கண்ணீருப்பின் கவிஞன்

Sukumaran 1


சில படைப்பாளிகள் ஒருகாலகட்டத்தின் அனலாக எழுந்துவருகிறார்கள். கற்பாறைகள் உரசும் பொறிபோன்றவர்கள் அவர்கள்.எழுபதுகளின் கொந்தளிப்பில் இருந்து எழுந்து வந்து எண்பதுகளில் வெளிப்பாடுகொண்ட சில படைப்பாளிகள் பலவகையிலும் பொதுக்கூறுகள் கொண்டவர்கள். தமிழில் சுகுமாரன், சேரன் மலையாளத்தில் பாலசந்திரன் சுள்ளிக்காடு, கன்னடத்தில் கே.வி.திருமலேஷ். .


 


எழுபதுகள் உலகவரலாற்றின் சோர்வுக் காலகட்டம். உலகமெங்கும் புரட்சி இயக்கங்கள் தோன்றி தோல்வியடைந்தன. பனிப்போர் உச்சநிலையில் இருந்தது. புதுயுகம்பிறப்பது குறித்த நம்பிக்கைகள் பொய்த்தன. அந்த விரக்தியின் சினத்தின் ஊடாடும் நம்பிக்கையின் குரல்கள் இவர்கள். இன்றுவரை இவர்களை ஒப்பிட்டு ஒரு விரிவான ஆய்வு எந்த மொழியிலும் நிகழ்ந்ததில்லை.


 


இவர்கள் அனைவருக்குமே தந்தை முக்கியமான படிமம். தங்கள் தந்தையிடம் கொண்ட கசப்பும் விலகலுமே இவர்களின் தொடக்கம். தந்தை என்றால் ஒரு மனிதன் மட்டும் அல்ல. மரபு, குடும்பம், வரலாறு மூன்றும்தான். அவர்களை உதறி எழுவதும் அவர்களுடன் தங்களை அடையாளம் கண்டுகொள்வதும் இவர்களின் கவிதைகளின் முதன்மைச்சரடு


 


அப்பா உன்னிடம் எனக்கு வெறுப்பில்லை


அன்பைபோலவே


 


என்னும் சுகுமாரனின் வரிகளை அக்காலத்தைய இளைஞர்கள் பெரும்பாலானவர்கள் சொல்லியிருப்பார்கள். முகம்நோக்கிக் கண்ணாடியிடம் எதிர்நின்று காறி உமிழ்வதைப்போன்ற தீவிரத்துடன்.


 


index

பாலசந்திரன் சுள்ளிக்காடு


 


 


பாலசந்திரன் சுள்ளிக்காடு நீண்ட இடைவெளிக்குப்பின் தந்தையின் தரப்புக்குச் சென்று எழுதிய தாதவாக்கியம் என்னும் புகழ்பெற்ற கவிதையில் மலநாற்றம் அடிக்கும் வைதரணி என்னும் நரகத்திலிருந்து எழுந்து வருகிறார் தந்தை


 


நீ என் மகன் என்று இனி நானும் கருதமாட்டேன்


தீவைத்துவிடு தந்தையின் நினைவுக்கு நீயும்


நீ வைத்த பலிச்சோற்றில்


பருக்கையும் வேண்டாம் எனக்கு


 


போகிறேன் இதோ


உதயம் என்னை சகிக்காது


 


என்று  சொல்கிறார். மைந்தனின் மீறல்கள் அனைத்தையும் கண்டு கசந்து இருளுக்குள் இறங்கி மறைந்த தந்தை. அது கண்ணாடிப்பிம்பம் எதிரே நிற்பவனை நோக்கும் கோணம். அங்கும் அதே கடும்கசப்புதான்.


 


ஒரு யுகமுடிவின் கசப்பு தங்கிய கவிதைகள் சுகுமாரன் எழுதியவை.. திமிறித்திமிறி சென்று வீணாகித் திரும்பி வருதலின் ஆற்றாமை நிறைந்தவை. சிறகுகளுடன் முட்டைக்குள் இருப்பதன் வலியையும் பிளந்து வெளிவந்தால் பறக்கக்கிடைக்கும் வெளி வலைக்குள் என அறிதலின் கசப்பையும்  முன்வைத்தவை.


 


கறை எல்லோர் கைகளிலும்


என் கதவைத் தட்டிக் கேட்காதே எதுவும்


 இன்று மனிதனாக இருப்பதே குற்றம்


 


என அவரது கவிதை எரிந்து உரைக்கிறது. பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் கவிதை


 


விரும்புவதொன்றே பெரும்பாவம் என்பதுதான் அந்த


இரும்புவிதியின் முதல் வாக்கியம்


 


என வாழ்க்கையை அறிகிறது. எதுவும்எஞ்சாமல் முச்சந்தியில் நிற்பவர்களின் வெறுமை. கண்களால் ஓர் உலகைக் கண்டபின்னரும் அடையமுடியாமல் போனவர்களின் சினம்


 


thirumal

கே.வி.திருமலேஷ்


 


 


அன்பின் மெல்லிய தொடுகை ஒன்றே ஆறுதலென வாழ்க்கையில் எஞ்சுகிறது. பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய பிற்காலத்தைய நல்ல கவிதைகளில் ஒன்றில்


 


சென்றுவருகிறேன் இவையனைத்திலிருந்தும்


அங்கே துணைவி காத்திருக்கிறாள் என்னை


கடவுளின் படமில்லாத அறை


கண்ணீரின்உப்பும் வியர்வைப் பிசுக்கும்


கலந்து ஒட்டும் தலையணை


வெங்காயம் மணக்கும் ஓர் உடலின் வெப்பம்


 


என்று மீளுமிடம் ஒரு சிறிய இல்லம்தான் என்கிறார். ஒரு காலகட்டத்தின் பேரலை சுருண்டு பின்வாங்கிச் சென்றடையும் இடம் அது கொசுவலைக்குள் பறப்பதைவிட முட்டைக்குள் மீண்டும் சென்றமைவது நல்லது என்று கற்றுக்கொண்டதன் அடங்கல். நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதைவிட ஒருகணமேனும் பற்றி எரிவதே மேல் என அறிந்து கரியானவனின் அமைதி.


 


எளிமையானது உன் அன்பு


நடு ஆற்றில் அள்ளிய நீர் போல


 


என சுகுமாரனும் சென்றடையும் இடம். அதுவே. நீள்மூச்சுடன், கனவிலிருந்து விழித்தெழுந்த ஆறுதலுடன் எத்தனை உமிழ்ந்தாலும் எஞ்சும் கசப்புடன் நினைத்துக் கொள்ளவேண்டிய ஒரு காலம்.


 


நவீனத்தமிழின் முதன்மைக்கவிஞர்களில் ஒருவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் விருது இவ்வாண்டின் இயல். சுகுமாரனுக்கு அவர் விழிநீரை உடன்சிந்திய ஒருவனின் வணக்கம்


 


===============================================


வாழ்நிலம் சுகுமாரன் கவிப்பக்கங்கள்


 


முந்தைய கட்டுரைகள்


 


பிரிவின் விஷம்


கவிஞனின் கட்டுரைகள்


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 16, 2016 10:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.