உலக இலக்கியத்தின் சாளரம்.

வாசிப்பை நேசிப்போம் குழுவில் கா.மூர்த்தி எழுதியுள்ள புத்தக விமர்சனம்.

••••

நூல் : கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்

ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்

பதிப்பகம் : தேசாந்திரி

ஒரு வருடத்தில் எந்தெந்த புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் தயாரிப்பதற்கு ஒரு “Shortcut”

1.  எஸ்ரா அவர்கள் எழுதிய புத்தகங்களைப் படிக்க வேண்டும்

2. எஸ்ரா பரிந்துரைக்கும் புத்தகங்களைப் படிக்க வேண்டும் இதை முடித்தால் அந்த ஒரு வருடத்திற்கு பலதரப்பட்ட புத்தகங்களைப் படித்த அனுபவம் கிடைக்கும்.

இந்த இரண்டுமே சேர்ந்து நடந்தால் எப்படி இருக்கும்? அதுதான் இந்த புத்தகம். இந்த வருடத்தின் மிக முக்கியமான புத்தகங்களில் இது ஒன்று. மொத்தம் 26 உலக இலக்கிய கட்டுரைகள், அத்தனையும் தகவல் களஞ்சியங்கள். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் முக்கிய படைப்புகள் பற்றியும் இந்த நூல் நமக்கு ஒரு அறிமுகம் தருகிறது. இதற்கு முன்பாகவும் எஸ்ரா அவர்கள் உலக இலக்கியத்தைப் பற்றிய புத்தகங்கள் வெளியிட்டு இருந்தாலும் இந்தப் புத்தகம் இதுவரை வெளிவந்த புத்தகத்தை விட ஒரு படி மேலாகவே இருக்கிறது.

இதில் எஸ்ரா அவர்கள் முன்னுரையில் குறிப்பிடுகிறார் “நாம் பயன்படுத்தும் செல்போனில் துவங்கி வீட்டுச் சமையலறை வரை சர்வதேச  தயாரிப்புகளை வாங்குகிறோம், பயன்படுத்துகிறோம் ஆனால் ஒவ்வொரு வருடமும் உலக அளவில் வெளிவரும் புத்தகங்களையோ அல்லது எழுத்தாளர்களைப் பற்றி வாசிப்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது”.  எவ்வளவு உண்மை?

இந்தப் புத்தகத்தில் கிட்டத்தட்ட ஒரு 50 எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகமாவது நமக்குக் கிடைக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஐந்து லட்சம் பிரதிகள் விற்கும் புத்தகத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உவமைகள், உருவகங்கள் இன்றி கவிதை எழுதும் கவிஞரை உங்களுக்குத் தெரியுமா? எந்தெந்த  நாவல்கள் திரைப்படமாக வந்திருக்கிறது என்ற தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா? 42 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள எழுத்தாளரின் படைப்புகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள உலகப் புகழ்பெற்ற புத்தகங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?- இந்த நூலில் குறிப்பிட்ட அனைத்து புத்தகங்களையும் அல்லது எழுத்தாளர்களைப் பற்றியும் நாம் முழுமையாக வாசித்து விட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் குறைந்தபட்சம் இவர்களைப் பற்றியாவது நாம் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த நூலில் இறுதியாக எஸ்ரா அவர்கள் குறிப்பிடும் ஒரு கருத்து மிகவும் முக்கியமானது. அயல்நாடுகளில் அவர்களுடைய எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்கள் தொடர்ந்து எடுக்கப்படுவதாகவும், அது பல கல்வி நிலையங்களில் திரையிடப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  அதற்கு அவர்கள் தீவிரமான ஆய்வு மேற்கொண்டு கடின உழைப்போடு பெரும் பொருட் செலவுடன் உருவாக்கப்படுகிறது , ஆனால் இந்தியாவிலோ சாகித்திய அகடமி மட்டுமே ஆண்டுதோறும் சிறந்த இந்திய எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப் படங்களை உருவாக்கி வருகிறது. அது பெரும்பாலும் நியூஸ் ரீல்  போலவே தயாரிக்கப்படுவதால் அதை யாரும் அதிகமாக பார்ப்பதில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்

சமகாலத்தில் தன்னுடைய எழுத்தைத் தவிர்த்து மற்ற எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களது படைப்புகளைப் பற்றியும் தொடர்ந்து அறிமுகப்படுத்துவதில் எஸ்ரா அவர்கள் எப்போதும் முன்னிலையில் இருக்கிறார். நாம் பரீட்சைக்குத் தயார் செய்யும்பொழுது “Important Questions” என்று நம்முடைய ஆசிரியர்கள் நமக்குக் குறித்துத் தருவார்கள். அதுபோல்தான் நமக்கு எஸ்ரா அவர்கள் இந்த நூலைப் படைத்துள்ளார். இந்த ஒரு புத்தகம் உலக இலக்கியங்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளவும், உலக இலக்கியங்களைத் தொடர்ந்து வாசிக்கவும் பெரிய உந்துதலாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

நன்றி

வாசிப்பை நேசிப்போம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2021 01:57
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.