விஷ்ணுபுரம் விருதுவிழா பதிவுகள்-10

[image error]


கோவையில் 24,மற்றும் 25 சனி ஞாயிறு இரு நாள்களும் அந்த மழையில் நனைந்தேன். முதல்நாள் நாஞ்சில் நாடன், பாரதி மணி, இரா. முருகன், பவா. செல்லதுரை, கன்னட எழுத்தாளர் ஹெ.எச். சிவப்பிரகாஷ் ஆகியோர் நெறிப்படுத்திய அமர்வுகளும், மறுநாள் சு.வேணுகோபால், வண்ணதாசன், ஆகியோரின் அமர்வுகளும் நடைபெற்றன.


இரண்டாம் நாள் இறுதி அமர்வாக சுப்ரபாரதிமணியன், நாஞ்சில் நாடன், தேவதேவன், பாவண்ணன், ஆகியோரை முன்னிலைப்படுத்திய நிகழ்வில் எழுத்தாளன் ஏன் எழுதுகிறான் என்பதும் தற்கால இலக்கியப் போக்குகள் என்பதும் பேசுபொருள்களாக இருந்தன. 


ஓர் இலக்கிய வினாடிவினாவும் நடத்தப்பட்டு சுமார் 30000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் வெற்றி பெற்றோர்க்கு வழங்கப்பட்டன. எல்லா அமர்வுகளும் காலத்தில் தொடங்கிக் காலத்தில் முடிக்கப்பட்டது குறுக்கப்பட்டது. ஒவ்வொரு அமர்விலும் சுமார் 300 சுவைஞர்கள் கலந்து கொண்டதோடு எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி ஆக்க பூர்வமாக விவாதித்தது அவர்களின் வாசிப்பு அனுபவத்தை வெளிப்படுத்தியது. அவர்கள் அனைவருக்கும் தங்கும் இட வசதி, மற்றும் உணவு ஏற்பாடுகளை விஷ்ணுபுரம் வட்டமே செய்திருந்தது.


[image error]


இரண்டாம் நாள் மாலை விழாவில் வண்ணதாசனுக்கு ஒரு லட்சம் ரூபாய் விஷ்ணுபுரம் விருதாக வழங்கப்பட்டது. அவரைப்பற்றிய ஆவணப்படம் ஒன்று செல்வேந்திரன் இயக்கியதில் ஒரு பகுதி காண்பிக்கப்பட்டது. வண்ணதாசனைப் பற்றிப் பலரும் எழுதிய ஒரு தொகுப்பு நூல் ஒன்றும் “தாமிராபரணம்” எனும் பெயரில் வெளியிடப்பட்டது. அதில் என் கட்டுரையும் உள்ளது.


விழாவை இரண்டு மணிநேரத்தில் நடத்தி முடித்தது சாதனையே! நடிகர் நாசர் உட்பட அனைத்து வாழ்த்துரையாளர்களும் குறிப்பிட்ட காலத்தில் தங்கள் உரையை முடித்துக் கொண்டனர். விழா அரங்கம் வந்திருந்த இலக்கிய விரும்பிகளால் நிரம்பியதால் அரங்கத்திற்க்குக் கீழேயும் காணொளி வசதி செய்யப்பட்டிருந்தது. சுமார் 2000 பேர்கள் வந்திருக்கலாம்.


ஓர் எழுத்தாளரை எப்படிப் பாராட்டவேண்டும் என்பதும், ஓர் இலக்கிய விருது அளிக்கும் விழாவை எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கும் இந்த விழா மட்டுமே எடுத்துக் காட்டாகும். எந்தப் பலனையும் எதிர் நோக்காமல் 2010-லிருந்து தொடர்ந்து இவ்விருது விழாவை நடத்தும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும், அது தொடங்கியதிலிருந்து வழி நடத்திச் செல்லும் ஜெயமோகனையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். வளர்க அவர்தம் பணி!


வளவ துரையன்


[image error]


அன்புள்ள ஜெ,


நலமுடன் பெங்களூரு வந்துவிட்டேன். தொடர் அலுவலக வேளைகளாலும், பயணங்களாலும் சற்று உடல்நல குறைவுடன் தான் சனிக்கிழமை இரவு கோவை வந்து சேர்ந்தேன். சுனில் அண்ணனின் உதவியால் தான் என்னால் அங்கு முழு நேரமும் இருக்க முடிந்தது. இந்த உடல்நல குறைவும் நல்லதிற்கு தான் என்னும் எண்ணம் கொள்ளும் அளவிற்கு நெகிழ்ச்சியான தருணம், அந்த பென்னாகரம் நண்பனின் வருகை. சனிக்கிழமை இரவு மருத்துவருடன் நடந்த கலந்துரையாடலில் பல அறியாத விஷயங்களை அறிந்து கொண்டேன்.


மறுநாள், சு.வேணுகோபால் தன் அண்ணனை பற்றி பேசிய நொடிகளிலும் சரி, வண்ணதாசன் பேசிய பல இடங்களிலும் என்னையும் மீறி ஒரு உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்தேன். அடுத்த அமர்வில் பாவண்ணன் பேசிய பொழுது கண்களில் நீர் திரண்டுவிட்டது. வாழ்வின் உன்னதமான நொடிகள் இவை. விருதுவிழாவில் வண்ணதாசன் பேசிய வார்த்தைகளை மீண்டும் மீண்டும் ஞாபகபடுத்தி கொள்கிறேன். இன்னும் நான் கோவையிலே இருப்பதாய் உணர்கிறேன். பல அரங்குகளில் பங்கேற்காமல், விழா சிறப்பாக நடைபெறுவதற்காக செயலாற்றிய நம் நண்பர்கள் அனைவருக்கும் என் மரியாதையும், நன்றிகளும்.


ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா


 


888


அன்புள்ள ஜெ


வண்ணதாசன் ஆவணப்படத்தின் சிலகாட்சிகளை பார்த்தேன். வண்ணதாசன் என்ற ஆளுமையை அருகே இருந்து பார்க்கும்போது எனக்குத்தோன்றிய இரு விஷயங்கள் அவருடைய நெர்வஸ்நெஸும் அவருடைய அன்பான சிரிப்பும்தான். ஆவணப்படத்தில் அவருடைய கைகள் வழியாக அந்த நெர்வஸ்நெஸையும் சிரிப்பின் உற்சாகத்தையும் மாற்றி மாற்றிக் காட்டி அழகான ஒரு தொகுப்பைச் செய்திருந்தார் செல்வேந்திரன். அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்


செண்பகமூர்த்தி


[image error]


அன்புள்ள ஜெயமோகன்


இந்தமுறை விஷ்ணுபுரம் விருதுவிழாவில் [விருந்து விழாவும்கூட] என்னை மிகவும் கவர்ந்தது இளம் வாசகர்களின் பங்கேற்புதான். பலரை சிறுபையன்கள் என்றுதான் சொல்லத்தோன்றியது. அதிலும் பாரதி என்ற பையன் பங்கேற்றது மிக ஆச்சரியமானது. அற்புதமான வாசிப்பு. நல்ல மொழி. அவர்களைப் போன்ற இளைஞர்களைப் பார்க்கையில் இலக்கியத்தின்மீதே பெரிய நம்பிக்கை ஏற்படுகிறது


உணவு சுவையானதாக இருந்தது. எந்த ஓட்டல் என்று சொன்னால் நல்லது


செல்லப்பா


 


[image error]


 


 


அன்புள்ள ஜெமோ ஸார்,


“கவிதையை நம்ம அனுபத்தோட பொறுத்தி பாக்கணும்.. நம் அனுபவமாக இருக்கணும் என அவசியமில்லை. நாம் சந்தித்த பிற மனிதர்களின் அனுபவங்களாகக் கூட இருக்கலாம். அனுபத்தோட பொறுந்துரப்பதான் கவிதை வாசிப்பு முழுமை பெறும்” இது நீங்கள் ஊட்டி முகாமில் சொன்னது. இதிலிருந்துதான் கவிதை திறந்துகொண்டது. அன்று விஜயராகவன் ஸார், தேவதேவனின் சிறு கவிதைத் தொகுதிகளை கைபோன போக்கில் கொடுத்துக் கொண்டிருந்தார். அதில் கிடைத்த கவிதைத் தொகுதியே நான் வாசிக்க நேர்ந்த முதல் கவிதைத் தொகுதி.


பல கவிதைகள் அர்த்தமாயின. அறிதலின் கணங்களை கடந்துகொண்டிருந்தேன். அதன் இன்பமே அலாதி. பின்பு மனுஷ்யபுத்திரனை நீராலானது தொகுதி வாசித்தேன். ரொம்பவும் ஈர்த்தது. “மனுஷ்யபுத்திரனின் ஆரம்ப காலக் கவிதைகள்” என நீங்கள் பலமுறை குறித்துச் சொல்வதுண்டு. ஆனாலும் அவரது நீராலானதும் அந்நிய நிலத்துப்பெண்ணும், கவிதை வழக்கமாய் செய்யும் காற்றில் மேலெழுப்புதலை செய்யத்தான் செய்தது. பின்பு சுகுமாரனின் கோடைக்காலக் குறிப்புகள் வாசித்தேன். பின்பு எதேச்சையாக கல்யாண்ஜி….


[image error]


வண்ணதாசனும் கல்யாண்ஜியும் ஒருவரே என்பது நான்கைந்து வருடம் முன்பு நான் செவி வழி அறிந்து சேமித்துக் கொண்டது தகவல். தகுந்த நேரத்தில் இது போன்ற தகவல்களை நண்பர்கள் மத்தியில் சொல்வது மூலம் என்னை இலக்கிய லங்கோடு என நிறுவிக்கொள்ளலாம். அப்டியாப்பட்ட நண்பர்கள் எனக்கு. அவரது முகப்புத்தகக் கவிதைகளை வாசித்துவிட்டு, அவரது கவிதைத் தொகுதிகள் சில வாங்கினேன். இதில் முரண் என்னவெனில் சுகுமாரனுக்கு அடுத்த படியாக கல்யாண்ஜிக்கு தாவினதுதான்.


இருவருக்குமான வித்தியாசம் பெரியது. பாம்புகள் நிறைந்த அறையில் ஒரு கோப்பை விஷத்தை வெறித்திருந்த நான், சட்டென குளத்தங்கரையில் காதலி வரக் காத்திருக்கலானேன். மைனா இறந்து கிடப்பதாக நினைத்து வேலை மெனக்கெட்டு வந்து பார்த்துவிட்டு பிய்ந்த செருப்புதான் என தன் வழி செல்லும் மனிதர்கள், மரத்திற்கு வழிவிட்டு காம்பவுண்டு சுவற்றை இடித்தவர், காற்றினால் விசிறி சிரிக்கும் பூக்கள், மரத்திலிரங்கும் தலை கீழ் அணில், கதவு திறக்கையில் சரியும் வளையல்… எனக்கு இவ்விடத்திலேயே நிற்க வேண்டும்போலிருந்தது.


அழகு, அன்பு…இரண்டுமாக கல்யாண்ஜியின் கவிதைகள் தெரிந்தன. நேற்று பவா மேடையில் பேசிய போய்க்கொண்டிருப்பவளை முன்பு வாசித்திருக்கிறேன்… பவா ஸாரின் கோணம் புதியதாய் இருந்தது. அன்னம் ஜூடியின் வீட்டிற்கு முன் திரண்டு நிற்கும் சாக்கடை ஒன்றிருக்கும். அந்த சாக்கடைக்கு இப்பக்கமே ஆண்கள் நிற்பதாக எனக்குப் பட்டது. அன்னம் ஜூடியின் வீட்டை அடைய சாக்கடையைக் கடக்க வேண்டும். உடலளவில் கடக்கலாம், மனதளவில் ஆண் சாக்கடையில்தான் நிற்கிறான். சாக்கடையைக் கடக்காத வரை அன்னம் ஜூடியை அறிய முடியாது…இப்படியாக அக்கதையை அறிந்தேன்.


நவீன இலக்கியம் தோறும் கொட்டிக் கிடக்கும் வாழ்வின் மீதான வெறுப்பும் காழ்ப்பும் கல்யாண்ஜியிடம் இல்லை. தற்கொலைக்கு முயன்று தோற்றவன் இங்கில்லை, மாறாக ஒரு மரத்தடியில், மரமோடு மரமாய் நிற்கும் ஒருவன்தான் உள்ளான். பாம்பு ஊர்ந்து சென்ற தடமுள்ள ஒரு தகிக்கும் பாறையருகே நின்று அவனைப் பார்ப்பது எனக்கு ரொம்பவும் முக்கியமானதாகப் படுகிறது.


 


[image error]


நண்பன் எனக்கு விளைவித்த ஒரு அவமானத்தின் அன்று காலை கல்யாஜியைத்தான் வாசித்திருந்தேன். அவமானத்தில் குறுகிய என்னால் துரோகத்தின் சிறு முள் உணடாக்கிய சிறு ரணத்தையும் பொறுக்க முடியவில்லை. இவர் காட்டும் மனிதர்கள் உண்மை இல்லை. அன்று அவேசமாக “அன்புள்ள கல்யாண்ஜி,” எனத் தொடங்கி கடிதம் எழுதினேன். இன்று வரை அது என் லாப்டாப்பில் உறங்குகிறது. பின் என் இலக்கிய நண்பன் ஒருவனை கல்யாண்ஜியை அவர் வீட்டுக்கே சென்று சந்திக்கலாம் என அழைத்தேன். ஆனால் அவர் எழுதிய கடைசி வார்த்தை வரை வாசித்துவிட்டுத் தான் செல்லவேண்டும். எண்ணற்ற முறை மானசீகமாக அவர் வீடு சென்று திரும்பினேன்…மானசீகமாக மட்டும். கல்யாண்ஜி என்னை ஈர்த்துவிட்டிருந்தார். அவருக்கு வாசகனாகிவிட்டிருந்தேன்.


விழாவின் போது மொத்த அரங்கும் எழுந்து நின்று கைத்தட்டி, கல்யாண்ஜிக்கு விருது அளிக்கப்பட்ட போது, சுர்ர்ரென உடல் சிலிர்த்தடங்கியது. முதுகுத் தண்டிலிருந்து மேலேறிய இந்த சிலிர்ப்பலை, என் கன்னம் தொட்டேறி கீழிமைக் கடந்து கண்ணில் நீர்ப்படலமாக பரவி, கீழிமை மேல் தேங்கித் திரண்டது. நன்றியால் பொங்கினேன். மானசீகமாக பலருக்கு நன்றி சொன்னேன். தூய்மையான இக்கணத்தினூடே நவீன இலக்கியத்தால் வளர்த்தெடுக்கப் பட்ட குரூரமான ஒருவன் உள்ளிருந்து கொண்டு “அடங்குறியா…மங்கல பிப்பீ டும் டும் போட்டதும்,, எல்லாரும் கைதட்டவும், கண்ல தண்ணி வருது, அவ்ளோதான்…ரொம்ப அலட்டிக்காத” என்றான். இந்த குரலை என்னதான் செய்வது. இந்த அவநம்பிக்கையின் குரல்…இதோடேதான் பயணிக்க வேண்டியுள்ளது.


 


[image error]


இந்த நவீன அவநம்பிக்கைக்கு எதிரான குரலாக பவா செல்லதுரையின் உரையை உள்வாங்கிக்கொண்டேன். பஷீரிடம் திருடிய திருடன்தான்…ஆனால் அவன் பெயர் அறம் அல்லது கருணை அல்லவா?? தூய்மையின் கணங்கள் தோன்றி மறைபவை. ஒவ்வொரு மனிதனும் அதனூடே பயணித்து மீள்கிறான். என்ன….அக்கணத்தில் நீடிக்கத்தான் முடியவில்லை. மனிதனிடம் தான் காண விரும்புவது அன்பையும் அறத்தையும்தான் என்று பவா சொன்ன போது அவரை இதுவரையில் வாசிக்காமல் போனதற்கு வருந்தினேன். ஊருக்கு திரும்புகையில் “ஏழுமலை ஜமா” சிறுகதையை வாசித்துவிட்டுத்தான் உறங்கினேன். விரைவில் மற்றவை.


ஊட்டியிலும் சரி, கோயம்பத்தூரிலும் சரி…  ஒவ்வொரு விஷ்ணுபுரம் கூடலுக்குப் பின்னும், என் வாசிப்பெனும் செயல்பாட்டை மெருகேற்றுவதற்கான வழிகளை அறிந்து திரும்புகிறேன். படிக்கவேண்டிய எழுத்தாளர் பட்டியலுடன் திரும்புகிறேன். இம்முறையும் அப்படியே. ஒரு வாசகனாக கோடி நன்றிகள், விஷ்ணுபுரம் கூடல் நிகழ்ந்தேறக் காரணமாகும் ஒவ்வொருவருக்கும். இந்தப் பிரதான இலக்கியப் பெருக்கில் மிகச் சிறிய குமிழியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.


அன்புடன்,

’மோட்டார்’ ஸ்ரீநிவாஸ்.

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2016 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.