இரவு- கடிதம்

இரவு வாங்க

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

அண்மையில்தான் இரவு நாவலை வாசித்தேன். அதில் ஒரு காட்சி. ஒரு வடஇந்திய குடும்பம் கேரளாவிற்கு சுற்றுலா வரும். அந்த குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் காயலில் பயணித்தபடி பைனாக்குலர் வழியாக கரையை பார்ப்பார்கள். அந்த பைனாக்குலர் பெண்கள் குறித்த சரவணனின் பார்வை இவ்வாறாக இருக்கும், “அவர்களுக்கு எப்படி அந்தப் பயணத்தை ரசிப்பதெனத் தெரியவில்லை என்று ஊகித்தேன். எல்லாரும் சொல்கிறார்களே என்று கிளம்பி வந்திருக்கிறார்கள். ஆனால் இதில் என்ன இன்பம் இருக்கிறதென்றும் புரியவில்லை. நீர், தென்னைமரக் கூட்டங்கள், வானம். வேறு என்ன இருக்கிறது?”

இதே போன்ற அனுபவம் எனக்கும் ஏற்பட்டுள்ளது. 5 வருடங்களுக்கு முன்பு தஞ்சை பெரியக்கோயிலுக்கு செல்ல எனது நண்பர்கள் சிலர் திட்டமிட்டிருந்தார்கள். அவர்களுடன் நானும் இணைந்துக்கொண்டேன். அந்த பயணம் குறித்த எண்ணம் ஒருவித கிளர்ச்சியை அளித்தது. ”நாளை மதியம் மாபெரும் வரலாற்றின் முன்னால் சென்று நிற்கப்போகிறோம், தமிழர் கட்டடக்கலையின் உன்னதத்தை காணப்போகிறோம், ராஜராஜ சோழன் சுவாசித்த காற்றை நாமும் சுவாசிக்கப் போகிறோம்” என பலவாறு எண்ணிக்கொண்டேன். ஆனால், நடந்ததே வேறு. பெரிய கோயிலுக்கு சென்றதும் என்ன செய்வதென்று தெரியவில்லை. தெக்கையும் வடக்கையும் மாறிமாறி பார்த்தேன். தேமே என்று சுற்றி வந்தேன். சிறிது நேரம் கழித்து, அங்கிருந்த சிலைகளே தோற்கும் வகையில், பல்வேறு போஸ்களில் நின்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டேன். பின்னர் நண்பர்களுடன் ஊர் திரும்பினேன்.

ஒரு புதிய இடத்தை பார்க்க செல்வதென்றால், அந்த இடம் குறித்தும், சிறப்புகள் குறித்தும் தெரிந்துக்கொண்டுதான் பயணிக்க வேண்டும் என்பதை பின்னர்தான் புரிந்துக்கொண்டேன்.

இரவு நாவலின் அந்த பகுதி பயணம் குறித்த மேலும் சிலவற்றை ஞாபகப்படுத்தியது.

1.. காற்றின் மொழி திரைப்படத்தில் பண்பலை நிகழ்ச்சி ஒன்றில் ஜோதிகா பேசுவார். அதில், தனது அம்மா ஹரிதுவார் சென்றபோது அடைந்த அனுபவங்களை விவரிப்பார். ஹரிதுவாரில் அவரின் அம்மா கண்ட கங்கா நதி, இமயமலை, சூரியோதயம் ஆகியவற்றை உணர்வுப்பூர்வமாக தெரிவிப்பார். மிகவும் உருக்கமான காட்சி அது. தனது அம்மா கூறிய அனுபவங்களுக்கு மாறாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக, ஜோதிகா கடைசிவரை ஹரிதுவாரே செல்ல மாட்டார். || https://youtu.be/gnhUmNwmOFc ||

2.. “The Alchemist” நாவலில் படிக வியாபாரி ஒருவர் வருவார். நன்றாக உழைத்து, பணம் சேர்த்து மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் சிறு வயது முதலே அவரின் கனவு. மெக்காவுக்கு செல்வது குறித்தும், கபாவை வலம் வருவது குறித்தும், பிரார்த்தனை செய்வது குறித்தும் ஒவ்வொரு நாளும் அவர் கனவு கண்பார். ஒரு கட்டத்தில் மெக்காவுக்கு செல்வதற்கு தேவையான செல்வம் அந்த முதியவரிடம் சேர்ந்துவிடும். ஆனாலும், அவர் மெக்காவுக்கு செல்ல மாட்டார். மெக்கா செல்வது அவரின் வாழ்நாள் லட்சியம். அங்கு சென்று விட்டால் அவரின் வாழ்வின் நோக்கம் நிறைவேறிவிடும். அத்துடன், மெக்கா எப்படி இருக்கும், பிரார்த்தனை செய்யும்போது தனக்கு முன்னும் பின்னும் யார் நிற்பார்கள், என்ன பேசுவார்கள் என்பது உட்பட அனைத்தையும் அவர் கற்பனையில் வாழ்ந்திருப்பார். நேரில் சென்றால் இந்த கற்பனை ஏமாற்றத்தில் முடியலாம் என அவர் அஞ்சுவார். ஆகவே, அந்த முதியவர் தனது கனவு தேசமான மெக்காவுக்கு செல்லவே மாட்டார்.

3.. தங்களின் அறம் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெருவலி கதையிலும்  இதேபோன்ற ஒரு இடம் வரும். கோமல் சுவாமிநாதன் அவர்களுக்கு இமயமலை செல்ல வேண்டும் என்பது கிட்டதட்ட 30 வருட கனவு. முதுமை காலத்தில் புற்றுநோய் பாதிப்பால் எழுந்து நடமாட முடியாத நிலைக்கு ஆளாவார். இருந்தபோதும், தனது வாழ்நாள் கனவான இமயமலைக்கு செல்ல முடிவெடுப்பார். நோயுடன் மிகவும் சிரமப்பட்டு மலையேறுவார். ஆனால், ஒரு கட்டத்தில் அவருக்கு வெறுமை ஏற்பட்டு விடும்.
”முப்பது வருஷமா ஏதோ கனவ வளத்து வச்சிண்டு இது வரைக்கும் வந்தாச்சு. அந்தக்கனவு என் அன்றாட வாழ்க்கையில இருந்த சலிப்பை இல்லாம பண்ணி ஒரு சின்ன குளுமைய மனசிலே நிறைச்சிட்டிருந்தது. அதை அப்டியே விட்டிருக்கணும். இவ்வளவு தூரம் வந்திருக்கக்கூடாது.” என அவர் எண்ணி வருத்தப்படுவார்.

4. 3 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற அராத்துவின் புத்தக வெளியீட்டு விழாவில் தாங்களும், சாரு நிவேதிதாவும் கலந்துக்கொண்டீர்கள். அப்போது ”நாடு கடத்தப்பட்டீங்கனா எந்த நாட்டுக்கு செல்ல விரும்புவீங்க” என்று சாரு தங்களிடம் கேட்டார். அதற்கு ஆஸ்திரேலியா என்று பதிலளித்தீர்கள். பதிலுக்கு, தான் சிலி நாட்டிற்கு செல்ல விரும்புவதாக சாரு தெரிவித்தார். அதற்கு தாங்கள் ”அனேகமா அங்க போகற வரைக்கும்தான் அது உங்களுக்கு பிடிக்கும்னு நெனைக்கறேன்” என்று கூறினீர்கள்.

5. ராகுல் சாங்கிருத்யாயன் தான் எழுதிய ஊர்சுற்றிப் புராணத்தில், ஊர்சுற்ற விரும்பும் மகன்களை அம்மாக்கள் பணம் கொடுத்து சில மாதங்களுக்கு வெளியே அனுப்பி வைக்க வேண்டும் என கூறுகிறார். ”இப்படி செய்தால் அந்த தாய்க்கு லாபம்தான். அந்த பையன் ஊர் சுற்றும் திறமை இல்லாதவனாக இருந்தால், மீண்டும் விரைவிலேயே தன் வீட்டுக்குத் திரும்பி வந்து விடுவான். அவனுடைய ஊர் சுற்ற வேண்டுமென்ற பொய்யான ஆசையும் அடங்கிப் போய்விடும்.” என அவர் தெரிவிக்கிறார்.

இவ்வாறு, இரவு நாவலில் வந்த அந்த பைனாக்குலர் பெண்கள் தொடர்புடனும்,  தொடர்பே இல்லாமலும் இவற்றை எல்லாம் நினைவூட்டிவிட்டு, மீண்டும் வடஇந்தியா சென்று சேர்ந்து விட்டார்கள்
………………..

ஹரிதுவார் குறித்த கனவில் வாழும் ஜோதிகா கதாபாத்திரமும், மெக்கா குறித்த கனவில் வாழும் அந்த இஸ்லாமிய முதியவரும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்களின் உணர்வுகளை பூரணமாக என்னால் உணர முடிகிறது. அவர்களை போலவே ஒரு ஊரை அங்குல அங்குலமாக படித்தும், கேட்டும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த ஊரை கற்பனையால் மேலும் பிரமாண்டப்படுத்தியப்படி இருக்க வேண்டும். ஆனால், கடைசி வரை அந்த ஊர் பக்கம் மட்டும் தலை வைத்து படுக்க கூடாது என்ற எண்ணம் எனக்கு உள்ளது. நிஜமான ஓர் ஊரில் கற்பனையில் மட்டுமே வாழ்ந்து வந்தால் சுவாரஸ்யமாகத்தானே இருக்கும்..

நன்றி
ஆனந்த குமார் தங்கவேல்
கோயம்புத்தூர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2021 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.