லலிதா என்ற யானை- கடிதங்கள்

லலிதா என்ற யானை

அன்புள்ள ஜெ

லலிதா என்னும் யானை குறிப்பு மிக அழகானது. வேறெங்கும் இச்செய்தியை காணமுடியவில்லை. இத்தகைய தீர்ப்புகளில் இருந்து ஒரு வாழ்க்கைக்கதையை- செய்தியை கண்டடையும் செய்தியாளர்கள் இங்கே இல்லை. உங்கள் நட்பு வட்டாரத்தில் இப்படிப்பட்ட வாசகர்கள் நிறைந்திருக்கிறார்கள். எல்லாம் எப்படியோ உங்கள் கண்களுக்கு வந்துவிடுகிறது. திரு வி.எஸ்.செந்தில்குமார் வழக்கறிஞர் என நினைக்கிறேன். மிகச் சிறப்பான நடையில் சுருக்கமாகவும் அழகாகவும் எழுதியிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். சட்டத்துறையில் உள்ள வாழ்க்கைச்சிக்கல்கள் தத்துவக்கேள்விகள் பற்றி அவர் எழுதலாம்

அந்தத் தீர்ப்பில் இன்னும் சுவாரசியமான விஷயங்கள் உள்ளன. அந்த யானை புழங்கும் பக்கத்து தோட்டத்தை யானை இருக்கும் வரை வேறெவருக்கும் விற்கமாட்டேன் என ஓர் உறுதிமொழியை நீதிபதி பெற்றுக்கொள்கிறார். அந்த உறுதிமொழிக்குச் சட்டப்பெறுமதி உண்டா என்று தெரியவில்லை. ஆனால் அப்படி ஓர் உறுதிமொழி பெறப்பட்டதே மிக அருமையான ஒரு விஷயம்

மிகச்சிறப்பான கட்டுரை

என்.குமார்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

லலிதா என்னும் யானை பதிவையும் அது தொடர்பான மதுரை நீதிமன்ற தீர்ப்பையும் வாசித்தேன்.ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் உண்டு பண்ணும் தீர்ப்பு இது.

லலிதா குறித்த முழுப்பதிவையும், தமிழ் வாசிக்கத்தெரியாத ’யானை சிவா’ என்றழைக்கப்படும் என் மாணவன் ஒருவனுக்கு நேற்றிரவு வாசித்துக்காட்டினேன்.  அவன் மிக இளம் வயதிலிருந்தே யானைகளின் பேரிலான காதலில் இருப்பவன். விரும்பியபடியே கேரள வனத்துறையில் பணிபுரிகிறான்.

மனிதர்களுக்கும் யானைகளுக்குமான உறவு குறித்தும், மனித விலங்கு மோதல் குறித்தும் பல இடங்களில் முக்கியமான உரையாற்றுபவனும் கூட. கல்லூரியில் படிக்கையிலேயே நினைத்துக்கொண்டாற்போல் விடுப்பு எடுத்துக்கொண்டு யானை முகாம்களுக்கு செல்லுவதும், 10 ரூபாய் டிக்கெட் வாங்கிவிட்டு குருவாயூர் அருகே உள்ள யானைக்கொட்டடியில் நாளெல்லாம் யானைகளுடனேயே இருப்பதுமாக இருப்பான். சமீபத்தில் இறந்து போன டாப்ஸ்லிப்பின் கல்பனா என்னும் பெண் யானையுடன் அவனுக்கு பேரன்பு. இருவரும் அப்படி குலாவிக்கொண்டிருப்பார்கள். வாரா வாரம் போய் கல்பனாவை பார்ப்பதும் கொஞ்சுவதுமாக இருந்தான். சிவா கல்பனாவை கல்யாணமே செய்துகொள்ளப் போகிறான் என்றுகூட கேலிப்பேச்சுக்கள் அவன் வீட்டில் இருந்தது. எனக்கே அவன் ஸ்னேகா என்னும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளும் வரையிலும் அந்த சந்தேகம் இருந்தது.

லலிதா விவகாரத்தை போலவே சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் ஒரு சம்பவம்  நடந்ததாக சிவா நேற்று குறிப்பிட்டான்.

கேசவன் என்னும் குறும்புக்கார யானை, (குருவாயூர் கோவிலின் வலிய கேசவனல்ல, பிறிதொரு கேசவன்) அவன் குறும்பென்பது ஒருசில கொலைகளையும் உள்ளடக்கியது. கேசவனை திருச்சூர் பூரத்துக்கு அழைக்கவேண்டும் என ஒரு தரப்பும், வேண்டாம் குழப்பமாகும் என்று மறுதரப்புமாக சச்சரவாகி இறுதியில் அது வழக்கானது. வழக்கை விசாரித்த நீதிபதி கேசவனை நேரில் பார்த்தே முடிவு சொல்ல முடியுமென்கிறார்.

அவர் வந்திருக்கையில் வழக்கமாக ஒரு கோவிலில் பகவதி பூஜை முடிந்ததும் கேசவனுக்கு பிரசாதம் ஊட்டிவிடும் பூசாரி அன்றைக்கும் அதை செய்து கொண்டிருந்திருக்கிறார். பின்னர் கேசவன் பூசாரியை துதிக்கையில் தூக்கியும் அணைத்தும் கொஞ்சி விளையாடியதை பார்த்துக்கொண்டிருந்த அவர், அந்த பூசாரியும் உடனிருக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன், கேசவன் விழாவில் கலந்துகொள்ள அனுமதி அளித்திருக்கிறார். விழாவில் பாகனை தட்டுவது உள்ளிட்ட சின்ன சின்ன பிரச்சனைகளை கேசவன் செய்தாலும் பூசாரி அருகிலிருந்ததால் பெரிய குழப்பமொன்றும் நடக்கவில்லை.

சிவா எப்போதும் பூரம் விழாவுக்கு செல்வான். சங்கிலிகள் யானைகளின் கால்களில் காயமேற்படுத்தி இருந்தால் கவனித்து பாகன்களுக்கு அதை தெரிவிப்பது, ஆபரணங்களால் அவற்றின் உடலில் புண்களிருப்பின் அதையும் சுட்டிக்காட்டி மருந்து போடச்சொல்லுவது என்று விழா முடியும் வரை அங்கேயே இருப்பான்.

இரவுகளில் காட்டில் ரோந்துப் பணியிலிருக்கையில் யானைகளைப் பார்த்தால் அகாலத்தில் அலைபேசியில் என்னை அழைத்து  அன்னை யானை இருளில்  குட்டிக்கு மாம்பழங்களை பறித்து ஊட்டிக்கொண்டிருந்ததையோ, மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானையைக்குறித்தோ, அஷ்டலக்ஷணங்களுடன் பிறந்த ஒரு யானைக்குட்டியொன்றின் அழகைக்குறித்தோ  விவரித்து  சொல்லிக்கொண்டிருப்பான். பல சமயங்களில் எனக்கு அவன் மீது பொறாமையாக இருக்கும். காடு கிரியை எனக்கு எப்போதும் அவன் நினைவூட்டுவான். வெண்முரசில் வரும் யானைகளைப்பற்றிய பதிவுகளை அவ்வப்போது அவனுக்கு சொல்லுவேன்.

படித்தது தாவரவியல் என்றாலும் அவன் பிடிவாதமாக யானைகளைக் குறித்தேதான் ஆய்வு செய்வேன்று பிடித்த பிடியில் நின்று, என் வழிகாட்டுதலில் ethnoveterinary பிரிவில்  யானைகளின் நோய்களுக்கும், உடலுபாதைகளுக்கும், உடற்காயங்களுக்கும், புண்களுக்கும் பாகன்களாலும் பழங்குடியினராலும் அளிக்கப்படும் தாவரமருந்துகளைக் குறித்து ஆய்வு செய்தான்.  அர்த்தசாஸ்திரம் அக்னிபுராணம், ஹஸ்த ஆயுர்வேதம், கஜசிகிக்‌ஷை, அஷ்டாங்க ஹ்ருதயத்திலிருந்தெல்லலாம் மேற்கோள்களும் குறிப்புகளும் எடுத்தாளப்பட்டிருக்கும் அவன் ஆய்வேடு எனக்கும் மிக விருப்பமானது.

யானைகள் குறித்த இப்படியான சர்ச்சைகளும் வழக்குகளும் நடந்தபடியேதான் இருக்கின்றன. கேரளாவில் இது அதிகம்.   இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட விதிகளின் படி ஆண்யானைகள் மட்டுமே கலந்து கொள்ளவேண்டிய தூத்தா பகவதி கோவில் பூரத்தில் வரிசையில் நிற்க ஒரு ஆண் யானை  குறைவாக இருந்ததால், அவசரத்துக்கு லக்கிடி என்னும் பெண்யானைக்கு பொய்த்தந்தங்களை பொருத்தி வேடமிட்டு கொண்டு வந்து நிறுத்தி அது கண்டுபிடிக்கப்பட்டு பெரிய சர்ச்சையானது.

இந்த தீர்ப்பும் அத்தனை சுவாரஸ்யமாக அத்தனை அன்புடன் அளிக்கப்பட்டிருக்கிரது.  நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப்போல குழந்தைகளின் கஸ்டடியில் செய்யவேண்டியவற்றை குறிப்பிட்டிருபப்து மிக நெகிழ்ச்சியாக இருந்தது.

லலிதாவை நேரில் பார்த்து, அதற்கு உணவளித்து, அதன் அன்பை அருகாமையை, உணர்ந்து, அதன் உடலில் புண்களேதுமில்லையென்பதை,  அந்த பரந்த தென்னதோப்பு லலிதாவுக்கு செளகரியமானதென்பதை, லலிதா சங்கிலியில் பிணைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை,  சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத்தான் அது அருந்துகிறதென்பதை, அந்த வாழிடம் லலிதாவின் வாழ்நாளில் விற்கப்படாது என்பதை  இப்படி எத்தனை நுட்பமான, எத்தனை முக்கியமான விவரங்களை எல்லாம் உறுதி செய்தபின்னரே இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறாரென்பது பெரும் ஆச்சரயத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.

வெண்முரசு, வண்ணக்கடலில் குருகுலத்தில்  அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்குமான அந்த முக்கியமான போர் நடக்குமுன்பு யானைகளைப்பற்றிய பல முக்கிய தகவல்கள் சொல்லப்பட்டிருக்கும். துரோணர் அர்ஜுனனிடம் // “யானையை அறிவது மிக எளிது. ஏனென்றால் யானை மிக எளிதாக நம்மை அறிந்துகொள்கிறது.” // என்கிறார். லலிதாவும் திரு சுவாமிநாதனும் அப்படி பரஸ்பரம் அறிந்து கொண்டதினால் இந்த தீர்ப்பு வந்திருக்கலாம்

நன்றியும் அன்புமாக

லோகமாதேவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 22, 2021 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.