியவரும்

ஈ. முற்றீடுபாடே செயலை யோகமென்றாக்குகிறது. முழுமூச்சுடன் செய்யப்படும் செயலே செயலின் இன்பத்தையும் வெற்றியையும் அளிக்கிறது. ஆகவே பலவற்றில் ஒன்றாக ஒரு செயலைச் செய்வதில்லை. செயல்மீதான ஆற்றலைச் சிதறடிப்பதில்லை.

. நாம் நம் செயலுடன் தனித்து இருக்கிறோம்.இளமையில் ஒரு செயல் வெல்லவில்லை என்றால் நாலுபேர் என்ன நினைப்பார்கள் என்ற குழப்பம் இருந்தது. அந்த நாலுபேருக்கு நம் வாழ்க்கையில் இடமே இல்லை என தெரிந்துகொண்டபின்னரே செயலை வீச்சுடன் செய்யத்தொடங்கினேன். வெற்றி தோல்வி என்பதெல்லாம் நமக்கே தெரிவதுதான்

ஊ. தொடங்கியவை முடிக்கப்படவேண்டும். முடிக்கப்பட்ட செயலுடன் நமக்கு உறவேதுமில்லை. நாம் அவற்றை துறக்கமுடியும். ஆகவே எப்பாடுபட்டேனும் செயலைச் செய்து முடித்துவிடுவதே என் வழக்கம். நான் தொடங்கி, செய்யாமல் விட்ட செயல்கள் மிகச்சிலவே. எனக்கு நானே அந்த அறைகூவலை விட்டுக்கொள்வேன்

ஊ. எச்செயலும் வீணல்ல. செய்து முடிக்காத ஒரு சிலசெயல்கள் உள்ளன, அவைகூட எனக்கு பயிற்சியை அளித்தன. பிறசெயல்களில் வந்து இணைந்துகொண்டன. அச்செயல்களும் நான் ஈட்டிய செல்வங்களே

. நிறைவடைந்த செயல் நமக்குரியது அல்ல. செய்துமுடித்தவற்றிலிருந்து உடனே விலகிவிடுவேன். ஏனென்றால் செய்தவற்றிலிருந்து வரும் சலிப்பும் நிறைவும் செயலின்மையை உருவாக்குபவை. வெண்முரசு என்னும் செயல்முடிந்தால் உடனே நூறுகதைகள் என்னும் செயலை எடுத்துக்கொண்டேன். செயலில் இருந்து இன்னொரு செயல்வழியாக விடுபடுவதே சரியான வழி

ஜெ

அரதி செயல் தன்மீட்சி வழி ஞானம் – காந்திகிராம் நிகழ்வு வெண்முரசு- செயல்,புகழ் உள அழுத்தம் பற்றி பெருஞ்செயல் – தடைகள் செயல்படுவோர் அளிக்கும் மீட்பு 3.செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம் 2 ஆகவே கொலை புரிக! செயலின்மையின் இனிய மது தன்வழிகள் இரண்டு முகம் சோம்பல், எதிர்சோம்பல் -கடிதங்கள் சோர்வு,ஒருகடிதம் உடல்மனம்
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 29, 2021 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.