விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவு 4- சுரேஷ் பிரதீப்

அன்புடன் ஆசிரியருக்கு,


வெள்ளிக்கிழமை நள்ளிரவு  பதிவினை பார்த்த போது கரூர் தாண்டி வந்து கொண்டிருந்தேன். உண்மையில் இறங்கி ஓடி விடலாமா என்ற மனநிலைக்கு சென்று விட்டேன். நாஞ்சில் நாடன் தொடங்கி ஒரு பெரும் பட்டியலை அளித்திருந்தீர்கள். நாஞ்சிலையும் கொஞ்சம் தேவதேவனையும் கொஞ்சம் முருகவேளையும் மட்டுமே அதுவரை வாசித்திருந்தேன். அதுவும் “ஒண்ணுமே வாசிச்சதில்லை சார்” ரொம்பவும் நம்பிக்கை இழக்க செய்திருந்தது.


குஜராத்தி சமாஜில் செந்தில் முதன்முதலில் கை கொடுத்து வரவேற்றார். அதன்பிறகு அதற்கு முந்தைய தயக்கங்கள் இப்போது தான் நினைவுக்கு வருகின்றன. கொல்லிமலை சந்திப்பு போலவே இரண்டு நாட்கள் இடையூறில்லாமல் கடந்தது மகிழ்ச்சியை தந்தது. வாசித்த ஆளுமைகளை அருகிருந்து பார்ப்பதே பிரமிப்பு தருகிறது. உங்களையும் நாஞ்சிலையும் வண்ணதாசனையும் பார்ப்பதில் அந்த பிரமிப்பை நான் அடைந்தேன். எழுத்தாளரை நேரில் சந்திப்பதில் என்ன கிடைக்கும் என்று புரிந்தது.


 


[image error]


பவாவையும் இரா.முருகனையும் வாசித்திருந்தேன். ஆனால் கேட்க வேண்டும் என்பதற்காக வலிய வரவழைத்துக் கொண்டு கேள்விகளை அவர்களிடம் கேட்க விழையவில்லை. கிட்டத்தட்ட அந்த தாடகை மலையடிவாரத்தவரை நாஞ்சில் நாடனிடம் காண முடிந்தது. சுவை குறித்து அவர் சொன்ன போது நீங்கள் சொன்னதைத் தான் மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டேன். நேர் உரையாடலிலும் தீதும் நன்றும் தொடரின் சரளமும் அவர் புனைவுகளை இயல்பாக ஊடறுக்கும் அங்கதத்தையும் சுவையையும் அவரிடம் காண முடிந்தது.


தேவதேவன் இணையத்தில் கிடைக்கும் “வால்பேப்பர்” கவிதைகளை மட்டும் வாசித்திருக்கிறேன். ஜினுராஜும் நானும் தேவதேவனை தனியே சந்திக்க திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான முழுமையான “முன் தயாரிப்புகளுடன்” கவிஞரிடம் பேசுவதே சரியென்பதால் அவரிடம் அறிமுகம் செய்து கொள்ளவில்லை. வினாடி வினாவிலும் மிகக் கூர்மையான கேள்விகள். பவாவின் கதை சொல்லல் குறித்து இணையத்தில் வாசித்திருக்கிறேன். நேரில் கேட்பது உற்சாகமூட்டும் அனுபவமாக இருந்தது. அதுவும் சரியாக அவர் கதை சொல்லும் நேரத்தில் கீழே அமர்ந்திருந்தோம். சம்மணமிட்டு அண்ணாந்து பார்த்து கதை கேட்பது சிறுவர்களுக்குரிய குதூகலத்தை அளிக்கிறது.


மறுநாள் சு.வேணுகோபலைத் தொடர்ந்து வண்ணதாசன் உரையாடல்களில் பங்கேற்றார். மிக மெல்லியவற்றால் ஆன மனிதர். தனுமை தொடங்கி சமீபத்தில் வாசித்த பூரணம் வரை அவரிடம் அந்த மென்மை தக்க வைக்கப்பட்டிருப்பதை காணும் போது வியப்பே ஏற்படுகிறது.


 


 


[image error]


“உள்ளே பெருமழைக்கு சற்றே நலுங்கும் கிணற்றுநீர் போல அந்தரங்கங்களை மட்டுமே எழுதும் எழுத்தாளருடன் உரையாடல்”. எனக்குப் பிடித்திருந்த உங்களுடைய வார்த்தைகளை அவரும் குறிப்பிட்டது நிறைவளித்தது. சிவபிரகாஷின் நேரடி உரையாடல் சற்றே அதிர்ச்சி கொள்ள வைத்தது. பாசங்கற்ற பேச்சுகளுக்கு பழகிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. பாவண்ணனும் சிலவற்றை பகிர்ந்து கொண்டார். நான் நினைத்தது போலவே தேவதேவன் அதிகம் பேசவில்லை. இரண்டாம் நாள் அமர்வுகளில் அடிக்கடி நீங்கள் எழுந்து வெளியே சென்று விட்டீர்கள்.


மாலையின் மேடை நிகழ்வுகளும் அலங்காரங்களும் செயற்கை தன்மைகளும் இன்றி அரங்கேறின.. வண்ணதாசனின் உரை நெகிழ வைத்து விட்டது. பேசிக் கொண்டிருக்கும் போது கொந்தளித்து தத்தளித்து மீண்டும் தன்னை தொகுத்துக் கொண்டு அவர் ஆற்றிய உரையை அப்படியே நினைவு மீட்ட முடியவில்லை எனினும் அவர் எழுத்துகளின் அழுத்தத்தை இவ்வுரையிலும் உணர முடிந்தது. இரா..முருகனின் வருகை அறிவித்தலுக்கு அடுத்த கடிதமாக செல்வராஜ் அவர்களின் கடிதம் இடம் பெற்றிருந்தது. மேடையில் வண்ணதாசன் சொன்னதையே ஒருவேளை செல்வராஜ் இதை படிப்பாரானால் நானும் அவரிடம் சொல்கிறேன். வண்ணதாசன் உங்களை சந்திக்க விரும்புகிறார். அதுவொரு வித ஏக்கமும் கூட.


 


[image error]


காசர்கோடு வி.மலையப்பனை உங்கள் மூலமாக வண்ணதாசன் சந்தித்தது போல செல்வராஜையும் சந்தித்தால் மகிழ்ச்சி.


எச்.எஸ்.சிவபிரகாஷ் விரும்பியது போல விஷ்ணுபுரம் விருது ஒரு இந்திய நிகழ்வாக விரியும் எனில் முதல் ஆளாக துள்ளிக் குதிப்பவன் நானாகவே இருக்கும்.


அன்புடன்


சுரேஷ் ப்ரதீப்


 


 


222222


அன்புள்ள சுரேஷ்


நான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு சார்ந்து வெளியே செல்ல நேரிட்டது. அத்துடன் ஒன்றும் தோன்றியது, நான் அரங்கிலிருக்கையில் எப்படியோ நானும் விவாதங்களுக்குள் பேசுபொருளாகிறேன் என. பேசுபவர்கள் என் நெடுங்கால நண்பர்கள், அவர்களால் என்னை நோக்கிப்பேசுவதைத் தவிர்க்கமுடியாது. ஆகவே அரங்கை கூடுமானவரை தவிர்க்கவேண்டுமென்று தோன்றியது


ஆனால் எச்.எஸ் சிவப்பிரகாஷின் அரங்கில் முழுமையாக இருந்தேன். அது ஒரு மாபெரும் ஞானசபையாக ஆகியதை கண்டேன்


ஜெ


 


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2016 20:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.