சுகுமாரனுக்கு இயல் விருது – 2016

SUKUMAR


 


கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது இவ்வருடம் (2016) திரு. சுகுமாரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.  சுகுமாரன், 1957-ல், தமிழ் நாட்டின் கோவை நகரத்தில் பிறந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் இளம் அறிவியல் பட்டத்துக்காகப் பயின்றார். தமிழ் வார இதழ்களிலும், தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து தற்போது காலச்சுவடு இதழின்  பொறுப்பாசிரியராக பணியாற்றுகிறார். இவர், “கவிஞர், கட்டுரையாளர், புதின எழுத்தாளர் , மொழிபெயர்ப்பாளர், என பன்முகத் திறனுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். சுகுமாரன், இந்த விருதைப் பெறும் 18-வது தமிழ் ஆளுமை ஆவார். இதற்கு முன்னர் சுந்தரராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ். பொன்னுத்துரை, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், சு. தியோடர் பாஸ்கரன்,  ஜெயமோகன், டொமினிக் ஜீவா, மற்றும் ஆர். மயூரநாதன் ஆகியோர் இயல் விருதைப் பெற்றுள்ளனர்.


 


சுகுமாரன், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், புதினங்கள், மற்றும் முன்னுரைகள் மூலமாக பங்களிப்புகள் செய்துள்ளார். இவரது கவிதைத் தொகுப்பான “கோடைக்காலக் குறிப்புகள்,” பிரமீள், ஆத்மாநாமிற்குப் பிறகு வந்த பல தலைமுறைகளை பாதித்த அரிய தொகுப்பாகும்.  அவரது புதினமான “வெல்லிங்டன்” காலனீய வரலாறு மட்டுமன்றி, அக்கா-தம்பி உறவை தமிழ்ச் சூழலின் பிரத்யேகத் தன்மைக்கேற்ப அலசுகின்ற ஒரு கலைப் படைப்பு.  மலையாள இலக்கிய உலகின் மிகப் பெரிய ஆளுமைகளான வைக்கம் முகம்மது பஷீர்,  சச்சிதானந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன், சக்கரியா போன்றவர்களின் படைப்புகள், சுகுமாரனின்  உன்னத மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் இருந்து இவர் மொழிபெயர்த்த படைப்புகளில் “பாப்லோ நெரூதா கவிதைகள், அஸீஸ் பே சம்பவம்,” போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும்,  சமீபத்தில் வெளிவந்த மார்கெஸின் “தனிமையின் நூறு ஆண்டுகள்,” மற்றும் “பட்டு”ஆகியன நிகரில்லாதவை.


 


தமிழ் இலக்கிய உலகில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக, தனது இலக்கியப் பணிகளில் சமரசம் செய்து கொள்ளாமல் இயங்கிக் கொண்டிருக்கும் திரு. சுகுமாரனுக்கு, 2016-ஆம் ஆண்டுக்கான இயல் விருதை வழங்குவதில் தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமை கொள்கிறது. ‘இயல் விருது’ கேடயமும், 2500 டொலர் பணப்பரிசும் கொண்டது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில், 2017 ஜூன் மாதம் வழமை போல நடைபெறும்.


 


[இயல் அமைப்பின் அறிவிக்கை]


 


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 16, 2016 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.